2022ஆம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 31, 2022

2022ஆம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள்

ஜனவரி

ஜன. 5 - கலைவாணர் அரங்கில் சட்டப் பேரவைக் கூட்டம் தொடங்கியது. நீட் தேர்வு தேவையற்றது. மேகதாதுவில் அணை கட்ட கருநாடக அரசுக்கு அனுமதியில்லை. ஒமைக்ரானை எதிர்கொள்ள தயார் என்று ஆளுநர் தொடக்க உரையில் குறிப்பிட்டார்.

ஜன. 6 - கரோனா நோயாளிகளுக்காக சிறப்பு கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஜன. 7 - மருத்துவப் படிப்புகளில் பிற்பட்டோருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீட்டை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

* பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் உள்ளிட்ட அரசு அதிகார அமைப்புப் பணியிடங்களை இனி டி.என்.பி.எஸ்.சி.யே நிரப்பும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

ஜன. 11 - மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

* இந்தியாவின் நவீனபிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.

ஜன. 12 - தமிழ்நாட்டில் ரூ. 4 ஆயிரம் கோடியில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 புதிய மருத்துவப் கல்லூரிகளை காணொலிக் காட்சி வழியாக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஜன. 18 - கரோனா காலத்தில் பள்ளிகளில் இடைநின்ற 1 லட்சத்து 77 ஆயிரம் பேர் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜன. 19 - கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்து வர்களுக்கு முதுநிலை படிப்பில் 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஜன. 21 - சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என தமிழ்நாடுஅரசு அறிவித்தது.

ஜன. 25 - இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 55 தமிழ்நாடு மீனவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிப்ரவரி

பிப். 1 - அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின் பற்றி தமிழ்நாட்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

பிப். 3 - கிராமப்புற மாணவர்கள் நலனுக்கு எதிரானது என நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.

பிப். 8 - நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் மசோதா சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிப். 14 - பூமியை துல்லியமாக கண்காணிக்கும் செயற்கைக் கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

பிப். 16 - சென்னை புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பிப். 26 - உக்ரைனில் சிக்கித் தவித்த மாணவர்கள் தொடர்பு கொள்ள சென்னையில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டது. ஒரே நாளில் 1,500 அலைபேசி அழைப்புகள் வந்தன.

மார்ச்

மார்ச் 1 - மாணவர்கள் - இளைஞர்கள் திறன் மேம்பாட்டுக்காக ‘நான் முதல்வன்' திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மார்ச் 7 - தூத்துக்குடியில் ரூ.100 கோடி பன்னாட்டு பர்னிச்சர் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

* தூத்துக்குடி ஸ்பிக் வளாகத்தில் ரூ.150 கோடியில் இந்தியாவின் மிகப்பெரிய  மிதக்கும் சூரியசக்தி நிலையம் திறப்பு.

மார்ச் 11 - சவுதி அரேபியாவில் வரலாற்றில் அதிகபட்சமாக 81 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மார்ச் 16 - சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி, மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டது.

மார்ச் 18 - தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023க்கான பட்ஜெட் தாக்கல், அரசு பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிப்பு.

மார்ச் 19 - தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் வெளியானது. இதில் சிறுதானிய உற்பத்திக்கு புதிதாக 2 மண்டலங்கள் அமைப்பது, ரூ. 4 கோடியில் விதை உற்பத்தி ஒருங்கிணைந்த வளாகம், 15 மாவட்டங்களில் உழவர் ஆலோசனை மய்யங்கள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் இடம் பெற்றன.

* கிண்டி கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி மய்ய வளாகத்தில் 1000 படுக்கை வசதியுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ரூ.230 கோடியில் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மார்ச் 28 - தமிழ்நாடு அமைச்சர் இலாகாவில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது. ராஜகண்ணப்பனுக்கு பிற்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்ச ராக சா.சி.சிவசங்கர் நியமனம் செய்யப்பட்டார்.

மார்ச் 31 - டில்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது நீட் விலக்கு, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.

ஏப்ரல்

ஏப். 2 - டில்லியில் பிரமாண்ட தி.மு.க. அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஏப். 5 - ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவை மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்கும் அமைப்பாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

ஏப். 7 - மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடதுக்கீடு வழங்கியது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

ஏப். 8 - கிராமப்புற மக்களுக்கு சிகிச்சை அளிக்க 389 நடமாடும் மருத்துவமனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஏப். 14 - தமிழ்நாட்டில் முதல் முறையாக ரூ.364 கோடி செலவில் அரசு மருத்துவமனையில் 1,583 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட பன்முக சிகிச்சை பிரிவுகளை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஏப். 25 - தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் வகையில் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதிமுக எதிர்ப்பு, பாஜக வெளிநடப்பு செய்தது.

ஏப். 26 - அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டது.

ஏப். 27 - புதிதாக தொடங்கப்படும் அரசு சித்த மருத்துவ பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்ற சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் அவையில் மசோதா விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது.

ஏப். 29 - இந்திய மாணவர்கள் படிப்பை தொடர சீனாவுக்கு திரும்ப அந்நாடு அனுமதி அளித்தது.

மே

மே 1 - சென்னை, மாமல்லபுரம் இடையே உள்ள கிழக்கு கடற்கரை  சாலைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மே 9 - எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

மே 14 - பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக் காக 500 அரசு மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மே 16 - சென்னை துறைமுகம் - மதுரவாயல் வரையில் ரூ.5,855 கோடியில் 2 அடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.

மே 17 - கிராமப்புற மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க ரூ.46 கோடியில் 256 நடமாடும் மருத்துவமனைகள் சேவை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மே 18 -  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது.

ஜூன்

ஜூன் 3 - மேனாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞரின் பிறந்த நாள் முதல் முறையாக அரசு விழாவாக கொண்£டப்பட்டது.

* மாநிலங்களவைக்கு திமுக சார்பில் கல்யாணசுந்தரம், ராஜேஸ் குமார், கிரிராஜனும், அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், தர்மரும், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும் என மொத்தம் 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர்.

ஜூன் 4 - சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப் பட்டினம், புதுச்சேரி மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் சொகுசு  கப்பல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஜூன் 9 - 12,525 கிராமங்கள் பயன் அடையும் வகையில் ரூ.1,627 கோடியில் பாரத்நெட் கம்பி இழை வடம் அமைக்கும் திட்டப்பணியை கன்னியாகுமரியின் முத்தலுகுறிச்சி கிராமத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

* நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக சோப்தார் பதவிக்கு திலானி என்ற பெண் நியமிக்கப்பட்டுபதவியேற்றார்.

ஜூன் 19 - 17ஆவது மக்களவையில் இதுவரை 140 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பெருமையுடன் குறிப்பிட்டார்.

ஜூன் 26 - பிளஸ்-2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஜூன் 30 - சிங்கப்பூர் செயற்கை கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஜூலை 

ஜூலை 22 - மேனாள் முதலமைச்சர் கலைஞருக்கு 137 அடி உயரத்தில் பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என அறிவிப்பு.

ஜூலை 26 - பள்ளிக்கரணை, பிச்சாவரம், கரிக்கிலி பறவைகள் சரணாலயம் போன்றவற்றுக்கு ஈர நிலங் களுக்கான பன்னாட்டு அங்கீகாரமான ராம்சர் அங்கீகாரம் கிடைத்தது.

ஜூலை 31 - ராமநாதபுரம் கமுதி அருகே செய்யாமங்கலம் கிராமத்தில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி, மண் குவளை கண்டெடுக்கப்பட்டது.

ஆகஸ்ட்

ஆக. 1 - சிறீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரந்தூர் விமான நிலைய உத்தேச திட்ட மதிப்புரு.20 ஆயிரம் கோடி என அறிவித்தார்.

* தண்டோரா போட தடை விதித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு.

ஆக. 8 - ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்க நெற்றிப்பட்டையம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆக. 15 - இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்' விருதை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தகைசால் விருதுடன் நல்லகண்ணுவிற்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. அதோடு ரூ.5 ஆயிரத்தை சேர்த்து முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு நல்லக்கண்ணு வழங்கினார்.

ஆக. 18 - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வில் 17 காவல்துறையினர் மீது நடவடிககை எடுக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை அறிக்கையில் பரிந்துரைத்தது.

ஆக. 22 - கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசை கண்டித்து டில்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செப்டம்பர்

செப். 1 - அரசின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம், செப். 10 முதல் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

* பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநரின் அதிகாரத்தை ரத்து  செய்யும் மசோதா கேரள சட்டப் பேரவையில் நிறைவேறியது.

செப். 5 - அரசு பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை, டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

செப். 6 - கைம்பெண் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

செப். 7 - அங்கீகரிக்கப்படாத 87 கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

செப். 13 - தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து மேலும் 86 கட்சிகள் நீக்கம் செய்யப்படுவதாகவும், 253 கட்சிகள் செயல்படாதவை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

செப். 14 - திண்டுக்கல் அருகே இலங்கைத் தமிழர்களுக்கு புதிதாக கட்டப்பட்ட 321 வீடுகளை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

செப். 15 - 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட் டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

செப். 19 - சென்னை உயர்நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்.

செப். 24 - வெளிநாடு வெளி மாநிலங்களில் வசிப்ப வர்கள் தமிழ் மொழியை கற்றுக் கொடுக்க தமிழ் பரப்புரை கழகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

செப். 26 தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டத்துக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

செப். 27 - உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு தொடங்கியது.

செப். 30 - செங்கல்பட்டு மகேந்திரா சிட்டியில் ரூ.1100 கோடியில் ஸ்மார்ட்போன் உதிரிப் பாக உற்பத்தி செய்யும் பெகாட்ரான் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. தைவான் நிறுவனமான இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அக்டோபர்

அக். 9 - பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப் பட்டார். துணைப் பொதுச் செயலாளராக கனிமாழி நியமனம்.

அக். 12 - கரூர் திண்டுக்கல்லில் இந்தியாவில் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அக். 19 - காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூரை வீழ்த்தி மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். அக். 26இல் தலைவராக கார்கே பதவியேற்றார். தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்பட 47 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டது.

அக். 22 - இத்தாலியில் முதல் பெண் பிரதமராக மெலோனி தேர்வு செய்யப்பட்டார்.

நவம்பர்

நவ. 3 - தமிழ்நாட்டில் 233 பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 22 அரசியல் கட்சிகள் செயல்படாதவை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

நவ. 7 - பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரச மைப்புச் சட்டத் திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

நவ. 8 - உச்சநீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டர்.

நவ. 11 - ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் உள்பட 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தொடர்ந்து மறுநாள் (நவ. 12) அவர்கள் 6 பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் இலங்கை தமிழர்களான சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைப்பட்டனர்.

* ஜார்க்கண்டில் இட ஒதுக்கீடு 77 சதவிகிதமாக உயர்த்தி சட்ட சபையில் மசோதா நிறைவேறியது.

நவ. 14 - உலக மக்கள் தொகை 500 கோடியை கடந்ததாக அய்.நா. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

* தமிழ்நாடு அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். 

நவ. 16 - மைசூரில் இருந்து தமிழ் கல்வெட்டுகளின் 13 ஆயிரம் மைப்படிகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. அவை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

நவ. 17 - நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது.

நவ. 18 - வ.உ.சி. 150ஆவது பிறந்த நாளையொட்டி அவர் எழுதிய நுல்களை கொண்ட சிறப்பு இணைய பக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நவ. 25 - மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்றும், அதைஇணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனறு மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அறிவிப்பு.

நவ. 28 - சிறீஹரிகோட்டாவில் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளத்தை இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்து வைத்தார்.

டிசம்பர்

டிச. 3 - தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

டிச. 15 - தமிழ்நாட்டில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை தொடங்கப்பட்டது.

டிச. 18 - அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள், மானியங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

டிச. 19 - தமிழ்நாட்டில் நம்ம ஸ்கூல் பவுண்டேசன் எனும் அரசு பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மக்கள், தொழில் அதிபர்கள் நிதி உதவி வழங்க கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment