மூடநம்பிக்கையை முறியடித்திடும் செயல்முறை நிகழ்ச்சி வரும் 25 ஆம் தேதி மாலை சென்னை பெரியார் திடலில்- பெருந்திரளாக வாரீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

மூடநம்பிக்கையை முறியடித்திடும் செயல்முறை நிகழ்ச்சி வரும் 25 ஆம் தேதி மாலை சென்னை பெரியார் திடலில்- பெருந்திரளாக வாரீர்!

 கிரகணத்தின்போது சாப்பிடக்கூடாதா?  கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாதா?

கடந்த முறை நம்முடன் பங்கேற்ற கர்ப்பிணிப் பெண் ஆரோக்கியமான ஆண் மகவை ஈன்று மூடநம்பிக்கையை முறியடித்தாரே!

சூரிய கிரகணத்தன்று உணவு சாப்பிடக் கூடாது; கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்ற அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளை முறியடிக்க வரும் 25 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் சிற்றுண்டி அருந்தி, செயல்முறை விளக்கம் நடத்திக் காட்டப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நம் நாட்டைப் போல கேலிக் கூத்தான விசித்திர முரண்பாடுகள் நிறைந்த நாட்டை உலகில் தேடினாலும் கண்டுபிடிக்கவே முடியாது!

‘புனித கங்கையை' சுத்தப்படுத்த 

ரூ.20 ஆயிரம் கோடி பாழ்!

மக்களை அறியாமையிலிருந்து வெளியேற்றி, அறிவு வெளிச்சம் தந்து அறிவை அகண்டமாக்கிடும் ஆக்கப் பூர்வ பணியை அரசுகள்கூட செய்யாமல், அந்த அறியா மைக்கு மதவெறிப் பூண்களைப் போட்டு ‘‘எப்படி ஜொலிக்கிறது பார்த்தீர்களா? எங்கள் ‘பாரத புண்ணிய பூமி!'' என்று கூறுகிறார்கள்!

‘புனித கங்கை'யைச் சுத்தப்படுத்த இதுவரை செல வழித்த தொகை இருபதாயிரம் கோடி! உண்மையிலேயே ‘புனிதம்' (Holy) என்றால், அதனைச் சுத்தப்படுத்த வேண்டிய அவசியம் எப்படி ஏற்படும் என்ற பகுத்தறிவுக் கேள்வியை எவரும் எழுப்புவதில்லை!

ஆனால், உலகில் மற்ற நாட்டவர் தமது அறிவியல் ஆற்றலால் கண்டுபிடித்துத் தந்த தொழில்நுட்பத்திற்கு ‘‘ஆயுத பூஜை'' நடத்துவதே நமது நாட்டின் ‘தனிப் பெருமை!'

ஒருபுறம் 5ஜி என்ற தகவல் தொழில்நுட்பப் புரட் சியை இங்கு பயன்படுத்திக் கொண்டே, மற்றொருபுறம் அறிவியலுக்கு நேர்மாறாக ‘கிரகணம்' என்பது - ராகு, கேது என்ற பாம்புகள் விழுங்குவதால் ஏற்படுவது என்ற கற்பனையைப் பரப்பி, மக்களின் அறிவை நிரந்தர ‘அடகுப் பொருளாக' ஆக்கி, மூடத்தனத்தினை மூலதன மாக்கி, மக்களைச் சுரண்டிவரும் புரோகித பார்ப்பன வர்க்கம்!

இந்திய அரசமைப்புச் சட்டம் 

கூறுவது என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) பிரிவு கூறுவது என்ன?

அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) என்ற தலைப்பில், ‘‘அறிவியல் மனப்பாங்கை வளர்த்துப் பரப்புதல், எதையும் கேள்வி கேட்டு அறியும் திறனை வளர்ப்பது, மனிதநேயம், சீர்திருத்தம் என்பவற்றை மக்களிடையே பரப்புவது ஒவ்வொரு குடிமகன்(மகள்) கடமையாகும்'' என்று கூறியுள்ளது.

அதன்மீது பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியில் இருந்து அரசோச்சுபவர்கள், ‘‘‘கிரகணம்' போன்றவை ஏன் ஏற்படுகின்றன? இதனால், கர்ப்பிணிப் பெண்கள் கருவுக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாது; அதுபோலவே, உண்ணுவதற்கு அந்த நேரத்தில், எந்தத் தடையும் கிடையாது'' என்று அரசு இயந்திரங்கள்மூலம் நாட்டு மக்களுக்குப் பரப்பவேண்டாமா?

அந்த அரசமைப்புச் சட்டத்தினைக் காப்பது உள்பட இத்தியாதி உறுதிமொழியை எடுத்துக் கொண்டவர்கள் ‘அடிப்படைக் கடமை' என்பதால், அதனை நிறைவேற்ற வேண்டாமா?

செய்ய முனையாதது மட்டுமல்ல; இதைச் செய்யும் நம்மீதும் தடுப்புக் கணைகளை ஏவலாமா?

ஒரு பக்கம் 5ஜியின் பயன்பாடு!

மற்றொரு பக்கம் ‘கிரகண' மூடநம்பிக்கை வினோதம்!

‘‘தாய்மார்களே, கர்ப்பிணிகளே வெளியே வராதீர்கள்! அந்த நேரத்தில்'' என்று அச்சுறுத்திடுவது அறிவியலுக்கு விரோதமான போக்கல்லவா!

இரட்டை வேடம்; இரட்டை நாக்கு!

பெரியார் திடலில் கிரகணத்தன்று சிற்றுண்டி!

திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் மற்றும் சில முற்போக்கு அமைப்புகளும் ‘கிரகணம்' ஏற்படும் போதெல்லாம் அதுபற்றிய மூடநம்பிக்கையை தோலு ரித்துக் காட்டும் - நடைமுறைச் செயலை - உண்டு காட்டுவது, கருவுற்ற தாய்மார்களை அருகில் அமர்த்தி உணவு உண்ணச் செய்வது, அவர்களுக்கு முன்பு எப்படி பாதுகாப்பாகக் குழந்தைப் பேறு அமைந்தது என்றும் விளக்க உரைகளையும், நடைமுறை உண்மை (By Demonstration) மூலம் காட்டி வருகிறோம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தன்று சென்னை பெரியார் திடலில் நடத்தப் பெற்ற நிகழ்வில் கர்ப்பிணியாகப் பங்கேற்ற இ.ப.சீர்த்தி, 2020 ஜூன் மாதத்தில் மகிழன் என்ற ஆண் மகவை ஈன்றார். குடும்பத்துடன் அவர்கள் நலமாகவே உள்ள னர். அவர்களும் இம்முறை நம் நிகழ்வில் பங்கேற்பர்!

இம்முறை சென்னை பெரியார் திடலில், 25.10.2022 அன்று மாலை 5.30 மணிக்கு கிரகணம் ஏற்படும் நேரத்தில், மூடநம்பிக்கை ஒழிப்பு, சிற்றுண்டி, அறிவியல் செயல் விளக்க நிகழ்ச்சியை எனது தலைமையில் கழகத் தோழர்கள் நடத்திக் காட்டி, மூடநம்பிக்கையின் முது கெலும்பை உடைப்போம்! மூடநம்பிக்கையை ஒழிக்க விரும்புவோர் இந்நிகழ்வில் நம்முடன் வந்து பங்கேற்கலாம்!

வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் செய்துகாட்டுவீர்!

வாய்ப்புள்ள ஊர்களிலும் திராவிடர் கழகத்தினர், பகுத்தறிவாளர் கழகத்தினர் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்களும் இதனை நடத்தி, அறிவியல் மனப்பான்மையினை வளர்ப்பதோடு, அறியாமை இருளை விரட்டி, அச்சம் என்பது மடமை என்பதை உணர்த்த ஆயத்தமாவோம்!  தோழர்களே, ஏராளமாக பாலின வேறுபாடின்றி, கட்சி வேறுபாடின்றி வாரீர்! வாரீர்!!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

21.10.2022


No comments:

Post a Comment