Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமா?
January 20, 2023 • Viduthalai

ஒன்றிய அரசு இடையில் கவிழ்ந்தால் - மாநிலங்கள் இடையில் கவிழ்ந்தால் என்னவாகும்?

நடைமுறைக்குச் சாத்தியமில்லாத கருத்து

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமா? ஒன்றிய அரசு இடையில் கவிழ்ந்தால் - மாநிலங்கள்  இடையில் கவிழ்ந்தால் என்னவாகும்? நடை முறைக்குச் சாத்தியமில்லாத கருத்து என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை யும், விழுமியங்களையும், அதன் கொள்கை நெறிகளையும் பாதுகாப்போம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டே பதவியேற்கிறார்கள் குடியரசுத் தலைவர் முதல் பஞ்சாயத்து போர்டு உறுப்பினர் வரை!

ஆனால், நடைமுறையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான - மோடி தலை மையில் அமைந்துள்ள பா.ஜ.க. ஆட்சியானது நாளும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு நேர் எதிரான செயல்களையே சட்டங்களாகவும், திட்டங்களாகவும், அறிவிப்பு களாகவும் செய்து வருகின்றது. இது நியாயமா? என்பதுதான் மக்களின் இப்போதைய கேள்வி யாகும்!

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட 

நாடு என்பதை மறக்கலாமா?

பன்முகத் தன்மை கொண்ட நமது நாட்டின் ஆளுமையை தலைகீழாக்கி, ஒற்றை ஆட்சியாக, மக்களின் தேர்வுமூலம் ஆட்சியைப் பிடித்து ‘‘வளர்ச்சி, புதிய வேலை வாய்ப்பு'' என்று இளைஞர்களின் நாக்கில் தேனைத் தடவி, ‘மயக்க பிஸ்கெட்டுகளாக' வாக்குறுதிகளை ஏரா ளம் வாரி விட்டு, பிறகு இன்றுவரை அவற்றை செயல்படுத்தாதது ஏன்? என்ற கேள்விக்குப் பகிரங்கமாக, அது வெறும் சும்மா சொன்னது; ‘ஜூம்லா'  என அந்தப் பித்தலாட்டத்தினை நியாயப்படுத்துகின்றார்கள்!

‘‘வேற்றுமையில் ஒற்றுமை'' (Unity in Diversity) என்ற பன்முகத்தன்மைதான் நம் நாட்டின் தனிச் சிறப்பு; அதனை வெறும் ஒற்றை ஆட்சியாக மாற்றியே தீருவோம் (அது 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நீண்ட கால இலக்கு) என்று துடியாய்த் துடிக்கின்றனர்.

ஒரே நாடு, ஒரே மொழி, 

ஒரே கலாச்சாரம் என்பதன் 

பின்னணி என்ன?

ஒரே மதம் - ஹிந்து மதம், ‘‘ஹிந்துராஷ்டிரம்''

ஒரே கலாச்சாரம் - சமஸ்கிருதப் பண்பாடு (ஆரியப் பண்பாடு)

ஒரே மொழி - சமஸ்கிருதம்

ஒரே ரேசன் கார்டு - இதன்மூலம் மாநிலங் களின் உரிமைகளை லாவகமாகப் பறிக்க, 

ஒரே கல்வித் திட்டம் (இது அரசமைப்புச் சட்டத்திற்கு நேர் முரண்) இப்படி எல்லாம் ‘‘ஒரே, ஒரே''தான்!

இதன் இன்னொரு மறைமுகத் திட்டம் (Hidden Agenda) மாநிலங்களை அறவே இல்லாமல் செய்து, பழைய சிற்றரசர்கள், பேரரசர் களுக்குக் கப்பம் கட்டுவதுபோன்று செய்து விடவேண்டும்!

பிரிட்டிஷ் கேபினட் முறையைப் பின்பற்றி முழு இறையாண்மை பெற்ற சமதர்ம, மதச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்ற தன்மையை மாற்றிட, வெறும் அதிபர் ஒருவர் தலைமை - நாடாளுமன்றத்திற்கே உள்ள சுதந்திர விவாதங் களைக்கூட காணாமற் போகச் செய்து, தங் களுக்கு எப்படியோ கிடைத்த ‘‘ரோடு ரோலர் மெஜாரிட்டி''யைப் பயன்படுத்தி, பல உரிமை களைப் பறிப்பதற்காகவே இப்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற புதுக்கரடியை உள்ளே விட்டு ஆழம் பார்க்கின்றனர்!

நமது அரசமைப்புச் சட்டமும், அதனை ஏற்படுத்தியவர்களது கருத்தியலுக்கும் இது நேர் விரோதமானது; இந்தியா போன்ற பரந்த நாட்டில், இது நடைமுறைக்குச் சாத்தியப்படாத, அதிபர் ஆட்சிமூலம் ஒரு தனி நபர் சர்வாதிகார ஆட்சிக்கு அடிக்கல் நாட்டுவது போன்ற ஏற்பாடேயாகும்.

அரசமைப்புச் சட்ட நெறிகளுக்கு இது முற்றிலும் முரணானது; எதிர்க்கட்சி வெற்றி பெற்ற, மாநிலங்களின் ஆட்சிகளைக் கலைக்க இது ஒரு குறுக்கு வழி முயற்சி.

இப்போதுள்ள அரசமைப்புச் சட்டத் தேர்தல் முறைகளுக்கே வேட்டு வைத்து, ஒரே நாடு - ஒரே தேர்தல் என்றால், மாநிலங்களின் உரிமை களைப் பறிப்பது; அரசமைப்புச் சட்ட கல்வி முதலிய பட்டியல்களின் தன்மைக்கே - உரிமைக்கே இது முரணானது.

இடையில் ஒன்றிய அரசு கவிழ்ந்தால் 

மாநில அரசுகளின் நிலை என்ன?

மாநில ஆட்சியைக் கலைத்தாலோ, இடை யில் கலைக்கப்பட்டாலோ வேறு தேர்தல் நடத்தும்வரை காத்திருக்க முடியுமா பல ஆண்டுகள்? மத்தியில் உள்ள ஒன்றிய அரசு இடையில் கவிழ்ந்தால், மாநில அரசுகள் அத்தனையும் கலைக்கப்படவேண்டும் - புதுத் தேர்தலுக்காக!

இதைவிட மகாமகா நடைமுறை சாத்தியமற்ற முரண்பட்ட நிலை வேறு உண்டா?

இதன் உள்நோக்கம் புதிய மனுதர்மத்தை சிம்மாசனத்தில் ஏற்றும் ஒரு சட்டம், ஆட்சியை அமர்த்தவே இந்த சூழ்ச்சியின் முதல் படி.

கொள்ளிக்கட்டையை எடுத்து 

தலையில் சொறிந்துகொள்வதா?

இதனைப்பற்றி தொலைநோக்கே இன்றி, ஏதோ தி.மு.க.வின்மீதுள்ள கண்மூடித்தனமான எதிர்ப்பு, ஆட்சியை இழந்ததினால் சிந்திக்கவே முயலாது, ‘‘மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் தாலி அறுக்கவேண்டும்'' என்ற மாமியார் நினைப்புப் போன்று - அ.தி.மு.க.வின் ஒரு பிரிவினர் அதற்கு ஆதரவு தெரிவித்து கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்துகொள்ளும் மகா புத்திக்கேடு!

நாடு முழுவதும் உள்ள மக்களாட்சி மாண் பாளர்கள் இதனைக் கருவிலேயே அழிக்க ஒன்று திரளவேண்டும். வருமுன் காவாக்கால் பெருஞ்சேதம் ஏற்படுவது என்பது உறுதி!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

20.1.2023

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn