'கர்மா' அடிப்படையில் தீர்ப்பா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

'கர்மா' அடிப்படையில் தீர்ப்பா?

வழக்கு விசாரணை ஒன்றில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி 'கர்மா' கொள்கைப்படி தீர்ப்பு அளித்த நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்து உள்ளது.

மதுரையில் காவலராக பணியாற்றி வருபவர் சிறீமுருகன். இவர் தனது மேலதிகாரிகளின் உத்தரவைப் பின்பற்றுவதில்லை என்றும், அடிக்கடி அனுமதியின்றி விடுப்பு எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவரை மதுரையில் இருந்து இடமாற்றம் செய்து மதுரை மாவட்ட காவல் துறை ஆணையர் உத்தரவிட்டார். அவரை தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.பணியிட மாற்றத்துக்கு எதிராக சிறீமுருகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் கடந்த 2003 முதல் காவல்துறையில் பணிபுரிந்து வருவதாகக் குறிப்பிட்டு உள்ள அவர், அவனியாபுரம் காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்த தன்னை தூத்துக்குடி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்து தென் மண்டல காவல்துறை அய்.ஜி. உத்தரவிட்டுள்ளதாகவும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தார். அந்த வழக்கை மதுரைக் கிளையில் தனி நீதிபதி எஸ்.சிறீமதி விசாரித்தார். அந்த விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "கடந்த 18 மாதங்களில் மட்டும் மொத்தம் நான்கு முறை இடமாறுதல் உத்தரவுகளை எதிர்கொண்டுள்ளார். மற்ற இடமாறுதல்கள் தற்செயலானது என்றாலும்கூட, தூத்துக்குடிக்கு இட மாறுதல் உள்நோக்கம் கொண்டது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்து இருந்தார். இருப்பினும், அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். மனுதாரர் உயரதிகாரிகளை மதிப்பதில்லை என்றும் பணிக் காலத்தில் மட்டும் அவருக்கு 18 முறை 'மெமோ' வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பழிவாங்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்ட வழக்குரைஞர், வழக்கை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தார்.  

அதற்குத் தான் நீதிபதி 'கர்மா' அடிப்படையில் தீர்ப்பு அளித்தார்.இந்த வழக்கில் மதுரைக் கிளை நீதிபதி எஸ்.சிறீமதி, "இந்த மனுதாரர் ஏற்கெனவே போதுமான தண்டனையை அனுபவித்துவிட்டார்.   மற்ற காவலர்களுடன் ஒப்பிடுகையில், அவர் குறைந்த அளவே ஊதியம் பெறுகிறார். எனவே, அவருக்குக் 'கர்மா' அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படுகிறது. 'கர்மா'வின் கொள்கைகளில் சஞ்சித கர்மா, பிராப்த கர்மா என இரு வகைகள் உள்ளன. அதில் பிராப்த கர்மாவிற்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது. அதன்படி பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்கிறோம்.  அது மனுதாரருக்குப் பொருளாதார ரீதியாக துயரத்தையே தரும். இதன் காரணமாக மனுதாரர் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்கிறோம். அதற்குப் பதிலாக மதுரை மாவட்டத்திலேயே போக்குவரத்துப் பிரிவில் அவரை நியமிக்கலாம்" என்று அய்.ஜி, மற்றும் காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

கர்மா அடிப்படையில் நீதிபதி உத்தரவிட்டது - இப்படி ஒரு தீர்ப்பா? என்று ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்குரைஞர், அரசு ஊழியராக பணிபுரிந்து வரும் ஒருவருக்கு நீதி அடிப்படையில் இல்லாமல் 'கர்மா' அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியாது என வாதிட்டார்.  நீதிபதி வேல்முருகன் அமர்வு, 'கர்மா' அடிப்படையில் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி என்றால் மெத்தப் படித்தவர், சகலத்தையும் கரைத்துக் குடித்தவர் ஆகாயத்திலிருந்து குதித்தவர் சட்டம் தெரிந்தவர் என்று யாரும் தப்புக் கணக்குப் போட வேண்டாம்.

பாமரத் தனமான பழைமைச் சேற்றில் மூழ்கி எழுந்த பத்தாம் பசலித்தனப் பேர் வழிகளும் நீதித் துறையில் உண்டு என்பது விளங்கவில்லையா? தகுதி - திறமை பேசும் பேர் வழிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

நல் வாய்ப்பாக சென்னை உயர்நீதிமன்ற அமர்வு மதுரைக் கிளை நீதிபதியான சிறீமதியின் தீர்ப்பை  தள்ளுபடி செய்து விட்டது.

'கர்மா' என்பது ஹிந்துத்துவாவின் முக்கிய கோட்பாடு. இதில் மூழ்கி எழுந்தவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும் தப்ப முடியாது என்பது இதன் மூலம் தெளிவாகவில்லையா? ஹிந்துத்துவா பாமரர்களை மட்டுமல்ல - படித்த நீதிபதிகளின் அறிவையும் மொட்டை அடிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மண்டல் குழுப் பரிந்துரை தொடர்பான வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் இடம் பெற்ற ஜஸ்டிஸ் திரு. ஜீவன்ரெட்டி 'கர்மா' தியரியைக் கடுமையாக சாடினார் -  விமர்சித்தார் என்பதையும் நினைவூட்டுகிறோம்.

 


No comments:

Post a Comment