சென்னை பெரியார் திடலில் சிறப்புக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 6, 2023

சென்னை பெரியார் திடலில் சிறப்புக் கூட்டம்

அமெரிக்க நாத்திக நிறுவன அறிஞர்கள் பங்கேற்று மனித உரிமைபற்றி முழங்கினர்

'தந்தை பெரியாரின் மனிதநேயக் கொள்கையை உலகமயமாக்குவதில் இணைந்து செயல்படுவோம்!'

தமிழர் தலைவரின் எழுச்சியுரை!

பகுத்தறிவாளர் கழகமும், பெரியார் நூலக  வாசகர் வட்டமும் இணைந்து சென்னை - பெரியார் திடலில் ஒரு சிறப்புக் கூட்டத்தினை நடத்தினர். அன்னை மணியம்மையார் மன்றத்தில் 5.1.2023 அன்று மாலை 6.45 மணிக்குக் கூட்டம் தொடங்கியது.

சிறப்புக் கூட்டம்

அமெரிக்க நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு சமுதாயப் பணி ஆற்றி வரும் மதத்திலிருந்து விடுதலைக்கான நிறுவனத்தைச் (Freedom From Religion Foundation - FFRF)  சார்ந்த டேனியல் பார்க்கர், அமிதாப் பால் மற்றும் மகாராட்டிரா அந்தஸ்ரத நிர்மூலன் சமிதி (Maharashtra Andhashraddha Nirmoolan Samiti - 'MANS') அமைப்பின் தலைவர்  அவினாஷ் பாட்டீல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று உரையாற்றினர்.

பெரியாருடைய கருத்துகளை பேராசிரியர் மு. தவமணி சுருக்கமாக எடுத்துரைத்தார். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். தொடக்கத்தில் கூட்டத்தில் பங்கேற்ற அறிஞர் பெரு மக்களையும், வருகை தந்தோரையும் வரவேற்று, பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் உரையாற்றினார். அறிமுக உரையினை திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் வழங்கினார். கூட்டத்தின் இறுதியில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் ஆ. வீரமர்த்தினி நன்றி கூறினார். நிகழ்ச்சியினைத் தொகுத்து திராவிட மாணவர் கழகத்தின் மாநில செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.

காலையில் பெரியார் திடலைப் பார்வையிட்டனர்

மதத்திலிருந்து விடுதலைக்கான நிறுவனத்தின் இணை நிறுவனர் டேனியல் பார்க்கர், அதன் தொடர்புத் துறை இயக்குநர் அமிதாப் பால் ஆகிய இருவரும் இந்தியாவில் உள்ள நாத்திக இயக்கங்கள் ஆற்றிவரும் பணி குறித்து நேரில் சென்று அறிந்து வர வேண்டும் என்ற பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை பெரியார் திடலுக்கு 5.1.2023 அன்று காலை  வந்தனர்.பெரியார் திடலில் பெரியார் நினைவிடம், ஆய்வு நூலகம், விடுதலை அச்சகம், சுயமரியாதைத் திருமண நிலையம், பெரியார் புத்தக நிலையம் ஆகியவற்றை பார்வையிட்ட பின்னர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடிச் சென்றனர்.  அமெரிக்க நாத்திகப் பெரு மக்களை அழைத்துக் கொண்டு மகாராட்டிர அந்தஸ்ரத நிர்மூலன் சமிதியின் தலைவர் அவினாஷ் பாட்டீல் வருகை தந்திருந்தார்.

அறிமுக உரை

வரவேற்புரைக்குப் பின்னர் அறிமுக உரையாற்றிய திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் தனது உரையில் குறிப்பிட்டதாவது: மதங்களும், கடவுள் நம்பிக்கையும் உலகெங்கும் பரவிக் கிடக்கிறது. வெறும் நம்பிக்கை சார்ந்த மதப் பிடியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற நினைப்பு உலகெங்கும் பரவி வருகிறது; அதிகரித்தும் வருகிறது. பிற நாடுகளில் மதத்திலிருந்து விடுதலையும், கடவுள்மீது நம்பிக்கையற்ற நிலைமையும் தொடர்ந்து வருகிறது. இதே சிந்தனை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே இந்திய நிலப்பரப்பில் நிலவி வந்தது. கடவுள் மீதான நம்பிக்கையற்ற நிலை என்பது 'கடவுள் மறுப்பு' என்ற அளவிலிருந்து 'கடவுள் எதிர்ப்பு' என்பதாக நம் நாட்டில் உள்ளது; கடவுளிடம்,  'கடவுள்' என்பது மனிதனைப் பிறப்பால் பேதம் கற்பித்து பிரிவுபடுத்தி, சில அடிப்படை மனித உரிமையை மறுத்து வந்துள்ளதால் அதனை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இங்கு நிலவுகிறது. மனிதரிடையே சமத்துவம் வர வேண்டும். அவர்கள்மீதான மத அடிப்படையிலான இழிவு நிலை துடைத்தெறியப்பட வேண்டும் என்ற நோக்கில் தொடக்கம் முதல் சுயமரியாதை, பகுத்தறிவாளர் கருத்துகளைப் பரப்பி அதற்காகவே 95 ஆண்டுகள் அமைப்பு ரீதியாக சமுதாயப் பணி ஆற்றினார் தந்தை பெரியார். அவரது உழைப்பால் இன்று தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட பலவிதங்களில் முன்னேறி மனித சமத்துவம் நோக்கிப் பயணம் கொள்கிறது. தந்தை பெரியாருக்குப் பின், அன்னை மணியம்மையாருக்குப்பின் இந்த மனிதநேய இயக்கத்தை உலகளாவிய அளவில் கொள்கையினை பரப்பி தமிழர் தலைவர் ஆசிரியர் சமுதாயப் பணி ஆற்றி வருகிறார். 'கடவுள் எதிர்ப்பு' என்பதில் திரிபுவாதத்திற்கு இடம் தராத வகையில் 'கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை ; கடவுளை கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி' என கொள்கை முழக்கத்தை இயக்கத் தோழர்களின் பரப்புரைக்கு அளித்தவர் தந்தை பெரியார். 

இவ்வாறு பெரியார் நிறுவிய திராவிடர் கழகம் பற்றிய அடிப்படை செய்திகளை கழகப் பொருளாளர் வீ. குமரேசன் வழங்கினார்.

முனைவர் மு.தவமணி

கருத்துரை வழங்கிய பேராசிரியரும் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் மேனாள் முதல்வருமான முனைவர் மு. தவமணி தமது உரையில் குறிப்பிட்டதாவது:

மனித சமத்துவத்திற்காகப் போராடிய தந்தை பெரியார் பெண் சமத்துவத்திற்கு தனித்தன்மையுடன் சமுதாயப் பணி ஆற்றியவர். சமூக பார்வையில் ஆணாதிக்க கட்டமைப்பில் அனைத்து ஆண் பிரிவினருக்கும் கீழாகவே பெண்களின் நிலை இருந்தது. இதனை தகர்த்து எறிந்தவர் தந்தை பெரியார். சமூக பொருளாதார சுதந்திரம் பெண்களுக்குக் கிடையாது - இளம் பிராயத்தில் பெற்றோர்களின் துணையுடனும், வளர்ந்து மணமான பின் கணவனின் துணையுடனும், வயதான காலத்தில் ஆண் பிள்ளைகளின் துணையுடனும் வாழ வேண்டும் என்பதாக உள்ள சட்டக் கோட்பாடுகளை நீக்கி சமத்துவம்  கண்டவர் பெரியார். தனித் தன்மையாக, சுதந்திர உணர்வுடன் பெண்கள் விளங்கிட கல்வி அடிப்படையில் அவசியமாகும். பெண்களுக்கு மறுக்கப்பட்டு வந்த கல்வியை வழங்கிட வைத்து உயர் கல்வி - பொதுப் பணியில்  அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் வாய்ப்பு பெற முன்னேற்ற நிலைமைகள் உருவாகின. குறிப்பாக தமிழ்நாடு பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் முன்னோடி மாநிலமாக விளங்குவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது தந்தை பெரியார் ஆற்றிய சமுதாயப் பணிதான். உலகின் பல பகுதிகளில் வாழும் மகளிர் நிலையில் சமத்துவமற்ற நிலையினை நீக்கிட தந்தை பெரியாரின் கொள்கைகள் பயன்படும்; உலக மகளிர் அனைவரும் பின்பற்றத் தகுந்தவரையில் தந்தை பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுக் கருத்துகள்; அலைகள் பரவிட வேண்டும்.

இவ்வாறு முனைவர் மு. தவமணி தம் உரையில் குறிப்பிட்டார்.

மகாராட்டிரா மாநில அவினாஷ் பாட்டீல்

மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளியாக வாழ்ந்து அந்த லட்சியத்திற்காக தனது உயிரை ஈகம் செய்த டாக்டர் நரேந்திர தபோல்கர் நிறுவிய மகாராட்டிர அந்தஸ்ரத நிர்மூலன் சமிதியின் இன்றைய தலைவர் அவினாஷ் பாட்டில் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

பெரியார் இயக்க நிகழ்ச்சிகள், மாநாடுகள் பலவற்றில் எங்களது அமைப்பின் தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக 2018இல் திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாடு - அந்த மாநாடு நடைபெற்ற விதம், தலைவர் டாக்டர் வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில்  பயணித்து வருகிறோம். அந்த வகையில் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தமிழ் நாட்டில் பெரியார் இயக்கத்திற்கு மட்டும் தலைவரல்ல; பிற மாநில பகுத்தறிவு இயக்கங்கள், உலக பகுத்தறிவு இயக்கங்களை வழி நடத்தக் கூடிய மாபெரும் தலைவர் - உலகப் பகுத்தறிவாளர்களின் தலைவர் என்றே அவரை அழைக்கலாம்; அப்படிப்பட்ட சிறப்புக்குரியவர் அவர். தொடர்ந்து அனைவரையும் டாக்டர் கி. வீரமணி தலைமையேற்று வழி நடத்திட வேண்டும்.

இவ்வாறு அவினாஷ் பாட்டீல் தமது உரையில் குறிப்பிட்டார். 

அமெரிக்க நாட்டின் அமிதாப் பால்

அமெரிக்க நாட்டின் 'மதத்திலிருந்து விடுதலை' நிறுவனத்தின் செய்தி தொடர்பு இயக்குநர் அமிதாப் பால் தமது உரையில் கூறியதாவது:

 அமெரிக்காவில் இந்தியாவிலிருந்து சென்று நிரந்தரமாக தங்கி குடியுரிமை பெற்றவர்கள் ஏராளமாக வாழ்ந்து வருகின்றனர். பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்து வரும் - பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அய்ரோப்பா, ஆப்பிரிக்கா கண்ட நாடுகளிலிருந்து சென்று குடியமர்ந்து வாழ்ந்து வரும் மக்கள் போற்றி, தமது அமெரிக்க நாட்டு பெரு மையாகக் கருதுவது 'பன்மைத்துவம் (Pluralism) ஆகும். நிற அடிப்படையில் பேத நிலை கடந்த காலங்களில் நிலவினாலும் சட்ட ரீதியாக இன்றைக்கு அனைவரும் சமம் என்ற நிலை உருவாகி உள்ளது. இருப்பினும் மதப் பெருமை காட்டி, சமூகத்தில் பிரிவினையை இன்னல்களை உருவாக்கிடும் தீய சக்திகள் தலை தூக்கத் தொடங்கியுள்ளன. மனிதநேயமே மகத்தானது -  மதச்சார்பற்ற மனிதநேயம் காக்கப்பட வேண்டும் எனும் கருத்தினை எங்களது  நாத்திக அமைப்பினைப் போன்ற பல்வேறு தரப்பினரும் வலிந்து குரல் எழுப்பி வருகின்றனர். பெரியார் இயக்கத்துடன் சேர்ந்து  அப்படிப்பட்ட சமத்துவத் தன்மையுள்ள களப் பணிகள் மேற்கொள்ளப்படும். இணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு அமிதாப் பால் பேசினார்.

அமெரிக்க நாட்டு டேனியல் பார்க்கர்

'மதத்திலிருந்து விடுதலை' நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான டேனியல் பார்க்கர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

பதின்மப் பருவத்திலேயே மத நற்செய்தி யாளராக பணியினைத் தொடங்கிய நான் - மத போதகராகவும் பணியாற்றிய நான் - படிப்படியாக சிந்தனை வயப்பட்டு உண்மை நிலையினை உணர்ந்து கடவுள் மறுப்பாளராக மாறினேன். நாத்திகனாக தனி நபர்  பணியினை ஆற்றிய நான் 1984ஆம் ஆண்டில் மதத்தின் பிடியிலிருந்து விடுபடுவோருக்கான நிறுவனத்தைத் தொடங்கினோம். எங்களது அமைப்பு, மனிதர் அனைவரும் சமம்; இருப்பினும் பெண்கள் சமத்துவத்தை வலிந்து பேசக் கூடிய அமைப்பு; கடைப்பிடிக்கும் அமைப்பும் ஆகும். பெண்களுக்கு முன்னேற்றத்தில் முதல் கருத்தியல் எதிரி மதம் ஆகும். பெண்களுக்கு முக்கியத் தேவை அவர்களுக்கு கல்வி புகட்டுவதே. அமெரிக்காவில் மத நம்பிக்கை அற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. தொடக்கத்தில் 3 விழுக்காடு மக்கள் தொகையினர் நாத்திகர் என்ற நிலையிலிருந்து இன்றைக்கு 29 விழுக்காட்டினர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. மீதமுள்ளவர்கள் முழு நம்பிக்கையுள்ளவர்கள் என்று கூறிவிட முடியாது. கடவுள் பற்றிய அக்கறையற்றோர் (agnostic)  பலர் அவர்களுள் அடக்கம். அமெரிக்காவில்  கடவுள் நம்பிக்கை, மதநம்பிக்கை தளர்ந்து வருகிறது. தகர்ந்து வருகிறது. 

இங்கு தமிழ்நாட்டில் பெரியார் திடலில் துடிப்பு மிக்க, கொள்கை சார்ந்த பகுத்தறிவாளர்களைப் பார்ப்பது, உரையாடுவது பெரிதும் மகிழ்வை - உற்சாகத்தை எங்களுக்குத் தருகிறது. பெரியார் இயக்கம் டாக்டர் கி. வீரமணி தலைமையில் மாபெரும் மக்கள் இயக்கமாக திகழ்கிறது. அரசியல் கருத்தில் பல்வேறு ஆக்க ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது - பெரிதும் பாராட்டுதலுக்குரியது. பெரியார்  இயக்கத்துடன் இணைந்து மனிதநேய மனித சமத்துவப் பணிகளைத் தொடர்வோம். மானுடத்தை மேம்படுத்துவோம்.

இவ்வாறு டேனியல் பார்க்கர் தமதுரையில் குறிப்பிட்டார்.

தமிழர் தலைவரின் எழுச்சியுரை

நிகழ்ச்சியின் நிறைவாக தமிழர் தலைவர் தமது எழுச்சியுரையில் குறிப்பிட்டதாவது:

மனிதன் முழு விடுதலை பெறுவதற்கு மதம் பெரும் தடையாக உள்ளது. நாமெல்லாம் மத நம்பிக்கையில்லாத  சுதந்திர சிந்தனையாளர்கள், கொள்கை உறவுக்காரர்கள் டேனியல் பார்க்கர் மதச் சிறையிலிருந்து விடுதலை பெற்றவர். 1984இல் நாத்திகராக மலர்ந்தவர். இன்றிலிருந்து 98 ஆண்டுகளுக்கு முன்னர் இதே சிந்தனையுடன் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அன்று மலர்ந்த பகுத்தறிவு சிந்தனைகள் பின்னர் நாடு விடுதலையடைந்த பின் எதையும் கேள்விக்கு ஆட்படுத்திப் பார்க்கும் பகுத்தறிவுப் பண்பு, மனிதநேயம் ஆகியவை அடிப்படைக் குடிமக்கள் கடமையாக அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றது. கருத்து முன்னர் உருவானது. சட்டத்தில் உரிய இடம் பின்னாளில் அளிக்கப்பட்டது. இதுதான் பெரியார் இயக்கத்தின் சாதனை, அறிவியல் மனப்பான்மையை பெருக்குவதன் முக்கியத்துவம் அடிப்படைக் கடமையாக்கப்பட்டுள்ளது. மதம் எதையும் சாதிக்கவில்லை. அறிவியல் வளர்ச்சியினால் ஏற்பட்ட கருவிகளை தமது பரப்புரைக்கு, வழிபாட்டுக் கூட்ட உரைக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. மதத்தின் பிடியிலிருந்து விடுதலை பெறுவதை பெயராகக் கொண்டு நிறுவனத்தை அமெரிக்க நாட்டில் ஏற்படுத்தி சமூகப் பணி செய்து வருகிறீர்கள். இன்று உங்களுக்கும் பெரியார் இயக்கத்தவராகிய எங்களுக்குமான உறவு அரசியல் கூட்டணி அல்ல; சமூகக் கூட்டணி, மனிதரை முன்னேற்றும் கூட்டணி, மனிதநேயத்தை வளர்க்கும் கூட்டணி.

அமெரிக்காவில் மதச் சார்பற்ற நிலை நிலவினாலும் உங்கள் கைக்கு வரும் ரூபாய் நோட்டுகளில் 'கடவுள் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம் (In God we Trust) என்ற வாசகம் உள்ளது. இங்கு இந்தியாவில் மதவாதிகளின் ஆதிக்கம் ஆளும் தரப்பிடம் இருந்தாலும், ரூபாய் நோட்டுகளில் கடவுளை - ஒரு மதத்தை சார்ந்த கடவுளை பிரசுரிக்க முயற்சிகள் நடைபெற்ற பொழுது, பலத்த எதிர்ப்பைக் காட்டினோம். முளையிலேயே முயற்சி கிள்ளி எறியப்பட்டது. இந்தியாவில் ரூபாய் நோட்டுகளில் கடவுளுக்கு இடமில்லை.  

மதநம்பிக்கை என்பது மனநிலை சார்ந்தது. கருத்தியல் கொண்டு மனமார்ந்த மக்களிடம் ஏற்படுத்திட வேண்டும். மக்கள் தொகை பெருகி வருவதை கட்டுப்படுத்த 1930களிலேயே தந்தை பெரியார் குடும்பக் கட்டுப்பாடு வழிமுறைகளைப் பின்பற்ற மக்களை வலியுறுத்தினார். இருந்தாலும் கடவுள் கொடுத்த வரம் என்று பிள்ளைகளை பெற்றுக் கொள்ளும் மனப்போக்கு தொடர்ந்தது. பெரியார் தொடர்ந்து பேசினார். வரும் நாட்களிலே கடவுளானவர், பிள்ளைகளைவிட  வீடு இல்லாதவருக்கு வீடு கொடுக்கலாமே, பசியில் வாடுபவர்களுக்கு உணவு அளிக்கலாமே  என தம்முடைய பாணியில் நகைச்சுவையாகப் பேசி மக்கள் மனப்பாங்கின மாற்றிட முனைந்தார். அதன் பிரதிபலிப்பு, வெற்றி தமிழ்நாட்டில் உள்ள பிற மாநிலங்களில் இல்லாத வெற்றியாக உள்ளது. தொடர்ந்து மதநம்பிக்கைகளுக்கு எதிராக மனிதமனங்களை மாற்றுவோம். அத்தகைய பணியில் வருங் காலங்களில் இணைந்து தோளோடு தோள் சேர்ந்து பணி ஆற்றுவோம். உலகையே பெரியார் மயமாக்குவோம்; மனிதமயமாக்குவோம்.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆங்கிலத்தில் அமெரிக்க நாட்டவர்களுக்கு புரியும் வகையில் உரையாற்றினார். (முழு உரை வீச்சு பின்னர் வெளிவரும்).

கலந்துகொண்டு சிறப்பித்த தோழர்கள்!

சென்னை மண்டல செயலாளர் தே. செ. கோபால்  மாநில மகளிர் பாசறையின் செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, பகுத்தறிவாளர் கழகத்  தோழர் மாணிக்கம்,   முனைவர் த.கு. திவாகரன், புதுமை இலக்கிய தென்றல் தலைவர் பாட்டரசர் சுப. முருகானந்தம், மனநல மருத்துவர் ராதிகா முருகேசன், ஆவடி மாவட்டச் செயலாளர் க. இளவரசன், தோழர் பாலு. மணிவண்ணன், தோழர் வனவேந்தன், பூவை பகுதி தலைவர் தமிழ்ச்செல்வன், அயனாவரம் துரைராஜ், வழக்குரைஞர் கொரட்டூர் பன்னீர்செல்வம், தென் சென்னை மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, மாநில இளைஞரணி  துணைச் செயலாளர் சோ. சுரேஷ், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், பகுத்தறிவாளர் கழகத் தோழர் வேல். சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

தொகுப்பு: வீ. குமரேசன்


No comments:

Post a Comment