முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 27, 2023

முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?

 குஜராத் கலவரத்திற்குப் பிரதமர் மோடி பொறுப்பு இல்லையா?

பி.பி.சி. வெளியிட்ட ஆவணப்படத்தில் தவறு இருந்தால் 

விளக்கம் கேட்டு உண்மை நிலையை வெளிப்படுத்தலாமே!

குஜராத் கலவரத்திற்குப் பிரதமர் மோடி பொறுப்பு இல்லையா? பி.பி.சி. வெளியிட்ட ஆவணப்படத்தில் தவறு இருந்தால் விளக்கம் கேட்டு உண்மை நிலையை வெளிப்படுத்தலாமே! முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜ தர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

குஜராத் கலவரத்தில் அந்நாளைய முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி அவர்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறும் பி.பி.சி. ஆவணப்படத்தை முடக்குவதற்கு ஒன்றிய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அரசு அவசர கால சட்டங்களைப் பயன்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது என்றும், சட்ட விரோதம் என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மோடி ஆட்சியின் இரத்தக் கறை!

இந்தத் தடைகள்மூலம் குஜராத்தில் நரேந்திர மோடி யின் ஆட்சியில் படிந்த இரத்தக் கறையை வரலாற்றி லிருந்து ஒருபோதும் மறைத்துவிடவோ, அகற்றிவிடவோ முடியாது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ஆர்.எஸ்.எசுக்கு 

எதிர்மறை விளைவுதான் ஏற்படும்!

குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியின் போது, இஸ்லாமியர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட மத வன்முறைகள் தொடர்பாக, பி.பி.சி. செய்தி நிறுவனம் தயாரித்துள்ள ஆவணப்படத்திற்கான சான்றாவணங் களை அந்த நிறுவனத்திடமிருந்தே கேட்டுப் பெறலாம்.  அதற்கு மாறாக அந்த ஆவணப்படத்தைக் காட்டக் கூடாது என்று தடை செய்தால், தணிக்கைத் தடையினால் ஆர்.எஸ்.எஸ். எதிர்பார்ப்பதற்கு நேர் எதிர்மறை விளைவுகள்தானே ஏற்படும்!

பி.பி.சி. நிறுவனத்துக்கே 

வெற்றி!

அதில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க, அவர் களை உலகுக்கு நன்கு விளம்பரப்படுத்தும் வேகத் தையல்லவா இது ஏற்படுத்துகிறது. இது படத்தைப் பார்க்கும் முன்பே பி.பி.சி. நிறுவனம் வெற்றி பெற்று விட்டது போன்றதல்லவா?

பி.பி.சி. செய்தி நிறுவனமும் சரி, பிரிட்டனில் அரசாளும் முறையும் சரி மக்களாட்சி அதிகாரத்தை எவர் எப்போது தவறாகப் பயன்படுத்தினாலும் தயங்காது வெளிச்சத்திற்குக் கொண்டு  வந்துவிடும்.

ஒரு சார்பு நிலை எடுக்காதது என்று பெயர் பெற்ற நிறுவனம் பி.பி.சி. (BBC- பிரிட்டிஷ் பிராட்காஸ்ட்டிங் கார்ப்பரேசன்).

பிரிட்டனில் நடந்தது 

என்ன?

பல ஆண்டுகளுக்குமுன் பிரிட்டனில் ஓரிடத்தில் காவல் துறையால் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்ட செய்தியை பி.பி.சி. செய்தியாளர் ஒருவர் ஒலிபரப்பிய போது...''Police had to open fire'' - ‘‘போலீசுக்கு நிலைமைக் கட்டுக்கடங்காமல் போகவே, துப்பாக்கிச் சூடு நடத்திடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது'' என்று செய்தி வாசித்தவரை நோக்கிக் கண்டனங்கள் குவிந்தன! நடுநிலை தவறாமல் மட்டுமே செய்தியைத் தரவேண்டிய ஒன்று ''Police Opened Fire''  என்று சொல்லியிருந்தால், அது வெறும் செய்தி,''had to open fire'' என்றால் அது ஒரு சார்பு நிலைக்கான - காவல் துறையின் செயலை நியாயப்படுத்தும் செய்தி என்று உணர்ந்து, உடனே அச்செய்தித் தயாரிப்பாளர்மீதும், வாசித்தவர்மீதும் நடவடிக்கை பாய்ந்தது!

முன்பு சிங்கப்பூரில், அந்த நாட்டின் பிரதமர் ஆட்சிபற்றிய ஒரு கருத்துபற்றி கூறியபோதும், அது தடை செய்யப்பட்டபோதும், அதன் கருத்துச் சுதந்திரத்தை அது விட்டுக் கொடுக்கவே இல்லை! 

அன்றைய பிரதமர் வாஜ்பேயி 

என்ன சொன்னார்?

குஜராத் கலவரத்தின் (2002)போது பா.ஜ.க. பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி அவர்கள், ‘‘‘இராஜதர்மம்' என்று ஒன்று எப்போதும் உண்டு. அதற்கு மாறாக நரேந்திர மோடி அரசு, செயல்படக்கூடாது'' என்று வெளிப்படையாகப் பேசவில்லையா?

அப்போது இராணுவ அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் பிரதமர் ஆணைப்படி குஜராத்திற்கு இராணுவத்தினை அனுப்பி, கலவரச் சூழ்நிலையைத் தடுக்கவில்லையா? இவை வரலாறு தானே!

மேலும் உச்சநீதிமன்ற நீதிபதி ‘‘குஜராத்தை ஆளுவது  நீரோ மன்னனா?'' என்று கேட்டதற்கு என்ன பொருள்? அது யாரைக் குறித்தது என்பதும் முக்கியமானதாகும்.

வரலாற்றை மறைக்க முடியுமா?

இன்றைய நிகழ்வு - நாளைய வரலாறு. அதுபோன்று, நெருக்கடி காலத்தில் நடந்தவற்றைப் பேச, எழுதிட இப்போது எந்தத் தடையும் இல்லையே!

கடந்த கால சம்பவங்களில் பலவற்றை, வரலாற்று ஆவணங்களை மக்களின் நினைவுக் குதிர்களிலிருந்து அகற்றிவிட முடியுமா?

கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு.

'பூனைக் கண்ணை மூடிக்கொண்டால், பூலோகம் இருண்டு விடுமா?' என்பார்கள்.

பூனைக்கு உலகம் தெரியாது; ஆனால், உலகத்திற்குப் பூனையையும் தெரியும்; சம்பவ ஆவணங்களும் கிடைக்கும்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆவணப் படத் தடை நடவடிக்கை-  ஜனநாயக உரிமைக்கும், கருத்துரிமைக்கும் மாறானதே!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

27.1.2023

No comments:

Post a Comment