சுயமரியாதையோடு பெருமரியாதையை உண்டாக்கும் இடம் பெரியார் திடல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 20, 2023

சுயமரியாதையோடு பெருமரியாதையை உண்டாக்கும் இடம் பெரியார் திடல்!

எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தமிழர்களைத் தூக்கி நிறுத்த தோள் கொடுப்பது திராவிடர் கழகம்!

திராவிடர் திருநாள்  - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

சென்னை, ஜன.20 சுயமரியாதையோடு பெருமரியா தையை உண்டாக்கும் இடம் பெரியார் திடல்! எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தமிழர்களைத் தூக்கி நிறுத்த தோள் கொடுப்பது திராவிடர் கழகம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திராவிடர் திருநாள் - 

தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா!

கடந்த 17.1.2023 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற,  தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 29 ஆம் ஆண்டு விழா - திராவிடர் திருநாள்  - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவில், விருதுகள் வழங்கி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை யாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

எல்லையற்ற மகிழ்ச்சியை அடையும்பொழுது 

பேச முடியாமல் திணறுவதுண்டு நான்!

பொதுவாக எல்லையற்ற மகிழ்ச்சியை நான் அடையும்பொழுது - பேச முடியாமல் திணறுவதுண்டு - அந்த மகிழ்ச்சியும் அதற்குக் காரணம்; நேரமின்மை மட்டுமே காரணமல்ல. அந்த வகையிலே, இந்த ஆண்டு சிறப்பான வகையில், தமிழர் தமிழ்ப் பண்பாட்டு நிகழ்ச்சி என்ற அளவில் தொடங்கிய நிகழ்ச்சி,  இன்றைக்கு 29  ஆம் ஆண்டாக நடைபெறுகின்ற சூழலில், ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பாக நடைபெறக்கூடிய திராவிடர் திருநாள் - தமிழர்ப் புத்தாண்டு பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த மேடை 

அதற்கு அடித்தளமிட்டது!

இப்படிப்பட்ட ஓர் அற்புதமான நிகழ்ச்சி, நேரம் போனதே தெரியவில்லை. குறிப்பாக அதற்குக் காரணமாக இருக்கக்கூடியவர்கள் நம்முடைய பறையிசைக் குழுவினர். இன்றைக்கு இந்த அளவிற்கு மக்களிடையே எழுச்சியை உருவாக் கியிருப்பதற்கு, இந்த மேடை அதற்கு அடித்தள மிட்டது. எப்படி தந்தை பெரியார் அவர்கள் அடிப் படை அமைத்து செய்வார்களோ, அதேபோல, அதற்குக் காரணமாக இந்த மேடை இருந்தது. அலங்காநல்லூர் வேலு ஆசான் அவர்களின் நாட்டுப்புற இசைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், பெரியார்  வீர விளையாட்டுக் கழகம் சார்பில் நடைபெற்ற சிலம்பாட்ட நிகழ்ச்சிகள், ரஷ்ய கூட்டமைப்பின், ரஷ்ட்ராவ் ஆங்தாங் நகரைச் சார்ந்த ஆர்பிக் குழுவினர் வழங்கிய நடன நிகழ்ச்சிகளைக் கண்டு நான் பரவசமடைந்தேன்.

சிறப்பான முத்தாய்ப்பான - 

நினைவைவிட்டு  அகல முடியாத நிகழ்ச்சி

எல்லாவற்றையும்விட, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய பாடல், சங்கே  முழங்கு என்று, ரஷ்ய நாட்டுக் கலைஞர்கள் இந்த மேடையில் நடத்திய நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சிகளிலேயே சிறப்பான முத்தாய்ப் பான - நினைவைவிட்டு  அகல முடியாத நிகழ்ச்சியாக இருந்தது.

அதேபோன்று, நம்முடைய அன்பிற்கும், பாராட்டு தலுக்கும் உரிய தெருக்குரல்; இதுவரை திருக்குறளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நாம், இப்போது தெருக்குரலைக் கேட்டு  மெய் மறந்திருக்கக் கூடிய அளவிற்கு வந்திருக்கின்றோம்.

எங்கள் பிள்ளைகள், எங்கள் தோழர்கள் எதைச் செய்தாலும், ஆற்றல்மிக்கவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்குப் போதிய விளம்பரம் என்பதைத் தரவேண்டும்.

கலைத் துறையை மீட்பதுதான் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தினுடைய பணி!

கலைத் துறை இதுவரையில் வேறு யாரிடத் திலோ அடமானம் வைக்கப்பட்டு இருந்தது. அந்தக் கலைத் துறையை மீட்பதுதான் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தினுடைய வேலை யாகும்.

அதற்கு இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு உறுதுணையாக அமைந்திருப்பது ‘திராவிட மாடல்’ ஆட்சி ஒப்பற்ற முறையில் சிறப்பாக நடந்து கொண்டிருப்பதும் காரணமாகும்.

அப்படிப்பட்ட ஓர் அருமையான சூழல் இருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், அதற்கு வாய்ப்பாக இங்கே நிகழ்ச்சிகளை நாம் பார்த்தோம்.

திராவிடர் திருநாள் நிகழ்ச்சியை இந்த ஆண்டு நடத்தலாமா? வேண்டாமா? என்ற நெருக்கடி இருந்தது. ஏனென்றால், நிறைய பேர் அவரவர் ஊர்களுக்குச் சென்று விடுகிறார்கள். குறிப்பாக பெரியார் திடலில் உள்ளவர்களும்; அது தவிர்க்க முடியாதது; நியாயமும் கூட.

ஒரு நாள் நிகழ்ச்சி - திராவிடர் திருநாளாக மகிழ்ச்சியைத் தந்திருக்கின்றது

அப்படி இருக்கும்பொழுது, முன்பெல்லாம் இரண்டு நாள், மூன்று நாள்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. மூன்று நாள்கள் நடத்தினால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவோமோ, அவ்வளவு மகிழ்ச்சியை இந்த ஒரு நாள் நிகழ்ச்சியில், திராவிடர் திருநாளாகத் தந்திருக்கின்றது.

இந்த நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய பெரியார் விருதினை, நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய கரங்களால் பெற்ற நம்முடைய அருமைக் கவிஞர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

வரவேற்புரையாற்றிய நம்முடைய கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களே,

ஒரே நாளில் இவ்வளவு நிகழ்ச்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளன. நாங்கள் சொல்கிறோம், அதை நம் முடைய பிரின்சு என்னாரெசு பெரியார் போன்றவர்கள், அன்புராஜ் போன்றவர்கள் ஆற்றலோடு அதை செய்து முடித்துள்ளனர்.

அவர்கள் ஒரு பணியை செய்து முடிக்க, முடிக்க அவர்கள்மேல் எனக்கு நம்பிக்கை வருகிறது. ஆகவே, அவர்களுக்கு ஏதாவது ஒரு பணியை நான் கொடுத்துக் கொண்டே இருப்பேன்.

என்னடா, இவர் இவ்வளவு வேலைகளைக் கொடுக் கின்றாரே என்று ஒரு நாளும் அவர்கள் சொன்னதில்லை. அது அவர்களுக்கு ஒரு நல்ல பயிற்சிதான்.

நாங்கள் கொடுக்கின்ற சுதந்திரம் போன்று பெரியாரிடம் இருக்காது!

ஏனென்றால், இவர்கள் எல்லாம் பெரியாரிடம் பணி செய்யவில்லை. அப்படி அவர்கள் செய்திருந்தால், இவர்களுக்குத் தெரிந்திருக்கும்;  இவர்களுக்கு, நாங்கள் கொடுக்கின்ற சுதந்திரம் போன்று பெரியாரிடம் கிடைத்து இருக்காது.

மாநாட்டிற்காக போஸ்டர் அடித்தவுடன், ‘‘அந்தப் போஸ்டர் ஒட்டியிருப்பதை பார்க்கிறேன்’’ என்று அய்யா சொல்லுவார்.

செல்லமாக, அன்பாகக் கடிந்துகொள்வார் 

தந்தை பெரியார்!

‘‘வேண்டாம்; நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்’’ என்று நாங்கள் எல்லாம் சொல்வோம். ஏனென்றால், அந்தப் போஸ்டரைப் பார்த்துவிட்டு, ‘‘இது என்ன அக்கிரமமா இருக்கிறது; இதற்கு எவ்வளவு செலவாயிற்று?’’ என்று கேட்பார்.

‘‘இவ்வளவு செலவாயிற்று’’ என்று நாங்கள் சொன்ன வுடன்,

‘‘உங்களுக்கு அனுபவம் இல்லப்பா; பைத்தியக் கார்களாக இருக்கிறீர்களே’’ என்று செல்லமாக, அன் பாகக் கடிந்துகொள்வார்.

‘‘கொஞ்ச நாள் பொறுத்து நம்முடைய எதிரியே நம்முடைய மாநாட்டைப்பற்றி விளம்பரப்படுத்தப் போகிறார்கள்; அவன் செலவிலேயே விளம்பரம் செய் வதைவிட்டுவிட்டு, நீங்கள் ஏன்  செலவு செய்கிறீர்கள்?’’ என்று கேட்பார்.

அப்படி இருந்த இடத்தில், ரஷ்ய நடனக் கலைஞர் களின் கலை நிகழ்ச்சி, நாட்டுப்புற இசைக் கலைஞரின் கலை நிகழ்ச்சி, சிலம்பாட்டக் குழுவினரின் சிலம்பாட்ட நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சிந்தாதிரிப்பேட்டையில் ‘விடுதலை’ அலுவலகம் இருந்தது என்று பழைய தோழர்களுக்குத் தெரியும். அதற்குப் பிறகு ‘விடுதலை’ அலுவலகத்தை இங்கே தவத்திரு குன்றக்குடி அடிகளார் திறந்து வைத்தார்.

அலுவலகத்தை ஹாட்போர்டு வைத்து அறை அறையாகத் தடுதிருந்தோம். பிளைவுட்டை விட ஹாட்போர்டு விலை குறைவுதான்.

இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக 

வேலை செய்வார்கள் என்பதற்காகத்தான்

அதை அய்யா அவர்கள் பார்த்துவிட்டு, நல்லாதான் இருக்கு; இங்கே வாஷ் பேசின் ஒன்று வைக்கலாமே, ஆசிரியர் கை கழுவுவதற்கும், முகம் கழுவுவதற்கும் என்றார்.

பொறியாளருக்கு ஒரே ஆச்சரியம்; ‘‘என்னங்கய்யா, அய்யா திட்டுவார் என்று நினைத்தால், இங்கே வாஷ் பேசின் வையுங்கள் என்று சொல்கிறாரே’’ என்றார்.

அய்யா அவர்களுக்குத் தெரியும், முகம் கழுவினால், தூங்காமல், இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள் என்பதற்காகத்தான்.

ஆகவே, அப்படிப்பட்ட ஓர் உணர்வோடு பழகிய இடத்தில்,  ஒவ்வொன்றும் சிறப்பாக இன்றைக்கு நடக் கின்றது என்றால், இளைஞர்களை நம்பலாம். அதற்கு முன்பெல்லாம் பெரியார் சாக்ரட்டீசிடம் சொல்வேன். அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது; இருந்தாலும், நம்முடைய தோழர்கள் பிரின்சு, அன்புராஜ் போன்ற வர்கள்; அவர்களுக்கு ஒத்துழைக்கின்ற சீதாராமன் போன்றவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஆலோசனை சொல்வதற்கு நம்மு டைய கவிஞர் அவர்கள் இருக்கிறார். கவிஞருக்கு, யாரையும் கடிந்து பேசி பழக்கமில்லை. நான் கொஞ்சம் சுருக்கென்று சில விஷயங்களைச் சொல்வேன்.

ஆகவே,  இப்படியெல்லாம் இருந்தாலும், இது ஓர் அருமையான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி அவர்களே, அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம் அவர்களே, கோபால் அவர்களே, மோகன் அவர்களே, இரா.வில்வநாதன் அவர்களே, தாம்பரம் முத்தையன் அவர்களே, புழல் ஆனந்தன் அவர்களே மற்றும் நண்பர்களே!

ஒவ்வொரு ஆண்டும் பெரியார் விருதுக்குரியவர் களைத் தேர்ந்தெடுக்கும்பொழுது, ஒரு குழு அமைத்து, ஆய்வு செய்வதுண்டு.

இயக்கம் ஏணி போன்றது; 

எல்லோரையும் ஏற்றிவிடுவதுதான் 

இந்த இயக்கத்தினுடைய பணி!

விருதாளராக இருக்கக்கூடிய எழுத்தாளர் அய்யா வீ.மா.ச.சுபகுணராஜன் அவர்கள், திரைப் பட பின்னணி பாடகர் நெப்போலியன் என்கிற அருண்மொழி  அவர்கள், தெருக்குரல் அறிவு அவர்கள் இவர்கள் அனைவரும் உணர்ச்சிப்பூர்வ மாக உரையாற்றினார்கள் - என் உள்ளம் மகிழ்ந்திருக்கிறது. 

இந்த இயக்கம் ஓர் ஏணி போன்றது. எல்லோ ரையும் ஏற்றிவிடுவதுதான் இந்த இயக்கத்தினுடைய பணி. தமிழர்களை ஏற்றிவிடவேண்டும்.

ஏற்றம் பெறவேண்டிய தமிழர்கள் ஏற்றம் பெறவேண்டும். நம்மவர்களில், திராவிடர்களில் அறிவுக்குப் பஞ்சமானவர்களோ, திறமைக்குப் பஞ்சமானவர்களோ, தகுதிக் குறைவானவர்களோ கிடையாது.

அவர்கள் சரியானபடி அடையாளம் காட்டப் படவேண்டும்; காணப்படவேண்டும் - அதுதான் மிகவும் முக்கியம். அதை செய்வதுதான் எங் களுடைய வேலை.

பெரியார் மண்ணில், பார்ப்பனியம் அதனுடைய ஆக்டோபஸ் கொடுங்கரங்களை நீட்டுகிறது என்று சுபகுணராஜன் அவர்கள் ஆத்திரப்பட்டார்கள்.

ஒரு காலத்தில், நாமெல்லாம் அந்தத் தகுதிக்கு  உரியவர்கள் அல்ல என்று நினைத்தார்கள்

பெரிய அளவில் இருக்கக்கூடிய அவருக்கு ஒரு விருது கூட இன்னமும்  கொடுக்காமல் இருக்கிறார்கள். ஒரு காலத்தில், நாமெல்லாம் அந்தத் தகுதிக்கு  உரிய வர்கள் அல்ல என்று நினைத்தார்கள்.

ஆனால், இன்றைக்கு நம்முடைய தெருக்குரல் அறிவு அவர்கள் பாடும்பொழுது, யார் யாருக்குத் தலை இருக்கிறதோ, அத்தனை பேரும் தலையாட்டினார்கள்; அவ்வளவு திறமை அவரிடம் இருக்கிறது.

இருட்டில் இருக்கின்றவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதுதான் 

பெரியார் திடலினுடைய பணி

பெரியார் அய்யா சொல்லிக் கொடுத்த பாடம் என்ன வென்றால்,  ‘‘ஒருவரைப் பாராட்டவேண்டும் என்று நினைத்தால், தேடிப் பிடித்து உடனே அவரை பாராட்ட வேண்டும். நம்மவர்களை அடையாளம் காண வேண்டும்’’ என்றார்.

வெளிச்சத்தில் இருப்பவர்களை, வெளிச்சத்திற்கே கொண்டு வருவதைவிட, இருட்டில் இருக்கின்றவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதுதான் பெரியார் திடலினுடைய பணி - அதுதான் திராவிடர் கழகம்.

குரலிசையும் இருக்கிறது; குழலிசையும் இருக்கிறது.

குழலினிது, யாழினிது என்பர்.

தம் மக்கள் மழலை மொழி கேளாதார் என்று சொன்னார். இனிது என்பதற்கு வள்ளுவர் இரண்டைத் தான் சொல்லியிருக்கிறார்.

ஒன்று, குழல்; இன்னொன்று யாழ்.

இப்பொழுது யாழ் காணாமற்போய்விட்டது. யாழ்ப் பாணமே காணாமல் போகக்கூடிய சூழ்நிலையில், யாழே காணாமல் போய்விட்டது. ஆறு வகையான யாழ் இருந்தது என்று ஆய்வாளர்கள் சொல்வார்கள், இப்போது யாழ் எல்லாம் இல்லாமற் போய்விட்டது.

போராட்டக் களத்தையே காணக்கூடிய எங்களுக்கு குழலிசை மகிழ்ச்சியூட்டக் கூடியது

குழல் அப்படியல்ல; சிறிது நேரத்திற்கு முன்பு அவரு டைய குழலிசையைக் கேட்டபொழுது, எங்களைப் போன்றவர்களுக்கு இது மிகவும் புதுமையானது; போராட்டக் களத்தையே காணக்கூடிய எங்களுக்கு இது ஒரு பெரிய மகிழ்ச்சியூட்டக் கூடியது.

போர் வீரர்களையெல்லாம் உற்சாகப்படுத்துவதற்கு எப்படி இசைக்கலைஞர்கள் வருவார்களோ, அது போன்று, போராளிகளாக வாழ்நாளில் நின்று கொண்டி ருக்கக் கூடிய எங்களைப் போன்றவர்களுக்கு இதைவிட பெரிய வாய்ப்பில்லை. எனவே, நீங்கள் எங்களுக்கு நன்றி செலுத்தவேண்டாம்; நாங்கள்தான் உங்களுக்கு நன்றி செலுத்தவேண்டும். அப்படிப்பட்ட ஓர் அருமை யான வாய்ப்பு.

எங்கள் தங்கங்கள்; எங்கள் திறமையாளர்கள்; அவர்களைப் பெருமையாளர்களாக ஆக்கவேண்டும்; அடையாளம் காட்டவேண்டும் என்பதுதான் எங்களுடைய அன்பான வேண்டுகோள்.

பெரியாரை தெரியார் 

யாரும் கிடையாது

எனவே, எங்களுடைய வேண்டுகோளை ஏற்று, இங்கே நீங்கள் எல்லாம் வந்திருக்கின்றீர்கள்.  ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகின்ற புத்தகக் காட்சிக்கு நேற்று சென்றிருந்தேன். அங்கே நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாசில்லா மாசு அவர்களை சந்தித்தேன். அவரோடு கொள்கையைப்பற்றி பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில், அவருடைய கைப்பேசியில், இவரு டைய பாடலைப் போட்டுக் காண்பித்தார்.

‘‘அண்ணே, இன்றைக்கு லட்சக்கணக்கில் வைரலாகிக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்’’ என்று சொன்னார். அந்தப் பாடலையும் என்னு டைய கைப்பேசிக்கு அனுப்பினார்.

அந்தப் பாடலை அங்கேயே நான் கேட்டேன். அதைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தார்.

பெரியாரை தெரியார் யாரும் கிடையாது.

பெரியார், அனைவருக்கும் உரியார்.

ஒரே ஒருவர்தான் பெரியார், உரியார் இல்லை எனில், அவர் நரியார்.

நரியாரைத் தவிர, மீதி அத்துணை பேருக்கும் பெரியார் எல்லோருக்கும் உரியார் என்பதில் சந்தேகமேயில்லை.

நரிகளைப்பற்றி நாம் கவலைப்படவேண்டிய அவசியமில்லை!

அந்த வகையில், சிங்கங்களைப்பற்றித்தான் நாம் கவலைப்படவேண்டுமே தவிர, நரிகளைப்பற்றி நாம் கவலைப்படவேண்டிய அவசியமில்லை.

எனவே, இந்த சிங்கங்களையெல்லாம் அழைத்து, ஈரோட்டு சிங்கம் அமர்ந்த மேடைக்கு அழைத்து அவர்களைப் பாராட்டுவது என்பது மிகவும் முக்கியம்.

எனவே, இவர்கள் எல்லா வகையிலும் நல்ல உடல்நலத்தோடு மிகச் சிறப்பாக இருக்கவேண்டும். இவர்களுக்கு வருகின்ற பெருமையெல்லாம், இது தாயகம் போல இருக்கக்கூடிய இந்தத் திடலுக்கு, இந்த இயக்கத்திற்கு மிகப்பெரிய பெருமையாகும்.

அந்த அளவிற்குத் தெருக்குரல் அறிவு அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்.

தெருப் பாடகரைக் கண்டு 

அரசாங்கமே நடுங்கியது!

தெருப் பாடகராக இருப்பவர்தான் புரட்சி செய்யவேண்டும். ஒரு தெருப் பாடகரைக் கண்டு அரசாங்கமே நடுங்கியது முன்பு.

‘‘பொங்கு தமிழருக்கு இன்னல் விளைத்தால்,

சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு!’’

பெரியார் உலகமயமாகிறார் -

உலகம் பெரியார் மயமாகிறது 

என்பதற்கு அடையாளமாக  இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று இருக்கின்றன.

எனவே, அருமை அறிவு அவர்களே, இவ்வளவு குறுகிய காலத்தில், ஒரு நாள் அவகாசத்தில், இங்கே வந்தீர்கள். அருமையாகப் பாடினீர்கள்; அதுமட்டுமல்ல, வெங்காயம் படாதபாடு பட்டு இருக்கிறது; வெங்காயம், இதயப் பாதுகாப்பிற்கு மிகவும் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். தத்துவவாதிகளும் வெங்காயத்தைப்பற்றி சொல்லும்பொழுது, உரிக்க உரிக்க ஒன்றுமில்லை என்று சொல்வார்கள்.

ஆனால், வெங்காயத்தை எல்லா வகையிலும் சிறப்பாக அமைத்த முறை இருக்கிறதே, அது மிகவும் சிறப்பானது.

ஒரு காலத்தில், பறை இசை என்றால், அது சாவுக்கு அடிக்கின்ற மேளம் என்று சொன்னார்கள். அதேபோன்று,  பாடலா, இறந்தவர்களின் உடலைத் தூக்கும்பொழுது பாடுவது என்று சொன்னார்கள்.

சுயமரியாதையோடு, பெரு மரியாதையை உண்டாக்கியிருக்கின்ற இடம் 

பெரியார் திடல்!

ஆனால், அவர்களுக்கு சுயமரியாதையோடு, அவர்களுக்குப் பெரு மரியாதையை உண்டாக்கியிருக்கின்ற இடம் பெரியார் திடல்; பெரியாருடைய தத்துவங்கள்.

எனவே, நீங்கள் வாழ்க! வளர்க!

எங்களுடைய தோள்கள் உங்களைத் தூக்கிச் சுமக்க என்றைக்கும் தயாராக இருக்கிறது. எழுத்தாளர்களாக இருந்தாலும், இசைவாணர்களாக இருந்தாலும், அதேபோல, இசைக் கருவிகளை இயக்கக் கூடியவர்களாக இருந்தாலும் - ஆதிமனிதன் முதன்முதலில் ஒரு இசைக் கருவியைக் கண்டுபிடித்தான் என்றால், அதுதான் மூங்கிலில் செய்யக்கூடிய குழலிசைதான்.

இன்பத்தை மட்டும் கொடுக்கவில்லை; 

இன உணர்வையும் கொடுக்கிறது; 

தெம்பைக் கொடுக்கிறது

மூங்கிலினுள் இருக்கின்ற ஓட்டைகளை, விரல்களை வைத்து இவ்வளவு பெரிய நளினங்களை செய்கிறார் என்றால், இது எல்லோராலும் செய்ய முடியாத ஒன்றாகும். அவ்வளவு பெரிய ஆற்றலைப் படைத்தவர் நீங்கள். உங்களுடைய ஆற்றல் எங்களுக்கு இன்பத்தை மட்டும் கொடுக்கவில்லை; இன உணர்வையும் கொடுக்கிறது; தெம்பைக் கொடுக்கிறது. பல வகையில் நீங்கள் சிறப்பாக இருக்கவேண்டும்.

இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்ற நேரத்தில், நம்முடைய மகிழ்ச்சியை கொஞ்சம் குறைப்பது எதுவென்றால், படத் திறப்பு - இந்த மேடையில், அய்யா அவர்களைப்பற்றி, அம்மா அவர்களைப்பற்றி அவ்வை அவர்கள் சொன்னார்கள்.

இதுகுறித்து கடைசியாக சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் முதலிலேயே சொல்லவில்லை.

இதேபோன்ற ஒரு நிகழ்ச்சிக்காக, சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை அழைத்தோம். நாங்கள் அழைத்தால், அவர் மறுப்பேதும் சொல்ல மாட்டார்.

அப்பொழுது அவருக்கு உடல்நலம் சரியில்லாததால், அவருக்கு டிரிப்ஸ் ஏற்றியிருக்கிறார்கள். டிரிப்ஸ் போடுவதற்காக  கைகளில் ஊசி போட்டு வைத்திருப்பார்கள். அந்த ஊசியைக்கூட எடுக்காமல், இங்கே நடைபெற்ற நிகழ்ச்சியில் வந்து பேசினார். அதைப் பார்த்தபொழுது எங்களுக்கெல்லாம் மிகவும் கஷ்டமாக இருந்தது.

பெரியார் திடலுக்கு அவர் ஒரு நிலைய வித்வான்

அந்த நிகழ்ச்சியில் மிகவும் அருமையாக உரையாற்றினார் அவர். இவருடைய தாயார் மருத்துவர். அவருடைய வீட்டில் வைதீக சிந்தனையில் இருப்பவர்கள். அவருக்குத் தாரா என்பது பின்னாளில் வந்த பெயர். அதற்கு முன்பு அவருக்கு வீட்டில் வைத்த பெயர் இங்கர்சால் என்று சொன்னால், உங்களுக்கு எல்லாம் ஆச்சரியமாக இருக்கும். பெரியார் திடலுக்கு அவர் ஒரு நிலைய வித்வான்தான்.

எத்தனை புத்தகங்களைக் கொடுத்தாலும், அவற்றிற்கு அணிந்துரையை அமைதியாக அமர்ந்து எழுதிக் கொடுப்பார். 

எங்களிடத்தில் மட்டுமல்ல, யாரையும் அவர் புண்படுத்தியோ, சங்கடப்படுத்தியோ பேசியது கிடையாது.

அமைதியாக, ஆற்றொழுக்காக - இன்னுங்கேட்டால், என்னுடைய துணைவியார் வந்திருக்கிறார்கள் இங்கே - நான் சில நேரங்களில் ஆவேசமாகப் பேசுவதைப் பார்த்து, ‘‘ஏங்க, ஏன் இவ்வளவு ஆவேசமாகப் பேசுகிறீர்கள்? அவ்வை எப்படி பேசுகிறார் பாருங்கள்; அதுபோன்று ஏன் நீங்கள் பேசக்கூடாது?’’ என்பார்.

என்னுடைய இயல்பை 

நான் மாற்றிக் கொள்ள முடியாது

இத்தனை ஆண்டுகள் கழித்து, நான் இன்னொருவர் மாதிரி பேச முடியுமா? என்னுடைய இயல்பை நான் மாற்றிக் கொள்ள முடியாது என்று அவர்களுக்குச் சொல்வேன்.

அப்படி ஓர் இனிமையான, அருமையான சகோதரர். அவ்வை எங்கள் வீட்டுப் பிள்ளை; எங்கள் குடும்பத்தவர். அவரை இழந்தோம் என்று சொல்வதற்கு, இன்னுங்கூட எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் அழைத்தால், எனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லவே மாட்டார். கவிஞரிடம் நான் சொல்லிவிடுவேன், அவரை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி சொல்லுங்கள் என்று.

அவர் உடல்நலமின்றி இருந்தபொழுது, அவரை வீட்டிற்குச் சென்று பார்க்கவேண்டும் என்று கவிஞரிடம் சொல்வேன்.

இறந்தவராக இல்லை; 

இருப்பவராகத்தான் இருக்கிறார்!

அப்படிப்பட்ட ஒருவர், இறந்தும் இறாதவராக இருக்கிறார். இறந்தவராக இல்லை; இருப்பவராகத்தான் இருக்கிறார். அவருடைய எழுத்துகள், அவருடைய பண்பாடு இவை அத்தனையிலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய நினைவைப் போற்றுவோம்.

அவ்வையார் நிச்சயமாக வாழ்வார்; அவ்வையார் என்றே சொல்வோம்.

அப்படிப்பட்ட ஒருவரின் படத்தை இங்கே நாம் திறந்திருக்கின்றோம் என்றால், படம் மட்டுமல்ல; நமக்குப் பாடம். அந்தப் பாடம் என்பது, யாரை எப்படியெல்லாம் நடத்துவது? மரியாதையோடு நடத்துவது? பண்போடு நடத்துவது? என்பதுதான் மிகவும் முக்கியம்.

இந்த விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த நம்முடைய இயக்கத் தோழர்கள் அத்துணை பேருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, ஒத்துழைத்த பெரியார் திடல் தோழர்களுக்கும் நன்றி!

வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு!!

நன்றியுரை கூறவிருக்கக் கூடிய சீதாராமன் அவர்களுக்கும் நன்றி என்று கூறி, என்னுரையை முடிக்கின்றேன்.

வாழ்க பெரியார்!

வாழ்க தமிழ்நாடு!

வாழ்க தமிழ்நாடு!

வாழ்க தமிழ்நாடு!

இது தமிழ்நாடு!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.


No comments:

Post a Comment