திருவாரூரில் காந்தியார் சிலை சேதம் மூவர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

திருவாரூரில் காந்தியார் சிலை சேதம் மூவர் கைது

திருவாரூர்,அக்.27- திருவாரூர் அருகே வடகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் காந்தியாரின் முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அச்சிலையை சிலர் உடைத்துவிட்டனர். இதுகுறித்த தகவல் வருமாறு,

 விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை காலை பள்ளி திறக்கப்பட்டபோது, பள்ளியின் தூய்மைப் பணியாளர் பள்ளி வளாகத்திலிருந்த காந்தியார் சிலை சேதப்படுத்தப் பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் தலைமையாசிரியர் கிரிஜாவிடம் தகவல் தெரிவித்தார். தலைமையாசிரியர் குடவாசல் காவல்துறையினருக்கும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தகவல் தெரிவித்தார். குடவாசல் காவல்துறையினர் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் விசாரணையில், விடுமுறை நாளில் பள்ளி வளாகத்தில் மது அருந்திய சிலருக்குள் ஏற்பட்ட தகராறில் காந்தியார் சிலையை உடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காந்தியார் குறித்து 

இந்து முன்னணியினரின் அவதூறு பேச்சு

கிருட்டினகிரியில் கடும் எதிர்ப்பு

கிருட்டினகிரி,அக்..27- கிருட்டினகிரியில் இந்து முன்னணி அமைப்பினர் காந்தியார் குறித்து அவதூறாக பேசியதைத் தொடர்ந்து அப்பேச்சுக்கு எதிராக கொந்தளிப்பான சூழல் உருவானது. பொதுமக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்து முன்னணியை சேர்ந்த அசோக் என்பவர் காந்தியாரை தேசவிரோதி என பொதுமேடையில் பேசிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. வேறொரு நோக்கத்துக்காக அமைக்கப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்தில் மேடை ஏறி பேசத் தொடங்கிய இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ஒருவர் காந்தியாரை தேச துரோகி என விமர்சித்ததோடு சாவர்க்கரை தேசப்பிதா என்று கூறினார். இதற்கு அங்கு இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்வு அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கு

3 பேருக்கு தலா 31 ஆண்டுகள் சிறை  

புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுக்கோட்டை,அக்.27- கறம்பக்குடி அருகே மாற்றுத்திறன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பெண் உட்பட 3 பேருக்கு தலா 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று (26.10.2022) தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த அன்புக்கோவில் அருகே இடையன் கொள்ளைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பி.ராஜேந்திரன்(வயது 56), எம்.அண்ணாதுரை(வயது 41). இவர்கள் இருவரும் அதே ஊரைச் சேர்ந்த வீரையா மனைவி அஞ்சலை(வயது 60) என்பவரின் வீட்டில் 24 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய ஒரு பெண்ணை கடந்த ஆண்டு அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரன், அண்ணாதுரை, அஞ்சலை ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி ஆர்.சத்யா நேற்று (26.10.2022) தீர்ப்பளித்தார். இதில், குற்றம்சாட்டப்பட்ட ராஜேந்திரன், அண்ணாதுரை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அஞ்சலை ஆகிய 3 பேருக்கும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக தலா 20 ஆண்டுகள் சிறை, ரூ.1.5 லட்சம் அபராதம், பெண்ணை கடத்திய குற்றத்துக்காக தலா 10 ஆண்டுகள் சிறை, ரூ.50 ஆயிரம் அபராதம், வீட்டுக்குள் அடைத்து வைத்த குற்றத்துக்காக தலா ஓராண்டு சிறை, ரூ.1,000 அபராதம் விதித்து, தண்டனைகளை தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், 3 பேரின் மொத்த அபராதத் தொகையான ரூ.6.03 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து, ராஜேந்திரன், அண்ணாதுரை, அஞ்சலை ஆகிய 3 பேரும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் யோகமலர் ஆஜரானார். வழக்கை முறையாக விசாரணை செய்த ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினரை எஸ்.பி வந்திதா பாண்டே பாராட்டினார்.


No comments:

Post a Comment