மீண்டும் ஒரு நெடும்பயணம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 29, 2023

மீண்டும் ஒரு நெடும்பயணம்!

வரலாற்றைத் திரிக்க வந்த ஆளுநர் வாங்கி கட்டிக் கொண்ட வரலாற்றைப் படைத்துள்ளது. தமிழ்நாடு. 'சோழ நாடு சோறுடைத்து' என்று சொல்வோம். 'தமிழ்நாடு தன்மான முடைத்து' என 9.1. 2023 அன்று சட்டமன்றத்தில் உறுதியாக நிரூபித்தார்  - 'திராவிடமாடல்' முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள். இத்தகைய செயல்பாடு தான் இன்றைய இந்தியாவிற்கே தேவையாக இருக்கிறது. 

குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல ஒன்றிய பாஜக அரசின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் மாநிலங்களின் உரிமை பறிப்புகள் அலங்கோலமாய் உதிரி நிற்கின்றன. ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும் அப்பிள்ளைகள் ஒன்று போல அல்ல எனும்போது அரசமைப்புச் சட்டத்தின் 28 மொழி களும் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் ஹிந்தியை ஒவ்வொரு மாநிலங்களுக்குள்ளும் கட்டாய மாகத் திணிப்பதும், மதத்தின் பெயரால் கலவரங்களை ஏற்படுத்தித் தன் சர்வாதிகார கட்டுப்பாட்டிற்குள் நாட்டைக் கொண்டு வர நினைப்பதும், சிறுபான்மையினரை அச்சுறுத் தும் படியான பேச்சுகளை கட்டவிழ்த்து விடுவதும், முட்டாள் தனம் - மூர்க்கத்தனத்தையும் வளர்த்தெடுக்கும் அரசாகவும், சமூகநீதியை சவக்குழிக்கு அனுப்புகிற ஒரு வேலையை தொடர்ச்சியான செயல் திட்டமாகவே வைத்துக் கொண்டி ருக்கக் கூடிய ஆர். எஸ். எஸ். பின்னிருந்து இயக்கும் இந்த மோடி அரசை வருகின்ற 2024 மக்களவைத் தேர்தலில் விரட்டி அடிக்க வேண்டும் என்பது மிகத் தலையாய கடமையாகும். இதனை விழிப்போடு நாட்டு மக்களுக்கு முன்னமே எடுத்துரைக்க தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழ்நாடு தழுவிய அளவில் மீண்டும் ஒரு பெரும் பயணத்தை இதோ அறிவித்துவிட்டார். அறிஞர் அண்ணா நினைவுநாளான பிப்ரவரி மூன்றாம் தேதி தொடங்கி மார்ச்   பத்தாம் தேதி வரை பெருநகரங்கள், பெரு கிராமங்கள் என அனைத்து ஊர்களிலும் 'சமூக நீதி பாதுகாப்பு- திராவிட மாடல் ஆட்சி' விளக்கக் கூட்டங்களுக்கு விரையத் தயாராகி விட்டார்.  

பயணங்கள் என்பது தலைவர் வாழ்வில் பலமுறைப் பார்த்தது என்றாலும், ஒவ்வொரு முறை பயணத்திட்டத்தை அறிவிக்கும் போதும்  தம் உழைப்பினாலும், பயண தூரத்தினாலும் நம்மை மலைக்கவே வைக்கிறார்.

பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டுடன் பொருத்தக் கூடாது என்பதற்காகவே தமிழ்நாடு முழுவதும் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நம் ஆசிரியர் - சென்ற ஆண்டும் தகுதி தேர்வு எனும் 'நீட்' சதித் தேர்வை முறியடிக்க 4,700 கி மீ பயணம் செய்து கடைக் கோடி மனிதருக்கும் எட்டும் வகையில் புதிய கல்விக் கொள்கை என்பது, நியூ எஜுகேஷனல் பாலிசி அல்ல, அது நோ எஜுகேஷனல் பாலிசி என்று மிக எளிமையாக புரிய வைத்து மாநில மக்களிடையே ஓர் தெளிவை ஏற்படுத்தி வந்தார். பல ஆண்டுகள் போராடித்தான் நுழைவுத் தேர்வை நாம் தமிழ்நாட்டில் முன்பு ஒழித்தோம் என்றார். நீட் தேர்வு என்ற பெயரில் நடக்கும் குளறுபடிகளை வெளிச்சம் போட்டு விழிக்க வைத்தார்.

அதேபோல் இப்பொழுதும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான சலுகை என்ற பெயரில் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் பழங்குடியினரை விட குறைந்த மதிப்பெண் பெற்ற உயர் ஜாதியின ருக்கு ஸ்டேட் பேங்க், ரயில்வே துறைகளில் ஒதுக்கீடு வழங்கி இட ஒதுக்கீட்டின் தத்துவத்தையே குழிதோண்டிப் புதைத்த ஒன்றிய அரசின் அறிவிப்பைக் கொளுத்துவோம் என்று ஆதாரங்களை அடுக்கிக் காட்டி அறிக்கைகளில் முழங்கி  அடுத்த கட்ட வருமுன் காக்கும் பயணத்திற்கும் முனைந்து விட்டார். 

இன்று 'திராவிட மாடல்' ஆட்சி என்பது இந்தியாவைத் தாண்டி  பல்வேறு உலக நாடுகளும் பார்த்து வியக்கும் வண்ணம் 'அனைவருக்கும் அனைத்தும்' என்பதை அனைத்து துறைகளிலும் அறிமுகப்படுத்தும் வகையில் புரட்சிகரமான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. 

பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தால் ஊரகப் பகுதியில் இருக்கும் பள்ளிக்கல்வியைக் கூட தாண்டாத ஏராளமான பெண்கள் பயணிக்கிறார்கள் என்பது பெண் விடுதலையில் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்களின் கற்பனைத் திறனையும், கலைத் திறனையும் வளர்த்தெடுக்கும் வகையில் கலை விழாக்கள் முன்னெடுப்பது, நான் முதல்வன், பள்ளி மேலாண்மை குழுக்கள், எண்ணும் எழுத்தும் ஆகிய திட்டங்கள்  அரசுப் பள்ளி மாணவர்களிடையே புது எழுச்சியை உருவாக்கி உள்ளன.  தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் இந்த அரசின் தாய்மை உணர்வை படம் பிடித்து காட்டுகிறது. 

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் செயல்படும் இந்த ஆட்சியில் மாவட்ட அளவில் புத்தக சந்தைகளும், இலக்கிய விழாக்களும் நடத் தப்படுகின்றன என்பதோடு எழுத்தாளர்களை ஊக்குவித்து விருதுகள் வழங்கப்படுவதும் பாராட்டுக்குரியது.

'இல்லம் தேடி மருத்துவம்' என்னும் திட்டம் முதியோர் களின் வாழ்வில் வலி நீங்கி ஒளியானது. விளையாட்டுத் துறையிலும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் செயல்களைச் செய்து, விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு உதவிகளையும்  ஏற்படுத்தித் தரும் அரசாக 'திராவிட மாடல்' அரசு உள்ளது.

தமிழ்மொழி உணர்வைக் காத்தல், மருத்துவம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளை தமிழ் மொழியில் கொண்டு வருதல், தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தல், இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை நீதிமன்றங்களில் முறைப்படி வாதாடி பெற்றுத் தருதல் இப்படியாக எந்த ஒன்றிலும் மிகச் சிறப்பாக- உதாரணமாக பணியாற்றிக் கொண்டிருக்கிற திராவிட முன்னேற்றக் கழக அரசை இந்து மதத்திற்கு எதிரானதென்று பழி தூற்றி தமிழ்நாட்டில் கால் வைத்து விட துடியாய்த் துடிக்கிற பாஜக அரசின் மாயத் தோலை உரித்து காட்டத்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மீண்டும் மீண்டும் அயராமல் காரியமாற்றுகிறார். 

இட ஒதுக்கீடு என்பது தகுதி திறமையை பாழடித்து விடும் என்று தம்பட்டம் அடித்தவர்கள் எந்த போராட்ட முமின்றி ஒன்றிய அரசு வழங்கும் ணிகீஷி  இட ஒதுக்கீட்டை  அனுபவிப்பது அரசியல் சட்ட முகவுரையில் முதலிடம் அளித்துள்ள சமூக நீதிக்கு முரணானது என்று விளக்க வருகிற தலைவரின் வருகையை வரவேற்று இப்பயண நோக்கத்தை பரப்பும் இவ்வேளையில், ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளுவோருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு நம்முடைய அரசுகள் வழங்கி அதன் மூலம் படிப்படியான ஜாதி ஒழிப்புக்கான வழிவகையைச் செய்ய வேண்டும் என்று நாமும் இந்த நேரத்தில் அரசிடம் கோரிக்கையாக்கி வைப்போம். அதன் மூலம் பெரியாரின் தத்துவங்கள் தமிழர் தலைவர் ஆசிரியரின் காலத்திலேயே பெருவெற்றி காணும் வகைசெய்வோம்! 

ஆசிரியர் வருகின்றார் எடுத்துச் சொல்ல! ஆயத்தமா வோம் தோழர்களே!!

- இசையின்பன்


No comments:

Post a Comment