'ஹிந்து சிந்தன்சை' அடையாளம் காண்பீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 24, 2023

'ஹிந்து சிந்தன்சை' அடையாளம் காண்பீர்!

ஹிந்துக்களை ஒன்று சேர்க்கும் விஎச்பி, ’ஹிந்து சிந்தன்ஸ்’ (ஹிந்துக்கள் குறித்து அக்கறை கொள்பவர்கள்) குழுக்கள் அமைத்து அதன்படி 69 லட்சம் பேர் சேர்க்கப்பட்டார்களாம்.

நாடு முழுவதிலும் உள்ள ஹிந்துக்களை ஒன்று சேர்க்க ‘ஹிந்து சிந்தன்ஸ்’  எனும் பெயரில் புதிய குழுக்களை அமைத்துள்ளது விஷ்வ ஹிந்து பரிஷத்(விஎச்பி). தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலிருந்தும் சுமார் 69 லட்சம் பேர் சேர்க்கப் பட்டுள்ளனராம்!

பாஜகவின் தாய் அமைப்பாக இருப்பது, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக். இதன் கிளைகளில் ஒன்றான விஎச்பி, கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு புதிய முகாம் நடத்தி உறுப்பினர்கள் சேர்ப்பு நடத்தியது.

'ஹிந்து சிந்தன்ஸ்' என்பதின்படி இவர்கள் நாட்டிலுள்ள கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை அனைத்துப் பகுதிகளில் வாழும் ஹிந்துக்களை ஒன்றிணைப்பார்களாம். இவர்கள் சமூகத் திலுள்ள ஜாதி மற்றும் அதன் பிரிவுகள் பல்வேறாக இருப்பினும் அனைவரும் 'ஹிந்துக்களே' என்ற கருத்தை வலியுறுத்த உள்ளனராம்.

இதற்காக, விஎச்பி சார்பில் சுமார் 61 லட்சம் உறுப்பினர்களை தனது புதிய "ஹிந்து சிந்தன்ஸ்”படி சேர்க்க முடிவு செய்தது. ஆனால், அதை விட அதிக உறுப்பினர்களாக சுமார் 69 லட்சம் பேர் அதில் இணைந்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இந்த அமைப்பின் சார்பில் உத்தரப் பிரதேசம் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மக்மேளாவில் விஎச்பி கூட்டம் நடத்தியது. இதில்,  அவத் மற்றும் காசி பிரதேசங்களின் கிளைகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில், விஎச்பியின் பசு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளையும் வலுப்படுத் துவது குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது.

இது குறித்து விஎச்பியின் நிர்வாகிகள் கூறும்போது,‘நாடு முழுவதிலும் உள்ள ஹிந்துக்களை ஒன்றிணைக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்படும் "ஹிந்து சிந்தன்ஸ்” குழுக்கள் நாடு முழுவதிலும் உள்ள ஹிந்துக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஒன்றிணைவதற்கான அவசியத்தை எடுத்துரைப் பார்கள்.

இதன் பலனாக, நம் நாட்டை ஒரே கொள்கையில் பன்னாட் டளவில் முன்னிறுத்த முடியும். இக்குழுக்களில் விஎச்பியினருடன் வெளியில் உள்ளவர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.’ எனத் தெரிவித்தனர்.

கடந்த ஆகஸ்ட் 29, 1964 இல் துவக்கப்பட்டது விஎச்பி. ஹிந்துக்கள் ஒற்றுமைக்காகத் துவங்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த அமைப்பு, உ.பி.யின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியையும் கையில் எடுத்தது. இதற்காக, விஎச்பி சார்பிலான தீவிரப் போராட்டங்கள் நாடு முழுவதிலும் நடத்தப்பட்டன.

அயோத்தியில் நடைபெற்ற விஎச்பியின் கரசேவையால் அங்கிருந்த பாபர் மசூதியும் கடந்த டிசம்பர் 6, 1992 இல் இடிக்கப் பட்டது.  இத்துடன், ஒவ்வொரு முறை மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அதன் சக அரசியல் அமைப்பான பாஜகவின் வெற்றிக்காகவும் விஎச்பி தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

இதன் களப்பணியானது அதிகம் வெளியில் தெரிவதில்லை. இந்த முறையும் 2024 மக்களவைத் தேர்தலுக்காகவே அதன் சார்பில்” ஹிந்து சிந்தன்ஸ்” எனும் பெயரில் புதிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் உறுப்பினர்கள் உ.பி.யில் மட்டும் அய்ந்து லட்சத்திற்கும் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனராம். இவற்றில் அதிகமாக நன்கு படித்தவர்களும், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், முக்கியப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பொதுமக்களின் வாழ்க் கையில் அன்றாடம் ஒன்றி இருப்பவர்கள் இடம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.

“ஹிந்து சிந்தன்ஸ்” என்ற குழுவில் உள்ளவர்கள் பெரும்பாலும் உயர்ஜாதியினரே!  “ஹிந்து சிந்தன்ஸ்” என்ற அமைப்பிற்குப் போட்டியாக தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பார் தனியாக ஒரு "மூல் நிவாசி ஹிந்து சிந்தன்ஸ்” என்ற அமைப்பை துவக்கி ஜாதி ரீதியாக பிரித்து வருகின்றனர்.  இவர்கள் மூலமாக தங்களது அரசியல் பிரிவான பாஜகவிற்கு 2024 மக்களவை தேர்தலில் பலன் சேர்க்கும் வாய்ப்புகளும் உள்ளதாக தெரிவிக்கும் விஎச்பி நாடு முழுவதிலுமான ஹிந்துக்களின் புள்ளிவிவரங்களையும் திரட்ட உள்ளதாம்.

இதில் பாதிக்கு மேல் பொய்யுரை இருக்கும்  - ஒரு பிரமிப்பை உண்டாக்கும் தந்திர உபாயமும் இருக்கும். இது அவர்களுக்கே உரித்தான அணுகுமுறை.

அது ஒருபுறம் இருக்கட்டும் - இதில் அலட்சியமாகப் பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மையினரான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மற்றும் சிறுபான்மையினர் இருக்கக் கூடாது. நம் கையில் உள்ள 'ஆயுதத்தை" முடிவு செய்பவர்கள் நமது எதிரிகள்தான். 

பார்ப்பனரல்லாத இளைஞர்களே 'ஹிந்து சிந்தன்ஸ்' முறையை நாம் அடையாளம் காண்பதிலும், தேவையானவற்றைப் பின்பற்றுவதிலும் கவனம் செலுத்துக!


No comments:

Post a Comment