பகவத் கீதை சர்ச்சை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

பகவத் கீதை சர்ச்சை

பகவத் கீதை பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து தினமணி கீழ்க்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது.

"காங்கிரஸ் மூத்த தலைவரும் மேனாள் ஒன்றிய அமைச்சருமான மோசினா கித்வாயின் சுயசரிதை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல் பேசுகையில், பகவத் கீதை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.

அவர் பேசுகையில் இஸ்லாமிய மதத்தில் ஜிஹாத் எனப்படும் புனிதப்போர் குறித்து நிறைய விவாதங்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. நல்ல நோக்கங்களும், நல்ல விஷயங்களைச் செய்வதும் இருந்தபோதிலும் அதை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்றால் ஒருவர் பலப்பிரயோகத்தை பயன்படுத்தலாம். குர்ஆனில் மட்டுமின்றி மகாபாரதத்திலும் பகவத் கீதை பகுதியில் ஜிஹாத் குறித்து அர்ஜுனனிடம் கிருஷ்ணர் பேசுகிறார். குர்ஆன், கீதை ஆகியவற்றைத் தவிர கிறிஸ்தவ மதத்திலும் ஜிஹாத் உள்ளது. அனைத்து விஷயங்களையும் விளக்கிய பிறகும் மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் ஆயுதத்துடன் வருகிறார்கள். அதை ஜிஹாத் என்றோ தவறானது என்றோ கூற முடியாது என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் சிவராஜ் பாட்டீலின் கருத்தை மறுத்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம்ரமேஷ், ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டார். அந்தப் பதிவுகளில் அவர் கூறியிருப்பதாவது:

எங்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான சிவராஜ் பாட்டீல், பகவத் கீதை குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் ஏற்புக்குரியதல்ல. தனது பேச்சு தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இந்திய நாகரிகத்தின் அடித்தளத் தூணாக பகவத் கீதை உள்ளது என் பதே எங்கள் நிலைப்பாடாகும்.

இது தொடர்பாக நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தனது 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா புத்தகத்தில் எழுதுகையில் கீதையின் செய்தி என்பது எந்த ஒரு இனத்துக்கோ மதத்துக்கோ சொந்தமானதல்ல. பிராமணர்களாகட்டும் இதர ஜாதிகளைச் சேர்ந்தவர்களாகட்டும்; கீதையின் கருத்துகள் அனைவருக்கு மானவை. அனைத்துப் பாதைகளும் தன்னையே வந்தடைவதாக அது கூறுகிறது. கீதை எழுதப்பட்டு 2,500 ஆண்டுகளில் இந்திய சமூகம் தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் ஆளாகியுள்ளது. அனுபவத்தைத் தொடர்ந்து அனுபவங்களும், சிந்தனையைத் தொடர்ந்து சிந்தனைகளும் மாறி வந்துள்ளன என்று நேரு குறிப்பிட்டுள்ளார் என்று ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்துள்ளார். சிவராஜ் பாட்டீலின் ஜிஹாத் கருத்துகளை பாஜக விமர்சித்துள்ளது. இதுபற்றி அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரேம் கலா கூறியதாவது: 

ஹிந்து, ஹித்துத்துவம். ஹிந்துஸ்தானை இழிவுபடுத்தும் சதியில் காங்கிரஸ் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சிவராஜ் பாட்டீலின் கருத்துகள் மற்றொரு அத்தியாயமாகும். போகோ ஹராம், தலிபான் ஆகியவற்றுடன் ஹிந்துத்துவத்தை ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர்கள் கடந்த காலங்களில் பேசி வந்துள்ளனர். காவி பயங்கரவாதம் என்று மேனாள் ஒன்றிய அமைச்சர்களான சுஷில்குமார் ஷிண்டேயும் ப.சிதம்பரமும் பேசியுள்ளனர். பகவத் கீதை என்பது மனித சமூகத்தின் சித்தாந்தமாகும். காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டுள்ளது" என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத்பூனா வாலா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் ஆம் ஆத்மி கட்சியின் கோபால் இதாலியா, ராஜேந்திரபாலைத் தொடர்ந்து ஹிந்துக்கள் தொடர்பாக வெறுப்பூட்டும் வகையிலும் வாக்கு வங்கி அரசியல் ரீதியாகவும் காங்கிரஸைச் சேர்ந்த சிவராஜ் பாட்டீல் பேசியுள்ளார். அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் ஜிஹாதை போதித்ததாக அவர் கூறியுள்ளார். ஹிந்து என்றால் காவி பயங்கரவாதம் என்று அர்த்தப்படுத்திய காங்கிரஸ், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எதிர்த்தது. ராமர் இருந்தது குறித்து கேள்வி எழுப்பியது; ஹிந்துத்துவம் என்றால் அய்எஸ் பயங்கரவாதம் போன்றது என்று கருத்து தெரிவித்துள்ளது' என்றும் கூறியுள்ளார்."

பார்ப்பனர்கள் எங்கு இருந்தாலும் வருண தர்மத்தைக் காப்பதிலும், கீதை, மனு முதலியவற்றிற்கு வக்காலத்து வாங்குவ திலுமே குறியாக இருப்பார்கள். 

கீதையைப்பற்றி சொல்லும் பொழுது 'ஒரு முட்டாளின் உளறல்' என்றார் அண்ணல் அம்பேத்கர்.

பாரதம் நடந்த கதையல்ல; கீதை மகாபாரதத்தின் இடைச் செருகல். குருச்சேத்திரப் போர் உண்மையில் நடந்ததல்ல. கிருஷ்ணன் என்ற நபர் இருந்திருப்பார் என்பது மிகுந்த சந்தேகத்திற்குரியது என்பதோடு விவேகானந்தர் நிறுத்திக் கொள்ளவில்லை. அடுத்துச் சொல்லி இருப்பதுதான் முக்கியமானது. 

போர்க்களத்தில் இரு தரப்புப் படையினர் ஒருவரோடு ஒருவர் மோதிப் போர் செய்வதற்குரிய இறுதி கட்டளையை எதிர்பார்த்து நின்றுகொண்டிருந்தபொழுது ஞானம், பக்தி, யோகம் ஆகியவைபற்றி விரிவான விவாதம் எப்படி நடைபெற்றிருக்க முடியும்? கூச்சலும், குழப்பமும் நிறைந்த போர்க்களத்தில் கிருஷ்ணனும் அர்ஜுனனும் பேசிய ஒவ்வொரு சொல்லையும் குறிப்பெடுத்துக் கொள்ள அங்கே சுருக்கெழுத்தாளர் யாராவது இருந்தார்களா?" என்ற வினாவை எழுப்புகிறாரே விவேகானந்தர்! (ஆதாரம்: 'கீதை பற்றிய சிந்தனைகள்" பக்கம் 1-6).

இதை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி சொன்னதில்லை; சொன்னது விவேகானந்தர் என்பது நினைவிருக்கட்டும்.

காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே, காந்தியாரைக் கொன்றதற்குக் கீதையின் சுலோகத்தை நீதிமன்றத்தில் எடுத்துக்காட்டினானே! தர்மத்தைக் காப்பாற்ற அதர்மத்தைச் செய்யலாம் என்று கீதை கூறுவதாகக் கோட்சே கூறவில்லையா?

'வியாசர் விருந்து' என்ற தலைப்பிலும், 'சக்ரவர்த்தித் திருமகன்' என்ற தலைப்பிலும் மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் 'கல்கி'யில் தொடராக ராஜாஜி எழுதி வந்தது அன்பர்களுக்குத் தெரியும் அதன் பின்னர் பாகவதத்தை எளிய தமிழில் எழுதலாமே என்று சதாசிவம் தமது யோசனையை ராஜாஜியிடம் வெளியிட்டார். அதற்கு ராஜாஜி கூறிய பதில் சிந்திக்க வைப்பதாகும்.

'சதாசிவம் எனக்குப் பாகவதத்தில் நாட்டமில்லை. அதில் பகவானின் லீலைகளும், அற்புதங்களும் மிகுதியாக உள்ளன' என்று குறிப்பிட்டுள்ளார்.

('கல்கி' 4.10.2009 பக்கம் 7)

கீதாசிரியன் 

பகவான் கிருஷ்ணனின் அடியார்கள் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? எதிர்பார்க்கலாமா?

 

No comments:

Post a Comment