தந்தை பெரியாருடைய சிலைக்கு இனிமேல் ஆபத்து வரும் என்று சொன்னால் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 1, 2022

தந்தை பெரியாருடைய சிலைக்கு இனிமேல் ஆபத்து வரும் என்று சொன்னால்

பெரியார் இயக்கத் தொண்டர்கள் மட்டுமல்ல - ஒட்டுமொத்த தமிழ்நாடும் சேர்ந்து எதிர்க்கின்ற நிலை உருவாகும்

திருவாரூர் மாநாட்டில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை!

திருவாரூர், அக்.1  இன்றைக்கு ஒருவன் பேட்டி கொடுக் கிறான், ‘‘தந்தை பெரியாருடைய சிலையை தமிழ்நாட்டில் இருப்பதற்கு அனுமதிக்கக் கூடாது'' என்று. தந்தை பெரியாருடைய சிலைக்கு இனிமேல் ஆபத்து வரும் என்று சொன்னால், பெரியார் இயக்கத் தொண்டர்கள் மட்டுமல்ல - ஒட்டுமொத்த தமிழ்நாடும் சேர்ந்து எதிர்க் கின்ற நிலை உருவாகும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் அவர்கள்.

திருவாரூர்: சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு

கடந்த 4.9.2022 அன்று மாலை திருவாரூரில் நடை பெற்ற சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

தந்தை பெரியார் அவர்களின் 

உண்மையான வாரிசு

மிகுந்த எழுச்சியோடு நடைபெறுகிற இந்த மாநாட் டைத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கின்ற - 90 வயதையும் நெருங்குகிற பருவத்திலேயும் 18 வயது இளைஞரைப்போல சுற்றிச்சுற்றி தமிழ்நாட்டில் பயணம் செய்துகொண்டிருக்கின்ற தந்தை பெரியார் அவர்களின் உண்மையான வாரிசாக நின்று, தமிழ்நாட்டில் பகுத் தறிவுப் பகலவனாக திகழ்ந்து கொண்டிருக்கின்ற அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய ஆசிரியர் கி.வீரமணி அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எழுச்சியுரை ஆற்ற வருகை தந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சகோதரர் ஆர்.எஸ்.பாரதி அவர்களே,

இங்கே எனக்குமுன் உரையாற்றி அமர்ந்திருக்கின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அருமைத் தோழர் இரா.முத்தரசன் அவர்களே,

விரைவில் இங்கே வருகை தந்து உரையாற்ற விருக்கின்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலை வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பிற்குரிய தோழர் தொல்.திருமாவளவன் அவர்களே,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மிக ஆணித்தரமாக உரையாற்றி அமர்ந்திருக் கின்ற அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய என்னுடைய நெருங்கிய தோழர் மு.செந்திலதிபன் அவர்களே,

இந்நிகழ்ச்சியை இங்கு மிகச் சிறப்பாக ஒருங் கிணைத்துக் கொண்டிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் நகர செயலாளர் வாரை எஸ்.பிரகாஷ் அவர்களே,

சிறப்பாக நடத்திக் காட்டுவேன் என்ற உறுதியேற்றார்

இந்நிகழ்ச்சி கடந்த மாதம் 22 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு, இயற்கை இடர்ப்பாட்டினால் அந்த நிகழ்ச்சியை நடத்த முடியாமல் போயிற்று. நிகழ்ச்சி நடக்குமா? நடக்காதா? என்கிற அப்படிப்பட்ட சந்தேகங் கள் இருந்த சூழ்நிலையில், நான் இதை சிறப்பாக நடத்திக் காட்டுவேன் என்கிற உறுதியோடு, உறுதியேற்று, இன்றைக்கு அதை மிக எழுச்சியோடு நடத்திக் காட்டிக் கொண்டிருக்கின்ற செயல்வீரர், திராவிட முன்னேற்றக் கழக திருவாரூர் மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப் பினர் அன்பிற்குரிய தோழர் திரு.பூண்டி கலைவாணன் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாகை மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு அரசின் மீன்வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய என்.கவுதமன் அவர்களே,

மேனாள் அமைச்சர், தமிழ்நாடு அரசின் தாட்கோ தலைவராக இருக்கின்ற அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய திரு.உ.மதிவாணன் அவர்களே,

உரையாற்றி சென்றிருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் அருமைத் தோழர் மாரிமுத்து அவர்களே,

மற்றும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு வரவேற்புரை ஆற்றியிருக்கின்ற வீ.மோகன் அவர்களே,

இணைப்புரையாற்றுகின்ற மரியாதைக்குரிய தஞ்சை ஜெயக்குமார் அவர்களே,

மிகுந்த எழுச்சியோடு இங்கே கலந்துகொண்டிருக் கின்ற அன்பிற்குரிய பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கம்.

வெள்ளம் திசை மாறி இன்றைக்குத் 

திருவாரூர் நகரத்திற்குள் வந்துவிட்டதோ...

சில நாள்களுக்கு முன்பு, வரலாறு காணாத அளவிற் குப் பெய்த மழையின் காரணமாக, கொள்ளிடத்திலே யும், காவிரியிலேயும் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தை நாம் பார்த்தோம். ஒருவேளை அந்த வெள்ளம் வடிந்து விட்டதோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், அந்த வெள்ளம் திசை மாறி இன்றைக்குத் திருவாரூர் நகரத்திற்குள் வந்துவிட்டதோ என்று சொல்லுகின்ற அளவிற்கு, மக்கள் எழுச்சியோடு இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அண்ணாமலை எல்லாம் இனிமேல் இந்தப் பக்கம் கால் வைக்கவே முடியாது. ஒரு வகையில் நான் அண்ணாமலைக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன். நாங்கள் எல்லாம் சற்று தூங்கிக் கொண் டிருந்த நேரத்தில், ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரத் தில், நீங்கள் உறங்காதீர்கள், இந்த சனாதன சக்திகளை எதிர்த்து சமர் புரிய வேண்டிய நீங்கள் உறங்கக்கூடாது; ஓய்வெடுக்கக் கூடாது என்று எங்களை ஊக்கப்படுத்தி இந்தப் பணியிலே ஈடுபடுத்தியதற்காக அவருக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.

ஒன்றியத்தில் இருக்கின்ற ஆட்சி இன்னும் 18 மாதங்களுக்குப் பின்பு நீடிக்காது, நிலைக்காது!

ஒருவேளை அண்ணாமலை அமைதியாக இருந் திருந்தால், நாமும் அமைதியாகத்தான் இருந்திருப்போம். ஆனால், அவர் இங்கே வந்து ஆட்டம்போட - ஏதோ திருவாரூரையே வளைத்துப் பிடித்து விட்டதுபோன்று, இனிமேல் வருகின்ற ஆட்சி எங்களுடைய ஆட்சிதான் என்று இங்கே பிரகடனம் செய்ய - இன்றைக்கு நாங்கள் பிரகடனம் செய்கிறோம் அருமை நண்பர்களே, என் றைக்கும் நீங்கள் தமிழ்நாட்டில் ஆட்சியை மட்டும் அல்ல - உங்கள் கட்சி இங்கே காலூன்றுவதற்கு வழியே இருக்காது என்று சொல்லுவது மட்டுமல்ல - ஒன்றியத்தில் இருக்கின்ற ஆட்சி இன்னும் 18 மாதங்களுக்குப் பின்பு, உங்கள் ஆட்சி நீடிக்காது, நிலைக்காது என்பதற்குக் கட்டியம் கூறுகிற மாநாடாகத்தான் இந்த மாநாடு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை நான் நினைவூட்ட விரும்புகின்றேன்.

ஆகவே, இன்றைய தினம், இங்கே எல்லோரும் சொன்னார்கள் - மிகச் சிறப்பான இடத்தை நம்முடைய மரியாதைக்குரிய ஆசிரியர் அய்யா அவர்கள் தேர்ந் தெடுத்தார் என்று.

டாக்டர் கலைஞர் பிறந்த மண் என்பது மட்டுமல்ல - தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் வேரூன்றிய ஒரு மண்ணாக திருவாரூர் இருப்பது என்பது ஒன்று - இந்தியாவிலே தமிழ்நாட்டில், பொதுவுடைமை இயக்கம், செங்கொடி இயக்கம் தழைத்தோங்கி இருக்கிற இயக்கம் எங்கள் இயக்கம் இரண்டு - அப்படிப்பட்ட பெருமைமிகு திருவாரூர் மண்ணிலே நடைபெறுகிற இந்த மாநாடு - நான் அந்த சனாதனப் பேர்வழிகளுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அண்ணாமலையும், அவரை சார்ந்திருக்கின்ற வாரிசுகளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். 

திராவிடக் கொள்கையில், பகுத்தறிவுக் கொள்கையில் பசுமை குன்றாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்ற அய்யா ஆசிரியர்!

திருவாரூரிலே நாங்கள் நிமிர்ந்து நின்று பெருமூச்சு விட்டாலே போதும் - நீங்கள் இமயமலைக்கு அப்பால் தூக்கி எறியப்படும் நிலைமை ஏற்படும். ஆகவே, இந்த மாநாடு, திருவாரூரோடு முடிகிற மாநாடு அல்ல; இந்த மாநாட்டு மேடையில் அமர்ந்திருக்கின்ற தலைவர்களை யெல்லாம் பாருங்கள்; எப்படிப்பட்ட தலைவர்கள் இங்கே அமர்ந்திருக்கின்றார்கள். 90 வயதானாலும் இன் றைக்கும் திராவிடக் கொள்கையில், பகுத்தறிவுக் கொள் கையில் பசுமை குன்றாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்ற அய்யா ஆசிரியர் அவர்கள் இங்கே அமர்ந்து இருக் கிறார்கள்.

இடதுசாரி இயக்கத்தினுடைய தள நாயகராக இருக்கிற, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியும் இந்த மேடையில் அமர்ந்திருக்கிறது.

இன்றைக்கு அடித்தட்டு மக்களின், உழைப்பாளி மக்களுடைய இயக்கமாக இருக்கின்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த மேடையில் இருக்கிறது.

இந்திய தேசிய காங்கிரஸ் என்கிற நம்முடைய காங்கிரஸ் பேரியக்கம் இந்த மேடையில் இருக்கிறது.

எழுச்சி நாயகன் வைகோ அவர்களுடைய மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த சகோதரர் செந்திலதிபன் அவர்கள் இங்கே இருக் கிறார்கள்.

அண்ணாமலைக்கு மட்டுமல்ல - அமித்ஷாவுக்கும்கூட இனிமேல் 

இந்த நாட்டிலே இடமில்லை

எனவே, இவ்வளவு பேரும் திரண்டு நாங்கள் நிற்கின்றபொழுது, இந்த மகத்தான ஓர் அணி தமிழ் நாட்டில் உருவாகியிருக்கின்றபொழுது, அண்ணா மலைக்கு மட்டுமல்ல - அமித்ஷாவுக்கும்கூட இனிமேல் இந்த நாட்டிலே இடமில்லை என்று சொல்லுகிற நிலை உருவாகும் என்பதை நான் இங்கே தெளிவாக எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

ஆகவே, அப்படிப்பட்ட ஒரு மாநாடு, ஆசிரியர் வீரமணி அவர்களாலே இங்கே கட்டமைக்கப்பட்டு, இந்த மாநாட்டுச் செய்தி திருவாரூரில் மட்டுமல்ல - இந்தியாவினுடைய எட்டுத் திசைகளிலும் இந்த மாநாட்டுச் செய்தி எதிரொலிக்கும் என்பதை நான் இங்கே அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் என்பது ஒரு கலவரக் கும்பல்

நிறைய விஷயங்களைப் பேசிக்கொண்டே இருக்க லாம்; இங்கே தலைவர்கள் நிறைய விஷயங்களைச் சொன்னார்கள். இங்கே செந்திலதிபன் அவர்கள் இந்த உரையைத் தொடங்க, மரியாதைக்குரிய தோழர் இரா.முத்தரசன் அவர்கள், எப்படி பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் என்பது ஒரு கலவரக் கும்பல் என்பதை எடுத்துச் சொன்னார்கள்.

அருமை நண்பர்களே, நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் - இன்றைக்கு ஒருவன் பேட்டி கொடுக் கிறான், ‘‘தந்தை பெரியாருடைய சிலையை தமிழ்நாட்டில் இருப்பதற்கு அனுமதிக்கக்கூடாது'' என்று.

ஒட்டுமொத்த தமிழ்நாடும் சேர்ந்து எதிர்க்கின்ற நிலை உருவாகும்!

தந்தை பெரியாருடைய சிலைக்கு இனிமேல் ஆபத்து வரும் என்று சொன்னால், பெரியார் இயக்கத் தொண் டர்கள் மட்டுமல்ல - ஒட்டுமொத்த தமிழ்நாடும் சேர்ந்து எதிர்க்கின்ற நிலை உருவாகும் என்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

ஏனென்றால், இங்கே திரண்டிருக்கின்றவர்கள் தத் துவவாதிகள்; தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடத் தத்துவம் இங்கே இணைந்திருக்கிறது; உலகத் தொழி லாளிகளே ஒன்று சேருங்கள் என்று போர் முழக்கமிட்டு இருக்கின்ற மார்க்சினுடைய கம்யூனிச தத்துவம் இங்கே இணைந்திருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கி, இந்தியா எப்படிப்பட்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்த டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய தத்துவம் இங்கே இணைந்திருக்கிறது.

காந்தியும், நேருவும் தூக்கிப் பிடித்திருக்கிற காங்கிர சினுடைய தேசிய இயக்கம் இங்கே இணைந்திருக்கிறது.

உங்களுடைய கோட்பாடு என்ன? உங்களுக்குப் பின்னால் இருக்கிற தத்துவம் என்ன?

இத்தனை இயக்கங்களும் இங்கே இணைந்திருக்கின்ற இந்த சூழ்நிலையில், நான் பி.ஜே.பி.யைப் பார்த்துக் கேட்கிறேன், ஆர்.எஸ்.எஸ்சைப் பார்த்துக் கேட்கிறேன் - உங்களுடைய கொள்கை என்ன? உங்களுடைய கோட்பாடு என்ன? உங்களுக்குப் பின்னால் இருக்கிற தத்துவம் என்ன என்று உங்களாலே சொல்ல முடியுமா?

ஊரில் உள்ள சாமியார்களையெல்லாம் ஒன்றாகக் கூட்டி வைத்துக்கொண்டு, தண்ட சோறு தின்கிறவன், திருட்டு சோறு தின்கிறவன் எல்லோரையும் ஒன்றாகச் சேர்த்து வைத்துக்கொண்டு, நீங்கள் இன்றைக்கு சாதுக் கள் மாநாடு நடத்துகிறீர்கள். அந்த மாநாட்டில் அவர்கள் தீர்மானம் போடுகிறார்கள் - எனக்கு ஒரு நூறு பேர் கிடைத்தால் போதும், நான் ஒரு லட்சம் முசுலிம்களைக் கொன்று குவிப்பேன் என்று அவன் பேசுகிறான்.

இப்படி பேசுகிறவன் சாதுவாக இருக்க முடியுமா?

இப்படி பேசுகிறவன் சந்நியாசியாக இருக்க முடியுமா?

பொறுக்கி எடுத்த ரவுடியைவிட மோசமாக -சமூக நீதிக்கு விரோதமாக அந்த மாநாட்டில் பேசுகிறான் - நாங்கள் இசுலாமியர்களை, சிறுபான்மை மக்களைத் தாக்குவோம் என்று சொல்லுகிறார்கள்.

அண்ணல் காந்தியாரையே 

கொன்று குவித்த மாபாவிகள்!

ஏனென்றால், அவர்கள் வளர்ந்து வந்திருக்கின்ற பாதை அப்படி. அண்ணல்  காந்தியாரையே கொன்று குவித்த மாபாவிகள் அல்லவா!

இந்தத் தேசத்திற்காகப் போராடிய காந்தியையே கொன்றவர்கள். வாழ்நாள் முழுவதும் இந்த நாட்டிலே பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்துப் போராடினார் - வெள்ளைக்காரர்களின் ஆட்சியில்கூட காந்தியாரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை.

ஆனால், 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் வாங்கிய பிறகு, 1948 இல் எட்டே மாதங்களில் காந்தியாரை அந்த வயது முதிர்ந்தவரை கொன்று குவித்த அந்தக் கொலை கார கூட்டம்தான் ஆர்.எஸ்.எஸ். என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஆர்.எஸ்.எஸ். சாதாரண அமைப்பு அல்ல. இன் றைக்கு இந்தியாவில் இருக்கின்ற தலைசிறந்த சிந்த னையாளர்கள் நரேந்திர தபேல்காரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள்; பன்சாராவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள்; அதேபோல் கல்புர்கியை என்ற தத்துவ ஞானியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள். ஒரு தலைசிறந்த பத்திரிகையாளராக இருந்த கவுரி லங்கேஷ் என்ற அந்த சகோதரியை, ஒரு பெண் என்று கூட பார்க்காமல், ஒரு சகோதரி என்றுகூட பார்க்காமல் கொலை வெறியோடு கொன்று குவித்திருக்கின்ற அந்தக் கூட்டம்தான் - இந்த பஜனை மடக் கூட்டம் - ஆர்.எஸ்.எஸ். கூட்டம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இன்றைக்குப் பத்திரிகையில் வந்திருக்கின்ற செய் தியை நான் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

யஷ்வந்த் ஷிண்டேவின் 

ஒப்புதல் வாக்குமூலம்!

மராட்டிய மாநிலத்தில் இருக்கின்ற சி.பி.அய். நீதிமன்றத்தில், ஒருவர் ஒரு வாக்குமூலத்தைத் தாக்கல் செய்திருக்கிறார். அதைத் தாக்கல் செய்தது மரியாதைக் குரிய ஆசிரியர் அவர்கள் தாக்கல் செய்யவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் தாக்கல் செய்யவில்லை. இடதுசாரி கட்சிகளோ, இல்லை மேடை யில் இருக்கின்றவர்களோ தாக்கல் செய்யவில்லை.

அந்த வாக்குமூலத்தைத் தாக்கல் செய்திருக்கின்றவர் இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற யஷ்வந்த் ஷிண்டே என்ற ஒருவர் அந்த வாக்குமூலத்தைத் தாக்கல் செய்திருக்கிறார்.

அது வெறும் சாதாரண வாக்குமூலம் அல்ல; நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்ற வாக்குமூலம்.

அந்த வாக்குமூலத்தில் அவர் சொல்கிறார், இந்தியா வில் இதுவரையில் நடைபெற்று இருக்கின்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையெல்லாம் நடத்தியது 

ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்புதான் என்று பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார்.

2000 ஆம் ஆண்டில் ரயில்வே நிலை யத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பாக இருக்கட்டும்; பம்பாய் நகரத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பாக இருக்கட்டும்; மாலேகான் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பாக இருக்கட்டும் - இந்த குண்டு வெடிப்பு களையெல்லாம் திட்டமிட்டு நடத்தியது ஆர்.எஸ்.எஸ். தான். நான் அந்த அமைப்பில் இருந்து செயல்பட்டவன் என்ற முறையிலே இந்த வாக்குமூலத்தை நான் தாக்கல் செய்கிறேன் என்று நீதிமன்றத்திலே அவர் தாக்கல் செய்திருக்கிறார்.

நான் கேட்கிறேன் அண்ணாமலையைப் பார்த்து, நான் கேட்கிறேன் மோடியைப் பார்த்து, இந்த நாட்டிலே வெடிகுண்டு கலாச்சாரத்தை உருவாக்கிய நீங்கள், குண்டுவெடிப்பினாலே மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்திருக்கின்ற நீங்கள், வெடிகுண்டு வெடித்து இந்த நாட்டினுடைய அமைதியைத் தகர்த்திருக்கின்ற நீங்கள், இந்த நாட்டை ஆளுகின்ற தகுதி படைத்துவிட்ட காரணத்தினால், இந்த நாடு உங்களுடைய கொள்கையை ஏற்றுக்கொண்டதாக அர்த்தமா?

(தொடரும்)


No comments:

Post a Comment