மூடத்தனத்தின் முடைநாற்றம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

மூடத்தனத்தின் முடைநாற்றம்!

மாட்டுச்சாணத்தால் அடித்துக்கொள்ளும் விழாவாம் - கழுதைமேல் சாமி சிலை ஊர்வலமாம்

சத்தியமங்கலம், அக்.28- சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் ஒருவர் மீது ஒருவர் மாட்டுச்சாணத்தை அடித்துக்கொண்ட மூடத்தனம் விழாவின் பெயரால் நடைபெற்றுள்ளது.

தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தில் பீரேஸ்வரர் கோயிலில் தீபாவளி முடிந்து நான்காவது நாள் ‘சாணியடிக்கும் திருவிழா’ என்கிற பெயரில் பக்தர்கள் ஒருவருக்கொருவர் மாட்டுச்சாணத்தால் அடித்துக்கொள்கிறார்களாம்.

முன்னதாக ஊரில் உள்ள அனைத்து பசுமாட்டு சாணங்கள் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது. இந்த விழாவின் பெயரால், கழுதை மேல் ஒருவரை அமரவைத்து கடவுளர் சிலையை கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்கின்றனராம். பின்னர் கோயிலில் அந்த சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டதாம். அதைத்தொடர்ந்து சிறுவர் மற்றும் வாலிபர்கள் 100 க்கும் மேற்பட்டோர் அனைவரும் வெற்றுடம்புடன் கோயிலுக்கு பின்புறம் கொட்டி வைக்கப்பட்ட மாட்டுச் சாணத்தை உருண் டைகளாக செய்து ஒருவர் மீது ஒருவர் அடித்துக் கொண்டனராம்.

சுமார் 2 மணி நேரம் சாணியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனைவரும் குளத்தில் நீராடி விட்டு கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தனராம்.

மூடத்தனத்துக்கு ஒரு கதையளப்பு - குப்பைக்குள் சிவலிங்கம்

இதுகுறித்து கூறுகையில், ‘‘சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்த பெரியவர் ஒருவர் தானியங்களை கொட்டி வைத்துள்ளார். பின்னர் அந்த பெரியவர் இறந்த பிறகு ஊர்மக்கள் தானியம் கொட்டப்பட்டிருந்த இடத்தில் சாணத்தை கொட்டி குப்பை மேடாக்கினர். இந்நிலையில் ஒருநாள் குப் பையை விவசாயநிலத்திற்கு கொண்டு செல்வதற்காக மண்வெட்டியால் வெட்டி எடுத்தபோது குப்பைமேட் டிற்குள் சிவலிங்கம் இருந்தது. அந்த கிராமத்தின் நடுவே கோயில் கட்டி சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்து வந்தனர். சாணம் இருந்த குப்பை மேட்டி லிருந்து சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதால் தீபாவளி முடிந்து 4ஆவது நாள் சாணியடி திருவிழா நடத்தி வருகிறோம். திருவிழா முடிந்தவுடன் இச்சாணத்தை விவசாய நிலத்தில் போட்டால் விவசாயம் செழிக்கும்'' என்று தெரிவித்தனர்.  இவ்விழாவில் தாளவாடி மற் றும்  கருநாடக மாநிலம் மைசூர், பெங்களூரு, சாம் ராஜ் நகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண் டனராம்.

எப்போதோ, யாரோ சொன்னார்கள் என்று அதனை அப்படியே பின்பற்றி வருவதும், அதிலும் மாட்டுச்சாணத்தை ஒருவர் மீது ஒருவர் அடித்துக் கொள்வதை விழா என்பதும், அதற்கு கடவுளின் பெயரால் ஒரு கட்டுக்கதையையும் அளப்பது என் பதும் பகுத்தறிவுக்கு இடமின்றி, காட்டுமிராண்டி காலத்தை நோக்கி இட்டுச்செல்வதாகவே உள்ளது. படிப்பறிவுடன் பகுத்தறிவு இருக்க வேண்டியது மிக அவசியம் என்பதை இன்றைய படித்த இளைஞர்கள் உணரவேண்டாமா?  


No comments:

Post a Comment