கண்ணந்தங்குடி கீழையூரில் தை -1 தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா, திராவிடர் திருநாள் கலை நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 25, 2023

கண்ணந்தங்குடி கீழையூரில் தை -1 தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா, திராவிடர் திருநாள் கலை நிகழ்ச்சி

பெரியார் படிப்பகம், மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 19 ஆம் ஆண்டு விழா

திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டு

கண்ணந்தங்குடி,ஜன.25- தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு ஒன்றியம், கண்ணந்தங்குடி கீழையூரில் திராவிடர் கழகம் சார்பில் தை-1 தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா, திராவிடர் திருநாள் கலைநிகழ்ச்சி, பெரியார் படிப்பகம் 19 ஆம் ஆண்டு விழா, மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை பரிசளிப்பு விழா 19.1.2023 அன்று மாலை 6 மணியளவில்  நடைபெற்றது.

தரணியெங்கும் தமிழிசை - கலைநிகழ்ச்சி


விழா தொடக்கத்தில் மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன், இன எழுச்சி பாடகர் கலைமாமணி திருத்தனி டாக்டர் பன்னீர்செல்வம் இணைந்து வழங்கிய “தரணியெங்கும் தமிழிசை” எனும் பண்பாட்டுப் புரட்சி இசைநிகழ்ச்சி நடைபெற்றது. முருகு தமிழினியன், தஞ்சை மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு, மாநில ப.க. துணை தலைவர் கோபு.பழனிவேல், மன்னை வழக்குரைஞர் சு,சிங்காரவேல் ஆகியோர் இணைந்து பாடல்களை பாடினர்.

சிறுவர்களின் சிலம்பாட்டம்

கண்ணந்தங்குடி கீழையூர், எலந்தவெட்டி திராவிடர் கழக தோழர் கந்தசாமியின்  மகன்கள் செழியன், ஆதவன் ஆகியோர் மேடையேறி சிலம்பம் விளையாடி பார்வையாளர் களை மகிழ்வித்தனர். 

ஆண்டு விழா-பரிசளிப்பு விழா 

கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன் தலைமையேற்று உரையாற்றினார். மாநில பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் இரா.சிவக்குமார், கண்ணை கிளைக் கழக தலைவர் இரா.செந்தில்குமார், கண்ணை கிளைக் கழக செயலாளர் பா.தாமரைக்கண்ணன், தமிழர் தலைவர் வாகன ஓட்டுநர் சி.தமிழ்செல்வம், ஊரட்சி  கழக தலைவர் அ.திருநாவுக்கரசு, ஆகியோர் முன்னிலையேற்று சிறப்பித்தனர்.  கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் இந்நிகழ்வினை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார்.

தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், மாநில தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி மு.சேகர், மாநில அமைப்பு செயலாளர் மதுரை வே.செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினர் பா.சிலம்பரசன், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், திருவாரூர் மண்டல மகளிர் அணி செயலாளர் கோ.செந்தமிழ்செல்வி, கியூபா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் க.புனிதா, மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், கண்ணந் தங்குடி கீழையூர் ஊராட்சி மன்ற தலைவர் சி.மாரிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர் விஜி கதிரவன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் செல்ல.ரமேஷ், தஞ்சை மாநகராட்சி துணை மேயர், திமுக மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, திமுக மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். 

பாராட்டு மற்றும் சிறப்பு செய்யப்பட்டோர்

கண்ணந்தங்குடி கீழையூரில் பிறந்து அரசியலில் முத்திரை பதித்திருக்கக்கூடிய தஞ்சை மாநகராட்சியின் துணை மேயராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வரும் டாக்டர் அஞ்சுகம் பூபதி, நாகை நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்று சிறந்த பணிசெய்துவரும் இரா.மாரிமுத்து, நாகை நகர் மன்ற உறுப்பினராக செயல்பட்டு வரும் ஆர்.ஏ.டி.அண்ணாதுரை ஆகியோரை ஊர் பொதுமக்கள் சார்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பாராட்டி சிறப்பு செய்தார்.
இதழ்கள் நன்கொடையாளர்களை சிறப்பித்தல்
திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ,  படிபகத்திற்கு தினத்தந்தி நாளிதழை வழங்கிவரும் இரா.ஜெயக்குமார், தினமணி நாளிதழை வழங்கிவரும் ஊராட்சி மன்ற தலைவர் சி.மாரிமுத்து, தமிழ் இந்து நாளிதழை சின்னப்பன் நினைவாக வழங்கிவரும் ரஞ்சித்,  பெரியார் பிஞ்சு இதழை வழங்கிவரும் இரா.வெற்றிகுமார் ஆகியோ ருக்கு சல்வை அணிவித்து பாராட்டினார். இப்படிப்பகத்தினை பராமரித்து வரும் போற்றுதலுக்குரிய பெரியவர் வெங்கடா சலத்திற்கு அவரது பணியை பாராட்டி புத்தாடை வழங்கி சிறப்பத்தார். பெரியார் படிப்பகத்திற்கு நாளிதழ்களை கொண்டு வந்து சேர்க்கும் பணியை மேற்கொண்டு வரும் வெங்கடேஷிக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
இவ்விழா சிறப்பாக நடைபெற உழைத்தவர்களான மாவட்ட செயலாளர் அ. அருணகிரி, மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிகுமார், மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, மாவட்ட இளைஞரணி செய லாளர் நா.வெங்கடேசன், கிளைக் கழக செயலாளர் பா.தாமரை கண்ணன், கிளைக் கழக இளைஞரணி தலைவர் இரா.இராஜதுரை, மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.ராஜவேல், மாணவர் கழக தோழர்கள் செ.சி.காவியன், க.செ.கபிலன், விஷால், கிளைக்கழக தோழர் சி.தாயுமானவன், ஆகியோருக்கு கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கல்

இந்நிகழ்வில் பங்கெடுத்து சிறப்பித்த சிறப்பு விருந்தினர் களான கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு கண்ணந்தங்குடி கீழையூர் கழக சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கண்ணந்தங்குடி கீழையூர் ஒன்றிய கவுன்சிலர் பா.சிலம்பரசன் ஊர் சார்பில் நினைவுப் பரிசு வழங்கினார்.

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கண்ணந்தங்குடி அரசு உயர்நிலைப் பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் களை பெற்ற மாணவர்களுக்கு  சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.  2020-2021ஆம் கல்வியாண்டில் கண்ணந்தங்குடி கீழையூர் பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெற்ற ம.கலையரசி, இரண்டாம் மதிப்பெண் பெற்ற சி.கவியரசி, மூன்றாம் மதிப்பெண்பெற்ற சே.துர்கா ஆகியோரும், கண்ணந்தங்குடி மேலையூர் பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெற்ற ஆர்.காயத்ரி, இரண்டாம் மதிப் பெண் பெற்ற எஸ்.பூமிகா, மூன்றாம் மதிப்பெண் பெற்ற டி.பிருந்தாகரத் ஆகியோருக்கும்,
2021-2022 ஆம் கல்வியாண்டில் படித்து முதல் மதிப்பெண் பெற்ற ஜே.சாம்ரீகன், இரண்டாம் மதிப்பெண் பெற்ற மதன்ராஜ் மூன்றாம் மதிப்பெண் பெற்ற தர்ஷினி, கண்ணந் தங்குடி மேலையூர் பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெற்ற சு.கிருந்திக் ரோஷன், இரண்டாம் மதிப்பெண் பெற்ற சே.கவின், மூன்றாம் மதிப்பெண் பெற்ற ரா.அசோக்குமார் ஆகியோருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் கழக பொதுச்செயலாளர் ஆகியோர் இணைந்து பயனாடை அணிவித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையினை வழங்கி மகிழ்ந்தனர்.

பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் உரை


இந்நிகழ்வில் கலந்துகொண்ட கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், "ஒரு விழா தொடர்ந்து 19 ஆண்டுகளாக நடப்பது சிறப்பு, ஏதோ ஒரு நிகழ்வு என்பது போல் இல்லாமல் ஒரு மாநாடு போல் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள் அவர்களுக்கு எனது பாராட்டுகள். அதுவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்க கூடிய நமது அமைச்சர் - முரட்டு சுயமரியாதைக்காரர் என்று அன்பிலார் அவர்களை எல்லோ ரும் அழைப்பார்கள் அந்த பாரம்பரியத்தில் வந்திருக்க கூடியவர். நம்முடைய பெரியார் ஆயிரம் நிகழ்ச்சி நடத்துவதற்கு அவரிடம் பேசிய பொழுது ஒரு இரண்டே நிமிடத்தில் அந்த கடிதத்தை பெற்றுக்கொண்டு அது சம்பந்த மான துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்து உடனடியாக அதற்கான ஏற்பாட்டினை செய்ய அனுமதி அளித்தவர் நம்மு டைய அமைச்சர் அவர்கள். அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவருடைய செயல்பாடு மிக வேகமாக இருக்கிறது. பெரியார் ஆயிரம் தேர்வில் வெற்றி பெற்றவர்களை டில்லி சுற்றுலாவிற்கு விமானத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அழைத்துச் சென்றோம், அவர்களெல்லாம் கிராமத்தில் இருந்து வந்த மாணவர்கள். அவர்கள் சொன்னார்கள், "எங்கள் கிராமத்தில் இந்த விமானம் மேலே பறப்பது கூட அரிதாக இருக்கும். ஆனால், அதிலே நாங்கள் பயணம் செய்திருக்கிறோம். எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது" என்று கூறினார்கள். இன்றைக்கு நமது அமைச்சர் என்ன செய்திருக்கிறார் என்றால் அயல் நாட்டிற்கே நம்முடைய மாணவச் செல்வங்களை அழைத்துச் செல்கிறார். கல்வியின் அடுத்த கட்டத்திற்கு அவர்கள் செல்வதற்கு தூண்டுகிறார். அதுமட்டுமல்லாது பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு களை மேற்கொள்கிறார். அப்பேர்ப்பட்ட அமைச்சர் இந்த நிகழ்விற்கு உரையாற்ற வந்திருப்பது இந்த ஊருக்கு கிடைத்த பெருமை, நம் இயக்கத்திற்கு கிடைத்த பெருமை, இந்த தருணத்தில் அமைச்சர் அவர்களின் சிறந்த செயல்பாட்டிற்கு நாங்கள் எல்லாம் உறுதுணையாக இருப்போம் என்பதை கூறிக் கொள்கிறேன்.
சிறப்பு வாய்ந்த இந்த பொங்கல் விழா மட்டும் தான் தமிழர்களுக்கான விழா என்று தந்தை பெரியார் அவர்கள் கூறி இருக்கிறார். இந்த விழா என்பது அர்த்தமற்ற மூடநம் பிக்கைகள் அற்ற விழாவாகும். தமிழர்களுக்கான இந்த விழாவினை இங்கே சிறப்பாக ஏற்பாடு செய்தது போல் தமிழ்நாடு முழுவதும் செய்ய வேண்டும். இங்கே மாணவச் செல்வங்களை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுகிறார்கள். மாணவச் செல்வங்கள் நீங்கள் படிப்பில் கவனம் செலுத் துங்கள், உங்கள் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். சமூகத்தில் என்னென்ன எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதில் கவனம் செலுத்தி கொள்ளுங்கள். இது போன்று உங் களை ஊக்கப்படுத்தும் அமைப்புகளுக்கும் உங்கள் பெற்றோ ருக்கும் நன்றியோடு இருந்து வாழ்வில் முன்னேற வேண்டு மாய் கேட்டுக் கொள்கிறேன். இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு நன்கொடை வழங்கி சிறப்பித்த அத்தனை பேருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூறி விடைபெறுகிறேன். வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!" என்று சிறப்பாக உரையாற்றினார்.

சமூகநீதி கொள்கைக்கு அடித்தளம் இட்டவர் தந்தை பெரியார் - அமைச்சர் உரை

இவ்விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா திராவிடர் திருநாள் கலை நிகழ்ச்சி, பெரியார் படிப்பகம் ஆண்டு விழா, மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை பரிசளிப்பு விழா என்று முப் பெரும் விழாவாக நடைபெறுகின்ற இந்த விழா தொடர்ந்து 19 ஆண்டுகளாக நடத்தி வரக்கூடிய பொறுப்பாளர்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக இயக்கம் சார்ந்த நிகழ்வுகளுக்கு நாங்கள் சென்று உரையாற்றும் பொழுது அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எங்களுக்கு பயணப்படி என்று தருவார்கள். ஆனால் நான் இந்த நிகழ்வில் பேசுவதற்கு முன்னால் அந்த பயணப்படியே இந்நிகழ்வின் ஏற்பாட்டாளரிடம் கொடுத்துவிட்டு தான் உரையாற்றுகிறேன். இதுவும் ஒரு வகையில் பயணப்படி தான் தந்தை பெரியார் அவர்களின் பயணம் நின்றுவிடக்கூடாது என்பதற்காக திராவிடர் கழகம் தொடர்ந்து தன்னுடைய பயணத்தை செலுத்த வேண்டும் என்கிற காரணத்திற்காக இந்த பயணச் செலவை தருவது என்னுடைய கடமை.
இன்றைக்கு கொரடாச்சேரி தொடங்கி பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு இங்கே வந்து கண்ணந்தங்குடி கிராமத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மாலையிடும் பொழுது அவர் என்னிடம் சொல்லாமல் சொல்லுவது ஒன்றே ஒன்று தான் "நீ எங்க சுத்தினாலும் அன்பில் பேரன் என்னை தேடித்தான் வந்தாகணும்" என்று சொல்வது போல தான் நான் நினைத்துக் கொண்டேன். அப்படி இன்றைக்கு ஒரு பெருமையோடு இந்த திராவிடர் கழகத்தின் நிகழ்வில் நான் கலந்து கொள்வது பெருமை. ஏனென்றால் இந்த பகுதி தான் திராவிட இயக்கத்தை வழிநடத்தியவர்களின் பகுதி. போராட்டம் என்று சொன்னால் அந்தப் போராட்ட குணத்தை எங்களுக்கு கற்றுத் தந்த அய்யா எல்.ஜி. அவர்கள் இருக்கின்ற ஒரு பகுதி என்று சொல்லும் பொழுது, இது ஏதோ உங்களை மட்டும் அல்ல ஒட்டுமொத்த திராவிடக் கொள்கையை ஏந்தி இருக்கின்ற ஒவ்வொரு இளைஞரையும் இன்றைக்கு வழிநடத்திக் கொண்டிருப்பவர் அய்யா எல்ஜி என்பதை நாங்கள் பெருமையோடு எடுத்துச் சொல்வோம். ஆக அப்படிப்பட்ட இந்த ஊரில் இன்று உரையாற்றுகின்றது எனக்கு பெருமை. இந்த இயக்கம் எனக்கு என்ன செய்தது என்பதை காட்டிலும் இந்த இயக்கத்திற்காக நான் என்ன செய்தேன் என்று உழைக்கக் கூடியவர்கள் தான் நாங்கள் ஒவ்வொருவருமே மேடையில் இருக்கின்ற நாங்களாக இருந்தாலும் சரி இந்த பகுதியை சார்ந்த நீங்களாக இருந்தாலும் சரி.
தந்தை பெரியார் அவர்கள் தன்னைப் பற்றி சொல்லும் பொழுது திராவிட சமுதாயம் என்கிற இந்த சமுதாயத்தை சீர்படுத்தி மற்ற சமுதாய மக்கள் எப்படி மானத்தோடும் அறிவோடும் வாழ்கின்றார்களோ அதேபோன்று இந்த திராவிட சமுதாயத்தை திருத்துகின்ற அந்த தொண்டை செய்கின்ற பணியை தான் நான் செய்கிறேன் என்று சொன்னவர் தந்தை பெரியார். அப்படி பார்த்தால் அவரும் ஒரு விவசாயி தான். ஒரு நிலத்தை சீர்படுத்தி பண்படுத்தி மேன்மைப்படுத்தி நீரூற்றி நல்ல விளைச்சலை உருவாக்கு கின்றது யார் என்று சொன்னால் பசுமை விவசாயி. அதேபோன்று இந்த சமூகத்தை பண்படுத்தி அந்த சமூகம் நல்ல விதத்தில் பகுத்தறிவோடு வாழ வேண்டும் என்கிற அந்த உயர்ந்த நோக்கத்தை கொண்ட சமூக விவசாயி தான் தந்தை பெரியார் அவர்கள்.
ஆக அந்த வகையிலே இன்றைக்கு அவர் தந்த அந்த கொள்கை மூலமாக இந்த திராவிடர் கழகமாம் தாய்க் கழகம் நீங்கள் எப்படி எங்களை வழிநடத்துகிறீர்களோ அப்படித்தான் நாங்கள். ஆளுங் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் நாங்கள் வலிமையோடு இருப்பதற்கு காரணம் இந்த தாய்க்கழகமான திராவிடர் கழகம் தான் என்பது பெருமை. பொதுவாக இயற்கைக்கு நாம் நன்றி செலுத்துவோம். பொங்கல் விழா என்று சொல்லும் பொழுது இயற்கையாக இருக்கக்கூடிய செல்வங்களுக்கு நன்றி செலுத்துகின்ற அதே வேளையில் சமூக நீதி என்று வரும் பொழுது தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்துகின்ற நாளாகவும் இந்த நாளை நாம் பார்க்க வேண்டும். சமூகநீதி என்று சொல்லும் பொழுது அதற்கு அடித்தளம் இட்டவர் தந்தை பெரியார். ஏன் என்று சொன்னால் நமது கொள்கைக்கு அடித்தளம் இட்டவர் தந்தை பெரியார் தான். அந்த வழியில் வந்தவர் தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும். சமூக நீதி நாள் என்று தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடு கின்றோம் சாதாரணமாக கொண்டாடுவதில்லை, அன்றைக்கு சமூக நீதிக்கான உறுதி மொழியை ஏராளமான அரசு ஊழியர்கள் ஏற்றுக் கொள்கின்ற வரலாற்று சிறப்பு மிகுந்த நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் விழாவை தமிழர் திருநாளாக கொண்டாட வேண்டும் என்று அட்சரமிட்டவர் தந்தை பெரியார் தான் அதை யாரும் மறுக்க முடியாது அதை மறக்கவும் முடியாது. திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த எங்களுக்கு ஒரு பெருமை உண்டு. தமிழர் மாநாடு என்கிற அந்த மாநாட்டை 1936 இல் டிசம்பர் 26ஆம் நாள் நடத்திய பொழுது அந்த மாநாட்டில் தான் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் உரையாற்றும் பொழுது எதற்காக இது தமிழர் திருநாளாக கொண்டாடப்பட வேண்டும் ஏன் தை ஒன்றை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்ற ஆதாரத்தோடு எடுத்து உரையாற்றி இருக்கிறார். அதே மாநாட்டிலே தான் பேசும் பொழுது அதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னவர் தான் தந்தை பெரியார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்வது போல எல்லா உயிர்களும் சமம் என்று கொண்டாட கூடிய நாள் தான் பொங்கல் திருநாள்.அன்றைக்கு ஆரியத்தினுடைய வீரியம் அதிகமாக இருந்த பொழுது இது போன்ற ஒரு பகுத்தறிவு பார்க்காமல் பல 'பண்டிகைகள்' என கொண்டாடப் படுகின்றதே என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத் துகின்ற விதமாக இந்த பொங்கல் விழாவை தமிழர் விழாவாக நாம் கொண்டாட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் தந்தை பெரியார். ஆக அந்த வகையிலே அதைத் தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கின்ற அதே வேளையில் மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை மூலமாக பல பரிசுகளை அதுவும் என்னுடைய மாணவச் செல்வங்களுக்கு கல்வி உதவியை வழங்குகின்ற நல்ல நிகழ்வில் கலந்து கொள்வதை நான் மிகப் பெருமையாக கருதுகிறேன். இந்த விழாவினை தொடர்ந்து 19 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்ற நல்ல உள்ளங்களுக்கு மீண்டும் ஒருமுறை என்னுடைய வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்து நன்றிகூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம் என்று சிறப்புரையாற்றினார்.

இறுதியாக கண்ணந்தங்குடி கிளை கழக இளைஞரணி தலைவர் ராஜதுரை அனைவருக்கும் நன்றி கூறி உரையாற்றினார்.
 
சிறப்பு விருந்தினர்களுக்கு வரவேற்பு

சிறப்பு விருந்தினர்களாக நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோருக்கு கண்ணந்தங்குடி கீழையூர் பொதுமக்கள் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அன்பரசு, அய்யர் இளையராஜா, ஒன்றிய கவுன்சிலர் சிலம்பரசன் உள்ளிட்டோர் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். மோகனா வீரமணி அறக்கட்டளைக்கு ஓவியர் தங்கராசு ரூ.10,000 நன்கொடை வழங்கினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டோர்
 
தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ராமச்சந்திரன், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன்,  ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர் திமுக ஜே.கார்த்திகேயன், திமுக மாவட்ட வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர்கள் தவ.ஆறுமுகம், மு.மணவழகன்,  மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுபாஆனந்தன், தி.மு.க மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தமிழ் செல்வன், திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், ப.க. மாநில ஊடகத்துறை தலைவர் மா.அழகிரிசாமி. கும்பகோணம் கழக மாவட்ட தலைவர் நிம்மதி, திராவிடர் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் வி சி வில்வம், பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், திராவிடர் கழக மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரப்பாண்டியன், மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், தஞ்சை மண்டல மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா.ராமகிருஷ்ணன், திருவோணம் ஒன்றிய தலைவர் சாமி அரசிளங்கோ, ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் மாநல் பரமசிவம், ஒரத்தநாடு நகர தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், ஒரத்தநாடு நகர செயலாளர் ரஞ்சித் குமார், திருவோணம் ஒன்றிய செயலாளர் சில்லத்தூர் சிற்றரசு, தஞ்சை மாநகர தலைவர் பா. நரேந்திரன், தஞ்சை மாநகர அமைப்பாளர் செ.தமிழ்ச்செல்வன், நகர துணை செயலாளர் கா.மாரிமுத்து, நகர இளைஞரணி அமைப்பாளர் மா. சாக்ரடீஸ், மாவட்ட இணை செயலாளர் தீ.வா.ஞானசிகாமணி, மாவட்ட விவசாய அணி செயலாளர் பூவை.ராமசாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்  அ.சுப்பிரமணியன், ஒன்றிய துணைத் தலைவர் இரா துரைராசு மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி, வடசேரி கிளைக் கழக தலைவர் ராமசாமி, மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜெகதாபட்டினம் குமார்-சுவாதி, திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் கணேசன், திருவாரூர் நகர செயலாளர் ஆறுமுகம், மதுரை மண்டல செயலாளர் முருகேசன், மதுரை மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், திராவிட மாடல் புத்தகத் தொகுப்பாளர் ஓவியர் தங்கராசு, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக், திருவையாறு விவேக விரும்பி, கண்ணத்தங்குடி கிளைக் கழக தோழர்கள் கருப்பையன், ரவீந்திரன், சாமி பிரபாகரன் மற்றும் கழக பொறுப்பாளர்கள் அனைத்து கட்சித் தோழர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுகொண்டனர்.

No comments:

Post a Comment