குஜராத் முதல் அமைச்சர் அவமதிப்பும் பிஜேபியின் தார்மிகப் பாதையும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

குஜராத் முதல் அமைச்சர் அவமதிப்பும் பிஜேபியின் தார்மிகப் பாதையும்

குஜராத் மாநிலத் தலைநகரில்  பிரதமர் மோடி நடத்திய 'ரோடு ஷோ' என்னும் சாலை எங்கும் உள்ள மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியின் போது மோடியின் காரில் ஏற முயன்ற குஜராத் முதலமைச்சரை தள்ளிவிட்டனர். 

 இது தொடர்பான காட்சிப் பதிவு அதிகம் பரவி வருகிறது, குஜராத் முதலமைச்சர் சிறுவயதில் இருந்தே காலில் ஏதோ பிரச்சினையின் காரணமாக சிறிது தாங்கித் தாங்கி நடப்பவர், அவரால் வேகமாக நடக்க முடியாது. இதனால் முதலில் அவர் மெதுவாக நகர்ந்துகொண்டு இருக்கும் பிரதமர் பயணித்த காரின் கதவைத் திறந்து ஏற முயல்கிறார். லேசாக திறந்த கார் கதவு வழியே அவர் காரில் ஏற முற்படும் போது அவரை ஏறவிடாமல் மீண்டும் காரின் கதவை உள்ளிருந்து மூடிவிட்டனர்.  வயதான முதலமைச்சர் பூபேந்திர படேல் அவமதிக்கப்பட்ட இந்தக் காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இவ்வாறு பாதுகாப்புப் படையினரால் அவமதிக்கப்பட்டது சர்ச்சையாகி இருக்கிறது.

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் எதிர்கொள்ளும் இழிவைப் பாருங்கள் - ஒரு பிஜேபி முதலமைச்சரே மோடியிடம் இத்தகைய அவமானத்தைச் சந்திக்க நேர்ந்தது  என்றால், சாமானியர்களின் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்!" என்று தெலங்கானா ராஷ்டிரிய ஜனதா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஆர். கருத்துப் பதிவு செய்துள்ளார்.

 அந்தக் காட்சிப்பதிவு குறித்து கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங், "படேல் சமூகத்தின் மீது மிகுந்த மரியாதை உள்ளது, குஜராத் முதலமைச்சர் காருக்குள் உட்கார விரும்பினார், ஆனால் காரின் பின்னால் ஓடுங்கள், நீங்கள் என் பக்கத்தில் உட்காரத் தகுதியற்றவர் என்று பிரதமர் கூறி விட்டார்" என தனது கருத்தை பதிவு செய்து உள்ளார். பூபேந்திர படேல் அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பிஜேபியை அறிந்தவர்களுக்கு, அதுவும் பிரதமர் நரேந்திர மோடியின் 'இயல்பை அறிந்தவர்களுக்கு இந்நிகழ்ச்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தாது.

பிரதமராக இருக்கக் கூடியவர் பயணிக்கும் வாகனத்தில் - ஒரு மாநிலத்திற்குப் பிரதமர் செல்லும் போது - சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சரும் பயணிப்பது ஒழுங்கு முறையற்ற செயலா?

ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கக் கூடிய நாகரிகமான செயலா இது? நான் தேநீர் விற்றவன் - கழிப்பறையைச் சுத்தம் செய்தவன் - என்று தன்னடக்கமாக, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பேசி, தன்னை ஓர் உதாரண மாமனிதராகக் காட்டும் மோடி அவர்கள் தம் கட்சியைச் சேர்ந்த ஒரு மாநில முதலமைச்சரை இப்படி அவமதிப்பது ஏற்புடையதுதானா?

தார்மீகம்பற்றி எல்லாம் மிக அதிகமாக   வாய் பிளந்துபேசக் கூடியவர்களின் பண்பாடு இதுதானா? அதுவும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள ஒரு முதல் அமைச்சரை இப்படியா அவமதிப்பது?

பார்ப்பன சுப்பிரமணியசாமி சென்றால், பக்கத்தில் சரிசமமாக ஆசனத்தில் அமர வைக்கின்ற - பார்ப்பனர் அல்லாத பொன். இராதாகிருஷ்ணன் போன்ற - ஒன்றிய இணை அமைச்சர் சென்றால் தரையில் உட்கார வைக்கின்ற - சங்கர மட(த)த்தின் கலாச்சாரம் தானே அவர்களின் ஒரே கலாச்சாரம்?

No comments:

Post a Comment