கயானா மேனாள் பிரதமர் & அதிபர் டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, மொரிசியஸ் மேனாள் பிரதமர் டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி இருவருக்கும் சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பன்னாட்டு விருது வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 12, 2023

கயானா மேனாள் பிரதமர் & அதிபர் டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, மொரிசியஸ் மேனாள் பிரதமர் டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி இருவருக்கும் சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பன்னாட்டு விருது வழங்கப்பட்டது

"தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றிய பெரியாரது சிந்தனைகள் வளர்ந்து பரவி 

வெளிநாடுகளில் விழுதுகளாக சிறப்புடன் விளங்குகின்றனர்" 

விருதுகளை வழங்கி தமிழர் தலைவர் பாராட்டுரை 

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக் கழகம்) டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசியல் அறிவியல் ஆய்வு மய்யம்  சார்பில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பன்னாட்டு சமூக நீதி விருது வழங்கும் விழா சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர.ராதா மன்றத்தில் 10.11.2023 அன்று மாலை நடைபெற்றது. 

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக் கழகம்) டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசியல் அறிவியல் ஆய்வு மய்யம்  மற்றும் சென்னை வளர்ச்சி கழகம் இணைந்து நடத்தப்பட்ட விழாவுக்கு தமிழ்நாடு அரசின் சிறுபான்மைத் துறை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் தலைமை வகித்தார்.

விருது பெற்றவர் பற்றிய குறிப்புகள்

விழாவில் 2020ஆம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி விருதினை பெறும் மொரிசியஸ் நாட்டு மேனாள் பிரதமர் டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்களது வாழ்க்கைக் குறிப்புகளை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளருமான வீ.அன்புராஜ் வாசித்தார்.

2021 ஆண்டுக்கான சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி விருதினைப் பெறும் கயானா நாட்டு மேனாள் பிரதமர் மற்றும் பொறுப்பு அதிபர் பதவி வகித்தவருமான டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்களது வாழ்க்கைக் குறிப்புகளை திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் வாசித்தார்.

விருந்தினர்களுக்கு தமிழர் தலைவர் சிறப்பு

விழாவிற்குத் தலைமைவகித்த அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களுக்கு வேந்தர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

விருதாளர்களுக்கு வேந்தர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து விருதுடன் நினைவுப்பரிசு மற்றும் இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார்.

வேந்தர் ஆசிரியர் அவர்களுக்கும், விருதாளர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத்

விருதினை உருவாக்கி ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் சென்னை வளர்ச்சி மன்றத்தின் தலைவர் டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் அவர்கள், "சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி" விருதுபற்றிய உருவாக்கம், கடந்த காலத்தில் விருது வழங்கப்பட்ட பெருமக்கள் பற்றி அறிமுக உரையாற்றினார். 2020ஆம் ஆண்டுக்கான விருது மொரிசியஸ் நாட்டு மேனாள் தலைவர் டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்களுக்கும், 2021ஆம் ஆண்டுக்கான விருது கயானா  நாட்டு மேனாள் பிரதமர் பொறுப்பு அதிபர் டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்களுக்கும் வழங்கப்படவிருப்பதாக அறிவித்தார். விருதுகளை பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஆசிரியர் டாக்டர் 

கி.வீரமணி அவர்கள் வழங்கி பெருமைப்படுத்துவார்கள் எனக் கூறினார்.

விருது வழங்கிடும் நிகழ்ச்சியின் தலைவர் மாண்புமிகு அமைச்சர் கே.எஸ். மஸ்தான்

விருது வழங்கிடும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலம் மற்றும் அயலகத் தமிழர் நல்வாழ்வு அமைச்சர் மாண்புமிகு கே.எஸ். மஸ்தான் அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார். அவர் உரை ஆற்றுகையில் குறிப்பிட்டதாவது: 

அமைச்சர் என்கிற நிலையை உயர்த்திக்கொடுத்து இந்த நிகழ்ச்சியில் உங்களோடு கலந்துகொள்கிற வாய்ப்பினை உருவாக்கிக்கொடுத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் மக்கள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த அரங்கத்தினுள் வரும்போது எங்களுக்குள் இருக்கின்ற உணர்வுகள், சிறிய வயதில் படிக்கிற காலத்தில் பள்ளிப்படிப்பு படிக்கின்ற காலத்தில், தந்தைபெரியார் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் தம்முடைய பயணத்தை மேற்கொள்கிற நேரத்தில், நான் செஞ்சிக் கூட்டத்தில், அவர் வாகனத்திலிருந்து பேசுகின்ற நேரத்தில் மண் தரையில் அமர்ந்து அவர் பேசியதை முதலிலே மனதிலே பதியவைத்தவன். நல்ல வெய்யில் நேரம். மதிய நேரத்தில் வந்துவிட்டார். அப்போது எல்லாரும் நிழலுக்காக ஓரம் ஒதுங்கி நிற்கிறார்கள். பிள்ளைகளெல்லாம் நாங்கள் எதிரில் உட்கார்ந்துவிட்டோம்.

அன்று ஒரு வார்த்தை சொன்னார் தந்தை பெரியார். இன்றைக்கும் அது நினைவில் இருக்கிறது.

என்னுடைய பேச்சை ஏற்கெனவே கேட்டு செயல் படுத்துவதற்கு தயாராக இருப்பவர்கள், நேரத்தை வீணாக்க வேண்டாம். உங்களுடைய வேலைகளை போய்ப்பார்க்கலாம். 

என்னுடைய பேச்சைக் கேட்டு எதிர்காலத்தில் செயல்படுத்துபவர்கள் மட்டும் இங்கே இருந்தால் போதும் என்றார்.

அந்த வெய்யிலில் ஓரம்பாரம் இருந்தவர்கள் எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு பள்ளிப் பிள்ளைகளுடன் சேர்ந்து பெரியவர்கள் எல்லாரும் உட்கார்ந்து தந்தைபெரியார் பேச்சைக் கேட்டார்கள். இன்றைக்கும் அது மனதிலே அப்படியே இருக்கிறது.

ஒரு மனிதன் எந்தக்காலத்திலும், எந்த செயலில் ஈடுபட்டாலும், ஏன், எதற்கு என்று சிந்தித்து செயல்படச் சொல்லி அவருடைய தலைமையுரையைத் துவக்கினார்.

ஒரு மனிதனுக்கு எந்தக் காலக்கட்டத்திலேயும் சலிப்பு இருக்கக்கூடாது, அது தற்கொலைக்கு சமம் என்றும் அங்கே எடுத்துரைத்தார்.

மனிதனுக்கு அழகு மானமும் அறிவும் என்றும் அங்கே தந்தை பெரியார் தனது உரையில் சொன்னார்.

இதெல்லாம் மனதிலே பதிந்த காரணத்தினால், எதைப்பற்றியும் எப்போதும் கவலைப்படாமல், இன் றைக்கு வரையிலும் அந்த சுயமரியாதை கருத்துகளை ஏற்று தன்மானத்தைக் காக்கக்கூடிய - எந்த நிலையில் அந்தக் கூட்டங்கள் இருந்தாலும், அதில் கலந்து கொள்கின்ற ஓர் உணர்வோடு என்னை அதில் ஈர்ப்புடன் இணைத்துக்கொள்கிறேன்.

நம்முடைய ஆசிரியர் அவர்கள் ஒரு காலக் கட்டத்திலே தென்னார்க்காடு ஒன்றுபட்ட மாவட்டத்தில் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார். 

அப்போது எங்களுக்கு மாவட்டச்செயலாளர் செஞ்சி இராமச்சந்திரன். நான் செஞ்சி பேரூர் தி.மு.கழகத்தி னுடைய செயலாளர். 

விழுப்புரத்திலிருந்து வளவனூர் பகுதியில் நம் முடைய ஆசிரியர் அவர்கள் பிரச்சாரத்தை மேற் கொள்கிற நேரத்தில், அப்போது அந்தக் கூட்டத்துக்கு நாங்கள் போகவில்லை, விழுப்புரத்தில் இருக்கிறோம். விழுப்புரம் பயணியர் விடுதியில் ஆசிரியர் அவர்களை சந்தித்தோம். அந்த கூட்டம் சிறிது தடைபட்டது என்பதை கேள்விப்பட்டதும், நாங்கள் சென்றோம். சென்றவுடன் ஆசிரியர், ‘இல்லை, நான் பேசிவிட்டுத் தான் செல்வேன் என்று பிடிவாதமாக சொல்லும்போது, நாங்கள் அன்புக்கட்டளை இட்டோம். பேசினால் ஒரு இடம்தான் பேசப்போகிறீர்கள், நாளை மாலை இதே நேரத்திலே ஆரம்பித்து வளவனூர் முழுக்க நீங்கள் சுற்றி பேசிவரலாம் என்று சொன்னவுடனே - எந்த காலக்கட்டத்திலேயும் ஒத்துக்கொள்ளவே மாட்டார் என்று கூட இருந்தவர்கள் எல்லாம் சொன்னார்கள் - எப்படி நீங்கள் சொன்னீங்க, ஒத்துக்கொண்டார் என்றார்கள்.

அன்று இரவு இருந்து மறுநாள் மாலை 3 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரையிலும் எந்த ஊரிலே அந்த பிரச்சாரத்துக்கு தடை ஏற்பட்டதோ, அந்த ஊரிலே ஒரு நபர்கூட வீட்டுக்குள்ளே இல்லாமல், வீட்டு வாசலில் நின்று, ஒவ்வொரு வீதியாக சென்று குறைந்தது 5 இடத்திலே பேசினார். அது ஒரு பேரூராட்சிதான் சின்ன ஊருதான்.

அங்கே பேசும்போது, ஒட்டுமொத்த கிராமத்திலிருப்பவர்களும் அவர் பேச்சைக் கேட்கின்ற நிலை.

அப்போது பெண் அடிமைத்தனம் பற்றி பேசினார். பெண் அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும். பாரதி கண்ட புதுமைப்பெண்களைப் படைக்க வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும்.

நம்வீட்டில் பிறக்கின்ற பெண் குழந்தைகளை பெற்ற தாய் தந்தையே உதாசீனப்படுத்துவது எந்த விதத்திலே நியாயம் என்றெல்லாம் பல்வேறு கருத்துகளை அங்கே வலியுறுத்திப் பேசினார்.

இதற்கெல்லாம் உங்களுக்கு விடை காண வேண்டும் என்று சொன்னால், நம்வீட்டு பிள்ளைகளை நீங்கள் கல்வி கற்கச் செய்ய வேண்டும். 

படித்தால்தான் இந்த சமுதாயத்தில் சம நிலைக்கு சம தகுதியைப் பெற முடியும் என்று இந்த தத்துவத்தினுடைய பேச்சுகள் எல்லாம் இன்றைக்கு தமிழ்நாட்டில் தமிழன்  தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்வதற்காக இன்றைக்கு உருவாக்கப்பட்டிருப்பதன் அடித்தளம்தான் தந்தை பெரியாருடைய கருத்துகள், பெரியாருடைய பயணம். அதைத்தொடர்ந்து நம்முடைய ஆசிரியர்  90 வயதிலும் விடா முயற்சியாக அவருடைய பயணம் உள்ளது.

எனவே, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முத் தமிழறிஞர் கலைஞரின் பெயரில் விருது வழங்குகின்ற விழாவில் ஒரு சாதாரண தொண்டனான எனக்கு அந்த வாய்ப்பினை வழங்குகின்ற நேரத்தில், உண்மையிலேயே இதுதான் கொள்கைக்கும், இலட்சியத்துக்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி என்பதை நான் உணர்ந்து இவர்களை வாழ்த்த வயதில்லாவிட்டாலும், சுயமரியாதை கருத்துகளோடு சொல்லும்போது, வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை, மனதுதான் தேவை என்று நம்முடைய கருத்துகள் சொல்லப்படுகின்ற அந்த நிலையில், நம்முடைய விருதுகளை பெறுபவர் களை, டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்களையும், டாக்டர் மோசெஸ் வீராசாமி நாகமுத்து அவர்களையும் தமிழ் இனத்தின் சார்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக உங்கள் அனைவரையும் வாழ்த்தி, உங்களுடைய பணிசிறக்க வாழ்த்துகிறோம். 

தமிழர்கள் உலகமெங்கும் வாழ்கிற நிலையில், பல்வேறு பொறுப்புகளில் அங்கே தலைசிறந்து வாழு கின்ற ஒரு மாபெரும் பொறுப்பினை தமிழர்கள் ஏற்றிருக்கிறார்கள் என்பதை நாம் உணர்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் கே.எஸ். மஸ்தான் தனது உரையில் குறிப்பிட்டார்.   

மொரிசியஸ் நாட்டு 

டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி

இந்தச் சிறப்பு மிக்க நிகழ்வில் கலந்து கொள்வதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இது என் மூதாதை யர்கள் வாழ்ந்த மண். இங்கே திரு. வீரமணி அவர்களின் கரங்களால் "டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பன்னாட்டு சமூகநீதி 2020" ஆண்டுக்கான விருதைப் பெறுவது எனக்கு பெருமைக்குரிய விஷயம். இந்த அங்கீகாரத் திற்கும் கவுரவத்திற்கும் என் மனமார்ந்த நன்றியை அரசியல் அறிவியல் ஆய்வு மய்யத்திற்கும் சென்னை வளர்ச்சிக் கழகத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருடனும் என் தொடர்பும், நல்லுறவும் நீடித்து நிலைக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

தமிழ் மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக் கழகம் ஆற்றி வரும் நற்பணிகள் பாராட்டுக்குரியவை. கலைஞர் கருணாநிதி அவர்களும் பொது மக்கள் வாழ்வில் வளம் பெற்று முன்னேற பாடுபட்டதை எவராலும் மறக்க முடியாது. சமூகநீதிக்காக மேலும் கடுமையாக உழைத்து பொதுப் பணி புரிய உங்கள் மூலமாக எனக்கு அதிக உற்சாகம் ஏற்படுகிறது. ஒடுக்கப்பட்ட சகோதர, சகோதரிகளின் நல்வாழ்வுக்காக போராட நீங்கள் அனைவரும் என்னை ஊக்குவித்துள்ளீர்கள்.

 கயானா நாட்டின் மேனாள் பிரதம அமைச்சர் மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்களுக்கு 2021 ஆண்டுக்கான சமூகநீதி விருது வழங்கப்பட்டுள்ளது எனக்கு அளவற்ற மகிழ்ச்சி தருகிறது.

உங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள். இந்த 2023 புத்தாண்டில் உங்கள் அனை வரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். இனிவரும் நாட்களில் நாம் அனைவரும் இணைந்து சிறப்பாகப் பணியாற்றி சமூகநீதியை நிலைநாட்ட உறுதியளிப்போம். நன்றி.

கயானா நாட்டு 

டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து

2021ஆம் ஆண்டுக்கான விருதினைப் பெற்றுக் கொண்ட கயானா நாட்டு மேனாள் பிரதமரும்  அந்த நாட்டு பொறுப்பு அதிபர் பதவியில் இருந்தவருமான டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து தமது உரையில் குறிப்பிட்டதாவது:

டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி சமூகநீதிக்கான விருதினை பெறும் வேளையில் மாபெரும் தலைவரும், கொள்கையாளரும், தனித்துவமிக்க பெருந்தகையாள ருமான ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து உரையாடுவதை மிகப் பெருமையாகக் கருதுகிறேன். ஆசிரியரைச் சந்தித்து உரையாடிய நேரம் - சில நிமிடங்களே என்றாலும், எனது வாழ்வில் இருந்த ஒரு வெற்றிடம் நீங்கியதாக - நிரப்பப்பட்டதாக உணர் கிறேன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, சமூகநீதிக்காக, பெண்கள் விடுதலைக்காக பாடுபட்ட பெரிய தலைவர் தந்தை பெரியார் என்பதை அறிவேன்.

1860களில் - அன்றைய சென்னை ராஜதானியில் இருந்த மலபார் பகுதியிலிருந்து கயானா சென்றனர் எனது மூதாதையர்கள். என்னுடைய தந்தையார் பெயரும் இராமசாமி ஆகும். இன்று அனுபவ பூர்வமாக ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தந்தை பெரியார் எந்த அளவிற்கு உழைத்திருக்கிறார் என்பதை இங்கு வருகை தந்து உணர முடிகிறது; அறிய முடிகிறது.

1971ஆம் ஆண்டில் ஒரு செய்தியாளராகப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டேன். போராட்ட வாழ்வையே பொது வாழ்க்கையாக அமைத்துக் கொண்டேன். பொது வாழ்க்கையாக போராட்ட வாழ்வு எனும் பொழுது ஆசிரியர் கி. வீரமணி அவர்களைத்தான் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அவரைப் போல பொது வாழ்க்கையில் இழிவைச்  சந்தித்தவர்கள் யாருமில்லை என்றுதான் கூற வேண்டும்! அப்படிப்பட்டவர் இன்று மக்களால் போற்றப்படும் உயர்நிலையில் இருக்கிறார்.

பெரியார் ஜாதி அமைப்பு முறைக்கு எதிராக போராடினார். ஜாதி அமைப்பு என்பதே நாகரிக உலகில் ஒருவித நோய் போன்றது. அப்படிப்பட்ட தலைவரிடம் பாடம் பயின்றவர் ஆசிரியர் அவர்கள். ஆசிரியர் அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது. சந்தித்த வேளையில் கற்றுக் கொள்கின்றோம்.

கயானாவில் ஏழை மக்களுக்கு, ஒடுக்கப்பட்டோருக்கு வாதிடும், போராடும் பணியை மேற்கொண்டேன். அந்த மக்களுக்கு  ஓரளவு நம்பிக்கையையுடன் பணி செய்து வருகிறோம். உங்களது போராட்ட வரலாறு குறித்து அறியும் பொழுது நான் மிகவும் எளிமையாளனாகி விடுகிறேன்.

உலகம் மாறி வந்தநிலையில் 1961 ஆம் ஆண்டு முதல் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக பங்கேற்றேன். புரட்சியாளர்களெல்லாம் ஜனநாயகப் பாதையை தெரிவு செய்து கொண்ட காலம். கயானா நாடு எண்ணெய் வளமும், எரிவாயு வளமும் மிக்க நாடு. வனவளமும் மிகுதியாகக் கொண்ட நாடு. எனவே வெளிநாடுகளுக்கு அரிய பொருள்களை ஏற்றுமதி செய்து வருவாய் ஈட்டும் நிலையில் உள்ள நாடு. ஆப்பிரிக்க வழி சமுதாயத்தினரும் இந்திய வழி சமுதாயத்தினரும் பெரும்பான்மையாக வாழும் நாடு - கயானா. இரண்டு பிரிவினருக்கும் மோதல் ஏற்பட்டு சமுதாய ஒற்றுமை இல்லா நிலைமை நிலவி வந்தது. இடதுசாரி சிந்தனைக்கு ஆட்பட்ட நான் இந்திய வாழ் சமுதாயத்தினருக்காக - அவர்தம் உரிமைக்காகப் பாடுபட்டு செடி ஜாகன் (Cheddi Jagan)  தலைமையில் அரசியல் தலைமை ஆட்சி அதிகாரத் தலைமையில் பங்கேற்றேன். பின்னர் கூட்டணி அரசிலும் அங்கம் வகித்தேன். பின்னர் வெளிநாட்டு ஆதிக்க சக்திகளின் ஊடுருவலால் அதிகாரத்தை இழந்தாலும், மக்களின் உரிமைக்காக களத்தில் நிற்கிறோம்; போராடிக் கொண்டும் இருக்கிறோம். எங்களது வாழ்க்கையில் மதம் மாறும் நிலைமை ஏற்படாது. பின்னாளில் மத உணர்வு நம்மை - மனிதரைப் பிரிக்கிறது என அறிந்து கொண்டோம். கூட்டுறவால் பண்பாடு காக்கப்படும். கூட்டாட்சியால் பண்பாட்டில் பல தரப்பட்ட பண்பாட்டு ஒருமைப்பாட்டால் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை காண முடியும் என்ற நிலையில் உள்ளோம்.

பெருமை மிக்க, சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி விருது பெற்றதை பெருமையாகக் கருதுகிறோம். தந்தை பெரியாரைப் பின்பற்றுவோம். தவறான வழியில் நிச்சயம் பயணிக்க மாட்டோம்.  விருதினை வழங்கிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி; அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து தமது உரையில் குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் 

வாழ்த்து - பாராட்டுரை

'சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி'  விருது' வழங்கப்படும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் 25 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை உடையது. தொடக்கத்தில் பெண்களுக்கான முதல் பொறியியல் கல்லூரி எனும் சிறப்பினை உலக அளவில் பெற்ற கல்வி நிறுவனம் அது. அப்பொழுது கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுடன் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் (Memorandum of Understanding)  பொழுது 'பெண்களுக்கு மட்டுமான  பொறியியல் கல்லூரியா? என வியப்புடன் வெளிநாட்டவர் அதன் சிறப்புக் குறித்து கேட்டறிவார்கள்.

தந்தை பெரியார், அவருக்குப்பின், அன்னை மணியம்மையார், அவர்களுடைய சொந்த  நிதி, சொத்து ஆதாரங்களைக் கொண்டும், பொது மக்களிடமிருந்து பெற்ற நன்கொடையைக் கொண்டும் தொடங்கப்பட்ட கல்லூரி அது. பின்னாளில் நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக உருவெடுத்தது.

விருதுப் பெயரான 'டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி', அவர்கள் தந்தை பெரியாரால் கொள்கை வடிவமாக வார்த்து எடுக்கப்பட்டவர். அதற்கு  முன்னர் அறிஞர் அண்ணா, தந்தை பெரியாரிடம் கொள்கை மாணாக்கராக இருந்த முதற் சீடர். பெரியாரிடம் கொள்கைப் பாடம் பயின்றவர்கள் பின்னாளில் 'முதல் அமைச்சர்' எனும் அரசியல் ஆட்சி அதிகார உயர்நிலைக்குச் சென்றார்கள். ஆனால் தந்தை பெரியார் ஆட்சி, அதிகாரத்தை தான் அடைய விரும்பவில்லை. ஆட்சி, அதிகாரம் பலமுறை அவரிடம் வந்து நின்ற வேளைகளிலும் அதை மறுத்தவர் பெரியார். அன்றாடம் மக்களைச் சந்தித்து, கருத்துரு வாக்கத்திற்கு பரப்புரை செய்து அதிகாரம் மிக்க மக்களை நாளெல்லாம் ஆட்சி செய்தவர்;  வழி நடத்தியவர் தந்தை பெரியார்.

மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பெரிதும் பொருளாதாரத் தளத்தில் ஏற்பட்டவையே. ஆனால் இந்த மண்ணில் ஏற்பட்டுள்ளது சமூக முன்னேற்றத்துடன் கூடிய பொருளாதார முன்னேற்றம்.

விருது பெற்றுள்ள வெளிநாட்டு வாழ் பெரு மக்களாகிய நீங்கள் பல்வேறு உயர் பொறுப்புகளில், உங்கள் நாடுகளில் இருந்தாலும், பண்பாட்டுப் பாரம் பரியத்தில் நீங்கள் எங்களது சொந்தங்கள்; உறவுக் குரியவர்கள். பெரியார் மாபெரும் மனித மாண்பாளர். அவர் பள்ளிக்கூட வாசலை முழுமையாக சென்றடைந்த தில்லை. ஆனால் அவரது பெயரால் பெரும் கல்வி நிறுவனங்கள், உயர் கல்வி நிலையங்கள், பல்கலைக் கழகங்கள் இன்று உருவாகியுள்ளன. பெரியாரது சிந்தனைகள் சுய சிந்தனைகள், சுதந்திர சிந்தனைகள் - அவை குறித்து உயர்நிலை ஆராய்ச்சிகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. ஆய்வுப் புத்தகங்கள் வெளி வந்துள்ளன.

பெரியார், சிந்தனையோடு நின்றவரில்லை; சிந்தித் ததை மக்களிடம் எடுத்துச் சொன்னார். பரப்புரை செய்த தோடு மட்டும் நிறுத்திக் கொண்டவரல்ல; சிந்தனைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தவர். தானே முன்வந்து நடைமுறையாக்கியவர்.

இந்த மண்ணில் மனிதநேயத் தலைவர்கள் களம் கண்டாலும் அவரது சிந்தனைகள் உலகளாவியவை. உலக மக்களை மேன்மைப்படுத்திடும் மனிதநேயம் சார்ந்தவை. இங்கு பெரியாரின் சிந்தனை வேர்கள் ஆழமாகச் சென்று நிலைத்து பரவியதால் அந்த மரத்தின் விழுதுகள் உலகெங்கும்  உள்ளன. பயனளித்து வருகின்றன. அப்படிப்பட்ட விழுதுகளின் வெளிப்பாடாக அடையாளச் சின்னமாக இன்று விருது பெற்ற நீங்கள் விளங்குகின்றீர்கள்.

1929களின் தொடக்கத்தில் தந்தை பெரியார், அன்றைய மலேயா நாட்டிற்குச் (இன்றைய மலேசியா, சிங்கப்பூர் நாடுகள்) சென்றிருந்தார். மலேய மண்ணில் கொத்தடிமைத் தொழிலாளர்களாக, ரப்பர் மலைத் தோட்டங்களில் உழைத்த மக்களாக தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். அவர் களையெல்லாம் தேடிச் சென்று சந்தித்து உறவாடினார்; அறிவுரை வழங்கினார். "நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சிக்கனமாகச் செலவழியுங்கள்; உங்களது பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுங்கள்; அதுதான் நிலையானது; உயர்வானது. எந்த நாட்டில் வாழ்கின்றீர்களோ அந்த நாட்டிற்குச் சொந்தமானவர்கள் நீங்கள்; நீங்கள் வாழும் நாட்டிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்" என்று தமிழர்களுக்கு பாடம் போன்று எடுத்துரைத்தார். அதன் விளைவு இன்று மலேசியா, சிங்கப்பூர் பலவிதங்களில் முன்னேற்றம் கண்டு உலகளாவிய வளர்ச்சி பெற்றுள்ளது. அங்கு வாழும் தமிழர்களும் உயர்ந்த நிலையில் உள்ளனர்.

விருதினைப் பெற்றுள்ள கயானா நாட்டு மேனாள் பிரதமர் நாகமுத்து அவர்கள் ஒரு சிறந்த சமூகப் போராளி; மாணவப் பருவம் தொட்டு போராளியாக இருந்தவர்; இன்றைக்கும் போராளியாக தொடர்பவர்; வாழ்ந்து வருபவர். நாடுகள் நம்மைப் பிரிக்கலாம்; நாடுகளுக்கிடையே நிலவிடும் அரசியல் சூழல்கள் நம்மை இடைவெளிப்படுத்தலாம். ஆனால் நம்முடைய பண்பாடு என்றென்றைக்கும் நம்மை இணைத்திடும்; பிணைத்திடும்; உறவுகளை நீடிக்க - நிலைத்திருக்க வைத்திடும்.

விருது பெற்ற மற்றொரு அரசியல் ஆளுமை டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி  மொரிசியஸ் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். அரசியல் சூழலில் தனித்துவத்துடன் விளங்கிடும் தமிழர் பாரம்பரியத்தில் வந்த தகைமையாளர். பண்பாட்டை மறக்காத பண்பாளர். வேர்களைத் தேடி, உறவு காட்டி வரும் விழுது போன்றவர் - இன்று சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி விருதினைப் பெற்றுள்ளார். எப்பொழுதும் போல் உறவுகள் தொடர்ந்திட வேண்டும். 

பெரியார் திடல் உங்களுக்கான வீடு. எப்பொழுது வந்தாலும் தமிழ்நாடு உங்களது முன்னோர்கள் தடம் பதித்து வாழ்ந்த தாயகம் - தாய்வீடு போன்றது பெரியார் திடல். 

சமூகநீதி விருதினை உருவாக்கி ஒவ்வொரு ஆண்டும் உரியவர்களுக்கு வழங்கிடும் அரும் பணியினைச் செய்து வரும் வி.ஆர்.எஸ். சம்பத் அவர்கள் ஒரு பாலம் போன்றவர். நல்ல தொடர்பாளர் பெரும் ஒருங்கிணைப்பாளர், உலகெங்கிலும் வாழும் தமிழ் வழிச் சமுதாயச் சொந்தங்களை பிணைக்கும் ஆற்றலாளர்; விளம்பரமில்லாமல் சமுதாயப் பணியினைச் செய்து வரும் சிறப்புக்குரியவர். தொடர்ந்து இந்தப் பணியினைப் பரந்துபட்டு உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என வாழ்த்துகிறோம்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு இந்தி யாவின் மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஆறு முறை வருகை தந்துள்ளார். குடியரசுத் தலைவராக இருந்த பொழுதும் வருகை தந்துள்ளார்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் ஒரு உயர் கல்வி நிறுவனம் மட்டுமல்ல; பொது மக்களுக்கு தேவையான பல அடிப்படை வசதிகளை வழங்கி வரும் மக்கள் பல்கலைக் கழகமுமாகும். பல்கலைக் கழகத்தை சுற்றியுள்ள 69 கிராமங்களில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மருத்துவம், கல்வி சார்ந்த அடிப்படைக் கட்டமைப்புகளை  வழங்கிடும் புரா  (Providing Urban Amenities to Rural Areas - 'PURA') எனும் வளர்ச்சித் திட்டத்தை பல ஆண்டுகளாகச் செயல்படுத்தி வருகிறது. நகர்ப்புறத்தில் வாழும் மக்களுக்குக் கிடைக்கும் வசதிகள் ஊரகப் பகுதியில் வாழ்பவர்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதே புரா (PURA)  திட்டத்தின் நோக்கம்.  

பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்த கலாம் அவர்கள் இப்படிப்பட்ட சிந்தனையைக் கொண்டு பல இடங்களில் தான் பேசி வந்துள்ளதாகவும் - தற்பொழுது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் மூலம் அந்த சிந்தனைகள் நடைமுறை கண்டு வருவதை பார்த்து மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார். மேலும் வரும் காலங்களில் இந்த புரா திட்டத்தினை - 'பெரியார் புரா'  - திட்டத்தினை நாட்டின், உலகின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும்  தூதுவராக இருக்க விரும்பினார் - பெரியார் புரா தூதுவராகவும் விளங்கினார்.

அனைவருக்கும் அனைத்தும்; அனைவரும் சமம்; அனைவருக்கும் சம வாய்ப்பு; சம வசதி இருப்பதே பெரியார் புராவின் கோட்பாடு. பெரியார் 60 ஆண்டு களுக்கு முன்பு கூறிய இந்த நிலையை இன்று 'திராவிட மாடல்' ஆட்சி நடத்தி வரும் மாண்பமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி வருகிறார்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பயின்ற மாணவ மாணவியர் 10,000க்கும் மேற்பட்டோர் உலகின் பல பகுதிகளில் பல நிறுவனப் பொறுப்புகளில் உள்ளனர், சிறந்து விளங்குகின்றனர். கல்வி, சமத்துவம் மட்டுமல்ல; கல்வியின் மூலம் உயர்நிலை, குறிப்பாக பெண்களுக்கு அதிகாரமளித்திடும் நிலையினை உருவாக்கியதில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு பெரும் பங்கு உண்டு.

அரசியல் அடிமைத்தனம் பல நாடுகளில் உண்டு. சமூக அடிமைத்தனமும் மிகப் பல நாடுகளில் நிலவுகிறது. பண்பாட்டு அடிமைத்தனத்தினைத் தகர்த்து, வெளிக்கிளம்பிய, மனிதநேயம் புகட்டிய பெரியாரின் தத்துவம் வளர்ந்து வரும் நிலையில் உள்ளோம் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, சமத்துவ பண்பாட்டை பிரதிபலித் திட, நடைமுறையாக்கிட பெரியார் சிந்தனைகளை உலகெங்கிலும் பரப்பிட வேண்டும். இன்றைக்கு விருது பெற்ற பெரு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்; நிச்சயம் இருப்பார்கள் என்று நன்றி கூறி அப்பெருமக்களைப் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன்.

- இவ்வாறு தமிழர் தலைவர் தமது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் நிறைவாக பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் எஸ். வேலுசாமி நன்றி கூறினார்.

விருது வழங்கிடும் நிகழ்வில் 

கலந்து கொண்டோர்

ரஷ்ய தூதரக அலுவலர் திமித்ரி ஏ.ஷெசெர்பினின், மேனாள் துணைவேந்தர் திருவாசகம், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், புலவர் பா.வீரமணி, வழக்குரைஞர்கள் த.வீரசேகரன், சு.குமாரதேவன், 

பா.மணியம்மை, பொறியாளர் ச.இன்பக்கனி, தே.செ.கோபால், ஜெயராமன், சோ.சுரேஷ், பெரியார் மாணாக்கன், தொண்டறம், உடுமலை வடிவேல், அன்பு செல்வன், சா.தாமோதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொகுப்பு: வீ.குமரேசன்

(விருது பெற்ற பெருமக்கள் மற்றும் அந்த நாட்டு தமிழ்வழி சமுதாயத்தைச் சார்ந்தோர் தமிழ் மொழியை முழுமையாகப் புரிந்து பேசிட, இயலாத நிலையில் அவர்களுக்கு விளங்கிடும் வகையில், 75 விழுக்காடு நிகழ்ச்சி நிரல் ஆங்கிலத்திலேயே நடந்தேறியது. அந்த உரைகளின் தமிழாக்கச் சுருக்கமே இது)


No comments:

Post a Comment