அறிவு விருந்தளிக்கும் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 20, 2023

அறிவு விருந்தளிக்கும் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும்

பத்திரிகையாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான கவிதா முரளிதரன்  பெண்ணுரிமை குறித்த சில நூல்கள் குறித்து வலை தளம் ஒன்றில் பேசியது.

1. பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார் 

“இந்த ஆண்டு புத்தகக்காட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்போது நிகழ்வு முடியும் இறுதித் தருவாயில் பன்னாட்டுப்  புத்தகக் காட்சியாக நடைபெறுவது கூடுதல் சிறப்பு. இந்நிலையில் வாசகர்களுக்கு நான் 5 புத்த கங்களைப் பரிந்துரை செய்ய வேண்டுமென எண்ணுகிறேன். முதலில் நான் பரிந்துரை செய்வது தந்தை பெரியார் அவர்கள் எழுதிய ’பெண் ஏன் அடிமையானாள்’. இதை தந்தை பெரியார் அவர்கள் 1934-இல் எழுதினார். இன்றளவும் அந்தப் புத்தகத்தின் தேவை நம் சமூகத்திற்கு இருக்கிறது என எண்ணுகிறேன். சந்திக்கும் கல்லூரி மாணவியரிடம் நான் பரிந்துரைக்கும் முக்கியமான நூலாக இது இருக்கும். ஏனெனில் இன்றைக்குக்கூட நாம் பேசத் தயங்கும் பல விடயங்களை அன்றே உடைத்துப் பேசியுள்ளார் தந்தை பெரியார்.

குறிப்பாக கற்பு என்பது இருந்தால் அது இரு பாலினருக்கும் பொதுவான ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு பாலினத்தவர்களுக்கு மட்டும், குறிப்பாகப் பெண்களுக்கு மட்டும் இருக்கிறது, அவர்கள் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதைச் சாடியுள்ளார். மேலும் சொத்துரிமை என்பதும் இருபாலினத்தினருக்கும் சமமாக இருக்க வேண்டும் எனப் பேசியுள்ளார். அவர் பேசிப் பல ஆண்டுகள் கழித்துதான் சட்டமே இயற்றப்பட்டது. அது இன்றைக்கும் சமூக அளவில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதும் கேள்விக் குறிதான்.

அதே போல அன்றைக்கே மறுமணம் பற்றியும் பேசியுள்ளார். பாலியல் தொழிலாளர்கள் என்று வரும் போது, பல பெண்ணியவாதிகளுக்கு முன்பே பெரியார் இதைப் பற்றிப் பேசியுள்ளார். நீதி மற்றும் சமத்துவம் எவ்வாறு வீட்டிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை இப்புத்தகத்தில் பேசியுள்ளார். ஆகவே இப்புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டுமெனப் பரிந்துரை செய்கிறேன்.

2. ஜாதியற்றவளின் குரல் - ஜெயராணி  - எதிர் வெளியீடு 

இந்திய இதழியலில் மிக முக்கியமான குறியீடாக ஜெயராணி எழுதிய ‘ஜாதியற்றவளின் குரல்’ என்னும் நூலினைச் சொல்வேன். வெகுஜன ஊடகத்தில் இருந்துகொண்டே மக்களின் பிரச்சினைகளைத் தொடர்ந்து பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தவர் ஜெயராணி. அப்போது அவர் எழுதிய கட்டுரைகள் பல இதழ்களில் வெளிவந்தன. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அக்கட்டுரைகள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் மாண்பை மீட்கக் கூடியதாகவே இருக்கின்றன.

குறிப்பாகச் சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்படுகிற புதிரை வண்ணார் சமூகம் குறித்துப் பேசியுள்ளன. இப்புத்தகம் இன்னும் திறக்கப்படாத பல கதவுகளை, பல ஜன்னல்களை திறக்கக்கூடியது. ஆகவே வாசகர்கள் இந்நூலினை வாசிக்க வேண்டுமென வேண்டுகிறேன்.

3. தெய்வமே சாட்சி - ச.தமிழ்ச்செல்வன் - பாரதி புத்தகாலயம்  

தெய்வமே சாட்சி எனும் நூல் தோழர் ச.தமிழ்ச்செல்வன் பல ஆண்டுகள் பல இடங்களுக்குச் சென்று எழுதித் தொகுத்த  நூலாகும்; வரலாறு என்பது ஆண்களின் வரலாறாகவே உள்ளது. பெண்களின் வரலாறு என்பது குறைவாகவே உள்ளது. இந்தப் புத்தகமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இருந்தும் அக்காலத்தில் இருந்த பெண்களின் கதைகள் இன்று நம் முன் சிலைகளாக உள்ளன.

உதாரணத்துக்குக் குழந்தை வரம் வேண்டி நடந்து வந்த பெண், இறந்து சிலையான மலட்டம்மன் கதை, ஜாதி மாறித் திருமணம் செய்ததால் கொல்லப்பட்டு பின் தெய்வமாக்கப்பட்ட பெண்களின் கதை எனப் பல கதைகள் உள்ளன. இவை அனைத்தையும் சேகரித்துக் கள ஆய்வு செய்து பெண்களின் மீது தொன்மத்தில் வன்முறை எப்படிச் செயல்பட்டிருக்கிறது என்பதை விரிவாகக் கூறியுள்ளார். ஆகவே வாசகர்கள் சமூகத்தின் இன்னொரு நிலையைப் புரிந்துகொள்ள இந்நூல் உதவும் என்பதால் இந்நூலினை நான் பரிந்துரை செய்கிறேன்."

வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது என்ற ஒரு கருத்தாடல் உலவி வருகிறது. அதே போல பொதுக் கூட்டங்களுக்கு வரும் மக்கள் கூட்டமும் குறைந்து வருகிறது என்ற கருத்தும் பேசு பொருளாகியுள்ளது.

இவற்றை எல்லாம் கடந்து தந்தை பெரியார் எழுதிய  நூல்களையும் தந்தை பெரியார் குறித்த நூல்களையும் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் வாங்குவது எதிர்கால நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துகிறது.

பொதுக் கூட்டங்கள் என்று பார்த்தாலும் திராவிடர் கழகம் முன் வரிசையாக நிற்கிறது. முதற்கட்ட சுற்றுப் பயணத்தை முடித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள், இரண்டாவது கட்டமாக அறிஞர் அண்ணா நினைவு நாளில் பிப்ரவரி 3இல் தொடங்கி மார்ச்சு 10இல் நிறைவு செய்கிறார்.

அறிவு விருந்தளிக்கும் தந்தை பெரியாரும் அவர் கண்ட இயக்கமும் மக்கள் மத்தியில் வேரூன்றியே நிற்கிறது. இது காலத்தின் கட்டாயமாகும்.

No comments:

Post a Comment