ஒன்றிய அரசின் செயலகப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி செ.வேலுமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

ஒன்றிய அரசின் செயலகப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி செ.வேலுமணி

 தேசப் பாதுகாப்புக்கு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் அவசியமானது

திட்டம் முடக்கப்பட்டதற்குக் காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சியே!

அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவின் முயற்சி அசாதாரணமானது; ஆசிரியர் அவர்கள் இப்பொழுது மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது!

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தக் கோரி - விளக்கச் சிறப்புக் கூட்டத்தில் 

சென்னை, ஜன.5 தேசப் பாதுகாப்புக்கு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் அவசியமானது; திட்டம் முடக்கப் பட்டதற்குக் காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சியே! ஒன்றிய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவின் முயற்சி அசாதாரணமானது; ஆசிரியர் அவர்கள் இப்பொழுது மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது! என்றார் ஒன்றிய அரசின் செயலகப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி செ.வேலுமணி அவர்கள்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் விளக்கச் சிறப்புக் கூட்டம்

கடந்த 3.1.2023  அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் - செயல்படுத்தக் கோரி விளக்கச் சிறப்புக் கூட்டத்தில் ஒன்றிய அரசின் செயலகப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி செ.வேலுமணி சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தக் கோரி, இன்றைக்கு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக் கின்ற விளக்கச் சிறப்புக் கூட்டத்தில் வரவேற்புரை நிகழ்த்தி அமர்ந்துள்ள திரு.ப..முத்தையன் அவர்களே,

தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் திராவிடச் சித்தாந்தங்களின் தீபத்தை அய்யாவிற்குப் பிறகு, அம்மாவிற்குப் பிறகு பல ஆண்டுகளாக உயர்த்திப் பிடித்துக் காப்பாற்றுகின்ற பெருமதிப்பிற்குரிய அய்யா ஆசிரியர் அவர்களே,

தலைமை ஏற்று சிறப்பாக உரை நிகழ்த்தி அமர்ந் துள்ள அய்யா கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

சிறப்புரை வழங்கவுள்ள அன்புச்சகோதரி வழக் குரைஞர் அருள்மொழி அவர்களே, நன்றியுரை வழங்க வுள்ள தேசெ.கோபால் அவர்களே,

இந்த அரிய வாய்ப்பை எனக்கு வழங்கிய ஆசிரியர் அய்யா அவர்களுக்கு முதலில் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும் என்கிற வலுவான கோரிக் கையை வைத்து, இன்றைக்கு நடத்தப்படுகின்ற இந்தக் கூட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

160 ஆண்டுகால கனவுத் திட்டம் -

160 ஆண்டுகால போராட்டம்!

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் - 160 ஆண்டுகால கனவுத் திட்டம். இப்படித்தான் நாம் இதுவரையில் சொல்லி வந்திருக்கின்றோம். ஆனால், உண்மையில் இதை 160 ஆண்டுகால போராட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அய்யாவின் காலத்தில் தொடங்கி, பேரறிஞர் அண்ணா, அவருக்குப் பின் முத்தமிழ் அறிஞர் கலைஞர், ஆசிரியர் அய்யா அவர்கள், பேராசிரியர் அவர்கள், இன்றைய முதலமைச்சர் தளபதி அவர்கள் என்று பல தலைவர்களும் பல காலம் போராடி, 2005 ஆம் ஆண் டில் அதற்கொரு விடிவு ஏற்பட்டது.

2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி, மதுரை மாநகரில் நடைபெற்ற ஒரு மாபெரும் விழாவில் சேது சமுத்திரத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

கனவு நனவாகி விட்டது என்றுதான் 

எண்ணியிருந்தோம்!

அன்றைக்கு நாங்கள் எல்லாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உண்மையிலேயே கனவு நனவாகி விட்டது என்றுதான் எண்ணியிருந்தோம்.

ஆனால், இரண்டு, மூன்று ஆண்டுகளில், அந்தத் திட்டப் பணிகள் எல்லாம் மிகமிகச் சிறப்பாக நடை பெற்றுக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராதவிதமாக ஒரு பெரும் ஆபத்து வந்தது; வழக்குகள் தொடரப்பட்டு, அந்தத் திட்டம் முடக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது - அரசியல் காரணங்கள்தான்

அதற்குப் பலப் பல காரணங்கள் எல்லாம் எடுத்து வைக்கப்பட்டன. முதன்மையானது, திட்டம் செயல் படுத்தப்படும் கடல் பகுதியில், இராமர் அமைத்த பாலம் இருக்கிறது; அதனை இந்தத் திட்டம் இடித்துத் தள்ளு கிறது என்று ஒரு சாரார்; இன்னொரு சாரார், இந்தத் திட்டத்தினால் எந்தப் பயனும் கிடையாது என்று சொன்னார்கள்.

இப்படி சொல்வதற்கு அடிப்படை காரணம் என்ன வென்றால், அரசியல் காரணங்கள்தான் உள்நோக்கம். நீதிமன்றத்திற்குச் சென்று தடையும் பெற்றார்கள்.

இன்றைக்கு 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. நீதிமன்றத் தடை அப்படியே இருக்கிறது.

ஒன்றிய அமைச்சராக இருந்த 

டி.ஆர்.பாலு  அவர்கள் எடுத்த முழு முயற்சி

அந்தக் காலகட்டத்தில் ஒன்றிய அரசின் கப்பல் துறையின் கேபினெட் அமைச்சராக இருந்த பெரு மதிப்பிற்குரிய டி.ஆர்.பாலு  அவர்கள் எடுத்த முழு முயற்சியின் விளைவாகத்தான் - அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது அவர் பெற்ற பேறு என்று நான் சொல்வேன்.

இந்தத் திட்டத்தை, அய்யாவின் திட்டத்தை, அண்ணாவின் திட்டத்தை, கலைஞரின் திட்டத்தை செயல்படுத்தக் கூடிய ஓர் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதை அவர் சிறந்த முறையில் செய்தார்கள். அதை அவரோடு இருந்து கண்கூடாகப் பார்த்தவர்கள் நாங்கள்.

எந்த நேரமும் அதே சிந்தனையாகத்தான் இருப்பார். அந்த அளவிற்கு ஒரு அமைச்சர், ஒரு திட்டத்தை செயல்படுத்தி நான் பார்த்ததில்லை.

அவ்வளவு தெளிவாக, திடமனதுடன், முழு முயற்சி யுடன் செயல்படுத்தி வந்தார்கள். இந்த வழக்குப் பிரச் சினை வந்தபொழுது, அவர்கள் இந்தியாவிலேயே தலைசிறந்த வழக்குரைஞர் திரு.பாலிநாரிமன் அவர் களை வைத்துத்தான், அரசு சார்பாகவும், சேது சமுத்திரக் கழகம் சார்பாகவும் வாதாடினார்கள்.

அப்பொழுதெல்லாம் திரு.பாலிநாரிமன் அவர்களை, வழக்கு சம்பந்தமாக பார்த்து ஆலோசிக்கும்பொழுது, விவாதிக்கும்பொழுது அவர்களே நேரில் போவார்கள்.

இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள சேது சமுத் திரக் கால்வாய்த் திட்டக் கழகத்தின் மேனாள் தலைவர் திரு.கே.சுரேசு அவர்களும் செல்வார்கள், நாங்களும் சென்றிருக்கின்றோம்.

அந்த அளவிற்கு, ஒரு வழக்கு சம்பந்தப்பட்ட விஷ யத்தில், வழக்குரைஞரை நேரில் பார்த்து, அதுபோன்று யாராவது ஆலோசிப்பார்கள் என்று நான் கேள்விப்பட்ட தில்லை.

அப்படியெல்லாம் இந்தத் திட்டத்திற்காக அவர் மிகவும் போராடினார். அதற்காக அவர் பல தரப்புகளி லிருந்தும் எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிட்டது.

டி.ஆர்.பாலு அவர்களின் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் குண்டர்களின் தாக்குதலிலிருந்து தப்பினார் அவர்!

ஒருமுறை டில்லிக்கு அருகில் உள்ள பூபாங் என்கிற ஊரில் (இன்று அதை புதுபாங் என்று மாற்றிவிட்டார்கள்) நடைபெற்ற தேசிய நெடுஞ்சாலை விழாவிற்குச் சென்று, திறப்புவிழாவில் பங்கேற்றுவிட்டு, பிற்பகலில் வருகிறார். அப்படி வரும்பொழுது டில்லி விமான நிலையத்தைத் தாண்டி வரும்பொழுது, அங்கே தயாராக இருக்கிறார்கள் குண்டர்கள் தாக்குவதற்கு. அது நான்கு வழி சாலை - சாலையின் ஓரத்தில் நூற்றுக்கணக்கானோர் அமைச் சரை தாக்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள். இதை அறிந்த அமைச்சருடைய கார் ஓட்டுநர் மிகத் திறமை யாக, சாலையின் மறு ஓரத்திற்கு காரை வேகமாகச் செலுத்தி வந்துவிட்டார். அப்படிப்பட்ட ஆபத்துகளை யெல்லாம் அவர் நேர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தத் திட்டம் திரு.டி.ஆர்.பாலு அவர்கள் ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், அதிகாரிகளை வைத்து முதல் கூட்டம் நடத்தினார். அதில் பெரும்பாலும், அமைச்சகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை செயலாளர் கள் எடுத்துரைப்பார்கள். அப்படி ஒரு கூட்டம் கிட்டத் தட்ட ஒரு வாரத்திற்கு தொடர்ந்து நடக்கும்.

முதல் நாள் அன்று, அமைச்சருக்கு வரவேற்பு கொடுத்து, மாலை மரியாதைகள் எல்லாம் முடிந்து, எல்லோரையும் அனுப்பிவிட்டு, செயலாளர் மற்றும் அலுவலர்களை அமர வைத்து, அவர் கேட்ட முதல் கேள்வி என்னவென்றால், ‘‘சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும்; இதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன?’’ என்று கேட்டார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரியே இத்திட்டத்திற்கு எதிர்ப்பு 

தெரிவித்ததுதான் வேடிக்கை!

பலரும் செய்யலாம் என்றனர். ஆனால், சற்றும் எதிர்பாராத ஒரு எதிர்ப்பு அவருக்கு வந்தது. அவர் வேறு யாரும் கிடையாது, கப்பல் துறையின் செயலாளர், மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரி.

அமைச்சர் அவர்கள் இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை. இன்னும் ஒரு வேடிக்கை, விநோதம் என்ன வென்றால், அந்த அய்.ஏ.எஸ். அதிகாரி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

அண்மையில், இரண்டு, மூன்று நாள்களுக்குமுன்பு திரு.டி.ஆர்.பாலு அய்யா அவர்களிடம் பேசிக் கொண் டிருந்தபொழுது, இந்த நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்தார்.

நான் சொன்னேன், ‘‘சார், நீங்கள் அந்த நிமிடமே அந்த செயலாளரை மாற்றியிருக்கவேண்டும்‘‘ என்று.

ஒருமுறை திட்டப் பணிகள் நடந்துகொண்டிருக்கின் றன. ஆதாம் பாலம் பகுதியில், தூர் வாரும் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆதாம் பாலத்தின் மேற் பகுதி, கடினமான பகுதி, பல காலமாக அது இறுகிப் போயிருக்கிறது. அதை உடைத்துவிட்டால், அடிப்பகுதி மென்மையாகத்தான் இருக்கும்.

இந்தப் பணியை, ஒன்றிய அரசுக்குச் சொந்தமான பொது நிறுவனம்தான் செய்தது. அங்கே அவர்களுக்கு இந்த சவால் ஏற்பட்டது குறித்து ஒரு நாள் மாலை விவாதம் நடைபெற்றது டில்லியில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில்.

சிறுசிறு கண்ணிவெடிகள் வைத்து அந்தக் கடினமான மேற்பகுதிகளைத் தகர்க்கலாம் என்று முடிவெடுத்து, அதன்படி செய்யுங்கள் என்று சொன்னார்.

நீதிமன்றம்மூலம் தடை பெற்றனர்!

இந்த விஷயம், அடுத்த நாள் காலை டில்லியில் வெளிவரும் ‘தினமலர்’ பத்திரிகையில் ‘டீக்கடை பெஞ்ச்‘ பகுதியில் அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற அத்தனை விஷயங்களும் அப்படியே வெளிவந்தன.

இத்தகைய சூழ்நிலையில்தான், இந்தத் திட்டத்தை அமைச்சர் அவர்களும், ஏனைய அதிகாரிகளும் நடத்திக் கொண்டிருந்தார்கள். கடைசியாக அந்தத் திட்டத்திற்கு நீதிமன்றம் மூலம் தடை பெறப்பட்டது.

இன்றைய ஒன்றிய பா.ஜ.க. அமைச்சரின் ஒப்புதல்!

இந்த நேரத்தில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், கடந்த 22.12.2022 அன்று மாநிலங்களவையில், ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரான டாக்டர் பூபேந்திரசிங் அவர்கள், அவர் பிரதமர் அலு வலகத்தில் உள்ள அமைச்சர்.

அவர் சொல்கிறார், ‘‘அறிவியல் ஆய்வுகளின்படி இந்தக் கடல் பகுதியில், செயற்கையான கட்டமைப்புகள் எதுவும் கிடையாது. அங்கே உள்ளவை இயற்கையான மணல் திட்டுக்கள்; சுண்ணாம்பு கற்களால் ஆனவை’’ என்று மிகத் தெளிவாக சொல்லிவிட்டார்.

நாடாளுமன்றத்தில் 2007 இல் 

டி.ஆர்.பாலு அவர்கள் சமர்ப்பித்த அறிக்கை!

இந்தப் பிரச்சினை எழுந்தபொழுது, 2007 இல், உச்ச நீதிமன்றம் இந்தத் திட்டத்திற்குத் தடை வழங்குவதற்கு 15 நாள்களுக்கு முன்பு, அன்றைய கப்பல்துறை அமைச் சர் டி.ஆர்.பாலு அவர்கள், நாடாளுமன்றத்தில் ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கிறார், இந்தப் பிரச்சினை குறித்து.

இப்பொழுது ஒன்றிய அமைச்சரவையில்,  கல்வித் துறை அமைச்சராக உள்ள தர்மேந்திர பிரதான் அவர் கள்தான் அப்பொழுது அந்தப் பிரச்சினையை எழுப் பியிருந்தார்.

அவருக்குப் பதில் கூறும் விதமாக, இதே கருத்தைத்தான் டி.ஆர்.பாலு அவர்களும் சொன்னார்.

‘‘அங்கே அறிவியல் ஆய்வுகள்படி, இந்தப் பகுதி, 5 லட்சம் முதல் 8 லட்சம் ஆண்டுகள் பழைமையானவை. அது இயற்கையான அமைப்புதான்; செயற்கையான கட்டுமானங்கள் எதுவும் கிடையாது. யார் யார் இந்த ஆய்வுகளைச் செய்தார்கள்’’ என்பதையெல்லாம் விளக்கிச் சொன்னார்.

இன்றைக்கு அதையேதான் பதினைந்து ஆண்டுகள் கழித்து, ஒன்றிய அரசின் அமைச்சர், நாடாளுமன்றத்தில் சொல்கிறார் என்றால், நாம் எந்த அளவிற்கு இந்தத் திட்டத்தில் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பது தெளிவாகிறது.

நாம் அனைவரும் ஆசிரியர் அவர்களுடைய முயற்சிக்குப் பக்கபலமாக இருக்கவேண்டும்

இந்த நேரத்தில், இதுபோன்ற ஒரு நல்ல நிகழ்ச்சியை ஆசிரியர் அவர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். இது மிகவும் பாராட்டத்தக்க ஒரு செயல். நாம் அனைவரும் ஆசிரியர் அவர்களுடைய முயற்சிக்குப் பக்கபலமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு தமிழரும் செய்ய வேண்டிய கடமை இது.

இந்தத் திட்டம் நிச்சயமாக நிறைவேறும். அதில் எந்த சந்தேகமும், அய்யமும் கிடையாது.

இதுவும் ஒரு நல்வாய்ப்புதான் என்று நான் கருதுகிறேன். அய்யா அவர்கள் சொன்னதுபோல, 2,460 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டம், 2005 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட பொழுது, கப்பல் பாதையின் ஆழம் 12 மீட்டர்தான்.

அதை வைத்துச் சொன்னார்கள், இந்த ஆழத்திற்கு, பெரிய கப்பல்கள் எல்லாம் போக முடியாது; அதனால் எந்தப் பயனும் கிடையாது என்று சொன்னார்கள்.

ஆனால், இந்தியத் துறைமுகங்களுக்கு வருகின்ற கப்பல்கள் - அன்றைய காலகட்டத்தில் 22 ஆயிரம் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்கு வந்து சென்றன. இப்பொழுது அந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. இவற்றில் ஏறத்தாழ 70 சதவிகித கப்பல்கள் 12 மீட்டர் அடி ஆழத்தைவிட குறைந்த பாதையில்தான் பயணம் செய்கின்றன.

ஆக, இந்தியத் துறைமுகங்களுக்கு வரும் 70 சதவிகித கப்பல்கள் சேது சமுத்திரக் கால்வாய் வழியாகச் செல்ல முடியும்; அதுதான் உண்மை.

ஆனால், அது போதாது. இன்றைக்குக் காலம் மாறிவிட்டது. பெரிய பெரிய கப்பல்கள் - 24 ஆயிரம் சரக்குப் பெட்டகங்களை ஏற்றிச் செல்லக்கூடிய கப்பல்கள் - 5 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு செல்லக்கூடிய கப்பல்கள் எல்லாம் இன்றைக்கு வந்து விட்டன.

ஆக, அந்தக் கால மாற்றத்தை கருத்தில் கொண்டு, பழைய திட்டம் இன்று உதவாது; இந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப்படும்பொழுது, 16 மீட்டர் அல்லது 18 மீட்டர் ஆழத்திற்கு, அளவிற்கு, திட்டத்தை மாற்றியமைத்து செயல்படுத்தவேண்டும்.

சேது சமுத்திரக் கால்வாய் உலகப் புகழ் பெறும் என்பதில் எந்த அய்யமும் கிடையாது

அப்பொழுது, சூயஸ் கால்வாய் - பனாமா கால்வாய் என்றெல்லாம் உலகம் முழுவதும் எப்படி புகழ்பெற்றி ருக்கிறதோ, அதுபோல, நமது சேது சமுத்திரக் கால்வாயும் உலகப் புகழ் பெறும் என்பதில் எந்த அய்யமும் கிடையாது.

திரு.டி.ஆர்.பாலு அவர்கள், 1986 இல், மாநிலங் களவைக்கு தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, மயிலை மாங்கொல்லையில் ஒரு பாராட்டுக் கூட்டம் - அந்தக் கூட்டத்தில், முத்தமிழ் கலைஞர் அவர்கள் உரையாற்றும்பொழுது, ‘‘சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறிட, உங்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கவேண்டும்‘‘ என்று ஆணையிட்டார்கள்.

அன்று சொன்ன அந்த ஆணையை ஏற்றுக்கொண்டு, நாடாளுமன்றத்தில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத் தைப்பற்றி எடுத்துக் கூறுவார்.

அதன் பிறகு, 2004 ஆம் ஆண்டு டி.ஆர்.பாலு அவர்கள் ஒன்றிய அமைச்சரானவுடன், அந்த வாய்ப்புக் கிடைத்தது. முதல் நாளிலிருந்தே அதற்கான பணிகளைத் தொடங்கி விட்டார்.

அனைவருடைய ஒப்புதலின்படிதான் 

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது

இந்தத் திட்டத்திற்கான அனுமதி முறைப்படி பெறப்பட்டது. சம்பந்தப்பட்ட எல்லாத் துறைகளோடும் கலந்து ஆலோசித்து, விரிவான திட்ட அறிக்கை பெறப் பட்டு, சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களின் கருத்துகளைக் கேட்டு, பின்னர், ஒன்றிய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டு, அனைவருடைய ஒப்புதலின்படிதான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இன்றைக்கு செய்திருக்கிறார்களே, 3,200 கோடி ரூபாய்க்கு ஒரு சிலை - அப்படியெல்லாம் இந்தத் திட்டம் செய்யப்படவில்லை. இந்தத் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்பட்டது.

தேசப் பாதுகாப்பிற்கு இது மிக முக்கியமான திட்டம்: ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம்

இங்கே நான் குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இத்திட்டத்தின் வரைவு குறித்து, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சென்றபொழுது, அவர்கள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததற்கு ஒரே காரணம், தேசப் பாதுகாப்பிற்கு இது மிக முக்கியமான திட்டம். அதனால், நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

நமக்கெல்லாம் தெரியும், 2020 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டுவரை கரோனா கொடுந்தொற்று உலகத்தையே  ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நேரம், அனைவரும் அவரவர் இல்லங்களில் முடங்கிப் போயிருந்த நேரம்.

அந்த சமயத்தில், இலங்கையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. சீனா, முதலீடுகளை அங்கே கொட்டிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 56 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அங்கே முதலீடு செய்தது.

என்ன திட்டங்கள்?

துறைமுகத் திட்டங்கள், ரியாலிட்டி திட்டங்கள்,  விரைவுச் சாலைகள் என்று பல திட்டங்கள். அதில் ஒன்று, அம்பன்தோட்டா துறைமுகம். அது மிகப்பெரிய கண்டெய்னர் துறைமுகமாக உருவாக்கப்பட்டது. அந்தத் துறைமுகம் மகிந்த ராஜபக்சேவின் சொந்த ஊரில் உள்ளது.

அந்தத் திட்டத்திற்காக கிட்டத்தட்ட 800 கோடி ரூபாயைக் கடன் கொடுத்திருந்தது. இலங்கை அரசினால் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. ஆகவே, அவர்கள் அதைக் கைப்பற்றி விட்டார்கள்.

நமக்குப் பெரிய ஆபத்து என்பதை 

எல்லா ஊடகங்களும் தெரிவித்திருந்தன

இந்த நிலையில், சீனா, இந்தியாவைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளுடன் நல்லுறவை வளர்த்து, அவர்களைத் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு வரும்பொழுது, இலங்கைக்கு அந்த வழியில் சென்றால், நமக்குப் பெரிய ஆபத்து என்பதை எல்லா ஊடகங்களும் தெரிவித்திருந்தன; விவாதங்களும் நடைபெற்றன.

அப்பொழுதுதான், அருணாச்சல் - லடாக் பகுதியில், இந்தியப் படைகளுக்கும், சீனப் படைகளுக்கும் மோதல்கள் நடைபெற்றன.

டி.ஆர்.பாலு அவர்கள் எழுதிய கடிதம்!

அந்த சமயத்தில், மேனாள் ஒன்றிய அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்கள், 10.6.2020 அன்று பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில் இந்த விவரங்களையெல்லாம் தெரிவித்து, ‘‘நீங்கள் என்ன காரணங்களுக்கு வேண்டுமானாலும், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செய்யாமல் இருக்கலாம்; ஆனால், தேசப் பாதுகாப்பு காரணம்பற்றியாவது, இந்தத் திட்டத்தை நீங்கள் அவசியம் செயல்படுத்தவேண்டும்.

பிரதமராக இருந்த ஒவ்வொருவரும், தமிழ்நாட்டிற்கு என்று மறக்க முடியாத ஒரு திட்டத்தை அளித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

நேருவில் தொடங்கி, இந்திரா காந்தி, வி.பி.சிங், மன்மோகன்சிங் என்று வரிசையாக சொல்லலாம். இதையெல்லாம் குறிப்பிட்டு, அதுபோல, உங்களுடைய காலத்தில், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படவேண்டும். உங்கள் பெயரை தமிழ்நாட்டு மக்கள் நினைவுகூர வேண்டும்‘‘ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால், அப்படி சொன்னால் மட்டும் போதாது; அவர் இருக்கின்ற இடம் அப்பேர்ப்பட்ட இடம்; ஆகவே, அவருக்குப் புரிகின்ற மொழியில் சொல்லவேண்டும் என்பதற்காக, அந்தக் கடிதத்தில் முத்தாய்ப்பாக ஒரு கருத்தை சொல்லியிருந்தார்கள்.

ஆங்கிலத்தில் உள்ள அந்த வரிகளை நான் தமிழில் சொல்கிறேன்,

‘‘குழப்பம் தீர, இறைவனே ஆத்திகர், அவரே நாத்திகர், அவரே நல்லவர், அவரே தீயவர், அவரே உண்மை; அவரே உண்மையற்றவர். உறக்கம், விழிப்பு ஆகிய நிலைகளும் அவருடையது. மேலும், அவர் எல்லா நிலைகளையும் கடந்தவர். இந்த உண்மையை அறிந்துகொண்டால், எல்லாக் குழப்பங்களும் தீர்ந்துவிடும்.’’

இதை எதற்காகச் சொன்னார் என்றால், இதைச் சொன்னவர், இராமகிருஷ்ண பரமஹம்சர். இதை அவருடைய மொழியில் சொன்னால்தான், அவருக்கு விளங்கும்; உண்மைகளைப் புரிந்துகொள்வார்; ஏதாவது செய்வார் என்கின்ற நம்பிக்கையில், அன்றைக்கு அந்தக் கடிதத்தில் டி.ஆர்.பாலு அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இதற்கான பதில் ஒன்றையும் அனுப்பவில்லை.

அண்மையில் நாடாளுமன்றத்தில், அவருடைய அமைச்சர் இராமர் பாலத்திற்குத் தந்த பதில், விளக்கம் - அந்தக் கடிதத்திற்கான பதிலாகத்தான் நான் கருதுகிறேன்.

ஆகவே,  இப்படியொரு நல்ல வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. இந்தத் திட்டம் நம்முடைய காலத்தில் நிறைவேறுமானால், மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் நாம் அடைவோம்.

ஆசிரியர் அய்யா அவர்கள் இம்முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்கள்

அந்த வகையில், ஆசிரியர் அய்யா அவர்கள், இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்கள்.

அவருக்கு மிகுந்த பாராட்டுகளையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

அவருடைய முயற்சிகளுக்கு என்றும் துணை நிற்போம் என்று கூறி, இந்த அரிய நல் வாய்ப்பை அளித்த ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு ஒன்றிய அரசின் செயலகப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி செ.வேலுமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.


No comments:

Post a Comment