ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வருவதால், அவருக்குத் தமிழ்நாட்டில் அதிக அளவு எதிர்ப்பு எழுந்தும் ஒன்றிய அரசு அதுபற்றி கண்டுகொள்ளவில்லையே, ஏன்?

-கே.சுதாகரன், விழுப்புரம்

பதில் 1: அதற்கு மூல காரணமே, அந்தப் பின்னணியின் தைரியமே அவர்கள் என்கிறபோது எப்படி கண்டுகொள்வர்? ஜனநாயகத்தை, அரசமைப்புச் சட்டத்தை மதிப்பவர்களாக அவர்கள் நடந்துகொண்டால், இப்படிப்பட்ட `பாராமை' இருக்காது!

---

கேள்வி 2: உயர்ஜாதியில் உள்ள நலிந்தவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும், திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் என்ன வேறுபாடு?

- பா.முகிலன், சென்னை

பதில் 2: ஒன்றை மற்றொன்று பலமாகத் தாங்குவதே. அங்கே சந்திக்க வாய்ப்பில்லாதவர்களும் அதே குரலுடன் - இணைந்து பெரிதாக்கும் செயல் இது என்பதுதான் முக்கியம். ஒன்று மற்றொன்றுக்கு பலம் கூட்டுவது என்றே பொருள். முரண் அல்ல!

---

கேள்வி 3: கார்த்திகை மாதம் தொடங்கியதும் சபரிமலைக்கு மாலை போடும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறதே, இது எதைக் காட்டுகிறது?

-ந.நேத்ரா, மதுராந்தகம்

பதில் 3: பக்தி போதை பெருகி மக்களை சீரழிக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் 51கி பிரிவு வெறும் ஏட்டுச் சுரைக்காயாக உள்ளது என்பதையே காட்டுகிறது! சாராயக் கடைகள் - அதன் வருமானம் பெருகுவது ஆரோக்கியமா? அதுபோல!

---

கேள்வி 4: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டிற்கு வந்து, அடுத்து தமிழ்நாட்டில் பி.ஜே.பி. ஆட்சிதான் என்றாரே, இதைக் கேட்டு அ.தி.மு.க. தலைவர்கள் மவுனம் சாதிப்பது ஏன்?

- பா.கண்மணி, வேலூர்

பதில் 4: வெற்றிடம் என்பதற்கு பதில் சொல்லக்கூடத் தெம்பும் திராணியும் அற்றவர்கள்போல, பேச முடியாதவர்களாக்கிக் கொண்டார்களே - பரிதாபம்! பரிதாபம்!!

---

கேள்வி 5: 'கலைமாமணி' விருது எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேட்டுள்ளதுபற்றி....?

- ந.செந்தூர், திருச்செந்தூர்

பதில் 5: அரசு வழக்குரைஞர் பதில் கூறியிருப்பார், அல்லது கூறுவார்!

---

கேள்வி 6:  மேனாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும் என்று கூறியிருக்கிறாரே... தங்கள் கருத்து?

- மு.கலைமணி,  சேலம்

பதில் 6: செல்லூர் இராஜு எப்போதும் மாறாத திராவிட உணர்வாளர்; அதை விட்டுக்கொடுக்காதவர் என்பதால் யதார்த்தமாக உண்மை பேசுகிறார்!

---

கேள்வி 7 : ஆளுநர் காசியைப் பற்றி புகழ்கிறாரே? பாபுஜெகஜீவன் ராமுக்கு ஏற்பட்ட அவமானம்  பற்றி அவருக்குத் தெரியாதா?

- சே.சிவகாமி, சிவகங்கை

பதில் 7: அவர்தான் ஒரு ஆர்.எஸ்.எஸ். அரசின் அங்கம் என்பதாகவே நினைத்து, அதன் கொள்கையைப் பரப்புகிறார் - தமிழ் மக்கள் வரிப்பணத்தில்! தொடரட்டும் இந்த அரசியல் சித்து வேலை - மக்கள் பதில் தரும் காலம் வராமலா போகும்?

---

கேள்வி 8: தங்களின் எண்பதாண்டு கால பொதுவாழ்வில், அன்றைய கொள்கை எதிரிகளுக்கும், இன்றையகொள்கை எதிரிகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

- சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில் 8: முன்னவர்கள் நாணயமான எதிரிகள். இப்போது உள்ளவர்கள் நாணயமற்ற நரித்தனம் படைத்தவர்கள். முந்தையது நேருக்கு நேர் படை. இப்போது 'கண்ணி வெடிகள்' புதைந்துள்ளதை அகற்றுவது முக்கியம் அல்லவா?

---

கேள்வி 9: 90ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கும் தங்களின் 80 ஆண்டுகால’தொண்டற’ப் பொதுவாழ்வில், என்றைக்கேனும் தங்களுக்கு `சலிப்பு’ ஏற்பட்டதுண்டா?

- ஈ.வெ.ரா.தமிழன், சீர்காழி

பதில் 9: என்றைக்கும் வந்ததே இல்லை; காரணம் எனக்கு சலிப்பு ஏற்படும் நிலைக்கு எந்த சம்பவமும் என்னைத் தள்ளவில்லையே!

---

கேள்வி 10: சர்ச்சைக்குரிய வழக்கினை நீதிமன்றத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வில் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் இடம் பெறுவது சரியானதா? அவர் இடம் பெறாமல் மற்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து இறுதி முடிவினை தலைமை நீதிபதி பிறப்பிப்பது தானே சட்டப்படி, நியாயப்படி சரியாகும்?

- மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில் 10: நியாயங்கள் வேறு; சட்ட நீதிமன்றங்கள் வேறு - புரிந்து கொள்ளுங்கள்!


No comments:

Post a Comment