பாப்பிரெட்டிப்பட்டியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 10, 2023

பாப்பிரெட்டிப்பட்டியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

 சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது -வருந்தத்தக்கது!

ஆளுநர் என்பவர் அரசியல்வாதியல்ல; அரசு ஊழியர்!

ஜனநாயகப் பாதுகாப்புத் தேவை என்பதை வலியுறுத்தி 

நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை திராவிடர் கழகம் முன்னெடுக்கும்!

பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.10 தமிழ்நாடு ஆளுநர் என்பவர் அரசியல்வாதி அல்ல; அரசு ஊழியர் என் பதை மறந்துவிட்டு, சட்டமன்றத்தில் இப்படி நடந்து கொண்டிருக்கிறார். அதுவும் தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில், இன்றைய நிகழ்வுபோல, நடந்ததே கிடையாது. முதன் முறையாக இப்படி நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது. அனைத்துக் கட்சி களும் இதைக் கண்டித்திருக்கின்றன; ஜனநாயகப் பாதுகாப்பு தேவை - இது ஒரு கருப்பு நாள் என்று அறிவிக்கவேண்டும்; அதை விளக்கி, நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை திராவிடர் கழகம் முன்னெ டுக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

நேற்று (9.1.2023) பாப்பிரெட்டிப்பட்டிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

ஆளுநர் வெளிநடப்புச் செய்திருக்கிறாரே?

செய்தியாளர்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு எதிராக 'திராவிட மாடல்' ஆட்சி, திராவிட மாடல் ஆட்சியின் வளர்ச்சி,   தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர்களின் பெயர்களை சொல்லாமல் தவிர்த்துவிட்டு, தமிழ்நாடு அரசுக்கு எதிராக, தமிழ்நாடு ஆளுநர் சட்டப்பேரவையில் நடந்திருக்கிறார். அதைக் கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கையைப் படித்துக்கொண்டிருக்கும்பொழுதே, ஆளுநர் வெளி நடப்புச் செய்திருக்கிறாரே, இதுகுறித்து தங்களுடைய கருத்து என்ன?

தமிழர் தலைவர்: தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இப்படி ஓர் ஆளுநர் நடந்துகொள்வது என்பது, ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சியைக் கொச்சைப்படுத்துகின்ற, ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக ஆக்குகின்ற அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கையாகும்.

தமிழ்நாட்டில் நடைபெறுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி - 

ஆளுநர் ஆட்சியல்ல!

ஏனென்றால், ஆளுநர் என்பவர் ஓர் அரசு ஊழியர். ஆளுநருக்கென்று தனி அதிகாரம் கிடையாது. இப்பொழுது தமிழ்நாட்டில் நடைபெறுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சியாகும் - இது ஆளுநர் ஆட்சியல்ல.

எனவே, அமைச்சரவையில், கொள்கை முடிவை எடுத்து, அந்தக் கொள்கை முடிவுகளை விளக்கமாகச் சொல்வது என்பதுதான் - ஆளுநர் உரை என்பதாகும்.

எப்படி குடியரசுத் தலைவர் உரை என்பது, ஒன்றிய அமைச்சரவையில் என்ன முடிவெடுத்திருக் கிறார்களோ, அதைத்தான் அவர் படிக்கவேண்டுமே தவிர, அவருடைய தனிப்பட்ட கருத்துகளைச் சொல்வ தற்கு வாய்ப்புக் கிடையாது.

தமிழ்நாடு ஆளுநர் தன் இஷ்டம்போல, சிலவற் றைப் படிக்கலாம்; சிலவற்றை விடலாம் என்று நடந்துகொண்டிருப்பது என்பது நாகரிகமானதல்ல. அநாகரிகமானது. அரசியலைக் கொச்சைப்படுத்துவது என்பது மட்டுமல்ல; அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அரசமைப்புச் சட்டக் கடமைக்கு விரோத மானது.

உச்சநீதிமன்றம் தெளிவாகச் 

சுட்டிக்காட்டியிருக்கிறது

காரணம், ஆளுநருக்கு என்ன அதிகாரம் என் பதை, பேரறிவாளன் வழக்கில் அண்மையில், இதே ஆளுநரைப்பற்றி உச்சநீதிமன்றம் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது.

அதற்குப் பிறகும்கூட, தமிழ்நாடு ஆளுநர் திட்ட மிட்டு இதுபோல் நடந்துகொள்வது; தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமான பெயர் இருக்கும்பொழுது, அதற்கு வேறு பெயர் சொல்லவேண்டும் என்று குறுக்குச்சால் ஓட்டுவது போன்றவற்றை அவர் வெளியில் பொது இடங்களில் பேசியதுகூட, மன்னிக்கக் கூடியதாகவும், மறக்கக் கூடியதாகவும் இருக்கலாம்.

ஆனால், இன்று அவர் சட்டப்பேரவையில் நடந்துகொண்ட விதம் மன்னிக்கப்பட முடியாத - அரசமைப்புச் சட்ட விரோத கோழைத்தமான, தவறான ஒரு நிலையாகும்.

எனவேதான், இதை எதிர்த்து முதலமைச்சர் அவர்கள் உடனடியாக தீர்மானத்தைக் கொண்டு வந்தி ருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும்

இடந்தரமாட்டார்கள்!

தமிழ்நாட்டில், ஓர் அரசியல் நெருக்கடியை உருவாக்கவேண்டும்; அதன்மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் அல்லது ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தவேண்டும் என்று அவர்கள் நினைத்தால், அவர்களுக்கு நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் இடந்தரமாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் ஏமாந்து போவார்கள். மிகப்பெரிய அளவிற்கு ஏமாற்றமே அடைவார்கள்.

இன்றைக்கு அவர்கள் எதைப் பேசிக் கொண்டி ருக்கிறார்களோ, அந்தக் கனவு நிச்சயமாக நிறைவேறாது. தமிழ்நாடு ஆளுநர் என்பவர் அரசியல்வாதி அல்ல; அரசு ஊழியர் என்பதை மறந்துவிட்டு, அதுவும் தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில், இன்றைய நிகழ்வுபோல, நடந்ததே கிடையாது. முதன் முறையாக இப்படி நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது.

 நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை 

திராவிடர் கழகம் முன்னெடுக்கும்

அனைத்துக் கட்சிகளும் இதைக் கண்டித்திருக் கின்றன; ஜனநாயகப் பாதுகாப்பு தேவை - இது ஒரு கருப்பு நாள் என்று அறிவிக்கவேண்டும்; அதை விளக்கி, நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை திராவிடர் கழகம் முன்னெடுக்கும்.

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment