பணமதிப்பு நீக்க நடவடிக்கை வழக்கு: உச்சநீதிமன்ற விசாரணையில் சூடாக இரு தரப்பு வாதங்கள் நடைபெறுகின்றன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 7, 2022

பணமதிப்பு நீக்க நடவடிக்கை வழக்கு: உச்சநீதிமன்ற விசாரணையில் சூடாக இரு தரப்பு வாதங்கள் நடைபெறுகின்றன

புதுடில்லி, டிச.7 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள் பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த பணமதிப்பு நீக்க (புழக்கத்தில் இருந்த ரூ.1000/- மற்றும் ரூ.500/- ரூபாய் நோட்டுகள் செல்லாது) நடவடிக்கையை எதிர்த்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கில் மனுதாரர் தரப்பிலும், ஒன்றிய அரசு தரப்பிலும் வாதங்கள் அய்ந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதி மன்ற அமர்வில் எடுத்து வைக்கப்பட்டு வருகின்றன.

நேற்று (6.12.2022) ரிசர்வ் வங்கி சார்பாக வாதாடிய வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா தனது கருத்தாக, “பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் சிந்திக்காமல் கொண்டு வரப்பட்டதல்ல; அரசு நடைமுறைப் படுத்திடும் பொருளாதார திட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது; எடுக்கப்பட்ட அரசின் முடிவு பாகுபாட்டை உருவாக்கும் நிலையிலும், விதி களுக்குப் புறம்பாக முடிவுகள் அமையும் நிலை யிலும்தான் குறுக்கிட முடியும்’’ என எடுத்துரைத்தார்.

அப்பொழுது உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதி நாகரத்தனா, “அரசு முடிவுகளின் சட்டத்தன்மை குறித்து ‘நீதிமன்றம் தலையிடாது; ஆனால், முடிவுகள் எடுக்க அரசு கைக்கொண்ட வழி முறைகள் பற்றி விசாரிக்க முடியும்’ எனக் கூறினார்.

மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்குரைஞர் ப.சிதம்பரம் தனது வாதத்தில் குறிப்பிட்டதாவது:

“அரசின் பொருளாதாரத் திட்டங்கள், நாணயக் கொள்கை என்று கூறி நீதிமன்றத்தை அரசு தரப்பினர் அச்சுறுத்த முடியாது. பணமதிப்பு நீக்கம் என்பது நாணயக் கொள்கையின் பகுதியே அல்ல. பணமதிப்பு நீக்கம் பற்றி அரசு எடுத்த முடிவிற்கான வழிமுறையின் சட்டத்தன்மை குறித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிட வேண்டும். அரசு மேற்கொண்ட வழிமுறை சட்டத்திற்குப் புறம்பாக இருந்தால் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினை ரத்து செய்து, இனிவரும் காலங்களில் அத்தகைய சட்ட மீறல்கள் நடைபெறாத வகையில் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ எனக் கூறினார்.

மேலும், “பண மதிப்பு நீக்கம் நடை பெற்று ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பண மதிப்பு நீக்கம் செல்லாது என அறிவிக்க முடியாவிட்டால், பண மதிப்பு நீக்க முடிவிற்கு அரசு மேற்கொண்ட வழி முறைகள் பற்றி அறிவித்திட வேண்டும். நீதிமன்றம் வருங்காலத்தில் அதுபோன்ற நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவித்து அதற்குரிய சட்ட வழிமுறைகளை அறிவு றுத்தலாம்” எனவும் ப.சிதம்பரம் எடுத் துரைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் உச்சநீதிமன்ற அமர்வு கவனித்து வருகிறது. விசாரனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


No comments:

Post a Comment