தனது சுற்றுப்பயணத்தைக் குறைத்துக்கொண்டு எனது வாழ்விணையர் படத்தைத் திறக்க இசைந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 9, 2023

தனது சுற்றுப்பயணத்தைக் குறைத்துக்கொண்டு எனது வாழ்விணையர் படத்தைத் திறக்க இசைந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்

எனக்கு எல்லாமுமாக இருந்த எனது இணையர் என்னைவிட்டுப் பிரிந்தார்!

கோவை கு.இராமகிருஷ்ணன் கண்ணீர் உரை

கோவை, பிப்.9 தனது சுற்றுப்பயணத்தைக் குறைத்துக் கொண்டு எனது வாழ்விணையர் படத்தைத் திறக்க இசைந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்; எனக்கு எல்லாமுமாக இருந்த எனது இணையர் என்னைவிட்டுப் பிரிந்தார் என்று கண்ணீர்மல்கக் கூறினார் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் 

கு.இராமகிருஷ்ணன் அவர்கள்.

படத்திறப்பு - நினைவேந்தல்

கடந்த 5.2.2023 அன்று காலை கோவை புலியகுளம் சாலையில் உள்ள சுங்கம், விக்னேசு மகாலில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன் அவர்களின் இணையர் மறைந்த  இரா.வசந்தி அம்மையார் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்வில்  தொடக்கவுரையாற்றினார் கு.இராமகிருஷ் ணன் அவர்கள்.

அவரது தொடக்கவுரை வருமாறு:

இப்படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்விற்குத் தலைமையேற்று இருக்கும் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான 

ஆ.இராசா அவர்களே,

தமிழ்நாடு முழுவதும் இன்றைய தினம் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கியும், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மீண்டும் தொடங்கக் கோரியும் ஒரு நீண்ட பிரச்சாரப் பயணத்தை நேற்று முன்தினம் (3.2.2023) ஈரோட்டிலே தொடங்கி, கடலூரில் முடிக்கின்ற திட்டத்தோடு பரப்புரை பயணம் மேற்கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம், மறைந்த வசந்தி அவர்களுடைய படத்தினைத் திறந்து வைக்கவேண்டும் என்று கேட்டபொழுது, ‘‘என்னுடைய சுற்றுப்பயணத்தில் ஒரு கூட்டத்தைக் கூட குறைத்துக் கொள்கிறேன்’’ என்று சொல்லி, இப்படத்திறப்பில் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்ற மதிப்பிற்குரிய ஆசிரியர் அய்யா அவர்களே,

மதிப்பிற்குரிய கோவை மாமன்ற துணைமேயர் வெற்றிச்செல்வன் அவர்களே,

மதிப்பிற்குரிய மேனாள் மாவட்ட நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் அவர்களே மற்றும் முக்கிய பொறுப் பாளர்களே, தோழர்களே, பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கத்தினையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தோழர் வசந்தி அவர்களின் தந்தை ஆற்காடு நவாஸ் அவர்களும், அவருடைய தாய் கங்கம்மா அவர்களும் ஈரோட்டில் திராவிடர் கழகத்திலே பற்றுடன் இயங்கிக் கொண்டிருந்தவர்கள்.

தோழர் வசந்தியை சந்தித்தது!

அந்தக் காலகட்டத்திலே நான் கோவை மாவட் டத்தின் ஒன்றுபட்ட ஈரோடு - திருப்பூர் மாவட்டத்தின் திராவிடர் கழகத்தின் செயலாளராக இருந்தபொழுது, ஈரோட்டிற்குச் சென்று கழகப் பணியாற்றுகின்ற நேரத்தில், அவர்களுடைய குடும்பம் அறிமுகமானது. அப்பொழுது தோழர் வசந்தி அவர்கள் என்னோடு பழகினார்கள். என்னை திருமணம் செய்துகொள்வதற்கு முடிவு செய்திருந்தார்கள்.

ஆனால், நானோ அந்தக் காலகட்டத்தில், தொடர்ந்து மாநில இளைஞரணி செயலாளராக திராவிடர் கழகத்தில், அய்யா அவர்களின் அறிவிப்பிற்குப் பின்னால், தொடர்ச்சியாக இயக்கப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தேன்.

1983 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் வரு கைக்குப் பின்னால்,  அதில் மிகுந்த ஈடுபாடும், ஆர்வமும் காட்டிய காலகட்டத்தில், எனக்குத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இல்லாதிருந்தது.

என்னுடைய சிற்றன்னை, என்னுடைய தாய், என் னுடைய மாமா, பெரியப்பா மூலமாக வலியுறுத்தினார்கள். ‘‘திருமணம் செய்துகொள்; வேண்டுமானால், பெரியார் தலைமையில்கூட (அன்றைக்குப் பெரியார் இல்லை; ஆசிரியரைத்தான் பெரியார் என்று சொன்னார்கள்) திருமணம் செய்துகொள்; ஆனால், நம்முடைய ஜாதிப் பெண்ணை திருமணம் செய்துகொள்’’ என்று சொன் னார்கள்.

ஆனால், நான் என் மாமாவிடமும், என் பெரியப்பா விடமும் சொன்னேன், ‘‘நான் பார்ப்பானை வைத்துக்கூட திருமணம் செய்துகொள்கின்றேன்; ஆனால், நம்முடைய ஜாதியில் திருமணம் செய்துகொள்ளமாட்டேன்.

காரணம், பார்ப்பானை வைத்துத் திருமணம் செய் தாலும்கூட, அது ஒருக்காலும் நடக்காது; ஆனாலும்கூட, அது ஓர் அரை மணிநேர சடங்காக முடிந்துவிடும்; ஆனால், ஜாதியிலே திருமணம் செய்தால், காலம் முழுவதும் ஜாதி ஒழிப்பு என்பது வெற்றுப் பேச்சாக முடிந்துவிடும்’’ என்ற எண்ணத்தினால்தான் அப்படிச் சொன்னேன்.

அதற்குப் பிறகு, என்னுடைய துணைவியார் வசந்தி அவர்களுடைய தந்தை, வசந்திக்குத் திருமணம் செய்யவேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்கள்; பல மாப்பிள்ளைகளைப் பார்த்தாலும்கூட, அவர் என்னை மனதில் வைத்துக்கொண்டு,  அதையெல்லாம் வேண் டாம் என்று சொல்லியிருக்கிறார். தந்தையின் தொல்லை தாங்க முடியாமல், சென்னைக்கு வந்து பணியாற்றி வந்தார்கள். 

1991 இல் திருமணம்

1991 ஆம் ஆண்டுதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தபொழுது வசந்தியை நேரில் சந்தித்தேன்.

திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தேன். பிறகு கோவை வந்து 60 தோழர்கள் முன்னிலையில் எங்கள் வீட்டில் என் அம்மா மாலை எடுத்துக்கொடுக்க பேராசிரியர் நெடுஞ்செழியன் எங்களை உறுதிமொழி கூறச் செய்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

வலது புறத்திலே வீடு - இடது புறத்தில் சிறை - வீட்டின் மாடியிலிருந்து பார்த்தால் சிறை தெரியும். சிறையினுடைய டவர் என்று சொல்வார்கள் - அந்த டவரிலிருந்து பார்த்தால் என்னுடைய வீடு தெரியும். அவ்வளவு அருகாமையில் உள்ளது அந்த சிறைச்சாலை. 

சிறைவாசம்!

நாங்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண் டோம். வசந்திக்கு கோவை மாநகரம் புதிது. அந்த நிலையில், அவர்களை விட்டுவிட்டு, நான் மூன்றாண்டு சிறைக்குப் போனேன். சிறையில் இருக்கின்றபொழுது அமுதினி பிறந்தாள். வயிற்றில் குழந்தை இருக்கும் பொழுதும் சரி, கைக் குழந்தையாக அமுதினி இருந்த பொழுதும் சரி, வழக்குரைஞர்களை சந்திப்பது, சிறைக்கு வந்து என்னைப் பார்ப்பது, குழந்தையை வளர்ப்பது என்று மூன்றாண்டு காலம்  என்னுடைய இணையர் கடுமையான துன்பத்திற்கு ஆளானார்கள்.

திருமணமாகி அய்ந்து மாதங்களில் வாழ்க்கையை இழந்தார்கள். அந்த வகையில், சிறை எங்களுக்கு; தண்டனை வசந்திக்கு. சிறை ஆறுச்சாமிக்கு; தண்டனை மல்லிக்காவுக்கு என்ற அளவில், என்னுடயை வாழ் விணையரும், பெற்றோரும் துன்பப்பட்டார்கள்.

மிசாவில் கைது!

மிசாவில் நான் சிறைச்சாலையில் இருந்தபொழுது எனக்கு 24 வயது. அந்த நேரத்தில் என்னுடைய தாய், சிறைக்கு வந்து என்னைப் பார்க்க வருகிறார். எங்களு டைய குடும்பம் காங்கிரஸ் கட்சிக் குடும்பம். என்னுடைய தந்தை காங்கிரசு கட்சியின் வார்டு கவுன்சிலராக இருந் தவர். என்னுடைய உறவினர்கள் நிறைய பேர் கவுன் சிலர்களாக இருந்தனர். எல்லோரும் காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்தவர்கள்தான்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன், அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் எல்லாம் மிசாக் கைதியாக சிறையில் இருந்தார்கள். இவ்வளவு பெரிய தலைவர்களோடு என்னையும் சிறைச்சாலையில் வைத்திருக்கிறார்களே என்று எண்ணிப் பார்த்து, நான் சிறையை மறந்து, நம் மையும் அந்தத் தலைவர்களோடு இணைத்திருக்கிறார் களே என்று பெருமை கொண்டிருந்தேன்.

ஆனால், என்னுடைய தாய் சிறைச்சாலைக்கு வந்து பார்த்தபொழுது, அந்தப் பக்கம் நின்று கொண்டிருந்த அவர் அழுதுகொண்டே ‘‘என்னையும் சிறைச்சாலைக்கு வந்து பார்க்கும்படி செய்துவிட்டாயே?’’ என்று சொன்னார்.

அப்பொழுதுதான் நான் யோசித்தேன்; வைதீகக் குடும்பங்கள் சிறைச்சாலைக்கோ, நீதிமன்றத்திற்கோ, காவல் நிலையத்திற்கோ போகக்கூடாது; அவற்றின் வாசற்படிகளையே மிதிக்கக் கூடாது என்று இருக்கக் கூடிய குடும்பங்களாகும்.

அதனால்தான், என்னுடைய தாயார், ‘‘என்னையும் கொண்டு வந்து ஜெயிலில் நிறுத்திவிட்டாயே?’’ என்று வேதனைப்பட்டார்.

இதுதான் பொதுவாழ்க்கையில் உள்ளவர்களுடைய நிலை.  எங்களுடைய கொள்கை மக்களுக்கு உழைப்பது - அதற்காகப் பாடுபடுகின்றோம். ஆனால், அதேநேரத் தில், நமக்காக வாழ்க்கைப்பட்டு வந்த, பொதுவாழ்க் கையில் இருக்கக்கூடிய நமது வீட்டுப் பெண்களும் துன்பப்படுகின்ற நிலையை நாம் பார்க்கின்றோம்.

வசந்தியின் தாயாரும் போராட்ட வீராங்கனை

அந்த வகையில், வசந்தி அவர்கள் என்னோடு தொடர்ந்து பயணித்தார்கள். அவருடைய தாய், கங்கம்மா அவர்கள், அய்யா அவர்கள் அறிவித்த மனு தர்ம எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்றவர்.

இப்படி நாங்கள் இயக்கத்தில் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்றாலும், என்னுடைய வளர்ச்சியில், என்னுடைய குடும்பத்தில் வசந்தி அவர்களுக்கு, எங் களுடைய பிள்ளைகளை அறிவார்ந்த ஒரு துணிச்சல் மிக்கவர்களாக வளர்க்கின்ற தன்மை அவரிடத்தில் இருந்தது.

இன்னும் சொல்லப்போனால், பல பேர் சொல்வார்கள் வீட்டிலே வசந்திதான் தலைவர் என்று சொல்வார்கள். சிறையிலிருந்து நான் வந்தவுடன், என்னுடைய தந்தையின் சொத்துக்கள் இருந்தன; ஆனால், வருமானம் இல்லை. 

வருமானத்திற்கு வழி என்ன?

வருமானத்திற்கென எந்தவிதமான ஈடுபாட்டையும் நான் காட்டவில்லை. ஆகவே, வருமானம் இல்லை. அந்தக் காலகட்டத்தில் வசந்தி அவர்களுக்கு, நமக் கென்று ஏதாவது தொழில் தொடங்கவேண்டும் என்று சொன்னார். அவருடைய சிறிய சகோதரர் சவுந்தரராஜன் தாம் நடத்திக் கொண்டிருந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோரை குத்தகைக்குக் கொடுப்பதாக சொல்லி யிருந்தார். அதைக் கேள்விப்பட்ட வசந்தி, ‘‘நீங்கள் கேட்டுப் பாருங்கள்; நாம் அதை எடுத்து நடத்தலாம்’’ என்று சொன்னார்.

உடனே நான் சொன்னேன், முதலீடுக்குப் பணம் இல்லையே என்றேன்.

வசந்தி அவர்கள், என்னிடம்தான் நகைகள் இருக் கிறதே, அதை அடமானம் வைத்து, அந்த டிபார்ட் மெண்டல் ஸ்டோரை குத்தகைக்கு எடுத்து நடத்தலாம் என்று சொன்னார்கள்.

என்னுடைய துணைவியார் வசந்தி கொடுத்த அந்த ஊக்கமும், ஆக்கமும்தான் நான் ஒரு தொழிலதிபராக உயருவதற்குக் காரணமானது. அடுத்த 12 ஆண்டுகள் அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோரை, வசந்தியின் மூலதனத்தை வைத்து நடத்தினோம்.

இயக்கப் பணி பாதிக்குமே!

நான் எந்தவித தொழிலையும் செய்யாமல், பணி ஏதும் செய்யாமல் இருந்ததற்குக் காரணம், முழு நேர இயக்கப் பணி அதனால் பாதிக்குமே என்கிற எண்ணத் தினால்தான்.

ஆனால், டிபார்ட்மெண்டல் ஸ்டோரை பாதி நேரம் மட்டுமே பார்த்துக் கொண்ட காரணத்தினால், நான் இயக்கப் பணியையும் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. என்னுடைய தந்தை எனக்கு எவ்வளவு சொத்துகளை விட்டுச் சென்றாரோ, அதற்கு இணையாக 12 ஆண்டுகளில் வசந்தி அவர்களின் திறமையால் பொருளாதார நிலையும் உயர்ந்தது.

அப்படிப்பட்ட அந்தத் தோழர், என்னுடைய துணை வியார் அவர்களாவார். மதிப்பிற்குரிய ஆ.இராசா அவர்கள், சென்னையில் பிரபஞ்சன் எழுதிய கவிதை நூலை வெளியிடுகின்றபொழுது, அந்த நிகழ்ச்சியில் நாகம்மையார் அவர்கள் மறைந்தபொழுது தந்தை பெரியார் அவர்கள் எழுதிய அறிக்கையை மேற்கோளிட்டு, அதை இன்றைய தலைமுறையினருக்கு விளங்குகின்ற வகையில் எடுத்துச் சொன்னார்.

அன்னை நாகம்மையார் இறந்தபோது - 

அய்யா அறிக்கை!

1933 ஆம் ஆண்டு நாகம்மையார் மறைந்தபொழுது அவருக்கு வயது 48.   அன்றைய பெண்களின் சராசரி வயது 23. 

அய்யா அவர்கள் எழுதிய அறிக்கையில், 23 வயதைக் கடந்து 48 ஆண்டுகள் நாகம்மையார் வாழ்ந்து விட்டார் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொள் கின்றார்.

இன்றைக்குப் பெண்களின் சராசரி வயது 70. ஆனால், வசந்தி அவர்கள் 58 வயதில் மறைந்துவிட்டார்.

நாகம்மையார் அவர்கள் மறைந்தபொழுது தந்தை பெரியார் அவர்கள் எழுதிய வரிகள் அத்துணையும், இன்றைக்குப் பொதுவாழ்க்கையில் இருக்கக்கூடிய எங்களைப் போன்றவர்கள் எல்லோருக்கும் பொருந்தும்.

நான் காதலியை இழந்தேனா -

நண்பனை இழந்தேனா -

துணைவனை இழந்தேனா -

மனைவியை அடிமையாக வைத்திருந்தேன் என்றும் தந்தை பெரியார் ஒப்புக்கொள்வார்.

அப்படிப்பட்ட தன்மைதான், பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நம் எல்லோருக்கும்.

நம்முடைய உடல்நலத்தைப்பற்றி கவலைப்படு கின்றோம். ஆனால், நமக்காக உழைக்கின்ற நம்முடைய துணைவியாரும் நம்மைப்பற்றி கவலைப்படுகிறார்.

ஆனால், நாம் நம்முடைய துணைவியார்களின் உடல்நலம் பற்றி கவலைப்பட்டு இருக்கின்றோமோ என்று கேட் டால், இல்லை.

என்னுடைய துணைவியார் வசந்தி அவர்கள், என்னுடைய உடைமீது அக்கறை காட்டுவார்கள்.

அய்யா மறைந்த பிறகு 

ஆசிரியர் நடத்திய பயிற்சிப் பட்டறைகள்!

தந்தை பெரியாருக்குப் பின்னால், ஆசிரியர் அய்யா அவர்கள் நடத்துகின்ற மாணவர் கழகம், இளைஞரணி பயிற்சி முகாம்களில் கலந்துகொண்டிருக்கின்றேன். அப்பொழுது ஆசிரியர் அய்யா அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் பண்புகளைப்பற்றி சொல்வார். எப்படி மற்ற மனிதர்களை மதிப்பார்; எப்படி மரியாதை செலுத்துவார் என்பதைப்பற்றியெல்லாம் சொல்வார்கள். அதையெல்லாம் நாங்கள் ஆழமாக எங்கள் மனதில் பதித்துக்கொள்வோம். அதேபோல, பெரியாருடைய சிக்கனத்தைப்பற்றியும் சொல்வார்.

அந்தப் பண்பும், எளிமையும், சிக்கனமும் எங்களைப் பற்றிக்கொண்டன. 

வசந்தி அவர்களை திருமணம் செய்த பிறகு, அவர் சொல்வார் - ‘‘எளிமை, பண்பு எல்லாம் அவசியம்தான். அதற்காக உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்ளக்கூடாது. ஒரு சபைக்குச் செல்கின்றபொழுதே, பொது நிகழ்விற்குச் செல்லும்பொழுதே  நல்ல உடை அணிந்து சென்றால் தான், அந்த இடத்தில் உங்களுக்கு மரியாதை’’ என்று, என்னுடைய உடைகளை அவர்கள்தான் தேர்வு செய்வார்கள்.

அதேபோல, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடி விடுதலை விரும்பி அவர்கள், வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெறு கின்றார்.

அவர் சொல்வார், ‘‘நாம் ஒரு 10 ரூபாய் தருகின்ற இடத்தில் இருக்கவேண்டுமே தவிர, 10 ரூபாய் பெறுகின்ற இடத்தில் இருக்கக்கூடாது; மதிக்கமாட்டார்கள்’’ என்று சொல்வார்.

எனக்கு எல்லாமுமாக இருந்தவர்!

பொதுப் பணியில், சமூகப் பணியில் இருக்கும்பொழுது நம்முடைய பொருளாதாரத்தையும்  நாம் கவனிக்க வேண்டும் என்று இந்த உதாரணத்தைச் சொல்வார்.

என்னுடைய துணைவியார் அவர்கள், என்னை விட்டுப் பிரிந்தார்கள் என்று சொன்னால், எனக்கு எல்லாமுமாக இருந்தவர் அவர்.

நான் வீட்டைப்பற்றி கவலைப்படாமல், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, எத்தனை நாள் வேண்டுமானாலும் சிறை என்று சொன்னாலும், செல்லுவதற்குத் தயாராக இருந்த அந்த வாழ்க்கை, இன்று ஒரு திருப்புமுனையாக மாறிவிடுமோ என்ற நிலை இப்பொழுது ஏற்பட்டுவிட்டது.

அந்த வகையில், தோழர் வசந்தி அவர்கள், பலமாக, பாதுகாப்பாக, சுதந்திரமாக நான் பொதுப் பணியில் ஈடுபடுவதற்குத் துணையாக இருந்தார்கள். என்னுடைய பிள்ளைகளையும் இந்த வழியில் வளர்த்தெடுத்தார்கள்.

அவருடைய பெயரும், புகழும் ஓங்கி நிலைக்கின்ற வகையில், நான் பணியாற்றுவேன் என்று சொல்லி, மீண்டும் இங்கே வந்திருக்கின்ற அனை வருக்கும் நன்றி கூறி, முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.

No comments:

Post a Comment