மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 6, 2023

மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

 மதத்தைக் காரணம் காட்டி மக்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தடுக்கலாமா?

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின் முயற்சிக்குத் துணை நிற்போம்!

மதுரை, பிப்.6 மதத்தைக் காரணம் காட்டி மக்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தடுக்கலாமா? திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின் முயற்சிக்குத் துணை நிற்போம் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்தி திறந்தவெளி மாநாடு

கடந்த 27.1.2023  மாலை மதுரையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலி யுறுத்தி நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள்  சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

அன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே, தோழர்களே!

அய்யா ஆசிரியர் அவர்களின் 

பெரிய முயற்சியால்...

சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் வேண்டும் என்பதற் காக, அய்யா ஆசிரியர் அவர்களின் பெரிய முயற்சியால் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்ற என்னு டைய மரியாதைக்குரிய அண்ணன் டி.ஆர்.பாலு அவர் களே, அண்ணன் திருமா அவர்களே, அமைச்சர்கள் மூர்த்தி அவர்களே, பி.டி.ஆர். அவர்களே, என்னுடைய அருமை நண்பர் தளபதி அவர்களே, அய்யா பொன்.முத்துராமலிங்கம் அவர்களே, சகோதரர் வேலுச்சாமி அவர்களே, அண்ணன் குழந்தைவேலு அவர்களே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அவர்களே, மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்த்திக் அவர்களே, இங்கே உரை யாற்றியவர்கள் இந்தத் திட்டத்தினுடைய அவசியத் தையும், அதில் இருக்கிற விஞ்ஞானப்பூர்வமான உண்மை களையும் எடுத்துச் சொன்னார்கள்.

அவர்கள் மட்டுமல்ல, எதிரிலே அமர்ந்திருக்கும் உங்களுக்கும் இந்தத் திட்டத்தைப்பற்றிய இதனுடைய உண்மை நிலையைப் பற்றிய அனைத்து விஷயங்களும் நன்கு புரியும்.

திராவிடர் கழகம் நடத்துகின்ற நிகழ்ச்சிகளில் புரிதல் மிக அதிகம் உண்டு!

தமிழ்நாட்டினுடைய சிறப்பு என்னவென்று சொன் னால், குறிப்பாக திராவிடர் கழகம் நடத்துகின்ற நிகழ்ச்சி களில் அந்தப் புரிதல் மிக அதிகம் உண்டு. அண்ணன் பாலு அவர்கள் ஒன்றை எழுதியிருக்கிறார்;  என்னுடைய அருமை நண்பர் கோபண்ணா அவர்கள் ஒன்றை எழுதியிருக்கிறார். இவையெல்லாமே சேது சமுத்திரத் தைப்பற்றிய உண்மை நிலைகள்.

ஏராளமான உதவிகளைச் செய்தார்கள் என்பதுதான் உண்மை நிலை!

எங்களுடைய அன்புத் தலைவி அன்னை சோனியா காந்தி அவர்களுடைய வழிகாட்டுதலோடு நடைபெற்ற, முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தினுடைய அமைச் சரவையின் தலைவர் மன்மோகன்சிங் அவர்களும், அன்றைய நிதியமைச்சர் சிதம்பரம் அவர்களும், டாக்டர் கலைஞர் அவர்களும் இந்தத் திட்டத்தை பாலு அவர்கள் நிறைவேற்றுவதற்கு ஏராளமான உதவிகளைச் செய் தார்கள் என்பதுதான் உண்மை நிலை.

அண்ணன் பாலு அவர்களுடைய பெருமுயற்சியின் காரணமாக இந்தத் திட்டத்திற்கு ஓர் உருவகம் கிடைத் தது. இதில் அரசியலோ, மதமோ சம்பந்தம் இல்லாதது என்பது என்னுடைய கருத்து.

இயலாதவர்கள் அதைப் புகுத்துகிறார்கள். இந்தத் திட்டத்தைத் தடுக்கவேண்டும் என்று கருதுகிறவர்கள் இதைப் புகுத்துகிறார்கள்.

இது தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி சம்பந்தப்பட்டது; தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி என்று நாம் பார்க்கின்ற பொழுது, கல்லணையில் இருந்து பார்க்கலாம்.

தமிழ்நாட்டினுடைய சென்னையினுடைய 

ஒரு பெருமை!

கல்லணை நமக்குக் கிடைத்த மிகப்பெரிய ஒரு வாய்ப்பாகும்.  அதற்கடுத்து சென்னையில் கத்திப்பாரா  மேம்பாலம் இருக்கிறதே, அதை நாம் நேரிடையாகப் பார்ப்பதைவிட, விமானத்தில் இருந்து பார்த்தால் மிக அழகாக இருக்கும். அது தமிழ்நாட்டினுடைய சென்னையினுடைய ஒரு பெருமை.

நாம் இன்றைக்கு வசதியாக பயணம் செய்கின்ற பல தேசிய நெடுஞ்சாலைகள் - தமிழ்நாட்டில் அமைந்திருப் பதற்குத் தான் அமைச்சராக இருந்தபொழுது அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஒரு மிகப்பெரிய காரணம்.

தமிழ்நாட்டில்தான் அதிக தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் 10 ஆண்டுகளில் வந்திருக்கிறது

நான் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபொழுது, அரசுத் துறை செயலாளர்கள் சிலரிடம் என்னுடைய தொகுதிக்கு தேசிய நெடுஞ்சாலை திட்டங் களைக் கேட்டும், சில வங்கி அதிகாரிகளிடம் என்னு டைய தொகுதிக்கு நிதி உதவி கேட்டும் செல்லுகிற பொழுது, அவர்கள் வேடிக்கையாக சொல்லுவார்கள், ‘‘எல்லா தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும்தான் நீங்கள் எடுத்துக் கொண்டு போய்விட்டீர்களே; தமிழ்நாட்டில்தான் அதிக தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் 10 ஆண்டுகளில் வந்திருக்கிறது; அதேபோல, பொதுத் துறை வங்கிகளின் ஏராளமான கிளைகள் எங்கே இருக்கிறது என்று சொன்னால், அது தமிழ்நாட் டில்தான் இருக்கிறது'' என்று அவர்கள் சொல்வார்கள்.

இந்தப் பெருமை தலைவர் சிதம்பரம் அவர்களுக்கும், அண்ணன் பாலு அவர்களுக்கும் உண்டு. இவர்களை உருவாக்கிய காங்கிரஸ் கட்சிக்கும், திராவிட முன் னேற்றக் கழகத்திற்கும் அந்தப் பெருமை உண்டு.

மதத்தின் பெயரால், நம்பிக்கைகளின் பெயரால் சிலர் தடை போட்டிருக்கிறார்கள்

இவையெல்லாம் தமிழ்நாட்டிற்கு நாம் செய்திருக் கின்ற நன்மைகள். ஆனால், அந்த நன்மைகளுக்குக் குறுக்காகத்தான், இன்றைக்கு நீதியின் பெயரால், சமயத்தின் பெயரால், நம்பிக்கைகளின் பெயரால் சிலர் தடை போட்டிருக்கிறார்கள்.

அண்ணன் திருமா அதை அழகாக எடுத்துச் சொன்னார்.

ஹிந்து மதத்தின்மீது, மத நம்பிக்கை உடைய பெரும்பான்மை ஹிந்துக்களுடைய அந்தத் தன்மை யைப் பயன்படுத்திக் கொண்டு இந்தத் திட்டம் இன் றைக்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது என்று அவர் சொன்னார்.

அதுதான் உண்மை!

இராமாயணம் நடந்ததா? இல்லையா? 

இராமர் இருந்தாரா? இல்லையா?

இதையெல்லாம் நாம் வேறு மேடைகளில் வைத்துக் கொள்ளலாம்; சேது சமுத்திரத் திட்டத்தில் இதை சம்பந்தப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.

இன்றைக்குத் தென் தமிழ்நாடு ஏறக்குறைய வளர்ச்சியே இல்லாத ஒரு பகுதி என்றால், அதற்குக் காரணம், எந்தப் பெரிய திட்டங்களும் இல்லாததுதான்.

சேது சமுத்திரத் திட்டம் வந்திருந்தால்...

நூறு ஆண்டுகளுக்கு முன்பே சூயஸ் கால்வாய் வந்தது; நூறு ஆண்டுகளுக்கு முன்பே பனாமா கால்வாய் வந்தது. அதனால், அந்தப் பகுதிகள் வளர்ச்சியடைந்தன.

நமக்கும் சேது சமுத்திரத் திட்டம் வந்திருந்தால், மதுரையைச் சுற்றி தென்தமிழ்நாட்டில், ஒரு மகத்தான வளர்ச்சியை நாம் அடைந்திருக்க முடியும்.

நாட்டின் வளர்ச்சிக்கு மதமோ, அரசியலோ, கடவுளோ தடையாக இருக்கக் கூடாது!

இன்றைக்கு ஆசிரியருடைய நிலைப்பாடு என்ன? இந்த வளர்ச்சிக்கு மதமோ, அரசியலோ, கடவுளோ தடையாக இருக்கக் கூடாது என்பதுதான்.

இவையெல்லாம் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கக் கூடாது.

காந்தியார், இராமரை ஒரு ‘புனித’னாகக் காட்டினார்; இராமராஜ்ஜியம் என்று சொன்னார்; இராம 

னுடைய மனசாட்சியின் பிரகாரம் தான் நடப்பதாகச் சொன்னார். அவர் நன்மைகளைச் செய்தார். இராமர் பெயரால் அவர் நன்மைகளைச் செய்தார்; நன்மையை சிந்தித்தார்.

கலவரத்தை உருவாக்குவதற்கு அவர்கள் இராமரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்!

ஆனால், இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதா என்ன செய்கிறார்கள்?

கலவரத்தை உருவாக்குவதற்கு அவர்கள் இராமரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒரு கோவிலை இடிக்கவேண்டுமா?

ஒரு மசூதியை இடிக்கவேண்டுமா?

ஒரு தேவாலயத்தை இடிக்க வேண்டுமா?

மாமிசம் சாப்பிடுகிற தாழ்த்தப்பட்டோரையும், இஸ்லாமியரையும் கொல்லவேண்டுமா?

அதற்காக இராமரைப் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு சிறந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் - அதை அழிப்பதற்கு, நிறுத்துவதற்கு அவர்கள் இராமரைப் பயன்படுத்துகிறார்கள்.

இது என்ன நியாயம்?

இராமர் அதைப் பயன்படுத்தியிருந்தால், அவர் கட்டியிருந்தால், அதுவும் ஒரு பாதைதான். இலங்கைக்குப் போவதற்கு அதைச் செய்தார். கடலில் அவர் தரைவழிப் பாலத்தை உருவாக்கினார்; நாம் இன்றைக்கு என்ன செய்கிறோம்? கடலில் நீர்வழிப் பாதையை உருவாக்குகிறோம். 

இதில் என்ன தடை இருக்கிறது?

இதை எதற்காக எதிர்க்கவேண்டும்?

இதில் எங்கே இராமர் காயப்படுத்தப்படுகிறார்?

இதில் எந்த இடத்தில் மதம் காயப்படுத்தப்படுகிறது?

எந்த உண்மையும் இல்லை.

இராமாயணம் நடந்த விஷயம் அல்ல;

அது கற்பனையானது!

இராஜாஜி அவர்கள், ‘சக்கரவர்த்தி திருமகன்’ என் கின்ற  ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார். இராமாயணத் தைப்பற்றிய புத்தகம் அது.

அதில் அவர் சொல்கிறார், ‘‘வேண்டாத சண்டைகள்'' என்ற தலைப்பில், அவருடைய கட்டுரையில் வருகிறது. நண்பர் கோபண்ணா அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இராமாயணம் நடந்த விஷயம் அல்ல. அது ஒரு கற்பனையானது. மனிதர்கள் எப்படி வாழவேண்டும் என்பதை அறிவுறுத்துவதற்காக, வால்மீகி முனிவர் அதை சொல்லியிருக்கிறார்.

சுப்பிரமணிய சாமிக்கு 

அதில் என்ன பிரச்சினை?

சீதா ராம சரித்திரம் என்பது வாய் வழியாகச் சொல்லப்பட்டது. வால்மீகி அதை பாடலாகப் பாடி பதிவு செய்திருக்கிறார்.

இது இராஜாஜி சொன்னது.

பெரியார் சொன்னால், நாம் வேறு மாதிரி எடுத்துக் கொள்கிறோம்.

அம்பேத்கர் சொன்னால், வேறு மாதிரி எடுத்துக் கொள்கிறோம்.

ஆனால், இராஜாஜியே அதைச் சொல்லியிருக்கிறார்; அதன் பிறகு சுப்பிரமணிய சாமிக்கு அதில் என்ன பிரச்சினை?

சுப்பிரமணிய சாமியை, பாலு அண்ணன் சரியாகக் கவனிப்பதில்லை!

இதில் ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கிறது; சுப்பிர மணிய சாமியை, பாலு அண்ணன் சரியாகக் கவனிப்ப தில்லை. இவர் ஒரு கோபக்காரர். இதை நான் மலிவுபடுத் தியோ, இதனுடைய தன்மையைக் குறைத்தோ சொல் வதற்கு இதை நான் சொல்லவில்லை.

90 ஆவது வயதில் ஆசிரியர்  அவர்கள் 

ஏன் இந்த முயற்சியை எடுத்திருக்கிறார்?

உங்களுக்கு மத நம்பிக்கை இருந்தாலும், இல்லை என்றாலும், கடவுள் நம்பிக்கை இருந்தாலும், இல்லை என்றாலும், நீங்கள் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்கு, எதன் பெயராலும் தடையாக இருக்கக்கூடாது என்பது தான் இந்த மாபெரும் இயக்கத்தினுடைய உண்மை நிலை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இன்றைக்கு ஆசிரியர்  அவர்கள் ஏன் இந்த முயற் சியை எடுத்திருக்கிறார்; தன்னுடைய 90 ஆவது வயதில் இந்த முயற்சியை எடுத்திருக்கிறார்.

நம்முடைய பாதுகாப்பிற்கு, திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் இருக்கிறார்!

இன்றைக்கு எங்களுக்கெல்லாம் ஒரு நம்பிக்கை உண்டு. நம்முடைய பாதுகாப்பிற்கு, திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் இருக்கிறார் என்கிற நம்பிக்கை உண்டு.

அவர், வார்டு கவுன்சிலராக இருந்ததில்லை;  சட்ட மன்ற உறுப்பினராக இருந்ததில்லை; நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல; அமைச்சர் அல்ல; முதலமைச்சர் அல்ல - எந்த அதிகாரப் பொறுப்பும் அவருக்கு இல்லை.

சமூகநீதிக்கு, மாநில உரிமைகளுக்கு எப்பொழுதெல்லாம் ஆபத்து ஏற்படுகிறதோ ஆசிரியர் குரல் கொடுக்கிறார்!

பிறகு அவர் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்? அதிகாரம் இருந்தால்தான் பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால், எப்படி அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்று சொன்னால், இதைப் போன்ற வளர்ச்சி சிந்தனைகளுக்கு, நம்முடைய உரிமைகளுக்கு, நம்முடைய நீதியைக் காப்பாற்றுவதற்கு எங்கெல்லாம் தடைகள் வருகின் றனவோ, அங்கெல்லாம் அவர் வந்து குரல் கொடுக்கிறார். அதனால் நாம் காப்பாற்றப்படுகிறோம்.

இவையெல்லாம் நமக்குத் தெரிந்த விஷயம் என்று சொல்லி, நாம் சும்மா இல்லை. அவர் அதை கையிலெ டுத்து செயல்படுகிறார். செயல்பட்டு, அந்தக் காரியங் களை செய்கிறார்.

இன்றைக்கு நாம் மிகவும் உணர்ந்து பார்க்கவேண்டும்- சமூகநீதி என்பது இன்றைக்கு நமக்கு மிக எளிதாகத் தெரிகிறது. ஏனென்றால், நாம் ஓரளவிற்கு அதை அடைந்திருக்கின்றோம்.

நல்ல பெயர் கூட 

வைத்துக்கொள்ள முடியாது

ஆனால், ஒரு காலத்தில் நம்மால் கற்பனை செய்ய முடியாத ஓர் இடமாக இருந்தது.

கல்வி அறிவு பெறுவது கூட, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர்தான் பெற முடியும். எல்லோரும் கல்வி அறிவைப் பெற்றுவிட முடியாது.

அந்த அளவிற்கு ஏன் போகவேண்டும்; நல்ல பெயர் கூட வைத்துக்கொள்ள முடியாது.

5 ஆயிரம் தோழர்களை ஒன்றுதிரட்டி, அவர்களுடைய பெயர்களை மாற்றினார்

அண்ணன் திருமா அவர்கள்மீது எனக்கு பெரிய மகிழ்ச்சி என்னவென்று சொன்னால், ஒருமுறை 5 ஆயிரம் தோழர்களை ஒன்றுதிரட்டி, அவர்களுடைய பெயர்களை மாற்றினார்.

நன்றாக ஊன்றிப் பார்த்தீர்களேயானால், அதனுடைய உண்மை நிலை புரியும். நம்முடைய சம்பிரதாயப்படி, புலையர்கள் என்பவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள் என்பவர்கள், நல்ல பெயர் சூட்டக் கூடாது என்று ஒரு பழக்கம் இருந்தது. அது கடுமையாக நடை முறைப்படுத்தப்பட்டது.

மண்ணாங்கட்டி, பிச்சை, காசாம்பூ என்றெல்லாம் பெயர் வைப்பார்கள்.

எப்படி அந்தப் பெயர் வந்தது என்பதே நமக்கு ஆச்சரியமாக இருக்கும். 

ஏனென்றால், அந்த ஊரில் இருக்கின்ற வழக்கம், சமூகக் கொடூரம், ஒரு நல்ல பெயர் வைத்துக்கொள்ளக் கூட அவனுக்கு உரிமையில்லாத ஒரு சூழல் இருந்தது.

அந்த சூழலை இன்றைக்கு நாம் மாற்றியிருக்கின்றோம். பெயர்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன. யாராவது நல்ல தமிழ்ப் பெயர் சொன்னால், நான் உடனே என்ன சிறுத் தையா?'' என்று கேட்பேன்.

ஏனென்றால், அந்த மாற்றத்தை இன்றைக்கு அவர் கொண்டு வந்தார். அது வரவேற்கத்தக்கது. ஒரு சிறிய நிகழ்வுதான் - ஆனால், ஒரு மிகப்பெரிய மாற்றம், ஒரு தன்னம்பிக்கையைத் தருகிறது.

அதையேதான் இன்றைக்கு ஆசிரியர் செய்து வருகிறார்.

வரவேற்கவேண்டிய ஓர் அம்சம்

அருணன் அவர்கள் பேசுகிறபொழுது அழகாக சொன்னார்; இந்தத் திட்டம் வரும்; மீண்டும் காங்கிரஸ் தலைமையில் ஓர் அரசாங்கம் அமையும். அந்த அர சாங்கத்தில் இந்தத் திட்டத்தை நாம் கொண்டு வருவோம் என்று அவர்கள் ஆணித்தரமாகச் சொன்னார்கள்; அது வரவேற்கவேண்டிய ஓர் அம்சம்.

ஒரு நாட்டில் அதிகமாகப் பேசலாம்; அதிகமாக சண்டை போடலாம்; நமக்குள் பிரிந்து கிடக்கலாம்; பொறாமை உணர்வோடு இருக்கலாம்; இணக்கம் இல்லாமல்  வாழலாம்; ஆனால், இவை எல்லாவற்றையும் விட வளர்ச்சி இல்லாமல் வாழ்வது என்பது கொடூரத் திலும் கொடூரம்.

கொடிது கொடிது வறுமை கொடிது

அதிலும் இளமையில் வறுமை கொடிது என்று பாடினார்கள்.

வறுமையெல்லாம் ஒழியவேண்டும் என்றால், வளர்ச்சி வேண்டும்; வளர்ச்சி வேண்டும் என்று சொன் னால், நல்ல திட்டங்கள் வேண்டும்.

அன்றைக்குப் பெருந்தலைவர் காமராஜர் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைக் கொண்டுவரவில்லை என்று சொன்னால்,

‘பெல்’ தொழிற்சாலையைக் கொண்டு வரவில்லை என்று சொன்னால்,

பல்வேறு நீர் அணைகளைக் கொண்டுவரவில்லை என்று சொன்னால், நாம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்க முடியாது.

கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுதுதான், சேலம் இரும்பாலை வந்தது. 

எவ்வளவு வளர்ச்சி சேலத்திற்கு!

அதேபோன்றதுதான் இந்த சேது சமுத்திரத் திட்டம்!

பாரதியாரே பாடினார்,

‘‘சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்‘‘ என்று சொன்னார்.

எவ்வளவு அற்புதமான சிந்தனை பாருங்கள். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் அமைக்கவேண்டும் என்பதை அன்றைக்கு அவர் சொல்லியிருக்கிறார்.

சேதுவை மேடுறுத்தி, சேதுவை சமமாக்கி, மேடாக்கி, அதில் சாலை அமைப்போம் என்று சொன்னார்.

அதைத்தானே நாம் இன்றைக்குச் செய்தோம். அதை  எப்படி இவர்கள் எதிர்க்கலாம்? அது எவ்வாறு தடையாக இருக்க முடியும்?

ஆசிரியரின் முயற்சிக்கு 

நாம் எல்லோரும் துணை நிற்போம்!

எனவே தோழர்களே, இதற்கு ஒரு நல்ல பரப்புரை தேவை. நமக்குத் தெரிந்த விஷயம்தான் - ஆனால், இது நம்முடைய சிந்தனையில் வேரூன்ற வேண்டும்.

ஆசிரியர் அவர்கள் இந்த முயற்சியைத் தொடங்கி யிருக்கிறார்கள். நாம் எல்லோரும் அவருக்குத் துணை யாக இருந்து, இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருக்கக் கூடிய சேது சமுத்திரத் திட்டம், குறிப்பாக, தென்தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி, மதுரை யைச் சுற்றியிருக்கிற பகுதிகளுடைய வளர்ச்சிக்கு அந்தத் திட்டம் மிகமிக தேவை. அதனை செய்தல் வேண்டும்; அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என சொல்லி, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலை வர் கே.எஸ்.அழகிரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.


No comments:

Post a Comment