'திராவிட மாடலை' காப்பியடிக்க முயற்சிக்கும் 'குஜராத் மாடல்' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 29, 2022

'திராவிட மாடலை' காப்பியடிக்க முயற்சிக்கும் 'குஜராத் மாடல்'

குஜராத்தில் பாரதிய ஜனதா தனது தேர்தல் அறிக்கையில், முக்கியமாக உயர்ஜாதி ஏழைகளுக்கு என்று பல இலவசங்களை  அள்ளி அள்ளிக் கொடுத்துள்ளது.

182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக டிசம்பர் 5ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலை முன்னிட்டு குஜராத் மாநிலம் காந்தி நகரில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, அரியானா முதலமைச்சர் பூபேந்திரா சிங் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் சி.ஆர். பாட்டீல் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

அந்தத் தேர்தல் அறிக்கையில், மூத்த குடி பெண்களுக்கு "பேருந்தில் இலவச பயணம், மாணவிகளுக்கு 'எலக்ட்ரிக் ஸ்கூட்டர்' மற்றும் சைக்கிள் வழங்கப்படும், 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், 2036இல் ஒலிம்பிக் போட்டிகள் குஜராத்தில் நடத்த வழிவகை செய்யப்படும்" உள்ளிட்ட பல்வேறு இலவச மற்றும் நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

மேலும், பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, "வக்ப் வாரியத்தின் சொத்துக்கள் மற்றும் நிதிகளை ஆய்வு செய்யவும், மதரஸாக் களின் பாடத்திட்டம் குறித்து ஆய்வு நடத்தவும் ஒரு பணிக் குழுவை அமைக்கவுள்ளதாகவும்" கட்சி உறுதியளித்துள்ளது.

தொடர்ந்து, குஜராத் மத சுதந்திர (திருத்தம்) சட்டம், 2021 இன் கீழ் கட்டாய மதமாற்றங்களுக்கு நிதி அபராதத்துடன் கடுமையான சிறைத்தண்டனையையும் இந்த அறிக்கை உறுதியளிக்கிறது.

இதுமட்டுமின்றி பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் குஜராத் மீட்புச் சட்டத்தை இயற்றுவதாகவும் பிஜேபி உறுதியளித்துள்ளது. கலவரங்கள், வன்முறைப் போராட்டங்கள் மற்றும் அமைதியின்மை போன்றவற்றின் போது, சமூக விரோதிகளால் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களை மீட்டெடுப் பதற்காக இந்த சட்டமாம்! (பயங்கரவாதத்தைப் பற்றி பா.ஜ.க.வா பேசுவது?)

மேலும், குஜராத் சீருடை சிவில் கோட் குழுவின் பரிந்துரைகள் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்துள்ளது. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இலவசங்களில், மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதி ஏழை மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதாந்திர இலவச ஊட்டச்சத்துக்கள், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் இலவச பேருந்துப் பயணம் ஆகியவற்றை பாஜக வாக்குறுதியாக அளித்துள்ளது.

மேலும், பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதி குடும்பங்களைச் சேர்ந்த  கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர் வழங்கத் தொடங்குவதாகவும் கட்சி உறுதியளித்துள்ளது. 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

'பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' (ஆயுஷ்மான் பாரத்) திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக வரம்பை இரட்டிப்பாக்குவதாகவும், “இலவச மருத்துவ சிகிச்சையை உறுதி செய்வதாகவும்” பிஜேபி தேர்தல் அறிக்கை கூறியது. “அனைத்து அரசு சுகாதார நிறுவனங்கள் மற்றும் உயர்ஜாதி ஏழைக் குடும்பங்களுக்கு அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் ஆகியவற்றில் இலவச நோயறிதல் சேவைகளை” வழங்குவதற்காக, 110 கோடி ரூபாயில் ‘முதலமைச்சர் இலவச நோயறிதல் திட்டத்தை’ பிஜேபி தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஆண்டுக்கு நான்கு முறை 1 லிட்டர் சமையல் எண்ணெய்யும், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மாதம் 1 கிலோ கொண்டைக் கடலையும் மானிய விலையில் வழங்குவதாக கட்சி உறுதியளித்தது.

பிஜேபியின் இந்தத் தேர்தல் அறிக்கையை எண்ணினால் ஒரு பக்கத்தில் சிரிப்பும் மற்றொரு பக்கத்தில் தேர்தலில் அதற்கு நேர இருக்கும் கிலியும் தெற்றெனப் புலனாகிறது.

இலவசங்கள் அளிக்கப்படுவதைக் கண்டித்து வந்த பிரதமர், பிஜேபி இப்பொழுது எங்கே வந்து நிற்கிறது என்பதைப் பார்த்தீர்களா? குஜராத் மாடல் திராவிட மாடலைக் காப்பி அடிக்கிறதா?

கல்வி, வேலை வாய்ப்பில் பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு அளித்த ஒன்றிய அரசு இவர்களுக்கு இப்பொழுது இலவச மின்சார ஸ்கூட்டர், இலவச ஊட்டச்சத்து இன்ன பலவற்றையும் அளிக்கப் போகிறதாம். மாதம் 66,666 ரூபாய் சம்பாதிக்கும் உயர் ஜாதியினருக்கு மேலும் மேலும் சலுகைகள் குவிகின்றன. பாரதீய ஜனதா ஆட்சியல்ல - பார்ப்பன ஜனதா ஆட்சியே!


No comments:

Post a Comment