சென்னையில் 15 லட்சம் குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைச்சர் நேரு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 20, 2023

சென்னையில் 15 லட்சம் குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைச்சர் நேரு அறிவிப்பு

சென்னை, மார்ச் 20- செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தினமும், 53 கோடி லிட்டர் சுத்திகரிக்கும் திறனில் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது, 26.5 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரித்து, சென்னைக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கூடுதலாக 26.5 கோடி லிட்டர் குடிநீர் வழங்க ஏதுவாக, 44.33 கோடி ரூபாயில், பிரதான குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இதற்காக, பூந்தமல்லி புறவழியான தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே, 20 அடி ஆழம், 3,000 மி.மீ., விட்டம் உடைய கான்கிரீட் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.

சாலைக்கு சேதம் ஏற்படாத வகையில், நவீன தொழில்நுட்ப வசதியுடன் பணி நடைபெறுகிறது. இந்த குழாய்க்குள், 120 மீட்டர் நீளம், 2,000 மி.மீ., விட்டம் உடைய இரும்புக் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது. இந்த பணி, 75 சதவீதம் முடிவடைந்துள்ளது. வண்டலூர் - பூந்தமல்லி புறவழிச் சாலையில், நிலத்திற்கு அடியில் 20 அடி ஆழத்தில் குழாய் பதிக்கும் பணிகளை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, நேற்று (19.3.2023) ஆய்வு செய்தார். ஆய்வின்போது, குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் கிர்லோஷ்குமார், செயல் இயக்குனர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

அமைச்சர் நேரு கூறியதாவது:

குழாய் பதிப்பு பணி, ஓரிரு மாதத்தில் முடியும். அதன்பின், செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, தினமும் 53 கோடி லிட்டர் குடிநீர் சென்னைக்கு கிடைக்கும். சென்னையில் உள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கும், குடிநீர் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment