உலர் சாம்பல் விற்பனை மூலம் வருவாய் ஈட்டும் மின்வாரியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 9, 2023

உலர் சாம்பல் விற்பனை மூலம் வருவாய் ஈட்டும் மின்வாரியம்

சென்னை, ஜன .9 உலர் சாம்பல் விற்பனை செய்வதன் மூலம், மின்வாரியத்துக்கு மாதந்தோறும் சராசரியாக ரூ.14 கோடி வருமானம் கிடைத்து வருகிறது. தமிழ்நாடு மின்வாரியத்துக்கு வருவாயை விடச் செலவினம் கூடுதலாக உள்ளது. இதனால், மின்வாரியம் இழப்பில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இழப்பைக் குறைத்து வருவாயை ஈட்டும் நடவடிக்கையில் மின்வாரியம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதன்படி, அனல்மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நிலக்கரி சாம்பலை விற்பனை செய்து வருவாய் ஈட்ட மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மின்வாரியத்துக்கு வடசென்னை நிலை 1, 2, மேட்டூரில் நிலை 1, 2 மற்றும் தூத்துக்குடியிலும் அனல் மின்நிலையங்கள் உள்ளன. இவை 4,320 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்டவை.

இங்கெல்லாம் மின்னுற்பத்திக்காக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரியை எரித்த பிறகு அவை உலர் சாம்பல் கழிவாக வெளியேற்றப்படுகிறது.இந்த உலர் சாம்பலை 20 சதவீதம் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு இலவசமாகவும் மீதமுள்ள சாம்பலைத் தனியாருக்கு விற்பனையும் செய்யப்படுகிறது.

இவ்வாறு விற்பனை செய்யப்படும் சாம்பல் கழிவு மூலம், மின்வாரியத்துக்கு மாதந்தோறும் சராசரியாக ரூ.14 கோடி வருவாய் கிடைக்கிறது. மேட்டூர் ஆலையில் கடந்த 2021-2022-ஆம் ஆண்டில் உலர் சாம்பலை விற்பனை செய்ததன் மூலம் ரூ.48 கோடி வருவாய் கிடைத்தது. இது அதற்கு முந்தைய 2020-2021-ஆம் ஆண்டை விட ரூ.9 கோடி அதிகமாகும்.

மேட்டூர் மின்னுற்பத்தி ஆலை கடந்த 2021-2022-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 117 நாட்கள் இயக்கப்பட்டுள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும். வரும் ஆண்டுகளில் உலர் சாம்பல் விற்பனைமூலம் மேலும் அதிக வருவாய் ஈட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுபான்மை மாணவர்களுக்கு நிறுத்தி வைத்த கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்கிடுக!

ஒன்றிய அரசுக்கு  பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள்

மதுரை, ஜன.9- சிறுபான்மை மாணவர்களுக்கு ஒன்றிய அரசு நிறுத்திய நிதியை மீண்டும் வழங்கக்கோரி, கல்லூரிகள் கடிதம் எழுத வேண்டுமென தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மூட்டாவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, 25ஆவது மாநாடு கடந்த 2 நாட்களாக  மதுரையில் நடந்தது. விழாவில், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ‘‘சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்தியது. இதுதான் மாற்றமா? வெறுப்புப்பேச்சுக்கள் மாணவர்களிடையே கல்லூரிகளில் திணிக்கப்படுகிறது.

தவறான தகவல்கள், தவறான சரித்திரங்களை கூறுவது, தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும். விஞ்ஞானப்பூர்வ அணுகுமுறை, விஞ்ஞானப்பூர்வ பார்வை சிதைக்கப்படுகிறது. இதிலிருந்து மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும். சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினை நிறுத்தியது குறித்து சிறுபான்மை நலக்குழு தலைவர் என்ற அடிப்படையில் உதவித்தொகையை ஒன்றிய அரசு மீண்டும் வழங்கிடுங்கள் என்று கடிதம் அனுப்பும்படி அறிவுறுத்தினேன். ஆனால் இதுவரை எந்த சிறுபான்மை கல்லூரியும் அதை செய்யவில்லை. சிறுபான்மை மாணவர்களுக்கு இதுபோன்ற உதவிகள் கிடைப்பதன் மூலம் அவர்கள் மிகப்பெரும் பயனடைவார்கள்’’ என்றார்.


கேரளத்தில் உலகின் முதல் 

பனை ஓலைச் சுவடி அருங்காட்சியகம்

திருவனந்தபுரம்,ஜன.9- கேரள அரசின் ஆவணத் துறை சார்பில் ரூ.3 கோடி செலவில் திருவனந்தபுரத்தில் பனை ஓலை சுவடி அருங்காட்சியகம் தொடங்கப் பட்டுள்ளது. இது உலகின் முதல் பனை ஓலைச் சுவடி அருங்காட்சியகம் ஆகும்.

நிலம்-மக்கள், போர்-அமைதி, கல்வி-சுகாதாரம், பொருளாதாரம், கலை-இலக்கியம், கேரளாவின் எழுத்து வரலாறு, நிர்வாகம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் பனை ஓலைச் சுவடிகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 1.5 கோடிக்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகள் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.

இமாச்சலப் பிரதேச அமைச்சரவை விரிவாக்கம்

7 புதிய அமைச்சர்கள்  பதவியேற்பு

சிம்லா,ஜன.9- இமாச்சலப் பிரதேச அமைச்சரவை நேற்று (8.1.2023) விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் அமைச்சரவையின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டப் பேரவைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இதையடுத்து கடந்த டிசம்பர் 11ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுக்விந்தர் சிங்சுக்கு முதலமைச்சராகவும், முகேஷ் அக்னிஹோத்ரி துணைமுதலமைச்சராகவும் பதவி ஏற்று கொண்டனர்.

இமாச்சல பிரதேசத்தில் முதலமைச்சர், துணை முதல மைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 12-அய் தாண்டக் கூடாது என்பதால், அமைச்சர் பதவிக்கான 10 பேரின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், 28 நாட்களுக்கு பிறகு இமாச்சல பிரதேச அமைச்சரவை நேற்று (ஜன.8) விரிவாக்கம் செய்யப்பட்டது. சிம்லா ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடந்த பதவி ஏற்பு விழாவில், முதலமைச்சர், துணைமுதலமைச்சர் முன்னிலையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் 7 புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதில் கேபினட் அமைச்சராக பதவி ஏற்றுள்ள விக்ர மாதித்ய சிங், இமாச்சலப் பிரதேச மேனாள் முதலமைச்சர் மறைந்த வீரபத்ர சிங்கின் மகன், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment