அன்னை மணியம்மையாரின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள்: தான் வாழ்ந்து காட்டியது மட்டுமல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

அன்னை மணியம்மையாரின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள்: தான் வாழ்ந்து காட்டியது மட்டுமல்ல!

''பொதுவாழ்வில் மானம் பாரா தொண்டாற்றுக!''

இயக்கத் தோழர்களுக்கு அன்னையாரின் முதிர்மொழி!!

அன்னை மணியம்மையார் நினைவு நாளில் கழகத் தலைவரின் உருக்கமான அறிக்கை!

அன்னை மணியம்மையார் நினைவு நாளில் (16.3.2023) அன்னையார் வாழ்ந்துகாட்டிய, வழி நடத்தியவற்றை நினைவூட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள உருக்கமான அறிக்கை வருமாறு: 

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் (16.3.2023) இன்று!

ஆம்! இது அவர்களது நினைவு நாள்தான் என்றாலும், அவர்தம் தலைமையை அய்யாவிற்குப் பின் ஏற்ற நம் அனைவருக்கும்  காலத்திற்கும் ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள், அவ்வளவுதான்!

மற்றபடி அவரை மறந்தால் அல்லவோ தனியே நினைப்பதற்கு! ஒவ்வொரு சோதனைக்கும் நாமும், நம் இயக்கமும், இனமும் நாளும் ஆளாகும்போதெல்லாம், அய்யா - அம்மாவின் அறிவுரைகளும், அறவுரைகளும்தானே நமக்குக் கலங்கரை வெளிச்சங்கள் - இல்லையா?

தீயில் புடம்போட்ட தங்கம் அன்னை மணியம்மையார்

தன்னலமறுப்பின் தகத்தகாய தியாகத் தீயில் புடம்போட்டத் தங்கம் எங்கள் அன்னை!

அவரின் நிதானமும், தேவைப்பட்ட நேரத்தில் சீறிப் பாய்ந்த பாய்ச்சலும், தனக்கென வாழா பெரியார்க்குரியவராகத் தன்னை அர்ப்பணித்ததோடு, உடலால் மறைந்தபோது, ஒரு பணச்சுவையின்றி பணிச் சுமையை மட்டுமே சுமந்து, பாடமாய் பொதுவாழ்விற்கு இலக்கணம் வகுத்த எங்கள் தாய், தந்தைக்குப் பின்பு சோதனை களும், நெருக்கடிகளும் அடுக்கடுக்காய் வந்தபோதிலும், நிமிர்ந்த நெஞ்சுரத்தால் அவற்றைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து, இயக்கத்தையும், அதன் இலட்சியத்தையும் ஆயிரங்காலத்துப் பயிர்களாக்கிய, எங்கள் அருமை அன்னையாரின் அறிவுரை வெளிச்சம், தளிர்நடை போட்டு பிறரும் தன்னை வென்று தளர்நடை அறியாது நடத்திச் செல்ல, இன எதிரிகளின் இழிதகை விமர்சனங்களை இன்முக புன்சிரிப்புடன் புறங்காட்டி ஓடச் செய்ய, ,அந்நாளில் அன்னையார் விடுத்த அறிவுரைக் கொத்து எங்களின் அறிவாயுதம் அல்லவா!

'மானம் பாராதே!' -இது அய்யா சொன்ன - அன்னை மணியம்மையார் காட்டிய வழிமுறை!

‘‘பலரும் பலவிதமாய்ப் பேசுவார்கள். பொறாமைக்காரர்கள், ஆத்திரக்காரர்கள், தங்கள் வாழ்வுக்குக் கேடு வரும் என்று கருதுபவர்கள், கண்டபடி உளறுவார்கள்.

அதையெல்லாம் பொருட்படுத்தினால் நமது இலட்சியம் பாழாவதோடு, நமது மனஅமைதியும் கெடும். அவற்றையெல்லாம் நமது தொண்டின் பயன் என்று கருதவேண்டும்.

பொதுத் தொண்டு செய்கிறவனுக்கு வருகிற கஷ்டம், தன்னுடைய லட்சியத் திற்குக் கொடுக்கும் விலையாகும். மதிப்பிட முடியாத விலையாகும்!

மானம், அவமானம் முதலிய காரியங்கள்மூலம், பொதுத் தொண்டு செய் பவருக்குத் தொல்லை ஏற்பட்டால் அதை அவன் சிந்திக்கவே கூடாது.

கடுகளவு சிந்தித்தால்கூட மலையளவு காரியம் கெட்டுவிடும்; அவரது லட்சிய மும் பெரும் அளவுக்குக் கெட்டுவிடும்; துன்பத்தை லட்சியமே செய்யக்கூடாது.

மான அவமானத்திற்குச் சிறிதுகூட செவி சாய்க்கவே கூடாது. அதைப்பற்றி யார் என்ன சொல்லுகிறார்கள் என்ற எண்ணமும் வரக்கூடாது; இது எல்லா ஆண்களுக்கும், பெண்களுக்கும்தான்!

இதை ஒவ்வொருவரும் மனதிலிறுத்திக்கொண்டு பொதுத் தொண்டில் இறங்க வேண்டும் என்பதை நம்முடைய மாண்பமை தந்தை தனது பிறந்த நாள் செய்தியில் ஒருமுறை குறிப்பிட்டுள்ளது என் நினைவில் அப்படியே பதிந்துள்ளது.

அதோடு, அவர் அடிக்கடி பேசும்பொழுதெல்லாம் ஏதாவது சலிப்புடன், யாராவது சொன்னாலும் கூறும் அறிவுரையாகும்.

இது எனக்கே பலமுறை படித்துச் சொன்ன புத்திமதியாகும். ஆகவே, என் நெஞ்சை விட்டகலா பொன்மொழிப்படியே என் தொண்டினைத் தொடர்வேன்!

இயக்கத் தோழர்களும் இதைக் கடைப்பிடித்தால், விரைவில் அய்யாவின் ஆசையை நிறைவேற்றி விடுவோம் என்பது உறுதி!

தோழர்களே, இயக்கப் பிரச்சாரப் பணி தொடரட்டும்! தீவிரமாய்த் தொடரட்டும்!! என்று கூறி, முடித்துக் கொள்கிறேன்.''     (23.09.1975).

அன்னையார் படமா? பாடமா?

இது நெருக்கடி காலத்தில் தலைவர் அன்னையார் விடுத்த அறிவார்ந்த அனுபவ முதிர்மொழி!

இப்போது சொல்லுங்கள் தோழர்களே, நம் அன்னையார் மறைந்துவிட்டாரா?

அவர் என்றும் படமா? பாடமா?

பதில் சொல்லால் அல்ல - செயலால் நாட்டுவது மூலமே - நமது மலர்வளையம்!

வாழ்க அன்னையார்!

வருக அவர் காண விரும்பிய புரட்சி உலகம்!

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

16.3.2023

No comments:

Post a Comment