ஒன்றிய அரசுக்கும் - உச்சநீதிமன்றத்திற்கும் மோதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 6, 2023

ஒன்றிய அரசுக்கும் - உச்சநீதிமன்றத்திற்கும் மோதல்

அனைத்தையும் தன் அதிகாரத்தின்கீழ் கொண்டுவர பி.ஜே.பி. அரசு துடிக்கலாமா?

மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் அடிக்கட்டுமானத்தையே இடிக்கலாமா?

அரசமைப்பும், ஜனநாயகமும் இல்லாத நாடாகிவிடும், எச்சரிக்கை!

ஒன்றிய அரசும், உச்சநீதிமன்றமும் ஒன்றுக் கொன்று மோதிக் கொள்வதுபோன்ற போக்கு மிக ஆபத்தானது - அதன் விளைவு அரசமைப்பையும், ஜனநாயகத்தையும்  இல்லாததாக ஆக்கிவிடும் என்று எச்சரித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்திய அரசியல் அமைப்பில் வரையறுத்துள்ள முப்பெரும் பிரிவுகள் - நீதித்துறை, நிர்வாகத் துறை, சட்டமன்ற, நாடாளுமன்றத் துறை ஆகிய மூன்று துறை களும் அவரவர் எல்லையிலிருந்து தமது அதிகாரப் பங் களிப்பினையொட்டிய கடமைகளை ஆற்றிடவேண்டும்.

உச்சநீதிமன்ற அதிகாரம்

நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் இயற்றப்படும் சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாகவோ, விரோதமாகவோ இல்லாத, ஒரு துறையின் அதிகாரத்தை மற்றவர் பறிப்பதாகவோ, ஆக்கிரமிப்பதாகவோ இல் லாமல் இருக்க கண்காணிக்கும் கடமையும், பொறுப்பும் உச்ச, உயர்நீதிமன்றங்களுக்கு உண்டு.

ஆனால், மற்ற இரு துறைகளிலும், ஏக அதிகாரத்தை செலுத்தி, தங்களுக்குக் கிடைத்துள்ள 'ரோடு ரோலர்' மெஜாரிட்டியைப் பயன்படுத்தி, நீதிமன்றம் தவிர, மற்ற இரண்டையும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தன் வயப்படுத்திக் கொண்டது பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சி.

சுதந்திரமாக இயங்கவேண்டிய சி.பி.அய்., என்ற மத்தியப் புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் கடந்த சில ஆண்டுகளாகவும், தற்போதும் நடைபெற்று வரும் நிகழ்வுகளே அதற்கான போதிய சான்றாவணங்கள் - சாட்சியங்கள் ஆகும்!

மிஞ்சியுள்ளது நீதித் துறை (Judicial) ஒன்று; அதை யும் வளைக்க முழு முயற்சியும் இப்போது. பட்டவர்த் தனமாக உச்சநீதிமன்ற பரிந்துரைகள் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளன!

லட்சக்கணக்கில் தீர்த்து வைக்கப்படாத வழக்குகளின் தேக்கத்திற்குக் காரணம், நீதிபதிகள் பற்றாக்குறை; ஓய்வு பெற்ற பணியிடங்களை நிரப்ப, பரிந்துரைகளை உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பியும், அவை பல மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

நீதித் துறைக்கே சட்ட அமைச்சர் 

சவால் விடலாமா?

உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞர் கொடுத்த பகிரங்க வாக்குறுதி நீர்மேல் எழுத்துக்களாகிவிட்டன!

நீதித் துறைக்கே ஒன்றிய சட்ட அமைச்சர் பகிரங்க மாக சவால் விட்டு, அந்த அமைப்பின் மாண்பையே கேள்விக் குறியாக்குகிற நிலைகண்டு, ஓய்வு பெற்ற மூத்த உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் அவர்கள் மிகுந்த வேதனையோடு மும்பையில் ஒரு நிகழ்வில் பேசியுள்ளது அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது.

அதனை அப்படியே தருகிறோம்!

‘‘கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளின் பெயர்களை இறுதி செய்யாதது, ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. ஜனநாயகத்தின் கடைசி தூணான நீதித்துறை வீழ்ந்தால், நாடு படுகுழியில் விழும். அப்போது புதிய இருண்ட சகாப்தம் தொடங்கும்.  

கொலீஜியம் ஒரு நீதிபதியின் பெயரை பரிந்துரைத்தவுடன், ஒன்றிய அரசு 30 நாள் களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும். தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய (என்.ஜே.ஏ.சி) சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது, நாடாளுமன்ற இறையாண்மைக்கு எதிரானது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. சுதந்திரமான, அச்சமற்ற நீதிபதிகள் நியமிக்கப் படவில்லை என்றால் நீதித்துறையின் சுதந்திரம் என்னவாகும்? ஒரு நீதிபதியை நியமிக்கலாமா, வேண்டாமா என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை காட்டிலும் வேறு யாருக்கு நன்றாகத் தெரியும்?  எனவே, கொலீஜியம் அமைப்பின் நடை முறைகளில் வேறுபாடுகள் இருந்தால்கூட அதை ஏற்கவேண்டியது ஒன்றிய அமைச்சர் மற்றும் அரசின் கடமை'' என்று தெரிவித்தார்.

ஒன்றிய அரசும் - உச்சநீதிமன்றமும் மோதிக்கொள்வது சரியா?

ஒன்றிய ஆட்சியாளரும், உச்சநீதிமன்றமும் இப்படி பகிரங்கமாக பரஸ்பர குற்றச்சாட்டு கூறி, நீதிபதிகள் நியமனங்கள் தேக்கத்தால் பாதிக்கப்படுவது இந்த இருசாராரும் அல்ல; மாறாக  வழக்காடிகளான பொதுமக்களும் ஆவார்கள்.

நீதித்துறையின் சுதந்திரத்திலும் தலையிட்டு, அது தேர்தல் ஆணையங்கள் நியமனம்போல ஆக்கிவிடுவது நேர்மையானதா? நீதியானதா? நியாயமானதா?

மக்களின் கடைசி நம்பிக்கை நீதித் துறை - 

அதற்கும் ஆபத்து என்பது ஆபத்தே!

நாடு எவ்வளவு கீழிறக்கத்திற்குச் சென்று கொண் டுள்ளது - நீதித்துறைதான் மக்களின் கடைசி நம்பிக்கை. அதன் அடிக்கட்டுமானமே தோண்டி இடிக்கப்படும் அநியாயம் வரலாமா? என்பது பொதுவானவர்களின் கேள்வி.

பிறகு அரசமைப்புச் சட்டம், ஜனநாயகம் எதுவும் இல்லாததாக ஆகிவிடக்கூடும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

6.2.2023


No comments:

Post a Comment