தந்தை பெரியார் நினைவு நாள் - டிசம்பர் 24 (2022) வானொலி உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 25, 2022

தந்தை பெரியார் நினைவு நாள் - டிசம்பர் 24 (2022) வானொலி உரை

தந்தை பெரியார் முன்மொழிந்த சமூகநீதி!


கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்

தந்தை பெரியார் அவர் களின் முக்கால் நூற்றாண்டுப் பொது வாழ்வை எடுத்து ஆய்வு செய்தால் அதன் மய்யப் புள்ளி சமூகநீதியாகத்தான் இருக்கும்.

பிறப்பின் அடிப்படையில் பேதம் - அந்தப் பேதத்தின் அடிப்படையில் உரிமை மறுப்பு - குறிப்பாகக் கல்வி மறுப்பு - தீண்டாமைக் கொடுமை, ஆண் என்றால் எஜமானன்; பெண் என்றால் அடிமை என்ற பொல்லாப் பாசி படர்ந்து கிடந்த சமூகத்தைக் கண் எதிரே கண்ட தந்தை பெரியார் - இந்தக் கொடுமைக்கு பிறப்பின் அடிப்படையிலான மனிதச் சீரழிவுக்கு ஒரு முடிவு காணப்பட வேண்டும் என்று கருதினார்.

காங்கிரசில் இருந்த போதும் சரி, சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிய போதும் சரி, நீதிக்கட்சியை ஆதரித்த போதும் சரி, அக்கட்சிக்குக் தலைமை தாங்கிய போதும் சரி, திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்து தலைமை தாங்கி நடத்தியபோதும் சரி, அரசியல் கட்சிகளை ஆதரித்த போதும் சரி, எதிர்த்த போதும் சரி, இவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆதார சுருதியாக இருப்பது சமூக நீதியே! அதனால்தான் “திராவிடமாடல்” அரசு என்று தம் அரசை மார் தட்டிக் கூறும் தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாளை “சமூகநீதி நாளாக” அரசு ரீதியாக அறிவித்தார். அன்றைய தினம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அலுவலர்களும் பணியாளர்களும் சமூகநீதி உறுதி மொழியை எடுக்கும் அரசாணையைப் பிறப்பித்தார்.

சமூகநீதி உறுதி மொழி!

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழி முறையாகக் கடைப் பிடிப்பேன்! 

சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத் தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்ட தாக எனது செயல்பாடுகள் அமையும்!

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!

சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!''

என்ற பொன் வரிகளைக் கொண்டதுதான் அந்த உறுதிமொழி!

இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்திலேயே 69 விழுக்காடு இடஒதுக்கீடு பட்டியலின மக்களுக்கும் பிற் படுத்தப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மையின மக்களுக் கும் இந்திய அரசமைப்புச் சட்டம் ஒன்பதாவது அட்ட வணைப் பாதுகாப்புடன் செயல்பாட்டில் இருக்கிறது என்றால் - இதற்கான விதையை நட்டு, நீர்ப்பாய்ச்சி, உரமிட்டு, வேலி கட்டிப் பாதுகாத்த சாதனைக்கு உரிமை யானவர் தந்தை பெரியாரே!

ஏற்றத் தாழ்வுள்ள நாடுகளில் இடஒதுக்கீடு இருக்கத்தான் செய்கின்றன. அமெரிக்காவில்  Affiramative Action  என்றும், இங்கிலாந்தில் Equality Act  என்றும், கனடாவில், Employement Equality Act என்றும், சீனாவில் Affirmative Minotiry Nationality Act   என்றும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டில்கூட கருப்பர்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. தந்தை பெரியாரின் சமூகநீதிப் பார்வை எத்தகையது? அதனைத் தந்தை பெரியாரின் மொழியிலேயே எடுத்துக் காட்டுவது பொருத்தமாகும்.

“ஒரு தாய் வயிற்றில் பிறந்தஎல்லா மக்களுக்கும் சமஅனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய் வலிவுக் குறைவாய் இருக்கும் மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போச ணையை விட எப்படி அதிகமாக போசணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாரோ அது போலத்தான் நான் மற்ற வலுக் குறைவான மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன்.” (தந்தை பெரியார், 11.1.1962)

தந்தை பெரியாரின் மனித நேயம் சமூகநீதித் தத்துவத்தில் பொங்கிவழிவதைக் காண முடிகிறது.

“தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்டாளி, கூலி, ஏழை மக்கள்தான் எனக்குக் கண் வலியாய் இருப்பவர்கள். அவர்களைச் சம மனிதர்களாக ஆக்குவதுதான் என் கண் நோய்க்குப் பரிகாரம்” (‘விடுதலை’ -15.10.1968) என்று கூறுகிறார்.

அதே போல தொழிலாளர்கள் படும் வேதனையைப் பார்த்து, அவர்களின் குடும்பங்களின் நிலையினைப் பார்த்த பெரியார் இதுதான் எனக்கு இரத்தக் கொதிப்பாக இருக்கிறது என்று பதறுகிறார்.

தொழிலாளர்கள் வெறும் கூலியாக இருக்கக் கூடாது. இன்னும் சொல்லப் போனால் தொழிலாளி - முதலாளி என்ற பேதமே - சொற்களே கூட இருக்கக் கூடாது, மாறாகப் பங்காளிகளாக இருக்க வேண்டும்.

முதலாளி பணம் போடுகிறான் என்றால் தொழிலாளி உழைப்பைச் செலுத்துகிறான் என்ற சம நோக்கில் புதிய கோணத்தில் சிந்திக்கிறார் தந்தை பெரியார்.

“பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம்” (‘குடிஅரசு’ - 11.11.1944 பக்கம் 11 ) என்கிறார்.

அந்தப் பேதம் எந்த வடிவத்தில் வந்தாலும் ஜாதி, மதம், கடவுள், சட்டம் என்று எந்த வடிவத்தில் தலை எடுத்தாலும் அதனை மூர்க்கமாக எதிர்க்கக் கூடிய வராகவே இருந்திருக்கிறார்.

அதே போல பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கி வந்திருக்கிறார்.

பெண்ணுரிமை பற்றி தந்தை பெரியார் பேசிய புரட்சிகரக் கருத்துகள் இன்று உலகின் பல நாடுகளிலும் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

“பெண் ஏன் அடிமையானாள்?” என்ற நூல் புகழ் பெற்ற ஒன்றாகும்.

சுயமரியாதைத் திருமணங்களில் அவரின் உரை பெரும்பாலும் பெண்ணுரிமை பற்றியதாகவே இருக்கும்.

செய்யாறுக்குப் பக்கத்தில் உள்ள வாழ்குடை என்னும் ஊரில் நடைபெற்ற திருமணத்திற்குத் தலைமை வகித்த பெரியார் அய்ந்தரை மணி நேரம் உரையாற்றியிருக்கிறார் என்றால் யாரும் எளிதில் நம்ப முடியாது! ஆனாலும், பேசினார் என்பதே உண்மையாகும்.

“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம், பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது” (‘குடிஅரசு’ - 16.6.1935) என்று கவலைப்படுகிறார்.

“பெண்களே! வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப் படுங்கள். நீங்கள் மாறினால், உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது மிக மிக எளிது. ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்குவாதிகள் என்று உங்கள் மீது பழி சுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல் லுக்கு ஆளாகாதீர்கள். எதிர்காலத்தில் “இவள் இன்னாரு டைய மனைவி” என்று அழைக்கப்படாமல் “இவன் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப்பட வேண்டும்.” (‘குடிஅரசு’ - 5.6.1948 பக்கம் 23) என்கிறார்.

பெண்ணுரிமை விஷயத்தில் புலவர்களையும் விட்டு வைக்கவில்லை தந்தை பெரியார்.

“பெண் பெருமை, வருணனை - ஆகியவைகளில் பெண்கள் அங்கம், அவயவங்கள், சாயல் ஆகியவை களைப் பற்றி அய்ம்பது வரியிருந்தால், அவர்களது அறிவு, அவர்களால் ஏற்படும் பயன், சக்தி, திறமை பற்றி ஒரு வரிகூட இருக்காது. பெண்களின் உருவை அலங் கரிப்பது, அழகை மெச்சுவது, சாயலைப் புகழ்வது, ஆகி யவை பெண்கள் சமுதாயத்திற்கு அவமானம், இழிவு, அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறார் என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்.”

-------------

பெண் உரிமை என்கிறபோது உங்கள் மனைவியை நினைத்துச் சிந்திக்காதீர். உங்கள் மகளை நினைத்துக் கொள்ளுங்கள் (நூல்: வாழ்க்கைத் துணை நலம்) என்பார்.

தாய் உள்ளத்தோடு கருணை மழை பொழியும் தந்தை பெரியாராக இந்த இடத்தில் பார்க்க முடிகிறது.

பெண்களுக்காகப் பரிந்து, அவர்களின் உரிமை களுக்காகப் போராடி, ஓயாது பாடுபட்ட காரணத்தால் 1938 நவம்பர் 13ஆம் தேதி அன்று சென்னையில் பெண்கள் மாநாடு கூட்டி “பெரியார்” என்னும் பட்டத்தை அளித்துப் பெருமை பெற்றனர்.

மனித உரிமைப் போரில் தந்தை பெரியாருக்கு எல்லையே கிடையாது. இன்னொரு மாநிலமான கேரளத்தில், தீண்டத்தகாத மக்கள் என்று முத்திரை குத்தி கோயில் வீதிகளில் நடக்கக் கூடாது என்று மனித உரிமைக்குக் கேடு விளைவித்த நிலையில், தம் குடும்பத்தோடு சென்று போராடி வெற்றி பெற்றவர் தந்தை பெரியார்! அதனால்தான் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் ‘நவசக்தி’யில் “வைக்கம் வீரர்” என்று தலையங்கமே தீட்டினார்.

தமிழ்நாட்டில் சேரன்மாதேவி குருகுலத்தில் ஜாதி ஏற்றதாழ்வு தாண்டவமாடிய நிலையில், அதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கிய நிலையில் குருகுலமே இழுத்து மூடப்பட்டது.

எனக்கு நாட்டுப் பற்றோ, மொழிப் பற்றோ, இனப் பற்றோ கிடையாது. எனக்குள்ள பற்றெல்லாம் மனிதப் பற்றே என்று வெளிப்படையாகப் பேசினார்.

“ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது, மக்கள் நாகரிக நிலைக்கு வந்திருக்கின்றார்கள், நாட்டில் அறிவும், ஒழுக்கமும், நாணயமும் வளர்ந்து வருகின்றது என்பதற்கு அடையாளம் என்ன என்றால், நாட்டில் எல்லாத் துறைகளிலும் 

சமதருமம்,

சம ஈவு,

சம உடைமை,

சம ஆட்சித்தன்மை,

சம நோக்கு,

சம நுகர்ச்சி,

சம அனுபவம் இருக்க வேண்டும்.” (தந்தை பெரியார் - ‘விடுதலை’ 13.1.1965) என்கிறார்.

தந்தை பெரியார் நினைத்திருந்தால், விரும்பியிருந் தால், அரசியலில் எந்தப் பதவிக்கும் சென்று இருக்க முடியும்!

ஆங்கிலேயர் ஆட்சியில் இரண்டு முறைகள் அமைச்சர் பதவியைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து அழைத்தும் கூட, “என் பணி, பதவி அரசியலைச் சார்ந்ததல்ல, சமூக மாற்றத்திற்கான புரட்சிப் பணி” என்று சொன்னாரே! 

கடைசி மூச்சு அடங்கும் வரை அதற்காகவே உழைத்தாரே!

கோயிலே கூடாது என்று சொன்ன பெரியார், கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாது என்றிருந்த வருணாசிரமக் கொடுமையை எதிர்த்து கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தி வெற்றிகண்டார்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது அவர் இறுதியாக அறிவித்த போராட்டம்.

அந்தப் போராட்டக் களத்தில் நின்றபோதுதான் தன் இன்னுயிரை நீத்தார்.

அவர் மறைந்தாலும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள “திராவிட மாடல் அரசு” தந்தை பெரியார் கனவை நனவாக்கி விட்டாரே!

ஆகமப் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர் பணியில் அமர்த்தப்பட்டு விட்டனரே!

பெரியார் மறைந்தாலும், நாளும் சமூகநீதி வெற்றிக் கொடியை வானளாவிய அளவில் பட்டொளியாகப் பறக்க விட்டுள்ளார்.

மனிதன் தானாகப் பிறக்கவில்லை. ஆகவே, அவன் தனக்காகப் பிறக்கவில்லை. மற்றவர்களுக்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படி எண்ணிப் பார்த்துச் செயல் புரிவதுதான் மனித்தன்மை (27.7.1962) என்று கூறும் மாமனிதரை உலகம் எப்பொழுது காணப்போகிறது?

இந்தியாவில் இரண்டாயிரம் வருடத்தில் மகத்தான ஒரு சமுதாயப் புரட்சி தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் பெரியார்தான் அந்தப் புரட்சியைச் செய்தவர் என்பது அமெரிக்காவிலுள்ள மூத்த பேராசிரியர்களின் கருத்து ஆகும் என்று பேரா சிரியர் ஜான் ரைலி கூறுகிறார். (‘ஆனந்த விகடன்’, 16.7.1972) 

வாழ்க தந்தை பெரியார்!

வருக அவர் காண விரும்பிய சமூகநீதிச் சமுதாயம்!

“மண்டைச் சுரப்பை உலகம் தொழும்” என்றார் தந்தை பெரியாரைப் பற்றி புரட்சிக்கவிஞர்.

ஆம், இன்று உலகளாவிய வகையில் தந்தை பெரியார் பேசப்படுகிறார் - புகழப்படுகிறார் - பின்பற்றப்படுகிறார்.

No comments:

Post a Comment