இலக்கியத்தை எங்கேயும் தேடலாம்! (1) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

இலக்கியத்தை எங்கேயும் தேடலாம்! (1)

 இலக்கியத்தை எங்கேயும் தேடலாம்! (1)

செம்மொழியாம் நம் மொழி தமிழுக்குள்ள தனிச் சிறப்பை காலத்திற்கேற்ற அணுகுமுறையால் மட்டுமே, உலகத்தின் பற்பல நாடுகளிலும் அதனைப் பரப்பிட இயலும்!

சில அரசு அலுவலகங்களில் "பாதுகாக்கப் பட்டப் பகுதி" (Protection  Area) என்ற பலகை தொங்கும்; மற்ற பகுதிகளுக்குப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டாலும், அந்தப் பகுதிகளுக்குச் சென்று பார்த்திட அவர்களுக்கு அனுமதி கிடையாது!

அதுபோல தமிழ்மொழி பழைமைப் பாதுகாப்பு இடமாக ஆகக் கூடாது - ஆய்வாளர்களாகச் செல்பவர்கள்கூட, அனுமதி வாங்கியே சென்று பார்த்துப் பயன் பெற வேண்டிய நிலை.

அதுபோல தமிழ் மூத்தமொழி, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே - கல்தோன்றி மண் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய மூத்தமொழி என்று பழம் பெருமையை மட்டும் பேசி விட்டு, புகழ் மாலை சூட்டுவதனாலேயே தமிழ் உலகம் முழுவதும் பரவாது என்று உணர்ந்தே - எளிதில் கற்பதற்கு குறைந்த எழுத்துகளாக இருந்தால்தான் குழந்தைகளுக்கு வசதி; நவீன கணினி யுகத்திற்கும் அதுவே கூடுதல் வசதி, - இதை பழைமைவாதிகள் புரிந்து கொள்ளாமல் எழுத்து மாற்றத்தை எதிர்த்தார்கள்; பெரியாருக்கு மொழிபற்றி என்ன தெரியும்? பெரியார் இலக்கிய வாதியா? என்று கூறி, தங்களது 'மேதாவித்தனத்தை' காட்டினர். ஆனால் தந்தை பெரியார் அதனை சிறிதும் லட்சியம் செய்யாது எதிர் நீச்சல் அடித்து, தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தில் பெரு வெற்றி கண்டார். உலகம் முழுவதும் பெரியாரின் மாற்றங்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

ஒரு மொழி வளர, புதுமை - புத்தாக்கம் நாளும் புதுப்புது படைப்பு வழிகளை அம்மொழி அறிஞர்கள் - ஆய்வாளர்கள் கண்டுபிடித்து புதிய சொற்களை - கருத்தியல்களைத் தரத் தயங்கவே கூடாது!

"பழையன கழிதலும்

புதியன புகுதலும்!"

காலத்தால் தவிர்க்க முடியாது என்று பாடியவர்களே பழைமைக் குட்டையிலிருந்து வெளியேற மறுக்கலாமா?

இலக்கியவாதியா இவர் என்று தந்தை பெரியாரை பார்த்து கேட்ட சில தமிழ் படித்த பெரு மக்களுக்கு - இலக்கியம் என்பது ஒரு பிரிவு; உயர்ந்த எண்ணங்களின் சிறந்த தொகுப்பு - என்று கூறிய எமர்சனின் கருத்து ஏனோ அவர்களுக்கு நினைவுக்கு வரவில்லை போலும்!

தந்தை பெரியார், அவர்கள் அன்னை நாகம்மையார் மறைவின்போது 'குடிஅரசு' வார ஏட்டில் எழுதியது கண்ணீர் கடலின் பரப்பைக் காட்டும் ஒரு தலை சிறந்த இலக்கியம் என்பதை எவரே மறுக்க முடியும்?

இரங்கல் இலக்கியம் என்ற ஒன்றைத் தனியே பகுத்து, அதில் பல தலைவர்கள், குறிப்பாக சர் ஏ.டி. பன்னீர்செல்வம், திராவிடர் கழக முதல் பொருளாளர் பழைய கோட்டை இளைய பட்டக்காரர், மறைந்த பி. அர்சுனன் ஆகியோர் மறைவிற்கு தந்தை பெரியார் எழுதிய குடிஅரசு தலையங்கங்கள்! அறிக்கைகள் ஒப்பற்ற இலக்கியம் என்பார் நூற்றாண்டு விழா நாயகர் பெரும்புலவர் ந. இராமநாதன் அவர்கள். தந்தை பெரியார் மறைவுச் செய்தி வந்தவுடன் இரங்கல் கவிதையை ஏடுகளுக்கு எழுதி அனுப்பிய  கவியரசர் கண்ணதாசன் அவர்களது கவிதை படிப்போரை அழ வைக்கும்! (புரட்சிக் கவிஞர் ஏ.டி. பன்னீர்செல்வம் மறைவின் போது எழுதிய கவிதைகள்)

சிலவரிகள்தான் என்றாலும் மறக்க முடியாத உணர்ச்சியின் ஊற்றெனப் பொங்கி  வெளிவரும் இதைவிட சிறந்த இரங்கல் இலக்கியம் தேடவும் வேண்டுமோ? அதை கவிதை  வரிகளில்

"சரித்திரம் இறந்த செய்தி

தலைவனின் மரணச் செய்தி;

விரித்ததோர் புத்தகத்தின்

வீழ்ச்சியைக் கூறும் செய்தி;

நரித்தனம் கலங்கச் செய்த

நாயகன் மரணச் செய்தி

மரித்தது பெரியாரல்ல;

மாபெரும் தமிழர் வாழ்வு!

இறக்கவே மாட்டார் என்று

இயற்கையே நம்பும் வண்ணம்

சிறக்கவே வாழ்ந்த வீரன்

சென்றதை நம்புவேனா?

மறக்கவா முடியும் அந்த

மன்னனை; அவன் எண்ணத்தை

துறக்கவா முடியும்; அய்யோ

துயரமே உனக்கே வெற்றி"

"கண்ணதாசன்" என்ற  அவரது பெயரில் கவியரசர் கண்ணதாசன் நடத்திய அவரது ஏட்டின் 1974 ஜனவரி மாத இதழில் எழுதிய கவிதை இது!

செட்டி நாட்டுப் பகுதியில் செத்தவர்களைச் சுற்றி தாய்மார்கள்கூடி அழுதிடும் போது தானே நீர் வீழ்ச்சிபோல வந்து விழும் ஒப்பாரி கவிதை வரிகள் எல்லாம்கூட பிற்காலத்தில் அவரால் திரைப் பாடல்களாக மாறிய 'ரசவாதமும்" மகிழத்தக்கதே!

புதிய நடை, பொலிவுடன் கருத்துகள், புது வெள்ளமென பாய்தல் தமிழ் இலக்கியத்திற்கு கருவூலச் சேர்க்கை அல்லாமல் வேறு என்ன?

இந்த இரங்கல் இலக்கியம் பற்றி மேலும் உங்களை இலக்கிய சந்தைக்கு அழைத்துச் செல்வேன்; காத்திருங்கள்!


No comments:

Post a Comment