வாடாமலர்-மணக்கும் மலர்-கருத்து மலர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

வாடாமலர்-மணக்கும் மலர்-கருத்து மலர்

நம். சீனிவாசன்

வாடாமலர் , மணக்கும் மலர் , கருத்து மலர் இந்தப் பாராட்டுரைகள் எல்லாம் தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலருக்கு உரித் தானது. 272 பக்கங்கள் கொண்ட கருத்துப் பேழையாக வெளிவந்திருக்கிறது. இது தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்படுகின்ற 61 ஆம் ஆண்டு மலர் ஆகும். ஒவ் வொரு மலரின் அட்டைப்படத்திலும் விதவிதமான கோணங்களில் தந்தை பெரியார் காட்சியளிப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து களிப்பை நல்கி வருகிறது. 

தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் மலரை தமிழர்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும். ஓவியர் பாரதிராஜா அட்டைப்படத்திற்குத் தீட்டிய அய்யா பெரியாரின் ஓவியம் கண்ணிலே, கருத்திலே பதிந்துவிட்ட படமாகும்.

தந்தை பெரியாரின் பிறந்தநாள் மலருக்காகத் தமிழர் தலைவர் ஆசிரியர்  வழக்கமாக அறிக்கையை எழுதுவார்கள். 144ஆம் ஆண்டு பிறந்தநாள் மலருக்கு ஒன்பது பக்கங்களில் ஆசிரியர் எழுதிய அறிக்கை மலருக்குப் பெருமை சேர்க்கிறது. 

தமிழர் தலைவர் ஆசிரியரின் அய்யாவின் கட்டுரை மூன்று பிரிவுகளை உள்ளடக்கி இருக்கிறது. முதல் பகுதி மலரின் வரலாறு - இரண்டாவது பகுதி கொள்கை விளக்கம் - மூன்றாவது பகுதி திட்டம். தந்தை பெரியாருக்கு பிறந்தநாள் மலர் முதன்முதலாக வெளிவந்த ஆண்டு 1956 என்றும் அதனை குத்தூசி குருசாமி கொண்டு வந்தார் என்றும் குறிப்பிடும் ஆசிரியர்  அதன் பிறகு 1962 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 60 ஆண்டுகள் தம்முடைய முயற்சியில் பிறந்த நாள் மலர் கொண்டு வருவதை எடுத்துரைத் திருக்கின்றார். 

மலருக்கு ஒளிப்படம் எடுத்த வரலாறு, உருவாக் கும் பணியில் ஒத்துழைத்த நண்பர்களின் பட்டியல் எல்லாவற்றையும் தொகுத்து தந்திருக்கின்றார். தந்தை பெரியார் அய்யா உயிரோடு இருந்தபோது அவரிடம் பிறந்த நாள் செய்தி வாங்கிய வரலாற்றை ஆசிரியர் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறார்.

இரண்டாம் பகுதியாக அமைந்திருக்கின்ற கொள்கை விளக்கத்தில் 'திராவிடம் எது' ?'ஆரியம் எது'? என்பதை எடுத்துக்காட்டுகளுடன் எளிமை யாக விளக்கி இருக்கிறார். ‘அனைவருக்கும் அனைத் தும்' என்பது திராவிடம் என்றும், ‘எங்களுக்கே எல்லாம்' என்ற ஆதிக்கம் ஆரியம் என்றும், 'பிறப்பொக்கும்' என்ற சமத்துவம் திராவிடம் என்றும், ‘வேதம் தான் எங்கள் சனாதனம்' என்பது ஆரியம் என்றும், ‘அனைவரது சுயமரியாதைதான் சுகவாழ்வு' என்பது திராவிடம் என்றும், ‘அவமரியாதைதான் எங்கள் ஆணவ முத்திரை' என்பது ஆரியம் என்றும் பண்பாட்டு முரணைப் படம் பிடித்து இருக்கிறார். 

சமண, பவுத்த சமயங்கள் தொடுத்த போராட் டங்களையும் சுட்டிக் காட்டி இருக்கின்றார். கொள்கைப் போரில் தந்திரங்களும் வித்தைகளும் சூழ்ச்சிகளும் நிறைந்திருப்பதை விபீடணன் , பிரக லாதன், சுக்ரீவன், அனுமான் போன்ற சில கதா பாத்திரங்களின் பெயர்களை எடுத்துக் கூறி எச் சரிக்கை செய்திருக்கிறார். 1925 ஆம் ஆண்டிலேயே பெரியார் எச்சரித்த 'Brahminocracy' பார்ப்பன ஆதிக்கத்தை நினைவூட்டுகிறார். 

மூன்றாவது பகுதியாகத் திட்டங்களை அறிவிக்கின்றார். 2022 செப்டம்பர் தொடங்கி 2023 ஆகஸ்ட் வரை செய்ய வேண்டிய பணி குறித்துப் பட்டியல் தருகிறார். 

அதனை அய்ம்பெரும் திட்டங்கள் என்று வருணிக்கிறார்.

1 . நீதிமன்றங்களில் சமூக நீதி

2 . தனியார் துறைகளில் சமூக நீதி

3 . 'மாநில அரசை செயல்பட விடு' - அறப்போர் கிளர்ச்சி

4 . திராவிட மாடல் ஆட்சியைக் காப்பது

5 . தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப் புவது. கொள்கைத் தெளிவு பெற்ற தோழர்களை உரு வாக்கும் நோக்கில் பேச்சாளர்களுக்கு, எழுத்தாளர் களுக்கு ,இதழாளர்களுக்கு ,களப்பணியாளர்களுக்குப் பயிற்சி பட்டறைகள் நடத்துவதற்கானத் திட்டங்களை அறிவித்திருக்கின்றார்.

இணையதளங்களில், வலைக்காட்சியில், இணை யப் பண்பலையில், ஒலிப் புத்தகங்களில் , கிண்டில் புத்தகங்களில் இயக்கம் படைத்திருக்கும் சாதனை யைப் புலப்படுத்தி இருக்கிறார். 

லிபர்ட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் 'Periyar Vision' என்ற புதிய OTTதளம் அறிமுகப் படுத்தப்படும் என்ற அறிவிப்பும் தோழர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். 

சிறுகனூரில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய விருக்கும் பெரியார் உலகம் பற்றிய தகவல்களோடு இந்த கட்டுரையினை தமிழர் தலைவர் ஆசிரியர்  நிறைவு செய்து இருக்கிறார்.

ஒன்றிய, மாநில அரசுகள் பட்ஜெட் தயாரிப்பது போல ஆண்டுதோறும் அறிக்கையை வடிக்கிறார் ஆசிரியர். 

தோழர்கள் கொள்கைத் தெளிவு பெற, ஆண்டுத் திட்டங்களை அறிந்து களப்பணி ஆற்றிட ஆசிரியரின் அறிக்கை வழிகாட்டுகிறது.

தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் மலரில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேச்சு ஒரு பக்கத்தில் இடம் பெற்று இருக்கிறது. வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய உரையாகும். 

1981 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழாவில் கலைஞர் ஆற்றிய உரையே இது.

"பெரியார் என்கின்ற ஒருவர் தமிழகத்தில் தோன்றாமல் இருந்திருந் தால், அவருடைய பணி தமிழ்ச் சமுதாயத்திற்கு கிடைக்காமல் போயிருந்தால், அவருடைய போராட் டங்கள் இந்த தமிழ் மண்ணில் நடை பெறாமல் இருந்திருந்தால் இன் றைக்கு தமிழன் நிமிர்ந்திருப்பானா? தமிழர்கள் பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய் மதிக்கப்படக்கூடிய நிலை மையிலே இருந்திருப்பார்கள். 

இன்று அரசு அலுவலகங்களிலே தமிழர்கள் ஏராளமானோர் பணியாற்றுகின்ற காட்சியைப் பார்க்கிறோம். மாவட்ட ஆட்சித் தலைவர்களாகவும் இருக்கிறார்கள். இவை அனைத்தும் ஏதோ தமிழர்களுக்குக் கிடைத்த கிரகப் பலன்களால் அல்லது அவர்களுக்கு ஏற்பட்ட சனி பெயர்ச்சியின் விளைவால் அல்லது குரு பெயர்ச்சியின் விளைவால் நாலாம் இடத்தில் இருந்த சந்திரன் அய்ந்தாம் இடத்திற்குச் சென்ற காரணத்தால் தமிழர்களுக்கு ஏற்பட்ட ஆதாயங்கள் அல்ல. சந்திரனும், சூரியனும் பார்த்த பார்வையால் இந்தப் ' பவிசு ' தமிழனுக்கு ஏற்படவில்லை. தந்தை பெரியார் என்கின்ற ஒருவர் பார்த்த பார்வையால்தான் தமிழனுக்கு இந்த ஏற்றம் கிடைத்திருக்கிறது".

தந்தை பெரியாருக்குப் பெருமை சேர்ப்பதும் பகுத்தறிவு பிரச்சாரமும் இணைந்த கலைஞர் அவர் களின் உரை வாசகர்கள் படிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய, நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டிய உரையாகும்.

அய்யா பெரியாரின் பிறந்த நாள் மலரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கும் அருமையான கட்டுரை, செறிவான கட்டுரைக்கு அவர் கொடுத்திருக்கும் தலைப்பு, சுருக்கமான தலைப்பு, ஆழமான தலைப்பு " இது பெரியார் மண்" என்பதாகும்.

ஓர் ஆலம் விதைக்குள் பெரு மரம் புதைந் திருப்பதுபோல் மூன்று பக்க கட்டுரையில் ஒரு பெரு நூலுக்குரிய செய்தி உள்ளுறையாய் உறைந்து கிடக்கின்றது. நியூயார்க் நகரிலிருந்து அண்ணா தந்தை பெரியாருக்கு எழுதிய கடித வாசகத்தோடு கட்டுரை தொடங்குகிறது.

"தங்களின் பணி மகத்தான விழிப்புணர்ச்சியை சமுதாயத்திற்குக் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வரை இத்துணை பெரிய வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்தவாதியும் தம் வாழ்நாளிலே பெற்றதில்லை"

இதனை மேற்கோள் காட்டும் முதலமைச்சர், "பெரியார் தேர்தலில் போட்டியிட்டதில்லை; சட்டமன்ற உறுப்பினராகவில்லை; நாடாளுமன்ற உறுப்பினராக வில்லை; அமைச்சராகவோ முதலமைச்சராகவோ பொறுப்பேற்கவில்லை" என்று சித்திரம் தீட்டிவிட்டு, "தேர்தல் களத்தில் வென்றவர்களால் பெரியாரின் கருத்துக்களைச் சட்ட வடிவமாக்காமல் இருக்க முடியாது என்ற நிலையை பெரியாரின் பெரும் பணி தமிழ்நாட்டு அரசியல் களத்தில் உருவாக்கி இருந்தது" என்று அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

(தொடரும்)


No comments:

Post a Comment