திருப்பூர் ரயில் நிலையத்தில் ஹிந்தி பெயரா! சினம் கொண்டு மக்கள் அகற்றினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 30, 2022

திருப்பூர் ரயில் நிலையத்தில் ஹிந்தி பெயரா! சினம் கொண்டு மக்கள் அகற்றினர்

திருப்பூர் நவ.30 திருப்பூர் ரயில் நிலையத்தில் தமிழை மறைத்து ஹிந்தியில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையும் காசி தமிழ்சங்கமம் குறித்த ஹிந்தி பெயர்பலகையும் அகற்றப்பட்டது.

திருப்பூர் ரயில் நிலையத்தில் தமிழ் மொழியில் தகவல் மய்யம் என பெயர் பலகை எழுதப்பட்டி ருந்தது. அதுபோல் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் அந்தப்பெயர் மொழி பெயர்க்கப்பட்டு ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங் களுக்கு முன்பு ரயில் நிலையத்தில் திடீரென தகவல் மய்யத்தின் தமிழ் எழுத்துக்களை மறைத்து அதன் மேல் ஹிந்தி எழுத்தால் 'சகயோக்' என எழுதப்பட்டிருந்தது. அது மட்டும் இல்லாமல் ஆங்கிலத்திலும், தமிழிலும் 'சகயோக்' என அறிவிப்பு பலகையில் வாசகம் இடம் பெற்று இருந்தன

ஆங்கிலத்தில் 'இன்பர்மேஷன் சென்டர்' என்றும், தமிழில் 'தகவல் மய்யம்' என்றும் எழுதியிருக்க வேண்டும். ஆனால் ஹிந்தி வார்த் தையை ஆங்கிலத்திலும், தமிழிலும் குறிப்பிட்டு வைத்திருந்தனர். இதனை ஹிந்தி தெரிந்தவர்கள் மட்டுமே அறிய முடியும். அதுபோல் இந்த சேவை மய்யத்தின் அருகில் 'காசி தமிழ் சங்கமம்' என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகையில் அனைத்தும் ஹிந்தி மொழியில் பெரிதாக எழுதப்பட்டு ஒரே ஒரு வாசகம் மட்டும் தமிழ் எழுத்தில் சிறிதாக இடம் பெற்றி ருந்தது. இதனைப்பார்த்த தமிழ் நாடு பயணிகள் தமிழ் மறைப்பா அல்லது ஹிந்தித் திணிப்பா என்று தெரியாமல் குழம்பினார்கள். இது குறித்து   நாளிதழிலும் மற்றும் சமூக வலைதளங்களிலும் செய்தி (29.11.2022) பரவியது. ஹிந்தி வாசகம் இடம் பெற்றதற்கு பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய் தார்கள். ஹிந்தியை நேரடியாக திணிப்பதாக குற்றம் சாட்டி கருத் துகளை பதிவிட்டனர். கண்டனங் களையும் தெரிவித்தார்கள்.

இதனைத்தொடர்ந்து நேற்று ரயில்வே ஊழியர்கள், ரயில் நிலையத்தில் தகவல் மய்யத்தின் முன்பு 'சகயோக்' என்று வாசகம் இடம்பெற்று இருந்த பெயர் பலகையை அதிரடியாக கிழித்து அகற்றினார்கள். அதன் பின்னர் தமிழில் எழுதப்பட்டிருந்த சேவை மய்யம் என்ற பெயர் தெளிவாக தெரிந்தது. அதுமட்டுமின்றி அதன் அருகில் 'காசி தமிழ் சங்கமம்' குறித்து ஹிந்தி மொழியில் வைக்கப்பட்டிருந்த பெயர் பதாகை அகற்றப்பட்டு அங்கு தமிழ் வாசகத்திலான விளம்பரப் பதாகை தற்போது வைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment