இரண்டாவது முறையாக தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

இரண்டாவது முறையாக தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின்

  •  ‘திராவிட மாடல்' ஆட்சி நடத்தி ஒளி பாய்ச்சுகிறார்!
  •  கட்சி, ஆட்சியை நேர்த்தியாக நடத்தும் பாங்கு வெகு சிறப்பு!

ஆட்சியை - கட்சியை உலகம் போற்ற நடத்தும் 

ஒளிபடைத்த கண்ணினாய் வா, வா!

 தாய்க்கழகத்தின் சார்பில் வாழ்த்தி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் பாராட்டு!


இரண்டாவது முறையாக தி.மு.க. தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்ட அனைத்துப் பொறுப்பாளர் களுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இன்று (9.10.2022) திராவிடர் இயக்க வரலாற்றில் ஒரு பொன்னாள்.

தி.மு.க.விற்கு பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகிய பெருமை பெற்ற தலைமை களுக்குப் பிறகு - அதிலும் குறிப்பாக கலைஞர் மறைவுக்குப் பின் அத்தலைமை, ‘‘அதே அளவுக்கு, வலிமையுள்ள, செயல்திறன் மிக்கதான தலைமையாக அமையுமா?'' என்றெல்லாம் சந்தேகக் கேள்விகள் எழுந்த போது, ‘‘தி.மு.க. என்னும் எஃகு கோட்டையான இயக்கத்தில் திறமையான தலைமைக்கு இதோ இவர் இருக்கிறார் - ‘அய்யிரண்டு திசை முகத்தும்' அறிவியக்கக் கொள்கைகளைப் பரப்புவார்; அரசியலிலும் ஒருபோதும் ‘வெற்றிடம்' வராது; அண்டை அயலார் வந்து ‘கற்றிடம் இது' என்று உணர்ந்து, பாடம் படித்துச் செல்லும் பண்பட்ட தலைமையை இவரால்தான் தர முடியும்'' என்று நான்கு ஆண்டுகளுக்குமுன் தி.மு.க. வின் பொதுக்குழு, செயற்குழு, தொண்டர்கள் என அனைவராலும் ஏகமனதாக தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டவர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அவர் தனது முதலாவது தலைமைக் காலத்தை நிறைவு செய்து, அடுத்த கட்டத்திலும் களமாடுபவர் ‘‘இவரே - இவரே'' என்று மீண்டும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தகுதிமிகு தலைவர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்!

அவர் கழகத்தின் பல பொறுப்புப் படிக்கட்டுகளைத் தாண்டிய பிறகுதான் - அவர் பெற்ற அனுபவம் காரணமாகவே இப்பொறுப்பு இரண்டாம் முறை அவரை நாடிச் சென்றுள்ளது!

முதல் முறை தலைவராக, ஒருமனதாகத் தேர்ந் தெடுக்கப்பட்டதற்குப் பின் - அறிவித்து மகிழ்ந்தவர் அன்றைய பொதுச்செயலாளர் நமது இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் என்பதும் என்றும் எண்ணி மகிழத்தக்க வாய்ப்பு.

‘திராவிட மாடல்' ஆட்சி நடத்தும் கொள்கையாளர்!

கடந்த முதல் கட்ட தலைமை தாங்கிய காலத்தில் மீண்டும் அக்கட்சியை ஆளுங்கட்சியாக்கி, இதோ ‘திராவிட மாடல்' ஆட்சி மீண்டும் வந்து திக்கெட்டும் கொள்கை ஒளி பாய்ச்சுகிறது பாரீர்! பாரீர்!! என்று சொல்லால் அல்ல; செயல் சாதனைகள்மூலம் நாளும் ஆட்சி செய்தது, கட்சி, ஆட்சி என்ற இரண்டையும் இரு ‘வலிமை'யுள்ள ‘தண்டவாளங்கள்'மீது வையம் புகழ நடத்தி வரலாறு படைக்கிறார்!

நல்லோர் வியந்து பாராட்டுகின்றனர்!பல்லோர் வாழ்த்தி மகிழ்கின்றனர்!

அவர் ஒரு செயலேறுழவர் (செயல் ஏறு உழவர்). அவருக்குப் பேச்சு குறைவு - செயல் நிறைவு; வினைத் திட்பம் அவரது முத்திரை!  ‘‘வித்தைகள்'' காட்டத் தெரியாதவர்! காரணம், நெஞ்சில் நினைத்ததை செயலில் நாட்டும் செம்மல் அவர்!

எந்த இயக்கமானாலும் தலைமையைப் ‘‘பதவி'' என்று மட்டும் எண்ணினால், செருக்கு வரும்; 

பொறுப்பு என்று உணர்ந்து சென்றால், பணிவும், துணிவும் தானே வரும்! வெற்றி விரைந்து வரும்!!

அவரை நல்லுலகம் பாராட்டி வாழ்த்துகிறது. அந்த வாழ்த்துகளுடன் நாமும் இணைகிறோம் என்பதைவிட, தாய்க்கழகம் அதனைக் கண்டும், கேட்டும், சுவைத்தும் பெரிதுவக்கிறது.

உழைப்பிற்கு மறுபெயர்தான் மானமிகு மு.க.ஸ்டாலின்!

உறுதிமிக்க உழைப்பிற்கு மறுபெயர்தான் தலைவர் மு.க.ஸ்டாலின். சாமானிய மக்களை நாடிச் சென்று மகிழ வைக்கும் சாமானியர்களின் முதலமைச்சர் இந்த சமூகநீதிக்கான சரித்திர நாயகரான நம் முதலமைச்சர்!

கட்சி, ஆட்சி- இரண்டுமே அவரிடம் வலிவும், பொலிவும் பெற்று தகத்தகாய ஒளிவீச்சுடன் உலா வருகிறன்றன!

தாய்க்கழகத்தின் பூரிப்பை, புளகாங்கித மகிழ்ச்சியை வரைந்தெடுக்க வார்த்தைகளே இல்லை!

அவரை ஒருமனதாக - போட்டி போட்டு முன் மொழிந்து, வழிமொழிந்த தி.மு.க. செயல் வீரர், வீராங் கனைகளுக்கும் நமது இதயங்கனிந்த பாராட்டுகள்!

பொறுப்பாளர்கள் ஒருமனதாகத் தேர்வு வரவேற்கத்தக்கதே!

அதுபோலவே, கழகப் பொதுச்செயலாளராக, தி.மு.க.வின் மூத்த ஆற்றலாளரான சகோதரர் துரைமுருகன் அவர்கள் மீண்டும் பொதுச்செய லாளராகவும், அதுபோலவே, நாடாளுமன்றத்தில் வலிமைமிக்க முறையில் கடமையாற்றி, நாளும் கழகத்தின் பணியைக் கடமையுற செய்யும் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களைப் பொருளாளராகவும் மீண்டும் ஒருமனதாகத் தேர்வு செய்திருப்பது, கழகத்தின் கட்டுக்கோப்பின் காட்சி விளக்கமாகும்!

இம்மூவருடன் ஏற்கெனவே முதன்மைச் செய லாளர் திரு.கே.என்.நேரு, அதுபோல துணைப் பொதுச் செயலாளர்களாக திரு.அய்.பெரியசாமி, முனைவர் திரு.க.பொன்முடி, திரு.ஆ.இராசா, அந்தியூர் திரு.செல்வராஜ் ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட் டுள்ளது வரவேற்கத்தக்கது.

புதிதாக துணைப் பொதுச்செயலாளராக கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்களை நியமனம் செய் துள்ளதும் மிகவும் மகிழ்ச்சி - வரவேற்கத்தக்கதாகும்.

தொண்டர்களும், தோழர்களும் மகிழ்ச்சியின் உச்சத்தில் நின்று வாழ்த்துவதைவிட ஒரு தலைமைக்கும், அதன் ஆற்றல்மிகு அமைப்பினருக்கும் (டீம்) வேறு என்ன பரிசு வேண்டும்!

தி.மு.க.வை உருவாக்கிய அறிஞர் அண்ணா - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற முப்பெரும் கவசத்தை அதற்கு அளித்தார்!

கட்டுப்பாடே சிறந்த கவசம்!

அம்மூன்றில், மற்ற இரண்டுக்கு சற்றுக் கூடுதல் குறைவு ஏற்பட்டாலும்கூட, பொறுத்துக் கொள்ளலாம்; ஆனால், கட்டுப்பாடு என்பதில் சமரசம் துளியும் கூடாது என்ற அறிவுரையை ஆணையாக மொழிந்தார் அறிவு ஆசான் தந்தை பெரியார்.

முத்தமிழ் அறிஞர், இயக்கம் சோதனைக்கு ஆளாகும்போதெல்லாம் தந்தை பெரியாரின் ஒப்பற்ற இந்த  அறிவுரையை வழிமொழிந்து வலியுறுத்தி இயக்கத்தை வழிநடத்தி வெற்றி கொள்வார்! 

இவர் இரண்டாம் முறையாக இப்பொறுப்பில் அமர்த்தப்படும் இன்றைய காலகட்டத்தில், முந்தையத் தலைவர்கள் சந்தித்த அறைகூவல்களைவிட மிக அதிகமானவற்றை எதிர்கொண்டு வென்றெடுக்க வேண்டிய மகத்தான கடமை இவரது தோளில் சுமத்தப்பட்டுள்ளது - நிச்சயம் வென்றெடுப்பார். ஏற்கெனவே பல சோதனைகளால் புடம்போடப்பட்ட கொள்கைத் தங்கம் அவர்! மதவாதம், மக்களாட்சி உரிமைப் பறிப்பு முதலியவற்றின் நச்சுப் பற்களைப் பிடுங்கக்கூடிய பணி நம் முன்னே நிற்கிறது!

நமது முப்பெரும் தலைவர்களின் அறிவுரையை கட்டளையாக்கி, கழகத்தை நடத்தி, வெற்றி வாகை சூடி ‘திராவிட மாடல்' ஆட்சியை - மாட்சியை உலகம் வியக்க நடத்த, ‘‘ஒளிபடைத்த கண்ணினாய்'' வா, வா! என்று அரவணைத்து வரவேற்கிறோம்!!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.10.2022

No comments:

Post a Comment