தூக்கி எறியப்படும் கடவுள் படங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

தூக்கி எறியப்படும் கடவுள் படங்கள்!

மின்சாரம்

கருநாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் சட்டமேதை அம்பேத்கரைப் பின்பற்றி 500 தலித் மக்கள் இந்து மதத்தைத் துறந்து புத்த மதத்தைத் தழுவினர். மேலும் சிலர்  வீட்டில் இருந்த இந்து தெய்வங்களின் படங்களை கிருஷ்ணா நதியில் வீசியெறிந்தனர். இது தொடர்பான காட்சிப்பதிவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கட்டாய மதமாற்றம் என்பது குற்றத்துக்குரியது. இது தொடர்பாக புகார் செய்யப்பட்டால், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இருப்பினும் கட்டாய மதமாற்றம் இன்றி ஒருவர், தான் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உள்ளது. இருப்பினும் இது பல வேளைகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்நிலையில் தான் தற்போது கருநாடகாவில் நடந்த சம்பவம் பெரும் விவாதத்துக்குள்ளாகி உள்ளது.

கருநாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராப்புராவில் கேல்டன் கேவ் புத்த விஹார் அறக்கட்டளை உள்ளது. இந்த அறக்கட்ளை க்கு ஹூனசாகி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்தக் கிராமம் உள்பட வேறு சில கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்கள் நீண்டகாலமாக புத்த மதத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற் கிடையேதான் அண்ணல் அம்பேத்கரைப் பின்பற்றி அவர்கள் புத்த மார்க்கத்துக்கு மாற முடிவு செய்தனர்.

மதம் மாறிய 500 பேர் அதன்படி கோல்டன் கேவ் புத்த விஹார் அறக்கட்டளை சார்பில் அக்டோபர் 14இல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து 500க்கும் அதிகமான தலித் மக்கள் இந்து மதத்தைக் கைவிட்டு புத்த மதத்துக்கு தீட்சை பெற்றனர்.

அம்பேத்கரும் இதே நாளில்தான் இந்து மதத்தைத் துறந்து புத்த மதத்தைத் தழுவி னார். 1956 அக்டோபர் 14ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் புத்த தம்ம தீட்சா என்ற பெயரில் நடந்த விழாவில்  5 லட்சம் பேர்களுடன் அம்பேத்கர் புத்தத்தைத் தழுவினார். அதனடிப்படையில் தான் தற்போது இவர்களும் மதம் மாறி உள்ளனர்.

ஆற்றில் தெய்வங்களின் படங்கள் மற்றும் சிலைகளை வீசி எறிந்தனர். இதை யடுத்து சுராபுராவில் வசிப்பவரும் கோல்டன் கேவ் புத்த விஹார் அறக்கட்டளையின் தலைவருமான வெங்கடேஷ் ஒசமணி உள்ளிட்ட சிலர் தங்கள் வீட்டில் இருந்த இந்து தெய்வங்களின் படங்களை எடுத்து கிருஷ்ணா நதியில் வீசினர். இதுபற்றி அறக் கட்டளையின் தலைவரான வெங்கடேஷ் ஒசமணி கூறுகையில்,

"நாங்கள் குடும்பத்துடன் புத்தத்தைத் தழுவினோம். இதனால் வீட்டில் இருந்த சாய்பாபா, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர் படம் மற்றும் சிலைகளை ஆற்றில் கரைத்துள்ளோம்.

இது தற்போது சர்ச்சையாகி உள்ளது. கருநாடகாவில் மதமாற்றத்தை எதிர்க்கும் வகையிலான மதச் சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதாவை (2021) மாநில அரசு அண்மையில் நிறைவேற்றியது. இது மதமாற்ற எதிர்ப்பு சட்டம் எனக் கூறப்படுகிறது.

இதன்படி மதம் மாற விரும்புவோர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, மாறும் மதம் தொடர்பாக  2  மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் பெற வேண்டும். இதற்கு ஆளுநர் சில வாரங்களுக்கு முன்பு அனுமதி அளித்தார். இந்நிலையில் தான் தற்போது யாதகிரியில் மதமாற்ற நிகழ்வு நடந்துள்ளது. இருப்பினும் இதற்கு அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை.

முன்னதாக கருநாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள உள்ளேஹள்ளியில் பூதம்மா கோவிலில் சாமி ஊர்வலம் நடந்தது. தலித் சிறுவன் ஒருவர் சாமி சிலையைத் தொட்டான். இதையடுத்து கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இது சர்சையான நிலையில் சிறுவனின் குடும்பத்தினர் வீட்டில் இருந்த சாமி சிலைகளை அகற்றிவிட்டு அம்பேத்கர் படத்தை வைத்து வழிபடத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது யாதகிரி மாவட்டத்தில் 500 தலித் மக்கள் அம்பேத்கரைப் பின்பற்றி புத்த மதத்துக்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் 5ஆம் தேதி டெல்லியில் 25000 பேர்களுடன் அமைச்சராக இருந்த ராஜேந்திர பால் கவுதம் தலைமையில் ஹிந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு புத்த மார்க்கத் தைத் தழுவினார்கள். பிரச்னை பெரிதாக வெடித்தது. அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் ராஜேந்திர பால் கவுதம்.

ஒரு பக்கத்தில் காவிகள் ஒரே ராஜ்ஜியம் - அது ஹிந்து ராஜ்ஜியம் என்று ஓங்காரக் கூச்சல் போட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் ஹிந்து மதத்திலிருந்து புத்த மார்க்கம் தழுவுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு தலித் சிறுவன் சாமி சிலையைத் தொட்டான் என்பதைக் குற்றமாகக் கருதும் ஒரு மதத்திற்கு முழுக்குப் போட்டது சரியான செயல்தானே!

 

No comments:

Post a Comment