ஆசிரியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 2, 2023

ஆசிரியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி

 ஈரோடு முதல் கடலூர் வரை தமிழர் தலைவர் சுற்றுப்பயணம் என்பது 

திராவிட இயக்கத்தின் வழித்தடம்!

உடல்நலனையும் பேணுங்கள்!

திராவிடர் கழகத் தலைவர் - தொண்ணூறு வயது இளைஞர் - மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் பரப்புரைப் பயணத்தை மேற்கொள்வதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவரை வாழ்த்துகிறேன். எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நூற்றாண்டுக்கு திராவிட இயக்கம் வழங்கிய மாபெரும் கொடையான சமூகநீதித் தத்துவமானது இன்று இந்தியா முழுமைக்குமான மாமருந்தாக போற்றப்பட்டு வருகிறது.  நீதிக்கட்சியின் தளகர்த்தர்கள் தொடங்கி, தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா - தமிழினத் தலைவர் கலைஞர் ஆகியோரின் எண்ணங்களை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியானது தமிழ்நாட்டில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்று வருகிறது. இவை இரண்டையும் வலிமைப்படுத்தும் வகையில் ஆசிரியர் அவர்களின் பரப்புரைப் பயணம் அமைய இருக்கிறது.

ஈரோட்டில் தொடங்கி கடலூர் வரையில் இந்த பயணத்தை ஆசிரியர் அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். தந்தை பெரியார் பிறந்த ஈரோடு - ஆசிரியர் அவர்கள் பிறந்த கடலூர் என திட்டமிட்டு இருப்பது பயணத் திட்டம் மட்டுமல்ல, இதுதான் திராவிட இயக்கத்தின் வழித் தடம் ஆகும். இத்தடத்தில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லாத சுயமரியாதை - சமதர்ம - சமூக நோக்கு இளைஞர்களை உருவாக்க இந்தப் பயணம் அடித்தளம் அமைக்கட்டும்.

வெற்றிப்பயணத்தைத் தொடங்குங்கள் என்று வாழ்த் தும் அதே நேரத்தில், உரிய நேரத்தில் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று உள் ளன்போடு ஆசிரியர் அவர் களைக் கேட்டுக் கொள்கிறேன். உடல் நலன் காத்து, சமூக நலன் காக்க உழைக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் மண்ணில் திராவிட விதைகள் தொடர்ந்து விதைக்கப் படட்டும்.

அதன் பயனை எதிர்காலச் சமூகம் அடையட்டும்.

அன்பான வாழ்த்துகளுடன்,

மு.க.ஸ்டாலின்

குறிப்பு: முதலமைச்சர் தொலைப்பேசியின்மூலம் தமிழர் தலைவரிடம் இன்று (2.2.2023)  பிற்பகல் 3 மணியளவில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.


No comments:

Post a Comment