கல் முதலாளி ஏழுமலையானுக்கு சொத்து ரூ.15,938 கோடி - தங்கம் 10,288 கிலோ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

கல் முதலாளி ஏழுமலையானுக்கு சொத்து ரூ.15,938 கோடி - தங்கம் 10,288 கிலோ


திருமலை, நவ.6 திருப்பதி தேவஸ்தானம் வைத்துள்ள சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தேவஸ்தானம் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகை தருகிறார்கள். இது போக விடுமுறை நாட்கள்,  விழா நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சக் கணக்கை தாண்டும். திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு நாள்தோறும் அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், பூஜை  பொருட்கள் எல்லாம் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது.

உலகிலேயே பணம் கொழிக்கும் கோயில் திருப்பதி என்பார்கள். அந்த அளவுக்கு ஏழுமலையான் மகிமைக்கு பிராயசித்தமாக கோடிக்கணக்கான பணத்தையும் தங்கத்தையும் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு ஏகப்பட்ட சொத்து களும் நகைகளும் இருப்பதாக சொல்லப் படுகிறது. பெரும் பணக்காரர்கள் தங்களது கடைசிக் காலங்களில் கவனிக்க யாரும் இல்லாததால் அவர்களுடைய சொத்துகளை ஏழுமலையானுக்கு உயிலாக எழுதி வைத்து விடுகிறார்கள். இந்த நிலையில் ஏழுமலையானுக்கு இருக்கும் சொத்து மதிப்புகள் குறித்து தேவஸ்தானம் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 

கடந்த 30.6.2019 அன்றைய தேதியின் படி தேவஸ்தானம் பல்வேறு வங்கிகள் மற்றும் இதர அமைப்புகளில் 13 ஆயிரத்து 25 கோடியே 9 லட்சம் ரூபாயை நிரந்தர வைப்பு நிதியாக வைத்துள்ளது.வங்கிகளின் தங்க முதலீட்டு திட்டத்தில் 7339 கிலோ 740 கிராம் தங்கம் அன்றைய தேதியில் இருப்பு இருந்தது. மேலும் திருப்பதி தேவஸ்தான் வங்கிகளில் உள்ள பணத்தின் ஒரு பகுதி ஒன்றிய, மாநில அரசுகளின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய இருப்பதாக சமூகவலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன. இது போன்ற பதிவுகள் மிகவும் தவறானவை, அடிப்படை ஆதாரம் அற்றவை என தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

அது போல் தேவஸ்தான அறங் காவலர் குழு முதலீடுகளுக்கு முக்கியத் துவம் கொடுத்ததில் தற்போது வங்கி களில் 15 ஆயிரத்து 938 கோடியே 8 லட்சம் ரூபாய் பணமும் 10 ஆயிரத்து 288 கிலோ 370 கிராம் தங்கமும் இருப்பு உள்ளதாகவும் அந்த வெள்ளை அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி ஏழுமலையானுக்கு மொத்தம் ரூ2.3 லட்சம் கோடி மதிப்பிலான சொத் துகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. 

திருமலை திருப்பதி வெங்கடாஜல பதியின் சொத்து விவரம் முதல் முறையாக 1933 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது நாடு முழுவதும் 7,123 ஏக்கர்களில் 960 சொத்துகள் உள்ளன. இதன் இன்றைய மதிப்பு ரூ 85,705 கோடி ஆகும். 2.5 டன் தங்க நகைகள் உள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலும் பழைமையான நகைகள். தேவஸ்தான ஊழியர்களுக்கு 300 ஏக்கரில் வீட்டுமனைகள் ரூ 60 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 25 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக 132 ஏக்கர் நிலம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவை விரைவில் தேவஸ்தான ஊழியர்களுக்கு வழங்கப் படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment