குத்துச்சண்டை: என் இலக்கு ஒலிம்பிக் பதக்கம்! - சுவேதா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

குத்துச்சண்டை: என் இலக்கு ஒலிம்பிக் பதக்கம்! - சுவேதா

‘‘குத்துச்சண்டை போட்டிகளில் பெண்கள் அதிகமாக பங்கு பெறுவதில்லை. இந்த விளை யாட்டில் பெண்களுக்கு ஆர்வம் அதிகம். மேலும் வாய்ப்புகள் நிறைய உள்ள இந்த துறையில் அவர்களின் குடும்பச் சூழ்நிலை காரணமாக எதையும் சாதிக்க முடியாமல் சாதாரண வாழ்க் கையை தான் இந்த வீராங்கனையர் வாழ்ந்து வருகிறார்கள். அந்த பெண்களின் அடையாளமா கத்தான் நான் இந்த விளையாட்டில் ஈடுபட்டு வருகிறேன். நான் விளையாடுவது எனக்காக மட்டு மில்லை, வாய்ப்பு கிடைக்காமல் வீட்டில்  இருக்கும் மற்ற பொண்ணுங்களோட கனவுகளுக்கும் சேர்த்து விளையாடுறேன்’’ என்கிறார் ஸ்வேதா. இவர் தமிழ்நாடு ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்து குத்துச்சண்டை விளையாட்டு மேல் ஏற்பட்ட ஆர்வத்தினால் அதில் பயிற்சி எடுத்துக் கொண்டு தேசிய அளவில் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில் தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

‘‘நான் 12ஆம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு சொந்த ஊரு திருப்பூர். என் அண்ணனுக்கு  குத்துச்சண்டை விளையாட்டு மேல் ஆர்வம் அதி கம். அதனால் அவர் குத்துச்சண்டை கற்றுக் கொள்ள ஆரம்பிச்சார். 

அண்ணன் எப்போது குத்துச்சண்டை பயிற் சிக்கு போனாலும் நானும் கூடவே போவேன். அங்கு அவர் பயிற்சி எடுப்பதை வேடிக்கைப் பார்ப்பேன். அண்ணன் ஓய்வு எடுக்கும் போது அவரோட பாக்ஸிங் கிளவுசை கையில் மாட்டிக் கொண்டு நான் குத்துச்சண்டை செய்வது போல் விளையாடிக் கொண்டு இருப்பேன்.  அண்ணன் எப்படி எல்லாம் சண்டைப் போட்டாரோ அப்படியே நானும் செய்து பார்ப்பேன். சில சமயம் பாக்ஸிங் பத்தி அவரு பேசும் போது நானும் எனக்கு தெரிந்த சில ஆலோசனைகளை சொல்லு வேன்.

இப்படி குத்துச்சண்டை பார்த்து அது குறித்து பேசிப் பேசி எனக்கு அந்த விளையாட்டு மேல் ஒரு வித ஈர்ப்பு  ஏற்பட ஆரம்பிச்சது. 

‘‘பாக்ஸிங் மேல் ஏற்பட்ட ஈர்ப்பால், பயிற்சி எடுத்தாலும் ஒரு வித பய உணர்வு இருந்து கொண்டே இருந்தது. முதல் போட்டியில் பங்கு பெறும் போது உடலில் நடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அந்த போட்டியில் விளையாடிய பிறகு அந்த பய உணர்வு எங்கு போனதுன்னு தெரியல. எனக்குள் ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டது. என்னாலும் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. தொடர்ந்து குத்துச்சண்டை பயிற்சி எடுத்தேன். போட்டியிலும் பங்கு பெற்றேன். அந்த நேரத்தில் பள்ளியில் ஹாக்கி விளையாட்டிற்காக ஆள் எடுத்தாங்க. நான் நல்லா ஓடுவேன் என்பதால் என்னை அணியில் தேர்வு செய்தாங்க.

பாக்ஸிங்கை விட ஹாக்கி போட்டிகளில் நான் நல்லா விளையாடுறேன்னு எங்க சார் சொன்னதால் அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். எவ் வளவு விளையாடினாலும் படித்திடுவேன். அதனால வீட்டில் பயிற்சிக்கு போவதால் ஒன்னும் சொல்ல மாட்டார்கள். நான் 7ஆவது படிக்கும் போது எங்க ஹாக்கி அணி ஒரு நல்ல அணியாக உருவாகியது. குஜராத்தில் நடந்த ‘கேளோ இந்தியா’ போட்டியில கலந்து கொண்டு தமிழ்நாடு அணிக்காக விளையாடினேன். அந்த போட்டி களில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை.

அது மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் விளையாடவும் போகலை. அப்ப நான் 10ஆம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். இந்த சமயத்தில் தான் கரோனா பாதிப்பு ஏற் பட்டதால், விளையாட்டுக்கான பயிற்சி முற்றிலும் தடைபட்டது. இரண்டு வருடம் எந்த விளை யாட்டிலும் நான் ஈடுபடவில்லை. 

‘‘வீட்டில் அப்பாவும் அண்ணாவும் நான் இப்படி இருப்பதைப் பார்த்து நீ மறுபடியும் குத்துச் சண்டை பயிற்சிக்கு போகலாமேன்னு சொன் னாங்க. ஏற்கனவே நான் பயின்ற விளையாட்டு என்பதால், அதில் பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். போட்டிக்கு தயாராக ஆரம்பிச்சேன். ஒரு விளையாட்டில் தோற்றால் நம் வாழ்க்கையில் என்றுமே தோல்வி தான் என்ற என் நினைப்பை குத்துச்சண்டை மாற்றியது. இந்த விளையாட்டில் பயிற்சி எடுக்க ஆரம்பிச்ச பிறகு தான், இந்த விளையாட்டு தான் எனக்கானது என்பதை புரிந்து கொண்டேன்.

அதிலிருந்து முழு மூச்சோட பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். இந்த விளையாட்டு குறித்து நிறைய போட்டிகளை பார்த்தேன், பல விஷயங் களை அண்ணன் மற்றும் பயிற்சியாளரிடம் பேசினேன். அவங்களும் சில யோசனைகளை சொல்லுவாங்க. அதை மறுபடியும் பயிற்சி செய் வேன். ஒவ்வொரு முறை நான் ரிங்ல ஏறும்போது போன தடவை விளையாடியதை விட இந்த முறை முன்னேறி விளையாடணும்ன்னு போட்டியில் களம் இறங்குவேன்.

அந்த எண்ணம் தான் என்னை போட்டியில் ஜெயிக்கவும் பாலமாக அமைந்தது. தற்போது மயிலாடுதுறையில் உள்ள ஒரு பயிற்சி நிலையத் தில் பயிற்சி எடுக்கிறேன். கடந்த 2021ஆம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றேன். இப்போ +2 என்பதால் படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தினாலும், அடுத்த போட்டிகளுக்காக என்னை தயார் படுத்தி வருகிறேன். என்னோட இலக்கு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி பதக்கம் வெல்ல வேண்டும் என்பது தான். அதற்கான பயிற்சியில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன்’’ என்று மலைக்க வைக்கிறார் ஸ்வேதா.

No comments:

Post a Comment