ஹிந்துக்களுக்காக உண்மையில் குரல் கொடுப்போர் யார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 3, 2022

ஹிந்துக்களுக்காக உண்மையில் குரல் கொடுப்போர் யார்?

"விழித்துக் கொள்ளுங்கள் ஹிந்துக்களே!” என்று தினமலர் (31.10.2022 பக்கம் 8) கூறுகிறது.

அது எந்தப் பொருளில் கூறியிருந்தாலும் நாமும் அதே முழக் கத்தைத் தான் இன்னொரு வகையில் கூறுகிறோம்.

‘தினமலரில்’ வெளி வந்தது என்ன? இதோ படியுங்கள்.

விழித்துக் கொள்ளுங்கள் ஹிந்துக்களே!...

பி.புருஷோத்தமன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 88 சதவீதம் ஹிந்துக்களும், 12 சதவீதம் மற்ற மதத்தினரும் உள்ளனர். ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நம் மாநிலத்தில், பல ஆயிரம் கோவில்களும், அங்கெல்லாம் தினமும் வழிபாடுகளும் நடந்து வருகின்றன.

இப்படி இருந்தும், ஹிந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல மறுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், மற்ற மத பண்டிகைகளுக்கு, அவர் வாழ்த்து சொல்ல தவறுவதில்லை. பெரும்பான்மை ஹிந்துக்களின் ஓட்டுகளைப் பெற்று ஆட்சியில் இருக்கும் அவர், ஹிந்துக்களை அவமதிப்பது போல நடந்து கொள்வது வேதனைக்குரியது.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு, ஹிந்துக்களாகிய நாம் அனைவரும், அடுத்த தேர்தலில் தி.மு.க.,வுக்கு எதிராக செயல்பட வேண்டும். பா.ஜ.,வுக்கு பெருவாரியான ஓட்டுக்களை அளித்து, நம் கலாசாரத்தையும், பண்பாட்டையும் மேம்பட செய்ய வேண்டும்.

ஹிந்துக்களை அவமானப்படுத்தும் திராவிட செம்மல்களை ஓட ஓட விரட்ட வேண்டும். அதுவே, ஹிந்துக்களை அவமதிக்கும் ஆட்சிக்கு, நாம் தரும் சரியான தண்டனை!

அது மட்டுமின்றி, மற்ற மதத்தினர் ஹிந்து மதத்தை அவமானப்படுத்தும் போதும், முதல்வர் ஸ்டாலின் அதை கண்டுகொள்வதில்லை; இது, மற்ற மதத்தினருக்கு சலுகையாக போய் விடுகிறது. 'ஹிந்து மதத்தை நாம் எப்படி வேண்டுமானாலும் குறை சொல்லலாம்; ஆட்சியாளர்கள் நம்மை கண்டு கொள்ள மாட்டார்கள்' என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது. அத்துடன், ஹிந்துக்கள் மீது அவர்கள் வன்முறையையும் திணிக்க காரணமாகிறது.

இந்த நிலைமை மாற வேண்டும் என்றால், அதற்கு ஒரே தீர்வு சட்டசபை தேர்தல் தான்.

வரும் தேர்தலில் ஹிந்துக்கள் கொடுக்கும் சாட்டையடி, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு சரியான பாடமாக அமைய வேண்டும். இல்லையெனில், ஹிந்து மதத்திற்கு எதிரான துவேஷங்கள் தொடர்ந்தபடி தான் இருக்கும். இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள் ஹிந்துக்களே! (தினமலர் 31.10.2022 பக்கம் 8)

ஹிந்துக்களைப் பற்றி இவ்வளவு’ கரிசனமாக எழுதும் தினமலரைக் கேட்கிறோம் - தினமலர் கடிதத்துக்கு உரியவரைக் கேட்கிறோம்.

ஹிந்துக்களில் பிறவியின் அடிப்படையில் தாழ்ந்த ஜாதி உயர் ஜாதி என்ற பிளவு ஏன்? கடவுள்தான் அப்படி நான்கு வருணங்களைப் படைத்தார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஹிந்துக்களில் ஒரு பிரிவினரைத் தீண்டத்தகாதவர் என்று முத்திரை குத்தி - ஊரின் வெளியே பள்ளன் என்றும் பறையன் என்றும் ஒதுக்கி வைத்தது ஏன்?

ஹிந்துக்களாக இருப்பவர்கள் ஹிந்துக் கடவுள்களை கோவிலுக்குள் சென்று வழிபடத் தடை விதித்தது ஏன்? பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தானே அந்த ஹிந்துக்கள் அந்த ஹிந்துக் கோயிலுக்குள் நுழையும் உரிமை கிடைத்தது.

ஹிந்துக் கோயில் கடவுள் கருவறைக்குள் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும்தான் சென்று பூஜை செய்ய முடியும் என்ற நிலை ஏன்?

ஹிந்துக்கள் யாராக இருந்தாலும் அதற்குரிய பயிற்சி பெற்று அர்ச்சகராகலாம் என்று ஓர் அரசு சட்டம் கொண்டு வந்தால் உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் செல்லுவது ஏன்?

ஆகமங்களை நீதிமன்றத்தில் எடுத்துக்காட்டி ’சூத்திரன்’ சாமி சிலையைத் தொட்டால் சாமி செத்து விடும், தீட்டுப்பட்டு விடும், தோஷம் கழிக்க வேண்டும் என்று வாதாடியது ஏன்?

ஹிந்துக்களாகிய பட்டியலின மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் கல்வி வாய்ப்புப் பெற்று அரசுப் பணிகளுக்குச் செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால், தினமலரும், தினமலர் எழுத்தாளர்களும் - ’சபாஷ்! நம் ஹிந்து மக்களுக்குத்தானே வாய்ப்பு’ கிடைத்துள்ளது - நமது ஹிந்துக்கள் வளரட்டும், சிறப்பாக வாழட்டும்’ என்று வரவேற்காமல் அதற்கு எதிர்ப்பு’ கூச்சல் போடுவானேன் - எழுதுவானேன்? தடை கேட்டு நீதிமன்றம் செல்வானேன்?

சங்பரிவார்க் கூட்டத்துக்கு அடியாட்கள் ஆள் பலம் தேவை என்றால் ஹிந்துக்களே ஒன்று சேருங்கள்! என்பதும், மற்ற மற்ற நேரங்களில் அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதும் ஏன்? ஏன்?

இதனை எடுத்துச் சொல்பவர்கள் ஹிந்துக்களுக்கு எதிரிகளா? ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்குத் திட்டம் தீட்டினால், “திராவிட மாடல்” அரசு நடத்தினால் அந்தத் தி.மு.க.வுக்கு வாக்களிக்காதீர்கள் என்பது எல்லாம் எதைக் காட்டுகிறது?

'ஹிந்து ராஜ்ஜியம் அமைப்போம்!’ என்று சொன்னால் அதன் பொருள் என்ன?

வருணாசிரமம் இருக்க வேண்டும்; ஜாதிகள் இருக்க வேண்டும்; உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற நிலை தொடர வேண்டும், சுடுகாட்டிலும்கூடப் பேதம் இருக்க வேண்டும், பெண்களுக்கு உரிமைகள் கூடாது; பெண்கள் விபசார தோஷம் கொண்டவர்கள் என்ற மனுதர்மத்தை ஏற்க வேண்டும் என்பது தானே ஹிந்து ராஜ்ஜியம்?

தினமலர் திரிநூல் கூட்டமே, தினமலருக்குப் பாதம் தாங்கும் விபீடணர்களே - முடிந்தால் பதில் கூறுங்கள் பார்க்கலாம்.


No comments:

Post a Comment