முட்டாள்தனத்துக்கு அளவேயில்லையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

முட்டாள்தனத்துக்கு அளவேயில்லையா?

கனவில் வந்தது பாம்பாம் - பரிகார பூஜையாம் 

நாக்கைக் கடித்த பாம்பு - ஆசாமி மருத்துவமனையில்

ஈரோடு, நவ 27 கோபியில் கனவுத் தொல்லையால் பாதிக்கப்பட்ட  ஒருவர் ஜோதிடரின் வாக்கை நம்பி பாம்பின் வாயில் வாய் வைத்து ஊதியபோது பாம்பு நாக்கை கடித்ததால்  பேச் சாற்றலை இழந்து அறுவைச் சிகிச் சையில் மீண்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த  ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நன்றாக தூங்கிய போது   அவரது கனவில் பாம்பு   வந்த தாம். இதுபற்றி அவர் குடும்பத்தினரிடம் கூறினார். அவர்களும் தொடர்ந்து பாம்பு கனவு வருவது ஏன் என்ற குழப்பத்தில், அவர்களின் குடும்ப ஜோதிடர் ஒருவரை அணுகினார்கள். கனவு விவரங்களை கேட்ட ஜோதிடர், இதற்கு நாகசாந்தி  பூஜை செய்து, பிரச்சினை எதுவும் வராமல் செய்து விடலாம் என்று ஆலோசனை வழங் கினாராம். ஜோதிடரின் வாக்கை நம்பி, குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று ஜோதிடர் கூறிய பூசாரியை சந்தித்தார். அவரும்  கனவு விவரங்களை கேட்டு அறிந்தார்.

பின்னர் பூசாரி ஒரு கண்ணாடி விரியன் பாம்புடன் வந்து, பூஜை செய்தார். பூஜையின் முடிவில்,  பாம்பின் வாயில் 3 முறை உங்கள் வாயை வைத்து ஊத வேண்டும் என்று அறிவுரை வழங்கினாராம். கனவில் பாம்பு வந்த பீதியில் இருந்து வெளியே வராமல் மனதளவில் கஷ்டப்பட்டு வந்தவர், ஜோதிடரும், பூசாரியும் என்ன சொன் னாலும் செய்யத் தயாராக இருந்துள் ளார். பூசாரி கண்ணாடி விரியன் பாம்பை கையில் பிடித்துக்கொண்டு  அவரின் முன்னால் நீட்டினார். அவரும் பாம்பின் வாயில் தனது வாயை வைத்து ஊதினார். முதல் முறை வெற்றிகரமாக முடித்தார். 2-ஆவது முறையும் அது போன்று கண்ணாடி விரியன் பாம்பின் வாயில் வாய் வைத்து முத்தம் கொடுப் பது போன்று ஊதினார். பாம்பு அசையாமல் இருந்தது. 3ஆ-வது முறை, ஜோதிடரும், பூசாரியும் உற்சாகப் படுத்த, அவரும் நாக்கை நீட்டிக் கொண்டு பாம்பின் வாய் அருகே சென்று ஊத தயாரானார்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில்  நாக்கில் பாம்பு கடித்தது. வினாடி நேரத்தில் நடந்து முடிந்து விட்ட இந்த சம்பவத்தால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  பூசாரி அவரது கையில் இருந்த ஒரு கத்தியால்,   நாக்கில் கீறி விட்டார். இதனால் குருதிப் போக்கு அதிகமானது. ஒரு புறம் பாம்பு கடித்த பயம். இன்னொரு புறம் அதிக  குருதிப் போக்கு. அவரும் மயக்க நிலைக்கு சென்றார். அதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து செயல் பட்டு அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். அங்கு மருத்துவர் செந்தில்குமரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் உடனடி யாக முதல் உதவி நடவடிக்கைகள் எடுத்தனர்.

நாக்கு வெட்டுண்டு தொங்கிக் கொண்டு இருந்த நிலையில்  மருத்துவக் குழுவினர் செயற்கை சுவாசம் வழங்கி, சிகிச்சை செய்தனர்.

அவரது கிழிந்த நாக்கு தைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. உடலில் பாம்பு விஷம் பரவுவதும் தடுக்கப்பட்டது. கடுமையான போராட்டத்துக்கு பின்னர், சிகிச்சை வெற்றிகரமாக செய் யப்பட்டது. 3-ஆவது நாளில் இயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. 7-ஆவது நாளில் கட்டுகள் பிரிக்கப்பட்டது. மருத்துவர்களின் போராட்டத்தால், உயிருக்கு போராடியவர் காப் பாற்றப்பட்டார்.   நாக்கு பாதிக்கப் பட்டதால் இனிமேல் அவர் பேச முடியாதோ என்ற நிலையில் அறுவைச் சிகிச்சை மூலம் மீண்டும் பேச்சு வந்துள்ளது.  அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்  பாம்புகள் குறித்த கட்டுக்கதை, மூடநம்பிக்கை களை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறினார்கள்.  ஜோதிடர் மற்றும் பூசாரிக்கு தொடர்பு உள்ளதா? பூசாரிக்கு பாம்பு எப்படி கிடைத்தது, அதிக விஷம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பினை அவர் எப்படி பிடித்து கையில் வைத்திருந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து உள்ளன.


No comments:

Post a Comment