காந்தியார் - பெரியார் : ஒப்பீடுகளுக்கு அப்பால் உறங்கும் உண்மைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 1, 2022

காந்தியார் - பெரியார் : ஒப்பீடுகளுக்கு அப்பால் உறங்கும் உண்மைகள்

முனைவர் இரா.சுப்பிரமணி

சேலம் பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறை இணைப்பேராசிரியர், 

இயக்குநர்: தந்தை பெரியார் இருக்கை - பேரறிஞர் அண்ணா இருக்கை - முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மய்யம்

வரலாற்றுப்புகழ்மிக்க தலைவர்களையும், அவர்களது தத்துவங்களையும், அவர்களது போர்க்களங்களையும் ஒப்பிட்டு நோக்கு வதும், அதற்குள் பொதிந்துள்ள ஒற்றுமையில் வேற்றுமைகளையும், வேற்றுமையில் ஒற்று மைகளையும் காணவிழைவதும் வரலாற்றை விருப்பு வெறுப்பின்றி உள்வாங்கிக்கொள்ள முன்னெடுக்கப்படும் முயற்சி ஆகும். அப்படி யான ஒப்பீட்டு உத்தியைப் பயன்படுத்தி மகாத்மா காந்தியையும் தந்தை பெரியாரை யும் ஒப்புநோக்குகையில் பெரியார் என்னும் ஆளுமை ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட வானமாய், எல்லையற்ற எல்லையின் காண முடியாத எல்லையாய் விரிந்து நீண்டு நிற்கிறது. யாருடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் பெரியார் தனித்தே நிற்கிறார்; தனித்துவ மாகவே நிற்கிறார்.

காந்தியடிகள் தேசவிடுதலைக்காக காங்கிரசு என்னும் தேசிய இயக்கத்தை வழி நடத்தினார். பெரியார் பகுத்தறிவு, சுய மரியாதையை அடிப்படையாகக்கொண்ட சமூக விடுதலைக்காக தன்மான இயக்கத்தை நிறுவினார். காந்தியடிகள் இந்தியன் ஒப்பீனி யன், யங் இந்தியா, நவஜீவன், ஹரிஜன் சேவக், ஹரிஜன் பந்து போன்ற ஏடுகளை நடத்தி கருத்துகளைப் பகிர்ந்தார். பெரியார் குடி அரசு, புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை, மாடர்ன் ரேஷனலிஸ்ட் போன்ற ஏடுகள் மூலம் கருத்துப் பரப்பலில் ஈடு பட்டார். காந்தியடிகளும் மக்கள் இயக்கங் களை மையமாக வைத்துப் போராட்டங்களை முன்னெடுத்தார். பெரியாரும் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்தார். காந்தி யும் சிறைப்பட்டார், பெரியாரும் சிறைப் பட்டார்.

இருப்பவைகளெல்லாம் அப்படி அப்படியே இருக்கவேண்டும்  என்ற மய்யப்படுத்தப்பட்ட அரசியலின் அடை யாளமாக விளங்கியவர் காந்தி, இருப்ப வைகளெல்லாம் முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும் என்ற  சமூக விடுதலையின்  அடையாளக் குறியீடாக விளங்கியவர் பெரியார்.

தனது கல்வி, அறிவு, மக்கள் செல்வாக்கு, மேட்டுக்குடி தொடர்பு, ஆங்கிலேயர் ஆதரவு போன்றவற்றைப் பயன்படுத்தி தன் னைக் கவனமாகக் கட்டமைத்துக் கொண் டவர் காந்தியடிகள். தனது எளிமை, உழைப்பு, கூர்ந்த அறிவு, மக்கள் நேயம், துணிவு, போர்க்குணம் போன்றவற்றால்  பெல்லாரி சிறையில் இருக்கும்போதே இயக்கத்தின் தலைவராக்கப்பட்டவர் தந்தை பெரியார். இப்படி காலவரிசைப்படி காந்தியடிகள்- பெரியார் குறித்த நிகழ்வுகளை வரிசைப் படுத்தலாம்தான். ஆனால், இருவரையும் புரிந்துகொள்வதற்கு நுட்பமான பார்வை தேவைப்படுகிறது. 

இந்தியாவில் காந்தி குறித்து கட்டமைக் கப்பட்ட பிம்பத்தை உடைத்த இருபெரும் ஆளுமைகள் தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ஆவர். 

காந்தி நாட்டை நேசித்தார், பெரியார் சமூகத்தில் வாழும் மக்களை நேசித்தார். காந்தி சனாதனத்தைப் பாதுகாக்க முயன்றார், பெரியார் புனிதங்களை புதைகுழிக்கு அனுப்பினார். காந்தி ஜாதியின் இருத்தலை ஆதரித்தார், பெரியார் ஜாதியின் ஆணி வேரையே அசைத்தார். காந்தி தேசியத்தின் காவலர், பெரியார் தேசியம் என்பது கற்பிதம் என்றார். காந்தி தான் சொன்னதே வேதம் என்றார், பெரியார் மக்கள் கருத்தே இறுதி யானது என்றார். காந்தி தான் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ள தயங்குவார், பெரியார் தனது முடிவை மக்களின் உணர்வுகளுக்கேற்ப தகவமைப்பார். இப்படி காந்தியமும் பெரியா ரியமும் எதிரெதிர் திசையில் பயணித்த  இரு வேறு   தத்துவங்களாகும்.  

பெரியார் காந்தியாரைப் பற்றிக் கூறும்போது, தலையங்கத்தில் ’தோழர் காந்தியார்- தான்  இரு கூட்டத்தாரிடையேயும் நல்ல பிள்ளை யாவதற்கு இவ்விதத் தந்திரமொழிகள் கூறி இருகட்சியாரையும் ஏமாற்றிப்பெருமை அடைவதை அனுசரித்து வருகிறார்’ என்று கூறி அதற்கு உதாரணமாக...

“வர்ணாசிரம தர்மம் வேண்டும். ஆனால் எனது வர்ணாசிரமம் வேறு” என்பார்; “ராம ராஜ்யத்துக்காக நான் பாடுபடுகிறேன். ஆனால் எனது ராமன் வேறு” என்பார்; “ஜாதி பாகுபாடுகள் இருக்க வேண்டும். ஆனால் ஜாதி என்பதற்கு எனது கருத்து வேறு”  என்பார்; “ராஜாக்கள், ஜமீன்தார்கள் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஏழைகளுக் காக இருக்க வேண்டும்” என்பார்; “பிரிட்டி ஷாருக்கு இந்திய அரசியலில் சில பாது காப்புகள் இருக்க வேண்டும். ஆனால் அது இந்தியாவின் நன்மைக்காக இருக்க வேண் டும்” என்பார்; “ஏழைகள்,  தொழிலாளர்கள் ஷேமமாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பெட்டியில் பணம் இருக்கக்கூடாது”  என்பார்; “தீண்டாமை ஒழிய வேண்டும், ஆனால் தீண்டப்படாதவர்கள் சூத்திரர்களுக் குச் சமானமாய் கருதப்படவேண்டும்” என் பார்; “தீண்டத்தகாதவர்களுக்குக் கோவிலுக் குள் சமஉரிமை இருக்க வேண்டும். ஆனால் கோவிலுக்குள் சூத்திரர்கள் இருக்கும் இடத்தில் தான் அவர்கள் இருக்க வேண்டும்” என்பார். 

காந்தியின் ‘ஆனால்’ என்ற சொல்லுக்குள் நழுவும் அரசியலைப் பொதுவெளியில் விவாதத்திற்கு வைக்கும் பெரியார், காந்தி யின் நிலைப்பாட்டில் மறைந்துள்ள பேருண் மைகளை வெளிக்காட்டுகிறார்.

காந்தியின் சொல்லுக்குள் இருக்கும் முரணை வெளிப்படுத்தும் பெரியார், அவ ரின் போராட்டங்களுக்குள் மறைந்திருக்கும் நிகழ்ச்சி நிரல்களையும் விளக்குகிறார். ரகசியம் வெளிப்பட்டதா? என்ற தலைப்பில், குடிஅரசு (19.02.1933) இதழில் வெளியான தலையங்கம் காந்தியின் போராட்டத்தின் நோக்கத்தை வெளிப்படையாகவே அம் பலப்படுத்தி உள்ளது. அத்தலையங்கத்தின் ஒரு பகுதி பின்வருமாறு உள்ளது;

“நான் இன்று இந்தக்கிளர்ச்சி (உப்பு சத் தியாக்கிரகம்) ஆரம்பிக்காவிட்டால் இந்தியா வில் பொது உடமைக்கிளர்ச்சி ஏற்பட்டுவிடும். ஆகையால் (அதை அடக்கவும் மக்கள் கவனத்தை அதில் செல்லவிடாதபடி வேறு பக்கத்தில் திருப்பவும்) இதை (உப்பு சத்தி யாக்கிரகத்தை) ஆரம்பிக்கின்றேன்” என்று சொல்லியிருக்கிறார்.

அன்றியும் இவ்வித கிளர்ச்சிகளால் சர்க்காருக்கு ஏதாவது கெடுதி ஏற்பட்டதா அல்லது அவர்களின் நிலைமைக்கு ஏதாவது குறைவு ஏற்பட்டதா என்று பார்த்தால் யாதொரு குறைவும் ஏற்பட்டுவிடவில்லை. அதுபோலவே தோழர் காந்திக்கும் ஏதாவது கெடுதியோ குறைவோ ஏற்பட்டதா என்று பார்த்தால் அதுவும் ஒரு சிறிதுமில்லை. அதற்குப் பதிலாகக் காந்திக்கு உலகப் பிரசித்தமான பெரிய பேர் ஏற்பட்டுவிட்டது. உலகத்திலுள்ள பாதிரிகளும், செல்வவான் களும் அவர்களை ஆதரிப்பவர்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ண முமாய் புகழ்ந்த வண்ணமாகவே இருக்கிறார் கள். காந்தியவர்கள் சிறைப்பட்டதிலாவது அவருக்கு ஏதேனும் கெடுதி ஏற்பட்டதா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. சிறையில் அவருக்கு ராஜபோகத்தில் குறைவில்லை...”

காந்தி தான் நடத்திய ஒரு  போராட்டத்தின்  முடிவு பற்றிக் குறிப்பிடுகையில் “இந்தச் சர்க் காரோடு நான் ஒத்துழைக்க வேண்டியவனாகி விட்டேன். ஏனெனில் சட்டசபைகள் மூலம் அனேக காரியங்கள் ஆகவேண்டியிருக்கின் றது. ஆதலால் ஒத்துழையுங்கள் இல்லா விட்டால் பொதுஉடமைக்காரரும் சமதர் மக்காரரும் சட்டசபையைக் கைப்பற்றி தேசத்தை - மனித சமூகத்தைப் பாழாக்கி விடுவார்கள்”  என்று குறிப்பிடுகிறார்.

இந்திய விடுதலைக்காக 139 நாள்கள் உண்ணாநிலைப் போராட்டங்களில் ஈடு பட்டு, 17 முறை சிறைச்சென்ற காந்தியாரின் அரசியலுக்குள் மறைந்திருக்கும் நிகழ்ச்சி நிரல் இது என்பதனைப் பெரியாரின் எழுத் துகளிலிருந்து நம்மால் புரிந்துகொள்ள முடி கிறது. 

இந்திய வரலாற்றை அறுபதுக்கும் மேற் பட்ட ஆளுமைகளின் வழியே வெவ்வேறு கோணங்களில் ஆய்வுக்குள்ளாக்கி ’தி கோர்ட்டிசன், தி மகாத்மா அண்ட் தி இத்தாலியன் பிராமின்’ என்ற தலைப்பில் பல் வேறு தகவல்களுடன் இந்திய வரலாற்றின் கதைகளை எடுத்துரைத்திருக்கும் கேரளா வின் வரலாற்று ஆய்வாளர் மனு எஸ்.பிள்ளையின் ஆய்வை மேற்கோள்காட்டி தி இந்து தமிழ் நாளிதழில் செ.இளவேனில் (2019) காந்தியையும் பெரியாரையும் ஒப்பிட்டு எழுதியுள்ள கட்டுரை நம் கவனத்தை ஈர்க்கிறது.   இந்நூலில் ‘தேசவிரோதிகளின் காலகட்டத்தில் பெரியார்’ என்னும் தலைப் பில் அமைந்துள்ள பெரியாரைப் பற்றிய கட்டுரையின் ஒரு பகுதியில் ‘40 ஆண்டு களுக்கு முன்பு காலமாகிவிட்ட பெரியார் இன்று உயிரோடு இருந்திருந்தால் ‘தேச விரோதிகளின்’ பட்டியலில் எந்த இடத்தில் இருப்பார் என்பதைக் கற்பனை செய்யத் தேவையில்லை. நல்லவேளையாக, அவர் வாழ்ந்த காலத்தில் ‘தேசவிரோதிகள்’ என்பது போன்ற அடைமொழிகள் உருவாக்கப்பட வில்லை. காந்தியின் எதிரி என்ற அளவி லேயே அவர் அறியப்பட்டார்’ என்று தொடங்கும் அக்கட்டுரையில் ஆய்வாளர் மனு காந்தியையும், பெரியாரையும் இங்ஙனம் ஒப்பிட்டு  எழுதி உள்ளார்.  

காந்தியையும் பெரியாரையும் நேருக்கு நேர் நிறுத்திக் காட்சிப்படுத்தும் இக்கட்டுரை இருவரது சமூக அரசியல் கருத்து நிலையினை மிகத் துல்லியமாக கணிக்கிறது.  “ராமாயண நாயகியான சீதையை இந்தியப் பெண்களின் தூய்மைக்கும் சுய தியாகத் துக்கும் உதாரணமாகக் காந்தி வர்ணிக்கும் போது, அந்த இதிகாசத்தையே அபத்தம் என்று சாடியவர் பெரியார். லட்சியப் பெண்ணை உருவாக்குவதற்காகக் காந்தி முயன்று கொண்டிருந்தபோது, பெரியாரோ சாதாரணப் பெண்களைத் தெய்வங்களாக மாற்றக்கூடாது என்பதில் உறுதியாக இருந் தார்” என்னும் ஆய்வாளர் மனுவின் பார்வை நமக்கான புதிய கோணத்தை அளிப்பதாக உள்ளது. 

மகாத்மா காந்தியின் கொள்கைகள் மீதான ஆதரவும், எதிர்ப்பும் அவரவர் அர சியல் கருத்துகளின் வழியாகவே நோக்கப் படுகிறது. ஆனால் காந்தியின் அன்றாட வாழ்வியல் என்பது சற்றே மாறுபட்ட வகை யில் இருந்திருப்பதனைக் காணமுடிகிறது. காந்தியடிகளின் உணவு, உடை, இருப்பிடம், வழிபாடு, பயணம், பணிவிடைகள், தங்கு மிடம், ஆசாரம், அனுஷ்டானம், உதவியா ளர்கள் போன்ற அகம் சார் வாழ்வியல் என்பது பொதுவாழ்வில் அவர் முன்னிறுத்திய எளிமை என்ற கட்டமைக்கப்பட்ட பிம்பத் திற்கு மாறாகவே இருந்தன. பலசமயம் அவை காந்தியடிகளின் பொதுவாழ்வின் அடையாளமாகக் காட்டப்பட்ட ஒப்பனை களுடன் முரண் பட்டதாகவே காணப்பட்டன. இவைகளுக்கு நேர் எதிரான தன்மை களையும், இயல்புகளையும் கொண்டதாகவே பெரியாரின் சமூக அரசியல் பயணத்தின் வாழ்வியல் கூறுகள் அமைந்திருந்தன. இதி லிருந்து அரசியலையும் கொள்கைகளையும் ஒப்பனைகளோடு ஒருவரும், ஒப்பனை களற்று ஒருவரும் எங்ஙனம் அணுகினர்  என்பதனை  எளிதில் புரிந்து கொள்ளலாம்.  

காந்தியின் நாட்டு விடுதலை என்ற புள்ளி யினின்று முரண்பட்டு சமூக விடுதலையை மய்யமாக வைத்துத் தமது அரசியலை முன்னெடுத்தவர் பெரியார். தேசியம், காந்தியம், கடவுள், ஜாதியம், சமயம், புனிதம் என்று கட்டமைக்கப்பட்ட மய்யக்கருத்தியல் களை உடைப்பதிலேயே பெரியார் தனது முழு ஆற்றலையும் செலவிட்டார்.

காந்தி தமது போராட்டத்தின் விளை பயனாக எத்தகையை மாற்றம் உருவாகும் என்பதனைச் சுட்டும்போது  “புதிய சீர்திருத் தம் என்பது அதன்பாட்டுக்குத் தானாகவே சைமன் கமிஷன் தீர்மானித்தபடி அல்லது ஒரு வழியில் சற்று அதிகமானால் மற்றொரு வழியில் சற்று குறைந்து ஏதோ ஒரு வழியில் அரசாங்கத்தாருக்கும், முதலாளிமார்களுக் கும், சுதேசராஜாக்கள், ஜமீன்தார்கள், பெரிய உத்தியோகஸ்தர்கள், பார்ப்பனர்கள் ஆகிய வர்களுக்கும் எவ்வித மாறுதலும் குறைவும் இல்லாமலும் அவர்களுக்கு என்றென்றைக் கும் எவ்வித குறையும் மாறுதலும் ஏற்பட முடியாமலும் ஒரு சீர்திருத்தம் வரப்போகின் றது - வந்தாய் விட்டது என்பது உறுதி” என்கிறார்.

போராட்டம் யாருக்குச் சாதகமானது, போராட்டத்தின் விளைபயன் யாருக்குச் சாதகமானது என்பதனைக் காந்தியின் அணுகுமுறையிலிருந்து நாம் பெற்றுக்கொள் ளும் செய்தியாக உள்ளது. காந்தியிடமிருந்து பெரியார் பிரிந்துவந்து உருவாக்கிய பகுத் தறிவு, சுயமரியாதை இயக்கங்களின் விளை பயன்தான் இத்தகைய சமூகப்பேரெழுச் சிக்கும், விழிப்புணர்வுக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் காரணம் என்று முன்வைக் கப்படும் கருத்து உற்று நோக்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளது.

பெரியாரின் போராட்டங்கள் குறித்து கனடா நாட்டுக் கவிஞர் டாம் மெக்காலே தனது நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ள கருத்து மிக முக்கியமானதாகும். அவர் “பிராந்தியத்தில் பெரியாரின் செயல் வடிவங்கள், நுணுக்கங்கள், உறுதி குலையாத பகுத்தறிவு, பழைமைக்கு எதிரான போக்கு, மதவாதிகளுக்கு எதிரானநிலை ஆகிய வற்றை லெனின், ட்ராஸ்கி போன்ற புரட்சி யாளர்கள் எடுத்திருந்தாலும், பெரியாரின் பகுத்தறிவு மேலோங்கி நிற்கிறது. நடை முறைக்கு ஏற்றதாகவும் இருந்தது. இதை உலகில் பார்ப்பது மிகவும் அரிது. பெரியாரின் பாரம்பரியம் ஒரு மதத்தத்துவத்தைப் போல் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடங்கிவிடாமல், விரிந்து பயணம் செய்யும் தத்துவமாக விளங்குகிறது.

பெரியாரின் தத்துவம் ஒரு புரட்சிகரமான தத்துவம். இந்தக் காலச் சூழலுக்குத் தேவை யான தத்துவம். முன்னேற்றப் பாதையில் செல்லவைக்கும் தத்துவம். மனிதநேய தத்துவம். அத்தத்துவத்தை இந்த உலகம் பயன்படுத்துவது மிகவும் கடினம். அதனால் தான் பெரியாரை ஒரு சிலையாகவோ பெரியாரின் தத்துவம் மற்ற மதத்தத்துவத்தைப் போல இல்லாமல், இறுக்கப் படாமல் இயற் பியல் தத்துவமாக இயங்கிக்கொண்டே இருக் கிறது” என்கிறார்.

இதனால்தான் பெரியார் என்கின்ற போர்க்குணம் கொண்ட தனித்துவமிக்க தத்துவம், மற்ற எந்தத் தத்துவங்களோடும் ஒப்பு நோக்கிப் பார்க்க இயலாத தன்மை கொண்டதாக உள்ளது.

காந்தி போன்ற தலைவர்களின் அரசிய லால் உருவான மாற்றங்கள் முன்னுதார ணமாகச் சுட்டப்பட்டாலும், தந்தை பெரியார் சமூக அமைப்பு முறையில் உருவாக்கியுள்ள மாற்றங்கள் முன்னேற்றத்திற்கான அடிப் படைக் கட்டமைப்பை உருவாக்கும் முன் னேற்றகரமான சிந்தனை களைக் கொண்ட தாக இருந்தது. ஆதலால்தான் காந்தி போன்ற அரசியல் தலைவர்களிலிருந்து பெரியார் வேறுபட்டு நிற்கிறார்.

ஆனால் அந்தக் காந்தியார் மறைவுற்ற செய்தி கேட்ட பெரியார் “காந்திய வர்களின் விசனிக்கத்தக்க திடீர் மறைவு என்னைத் திடுக்கிட வைத்தது. இந்திய மக்களனைவ ரையுமே இந்நிகழ்ச்சி திடுக்கிட வைத்திருக்கு மென உறுதியாக நம்புகிறேன். கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகவே, தோழர் காந்தியார் இப்பரந்த உபகண்ட மக்களின் எதிர்கால வாழ்வுக்கு வழி காட்டியா யிருந்து வந்தார். மக்களுக்கு அவரது தொண்டு மகத் தானது. அவரது இலட்சியக் கோட்பாடுகள் உலக மரியாதையினையேற்று விட்டன... காந்தியாரின் இடத்தை நிறைவு செய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை. மக்கள் தங்கள் அரசியல், மத வேறுபாடுகளை மறந்து, சகோதர பாவத்துடன் நடந்து கொள் வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதை யாகும்” (குடிஅரசு,7.2.1948) என்று  எழுதினார். இந்த தேசத்திற்கே காந்தி தேசம் என்று பெயர் வைக்க வேண்டும் என்றார். இதுவே பெரியாரின் அணுகுமுறை.

காந்தியடிகளின் அரசியலும், கொள்கை களும், நோக்குநிலையும், போராட்டங்களின் தன்மைகளும், அணுகுமுறைகளும் மறை பொருள் கொண்ட நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டவைகளாகவே இருந்தன. எனவே தான்,  பெரியார் ஒப்பீடுகளுக்கு அப்பாற் பட்ட வானமாய், எல்லையற்ற எல்லையின் காணமுடியாத எல்லையாய் வரலாற்றின் பக்கங்களில் உயிர்ப்பாய் வலம் வருகிறார்; களத்தில் போராட்டங்களாய் உருமாறுகிறார்.

No comments:

Post a Comment