தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை,நவ.12- வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக் கடலுக்கு நகர்ந்து செல்லக்கூடும். இதன் தாக்கத்தால் தமிழ்நாட்டில்  

17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மய்யத் தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று (11.11.2022) கூறியதாவது: வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவு கிறது. இதன் தாக்கத்தால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துள்ளது.  

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். 2 நாட்களில் தமிழ்நாடு கேரளாவை கடந்து அரபிக்கடலுக்கு செல்லக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்ற நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 12, 13, 14-ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 15-ஆம் தேதி ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மித மான மழை பெய்யக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

டிவிட்டரைத் தொடர்ந்து  மெட்டாவிலும் 

11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம்

வாசிங்டன், நவ.12-  ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா  (Meta Platforms Inc) தமது பணி யாளர்களில் 11,000-க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. அதன் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸக்கர்பெர்க் இதை யொட்டிய விளக்கத்தையும் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில், “கரோனா பெருந்தொற்று தொடக்கத்தில் ஏற்பட்ட இணைய வணிகம், இணைய பயன்பாடு அதிகரிப்பு ஆகியவை நிரந்தரமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், மிகப் பெரிய அளவில் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சி, அதிகரித்த போட்டி மற்றும் விளம்பரங்கள் மூலமான வருவாய் இழப்பு ஆகியவை எதிர்பார்த்ததை விட குறைவான வரு வாயையே அளித்தன. பணி நீக்கம் என்பது ஒவ்வொரு வருக்கும் மிகப் பெரிய துன்பத்தை அளிக்கும் என்பதை அறிவேன். பணி நீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கோருகிறேன். இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் ஏன் ஏற்பட்டதோ அதற்கும், பணி நீக்கத்திற்கும் நான் பொறுப்பேற்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மெட்டாவின் பொருளாதார நிலை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதை அறிந்து, சிக்கன நடவடிக் கையை மேற்கொள்ளுமாறு கடந்த செப்டம்பரிலேயே மார்க் ஸக்கர்பெர்க் அறிவுறுத்தி உள்ளார். மேலும், சந்தை நிலைக்கு ஏற்ப பணியாளர் குழுக்களில் மாற்றங் களை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தி உள் ளார். நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் 18 ஆண்டு களுக்கு தொடர் வளர்ச்சியை பார்த்து வந்ததாகவும், ஆனால் முதல்முறையாக தற்போது வருவாய் எதிர்பார்த்ததை விட குறைந்திருப்பதாகவும் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

பணி நீக்க நடவடிக்கை மூலம் மெட்டா  13 விழுக்காடு பணியாளர்களை பணி நீக்கம் செய்கிறது. ஸ்நாப்சேட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட்டில் 20 விழுக்காடு பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. டிவிட்டர் நிறுவனம் கடந்த வாரம் 50 விழுக்காடு பணியாளர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.


லாலு பிரசாத்துக்கு மகள் வழங்கும் சிறுநீரகக் கொடை 

பாட்னா,நவ.12- பீகார் மாநிலத்தின் மேனாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. அவரது இளைய மகள் ரோஹிணி சிறுநீரகம் கொடையளிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லாலு பிரசாத் யாதவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா. இவர் சிங்கப்பூரில் வசிக்கிறார். சிறுநீரகப் பிரச்சினைகளால் கடந்த சில ஆண்டுகளாகவே சிரமப்பட்டு வரும் லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூரில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று நீண்ட காலமாகவே ரோஹிணி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், லாலு தட்டிக்கழித்து வந்த நிலையில் தற்போது அவரும் சிங்கப்பூர் சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார். கடந்த அக்டோபர் மாதம் லாலு சிங்கப்பூர் சென்றார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைத்துள்ளனர்.

அப்போதே ரோஹிணி தனது சிறுநீரகங்களை கொடையாகத் தர முன்வந்துள்ளார். ஆனால், அப்போது லாலு இதற்கு திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதன்பின்னர், குருதி சம்பந்தம் உடையவர்கள் சிறுநீரக கொடை செய்யும்போது அது வெற்றிகரமாக அமையும் என்று எடுத்துரைத்து தந்தை லாலுவிடம் சம்மதம் பெற்றுள்ளார். இதனையடுத்து முறைப்படி அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டி ருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், நவம்பர் 20 முதல் 24-ஆம் தேதிக்குள் லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூர் செல்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற் கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment