'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆண்டு மலர் - தமிழர் தலைவரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழாவில் வி.அய்.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆண்டு மலர் - தமிழர் தலைவரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழாவில் வி.அய்.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் உரை

‘‘படி, படி!’’ என்று தந்தை பெரியார் சொன்னதால் நாம் உயர்ந்திருக்கிறோம்!

யார் எங்கிருந்தாலும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையையும் - அறிஞர் அண்ணாவின் அரசியல் கொள்கையையும் மறந்துவிடக் கூடாது!


சென்னை, ஜன.7  ‘‘படி, படி!’’ என்று தந்தை பெரியார் சொன்னதால் நாம் உயர்ந்திருக்கிறோம்! யார் எங்கிருந் தாலும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையையும் - அறிஞர் அண்ணாவின் அரசியல் கொள்கையையும் மறந்துவிடக் கூடாது என்றார் வி.அய்.டி. வேந்தர் முனைவர் ஜி.விசுவநாதன் அவர்கள்.

‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ ஆண்டு மலர் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழா

கடந்த 30.12.2022 அன்று  மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ ஆண்டு மலர் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழாவில், வி.அய்.டி. வேந்தர் முனைவர் ஜி.விசுவநாதன் அவர்கள் வாழ்த் துரையாற்றினார்.

அவரது  வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

5000 ஆண்டுகளுக்குமுன்பே 

திராவிடர் நாகரிகம்!

5 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பே திராவிட நாகரி கம் பெயர் பெற்றது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

சிந்து சமவெளி நாகரிகம், திராவிட நாகரிகம். அது தான் உலகத்தின் கவனத்தையே ஈர்த்தது. அதற்குப் பிறகுதான், ஆரியர்கள் எல்லாம் உள்ளே வந்தார்கள்.

அதுமட்டுமல்ல, இது ஓர் இயக்கமாக எப்பொழுது ஆனது என்ற வரலாற்றைப் பார்த்தீர்களேயானால், நம்முடைய வரலாற்றிலே 300, 400 ஆண்டுகாலத்தை இருண்ட காலம் என்று சொல்வார்கள். அது இருண்ட காலம் அல்ல.

அப்பொழுது அரசர்கள் எல்லாம் ஒன்று சமணர் களாகவோ அல்லது புத்தர்களாகவோ இருந்த காலம்.

1550 ஆண்டுகளுக்குமுன்பே 

திராவிடச் சங்கம்!

அப்படிப்பட்ட காலத்தில், கி.பி. 5 ஆம் நூற்றாண்டில், கி.பி.470 இல், வஜ்ஜிர நந்தி என்ற ஒரு சமண முனிவர், திராவிடச் சங்கம் என்ற ஒன்றை மதுரையில் தொடங் கினார்.

இன்றைக்கு 1550 ஆண்டுகளுக்கு முன்பு திராவிடச் சங்கம் தொடங்கப்பட்டது. அவர் அதில், தமிழ் இலக் கியத்திற்கும், தமிழுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்று பேசியிருக்கிறார்.

நான் திராவிடத்தைப் பார்த்துப் பயப்படுவோர் அல்லது அதைப்பற்றி விமர்சிப்பவர்களுக்குச் சொல்லிக் கொள்வது - 1550 ஆண்டுகளுக்கு முன்பு, சமண முனிவர் ஒருவர் திராவிடச் சங்கத்தைத் தொடங்கியிருக் கிறாரே, அதைக் கொஞ்சம் எடுத்துப் படித்துப் பாருங்கள்.

ஆகவே, திடீரென்று வந்ததல்ல திராவிட இயக்கம். அதேபோல், 1908 ஆம் ஆண்டு விருதுநகரைச் சார்ந்த சிவஞான யோகி என்பவர், மதுரைக்குச் சென்று திராவிடர் கழகம் என்ற ஒன்றை ஆரம்பித்தார். இதே பெயர். 

சீர்காழி சிதம்பர முதலியார் என்பவர் அதற்குத் தலை வராக ஆனார். 59 உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள். அந்தத் திராவிடர் கழகத்தின் முக்கியத்துவமே - தமிழ னுடைய தொன்மையையும், தமிழினுடைய  இலக்கிய வளத்தையும்பற்றி பேசுவதுதான்.

அதில், பல தமிழறிஞர்கள் இருந்திருக்கின்றார்கள். மறைமலையடிகள் பெயரை மாற்றுவதற்கு முன்பு, சுவாமி வேதாச்சலமாக அதில் உறுப்பினராக இருந்தி ருக்கிறார். நாவலர் சோமசுந்தர பாரதியார் இருந்திருக் கிறார். பூர்ணலிங்கம் பிள்ளை அதில் இருந்திருக்கிறார். கதிரேசன் செட்டியார் அதில் இருந்திருக்கிறார். இப்படி முக்கியமானவர்கள் எல்லாம் 59 பேர் அதில் இருந் திருக்கிறார்கள். இது நடந்தது 1908 ஆம் ஆண்டு.

இதை நான் குறிப்பிடுவதற்குக் காரணம், திடீரென்று இந்த இயக்கம் தோன்றியதல்ல. அது நீதிக்கட்சியாக இருந்தது. எனக்கு முன்பு உரையாற்றிய திரு.விஜயசங்கர் அவர்கள் அந்த வரலாற்றுக் குறிப்பையெல்லாம் சுருக்க மாகச் சொன்னார்.

அது நீதிக்கட்சியாக இருந்தபொழுது, ஒரு பத்திரிகை எந்த அளவிற்கு செல்வாக்கோடு இருந்தது என்பதற்கு, அந்தக் கட்சியின் பெயரையே அது மாற்றிவிட்டது.

அந்தக் கட்சியின் பெயர், ‘‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்'' என்பதுதான். அவர்கள் நடத்திய ஆங்கிலப் பத்திரிகைக்குப் பெயர்தான் ‘‘ஜஸ்டிஸ்''  - அந்தப் பத்திரிகை, அந்த அளவிற்குப் புகழ்பெற்று, கட்சியின் பெயரே ‘‘ஜஸ்டிஸ் கட்சி'' ஆகிவிட்டது.

அந்த அளவிற்கு, அந்தக் காலத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் இருந்திருக்கின்றார்கள். இல்லையானால், ஒரு கட்சியின் பெயரை மாற்றுகின்ற அளவிற்கு ஒரு பத்திரிகை இருந்திருக்க முடியாது.

ஜஸ்டிஸ் பார்ட்டி, 1916 ஆம் ஆண்டு ‘‘தென்னிந்திய நல உரிமைச் சங்க''மாகத் தொடங்கப்பட்டது. நாமெல் லாம் வரலாற்றைப் பார்த்தால் தெரியும்.

ஆக, இன்றைக்கு நூறாண்டுகளைக் கடந்து இந்த இயக்கம் வளர்ந்துகொண்டிருக்கிறது.

ஆனாலும், இன்னும் பல பேர், அதை ஏதோ புதிதாகப் பார்ப்பதுபோல் இருக்கிறது. 

தந்தை பெரியார் காங்கிரசை விட்டு 

ஏன் வெளியேறினார்?

பகுத்தறிவுக் கொள்கைகள் அடிப்படையில், நம்மு டைய சுயமரியாதை இயக்கத்தை 1925 இல் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கினார். அவரும் காங்கிர சிலிருந்துதான் வெளியே வந்தவர்.

அந்த வரலாறெல்லாம் உங்களுக்குத் தெரியும். பார்ப்பனர்களுக்குத் தனியாகச் சாப்பாடு - பார்ப்பனரல்லாதவர்களுக்குத் தனியாகச் சாப்பாடு என்று பிரித்தபொழுது, அதை எதிர்த்து வெளியே வந்தவர் தந்தை பெரியார் அவர்கள்.

அந்த ஜாதிக் கொடுமைகள் காங்கிரசில் இருக்கக் கூடாது என்று சொன்னார். அதுதான் பின்னாளில், ஓர் இயக்கமாகவே மாறிவிட்டது.

இந்த வரலாற்றையெல்லாம் நம்முடைய இளைஞர் கள் அறியவேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

இந்த இயக்கம் மூடப் பழக்கத்திற்கு எதிராக இருக் கின்ற இயக்கம். ஆனால், இந்த நாடே மூடப் பழக்கத்தில் மூழ்கிப் போயிருக்கின்றது.

எங்கெங்கே கல்வி பின்தங்கி இருக்கிறதோ, பொருளாதாரத்தில் மக்கள் பின்தங்கியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் மத நம்பிக்கை அதிகமாக இருக்கும்; மூடநம்பிக்கை அதிகமாக இருக்கும்.

சில ஆண்டுகளுக்குமுன்பு ‘தி டெவலப்' என்கிற ஒரு நிறுவனம் 114 நாடுகளில் சர்வே நடத்தினார்கள். அந்த சர்வே என்னவென்றால், மதத்தினுடைய ஆதிக்கத் தைப்பற்றித்தான் அந்த சர்வே.

அந்த சர்வேயில் அவர்கள் கண்டுபிடித்து சொன்னது, எந்தெந்த நாடுகளில் தனி நபர் வருமானம் 2 ஆயிரத்துச் சொச்சம் அல்லது 2 ஆயிரம் டாலர் இருக்கிறதோ, அங்கெல்லாம் மதத்தின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது.

எங்கெல்லாம் 20 ஆயிரம், 25 ஆயிரம் டாலருக் குமேல் தனி நபர் வருமானம் இருக்கிறதோ, அங்கெல் லாம் மதத்தின் ஆதிக்கம் 20 சதவிகிதம், 30 சதவிகிதத் திற்குமேல் கிடையாது என்று கண்டுபிடித்துச் சொன் னார்கள்.

ஆக, நம்முடைய வருமானம் உங்களுக்குத் தெரியும். 2500 டாலர் சராசரியாக. இந்த 2500 டாலர் சராசரியே தவிர, யார் ஆட்சியை நடத்துகிறார்களோ, யார் கையில் ஆட்சி இருக்கிறதோ, அந்த ஹிந்தி பேசுகின்ற மாநிலங் கள் எல்லாம் மிகவும் பின்தங்கியிருக்கின்றன.

வட மாநில பொருளாதாரமும் - 

தென் மாநிலப் பொருளாதாரமும்!

ஏற்கெனவே நான் சொன்ன செய்தியை இந்த இடத்தில் நினைத்துப் பாருங்கள். ‘‘உங்கள் ஊரில் பெரியார் இருந்தார், அதனால், நீங்கள் மேலே போய் விட்டீர்கள். எங்கள் ஊரில் பெரியார் இல்லை, அதனால் நாங்கள் அப்படியே இருக்கிறோம்‘‘ என்று.

2500 டாலர் என்பது சராசரியே தவிர, தென்மாநிலங் களில் எல்லாமே 3 ஆயிரம் டாலருக்கு மேலாகவே இருக்கின்றது.

ஹிந்தி பேசுகின்ற மாநிலங்களைப்பற்றி 1980 ஆம் ஆண்டுகளில், ஹசிஷ் போஸ் என்ற ஒருவர் இருந்தார். அவர் பீமாரூ ஸ்டேட்டஸ் என்று எழுதினார்.

பீமாரு என்றால், தமிழில் நோய் என்று அர்த்தம்.

பீமாரு என்றால், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் என்கிற நான்கு மாநிலங் களையும் குறிப்பது.

இன்றைக்கு அது ஏழு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது.

அவர் எழுதி இன்றைக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனாலும், கிட்டத்தட்ட அதே நிலைமைதான் நீடித்துக் கொண்டிருக்கிறது.

இதை நான் குறிப்பிடுவதற்குக் காரணம், கல்வியில் நாம் முன்னேறினால், மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்பதற்கு, தென்னிந்திய மாநிலங்களே உதாரணமாக இருக்கின்றன.

உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், எந் தெந்த மாநிலங்கள் கல்வியில் முன்னேறியிருக்கின் றனவோ, அந்த மாநிலங்கள் பொருளாதாரத்திலும் முன்னேறியிருக்கின்றன.

‘படி, படி’ என்று தந்தை பெரியார் 

ஏன் சொன்னார்?

அதனால்தான், தந்தை பெரியார்  அவர்கள், படி, படி என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அதனால்தான், படிக்கின்ற இடத்திற்கு வி.அய்.டி.யில் உள்ள நூலகத்திற்குப் பெரியார் நூல் நிலையம் என்று பெயரிட்டு இருக்கின்றோம் என்று நம்முடைய பேரா சிரியர் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

ஒன்றிய அரசு, தேசிய புதிய கல்விக் கொள்கை -2020 என்று ஒரு புதிய கல்விக் கொள்கையை அறிவித்தி ருக்கிறது. அவர்கள் கல்விக் கொள்கையை கொண்டு வருவதில் தவறில்லை. ஆனால், ஒரே கொள்கை எல்லா மாநிலங்களுக்கும் ஒத்து வருமா? என்று அவர்கள் யோசிக்கவேண்டும்.

காரணம், அந்தக் கல்விக் கொள்கையில் அவர்கள் சொல்லியிருப்பது, இன்னும் 15 ஆண்டுகளுக்குள்ளாக, நம்முடைய G.E.R. என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம் Gross Enrolment Ratio அல்லது உயர் கல்வி பெறுபவர்களின் சராசரி இப்பொழுது இந்தியாவில் 27 சதவிகிதம். அது 50 சதவிகிதமாக உயர்த்தப்படவேண்டும் என்று அந்த அறிக்கை சொல்லுகிறது.

ஏற்கெனவே நாம் 50 சதவிகிதத்தைத் தாண்டி விட்டோம். தென்மாநிலங்கள் எல்லாமே 35 சதவிகிதத் திற்கு மேலேதான் உள்ளன.

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது உத்தரப்பிரதேசத்திற்கும், பீகாருக்கும், மத்தியப் பிர தேசத்திற்கும் தான் பயன்படும்.

காரணம், பீகாரில் 14 சதவிகிதம்; உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் 25, 26 சதவிகிதத்தில் தான்.

ஆக, கல்வியில் பின்தங்கியிருந்தால், அவர்கள் வளர்ச்சியிலும் பின்தங்கியிருப்பார்கள் என்று சொன்ன தற்கு உதாரணம், இந்த 2500 டாலர் சராசரியே தவிர, பீகாருக்கு 600 டாலர், உத்தரப்பிரதேசத்திற்கு 900 டாலர். பீகாரைப் போல நாம் 5 மடங்கு இருக்கிறோம்; மராட்டிய மாநிலம் 6 மடங்கு இருக்கிறது.

ஆக, இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது நாட் டிலே எப்படிப்பட்ட கொள்கைகள் வரவேண்டும்; நாட்டை எப்படி உயர்த்தவேண்டும்? கல்வியில் உயர்த் தினால் ஒழிய, பொருளாதாரத்தில் உயர்த்த முடியாது.

அந்தக் கல்வியை என்னென்ன மொழிகளில் அளிப்பது என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது.

அந்தக் காலத்தில் மும்மொழி கொள்கை வகுக்கப் பட்டது. 1968 இல் நான் நாடாளுமன்றத்தில் இருந்த பொழுது, அது நிறைவேற்றப்பட்டது என்பது எனக்கு நினைவில் இருக்கிறது.

அந்த மும்மொழிக் கொள்கையில், ஹிந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில மொழி, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளைப் படிக்கவேண்டும்.

வடக்கே மூன்றாவது மொழி படிக்கிறார்களா?

ஹிந்தி பேசுகின்ற மாநிலங்களில், ஹிந்தி, ஆங்கிலம் மூன்றாவது எது என்றால், Any one of the  Modern Indian Language Preferably a Southern Language என்று போட்டிருந்தார்கள். Modern Indian Language என்று போட்டதற்கு சமஸ்கிருதம் கூடாது என்பதற்காக. இன் னொன்று,  Preferably a Southern Language என்று போட்டிருந்தார்கள்.   திரவிடியன் என்று போடுவதற்குப் பயந்துகொண்டு Southern Language  என்று போட் டார்கள்.

ஏதாவது ஒரு தென்னிந்திய மொழியை அவர்கள் படிக்கவேண்டும் என்பது 1968 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

அது எங்கே அமல்படுத்தப்பட்டது?

இப்போது என்ன ஆகியிருக்கின்றது என்று சொன் னால், அந்த மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதத் தையும் சேர்த்துவிட்டார்கள்.

ஆக, அவர்கள் இன்றைக்குத் தாய்மொழியான ஹிந்தி மொழியையும், அதற்குத் தாய்மொழியான சமஸ்கிருதத்தையும் படித்தால் போதும். நாம் மூன்று மொழிகளைப் படிக்கவேண்டும். 

அறிஞர் அண்ணா அவர்கள் இருமொழிக் கொள் கையை நிறைவேற்றினார்கள். தந்தை பெரியார் அவர்கள் அதற்கு முழு ஆதரவு கொடுத்தார்.

தந்தை பெரியார் தலைமையில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டமும் - கடைசியில் இராஜாஜியே நம் பக்கம் சேர்ந்த நிகழ்வும்!

அறிஞர் அண்ணா தமிழும், ஆங்கிலமும் போதும் என்று இரு மொழிக் கொள்கையைக் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜியும் நம்மோடு சேர்ந்துவிட்டார். ஒரு காலத்தில், இராஜாஜிதான் ஹிந்தியைக் கொண்டு வந்தார்.

1937 ஆம் ஆண்டு அவர் முதலமைச்சரானபொழுது, ஹிந்தியைக் கட்டாயப் பாடமாகக் கொண்டு வந்தது அவர்தான். அதை எதிர்த்து தமிழ்நாட்டில் பெரிய போராட்டம் நடைபெற்றது. திராவிடர் இயக்கம் - தந்தை பெரியார் தலைமையில், தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள். மடாதிபதிகளும் கலந்து கொண்டார்கள்; குன்றக்குடி அடிகளார்கூட அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

ஆக, அதற்குப் பிறகு இராஜாஜி மாறிவிட்டார். அவரிடம், நீங்கள்தானே ஹிந்தியைக் கொண்டு வந்தீர்கள்; இப்பொழுது ஹிந்தியை எதிர்க்கிறீர்களே என்று கேட்டபொழுது,

‘‘நான்தான் ஹிந்தியைக் கொண்டு வந்தேன், மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; ஆகவே, நான் மக்களோடு சேர்ந்துவிட்டேன்'' என்று சொன்னார்.

ஆக, இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலை, மறுபடியும் பழைய நிலைக்குப் போய்விடுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.

டாக்டர் ராம்மனோகர் லோகியாவோடு உரையாடல்!

நான் நாடாளுமன்றத்தில் இருந்தபொழுது, எங்க ளோடு டாக்டர் ராம்மனோகர் லோகியா இருந்தார். அவர் கடுமையாக ஆங்கிலத்தை எதிர்ப்பவர்.

‘‘ஹங்கிரேசி அட்டாவோ'' என்பதுதான் அவருடைய முழக்கம். ‘‘ஆங்கிலத்தை அகற்றுவோம்'' என்று சொல்வார்.

ஒருமுறை அவர் சென்டர் ஹாலில் இருந்து உள்ளே வருகிறார்; அப்பொழுதுதான் நான் மக்களவையில் இருந்து சென்டர் ஹாலுக்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்பொழுது நான் புதுசு. அவரைப் பார்த்தவுடன்,  இவரை எதற்குப் பார்க்கவேண்டும் என்று நினைத்து, நான் இன்னொரு பக்கம் திரும்பிக்கொண்டு செல்ல ஆரம்பித்தேன்.

அப்பொழுது என்னைக் கூப்பிட்டார், ‘‘ஏன் எனக்கு வணக்கம் சொல்லவில்லை?'' என்று கேட்டேன்.

அப்பொழுது நான் சொன்னேன், I am opposed Hindi, You are Hindi Phonetic; That’s why I Didn’t wish என்று சொன்னேன்.

அப்படி சொல்லியிருக்கக் கூடாதுதான்; அன்றைக்கு நான் சின்ன பையன், 28 வயதுதான். அந்த வேகத்தில் சொல்லிவிட்டேன்.

அவர் கோபித்துக் கொள்ளாமல், என்னுடைய தோளில் கை போட்டு, சென்டர் ஹாலுக்கு என்னை அழைத்துச் சென்று, அமர வைத்து, எனக்குக் காபி வாங்கிக் கொடுத்து,

‘‘நான் தமிழ் மொழிக்கோ, மற்ற மொழிகளுக்கோ விரோதியல்ல. ஆங்கிலம் இருந்தால், நம்முடைய மொழி கள் எல்லாம் வளராது என்று நான் கருதுகிறேன். அதனால்தான் ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்கி றேனே தவிர, மற்ற எந்த மொழிக்கும் நான் விரோதியல்ல என்றும், அவருடைய மொழிக் கொள்கைகளையெல்லாம் சொல்லிவிட்டு, எழுந்து செல்லும்பொழுது, ‘தமிழ் வாழ்க’’’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

இப்பொழுது அந்தக் கொள்கை மறுபடியும் வரு கிறதோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது.

ஆங்கிலத்தை அகற்றவேண்டும் என்று அண்மை யில் ஒரு குழு முடிவெடுத்து, ஒன்றிய அரசுக்குக் கொடுத்திருக்கிறது. அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு, அரசாங்கம் அறிவிக்கவில்லை.

ஆங்கிலமும் அகற்றப்பட வேண்டுமா?

அதில், மூன்று வகைகளாக மாநிலங்களைப் பிரித்து, முதல் வகையாக இருக்கிற ஹிந்தி பேசுகின்ற மாநிலங் களில், உடனடியாக ஆங்கிலம் அகற்றப்படவேண்டும்; எல்லாமுமே ஹிந்தியிலேயே சொல்லிக் கொடுக் கப்படவேண்டும்.

மருத்துவம், பொறியியல், சட்டம் ஆகிய படிப்புகளை ஹிந்தியில் படிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கி றார்கள். அதற்கான தொடக்கமும் நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேசத்தில் புத்தகம் எழுதப்பட்டு வருகிறது. நான் கேட்டேன், எப்படி எழுதுகிறார்கள்? என்று.

நான் கேள்விப்பட்டது, ஆங்கிலத்தில் ‘அனாடமி' என்று இருந்தால், ஹிந்தியில் அனாடமி என்று எழுதிவிடுகிறார்கள் என்று.

தமிழ்நாட்டிலும் அதுபோன்று  வரவேண்டும் என்று அதற்கான கோரிக்கைகள் வகுக்கப்படுகின்றன. இங்கே வருகின்ற ஒன்றிய அமைச்சர்களும் அதுபற்றி பேசுகின்றார்கள்.

இது எப்படி சரியாக வரும் என்று எனக்குத் தெரியவில்லை. காரணம், இங்கே ஆங்கிலம் நமக்குப் பெருந்துணையாக இருக்கிறது.

ஏற்கெனவே இங்கே பேராசிரியர் அவர்கள் சொன் னதைப்போல, உலகிலேயே அதிகமாகப் பேசப்படுகிற அல்லது புரிந்துகொள்ளப்படுகிற மொழி ஆங்கில மொழிதான்.

அதனால்தான் பண்டித நேரு அவர்கள், It is a Window in Modern World  என்று குறிப்பிட்டுச் சொன் னார்.

என்னுடைய மாணவர்களே, வி.அய்.டி.யில் படித்த மாணவர்களே இப்பொழுது 84 நாடுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். ஆங்கிலத்தில் படிக்கவில்லை என்றால், இது  எப்படி நடக்கும்? தமிழிலோ, தெலுங் கிலோ, ஹிந்தியிலோ படித்தால், அவர்கள் இங்கேதான் இருக்கலாமேயொழிய அங்கே போக முடியாது.

ஹிந்தி படித்தால்கூட 

வடக்கே வேலைவாய்ப்பு இல்லை!

ஹிந்தியில் படித்தால்கூட, உத்தரப்பிரதேசத்திலோ, பீகாரிலோ வேலை தேடிப் போக முடியாது; அங்கே இருக்கின்றவர்கள், தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வரு கிறார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு அங்கே வளர்ச்சியில்லை.

இதையெல்லாம் ஒன்றிய அரசு அறிந்து செய்கிறதா? இல்லையா? என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரு பக்கம் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது; இன் னொரு பக்கம் ஹிந்தியை வளர்ப்பது; இவையெல்லாம் எப்படி நம்முடைய நாட்டிற்கு உதவும். எதிர்கால வளர்ச்சிக்குப் பொருளாதார வளர்ச்சிக்கு எப்படி உதவும் என்பதை நான் யோசித்துப் பார்க்கின்றேன்.

எந்த அளவிற்கு மூடநம்பிக்கை வளர்ந்திருக்கிறது என்றால், நம்முடைய தமிழ்நாடு உள்பட - ஓரள விற்குத்தான் இங்கே பகுத்தறிவு இருக்கிறது. இந்தப் பகுத்தறிவு எல்லா மக்களிடமும், குறிப்பாக இளைஞர் களிடம் செல்லவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

1991 இல் நான் சட்டமன்ற உறுப்பினரானேன். ஜெய லலிதா அம்மையார் முதலமைச்சர். எனக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை; இரண்டு மாதம் கழித்து, எனக் குத் தனியாக அமைச்சர் பதவியை அறிவித்தார்கள். எனக்கு மட்டும், ஒரே ஆளுக்குப் பதவிப் பிரமாணம்.

‘கடவுள் பெயரால்’ உறுதிமொழியை 

நான் எடுக்கவில்லை!

ராஜ்பவனில் நடைபெற்ற பதவிப் பிரமாணத்திற்குச் சென்றேன். பதவிப் பிரமாணத்தின்போது, ஒன்று மனச் சாட்சியின்படி என்று எடுக்கலாம்; அல்லது கடவுளின் பெயரால் எடுக்கலாம். 

இங்கே யாரும் மனசாட்சியின் பெயரால் பதவியேற் பது இல்லை. எல்லோரும் கடவுளின் பெயரால்தான் என்று சொல்லி பதவியேற்பார்கள்.

நான் மனசாட்சியின் பெயரால் என்று சொல்லி பதவியேற்றேன்.

பதவியேற்று முடித்து, கையெழுத்துப்போட்டு வந்த வுடன், ஜெயலலிதா அம்மையார், ‘‘ஏன் உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாதா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு நான் நேரிடையாக பதில் சொல்லாமல், ‘‘நான் ரொம்ப நாளாக பெரியார், அண்ணா என்று வந்துவிட்டேன்'' என்று சொன்னேன்.

பிறகுதான் விசாரித்தபொழுது  சொன்னார்கள், பதவியேற்பு விழாவின்போது, நாவலர் ஒருவர்தான் மனசாட்சியின் பெயரால் பதவியேற்றாராம்; மற்றவர்கள் எல்லாம் ஆண்டவன் பெயரால்தான் பதவியேற்றார் களாம். ஏனென்றால், இந்த அம்மையாருக்குப் பயந்துகொண்டு.

ஆனால், திராவிட இயக்கங்களும் கொஞ்சம் கொள் கைகளைப் பாதுகாக்கவேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

வெறும் பெயர் மட்டும் வைத்தால் போதாது; தந்தை பெரியார் என்றும் நம்மோடு இருக்கவேண்டும்; அவருடைய கொள்கைகள் என்றைக்கும் நம்மோடு இருக்கவேண்டும். பகுத்தறிவு கொள்கைகளிலிருந்து நாம் மாறக்கூடாது.

சில நேரங்களில், தேர்தல் வரும்பொழுது கொஞ்சம் கொள்கைகளிலிருந்து மாறவேண்டி இருக்கும். அதனால் தான் தந்தை பெரியார் அவர்கள், தேர்தலிலே நிற்கக் கூடாது என்றார். அண்ணா அவர்கள் தேர்தலில் நிற்க வேண்டும் என்று சொன்னபொழுது, தேர்தலில் நிற்கக் கூடாது என்று தந்தை பெரியார் சொன்னார். அப்படி தேர்தலில் நின்றால், நம்முடைய கொள்கையை விட்டுக் கொடுக்கவேண்டி இருக்கும். ஆகவே, தேர்தல் அரசியல் நமக்குத் தேவையில்லை என்று சொன்னார்.

பிறகு அண்ணா அவர்கள் தேர்தல் அரசியலுக்குச் சென்றார்; கொள்கைகளை கொஞ்சம் விட்டுக் கொடுத்தார்.

பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம்!

தந்தை பெரியார் அவர்கள், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் நடத்தினார் என்பது உங்களுக் கெல்லாம் தெரியும். அப்பொழுது அண்ணாவிடம் சென்று செய்தியாளர்கள் கேட்டார்கள், ‘‘பெரியார் பிள் ளையார் சிலை உடைப்புப் போராட்டம் நடத்துகிறாரே, அதுகுறித்து நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?’’ என்று.

அதற்கு அண்ணா அவர்கள், ‘‘நான் பிள்ளையார் சிலையையும் உடைக்கமாட்டேன்; பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்கமாட்டேன்’’ என்றார்.

இதுபோன்று கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்தான், மக்களிடத்தில் வாக்குகள் வாங்க முடியும்.

ஆனால், பெரியார் அவர்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதில் கண்டிப்பாகவும், கறாராகவும் இருந்தார்.

எங்கே இருந்தாலும் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணாவின்  கொள்கைகளையும் விட்டுவிடக் கூடாது!

திராவிட இயக்கத்தின் எல்லா பிரிவுகளுக்கும், பல பிரிவுகளாக திராவிடம் இன்றைக்கு இருக்கிறது; எங்கே இருந்தாலும், தந்தை பெரியாருடைய பகுத்தறிவுக் கொள்கைகளையும், பேரறிஞர் அண்ணாவின் அரசியல் கொள்கைகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது; அவற்றைப் பின்பற்றித்தான் இருக்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இதற்கெல்லாம் தலைமை தாங்குபவராக நம்முடைய ஆசிரியர் அவர்கள்தான் என்றைக்கும் இருக்க வேண்டும்.

அவரால்தான் எல்லாவற்றையும் துணிச்சலாக சொல்ல முடியும்; அவர்கள் மக்களுக்குச் சொல்வது மட்டுமல்ல, திராவிட  கட்சிகளின் தலைவர்களுக்கும் அவர் எடுத்துச் சொல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டு, என்னுரையை முடித்துக்கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment