ரிஷி சுனத்திற்கு அப்படி என்னதான் தனிச் சிறப்பு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

ரிஷி சுனத்திற்கு அப்படி என்னதான் தனிச் சிறப்பு?

அயல்நாடுகளில் உயர்பதவிகளில்  பார்ப்பனர்களும் பார்ப்பனர் அல்லாதவர்களும் அமர்ந்தால் இந்திய பெரும்பான்மை ஊடகங் களின் பார்வை வெவ்வேறு மாதிரி இருக்கும். 

 இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த பிறகு பல்வேறு காரணங்களால் இந்தியர்கள் சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கேயே வசிக்கத்தொடங்கினர்.

 அவர்களில் பலர் நன்கு கல்விகற்று சமூக அக்கறையோடு மக்கள் பணியாற்றியதால் அவர்கள் அரசியல் தலைவர்களாக தாங்கள் வசிக்கும் நாடுகளில் இருந்துள்ளனர்.  இந்தியாவில் அவர்கள் வாழ்ந்த மாநிலங்களுக்கும் பெருமை சேர்த்தனர். முக்கியமாக இந்த பட்டியலில் அதிகம் இருப்பது தமிழர்கள் மட்டுமே!

18 ஆம் நூற்றாண்டில் மலேயாவுக்கு வணிகம் மற்றும் பணி நிமித்தம் சென்றவர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் வேலைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். மலேசியா - சிங்கப்பூர் நாடுகள் உருவான பிறகு அந்தந்த நாடுகளின் குடிமக்களாக வாழ்ந்தனர். 

அவர்கள் அரசியலில் பெரும் புகழ்பெற்றனர். அப்படி பெருமை யோடு வாழ்ந்தவர்கள் பட்டியல் நீளம் அதில் முக்கியமானவர்கள்-

மலேசியப்பிரதமராக துன் சம்பந்தன் என்ற தமிழர் பதவி வகித்துள்ளார் (ஆண்டு 1973)

 தற்போதையை மலேசிய அமைச்சரவையில் - இயற்கைவள சுற்றுச் சூழல் அமைச்சர்: டத்தோ சிறீ கோவிந்தசாமி பழனிவேல் - சுகாதார அமைச்சர்: டத்தோ டாக்டர் ச. சுப்பிரமணியம் - மலேசிய இந்திய துணை அமைச்சர்கள் துணைக் கல்வி அமைச்சர்: பி. கமலநாதன் - துணை இளைஞர் துறை அமைச்சர்: மு. சரவணன்,  துணைக் கூட்டரசு பிரதேச அமைச்சர்: லோகா பாலா மோகன், பிரதமர் துறை துணை அமைச்சர்: பி. வேதமூர்த்தி போன்றோர் 

சிங்கப்பூர் நிதி அமைச்சர் தருமன் சண்முகரத்தினம்  - அதிகாரமிக்க நடாளுமன்றத்தின் உறுப்பினராக இருப்பவர்கள்; சா. ஈஸ்வரன்  ஜனில், புதுச்சேரி   கே. சண்முகம்,   ராஜ் ஜோஷுவா தாமஸ்,   விவியன் பாலகிருஷ்ணன் போன்றோர் உள்ளனர்.

 கனடா நாட்டுப் பாதுகாப்பு அமைச்சராக வேலூரைச் சேர்ந்த அனிதா ஆனந்த் பதவியில் உள்ளார். பத்திற்கும் மேற்பட்ட கனடா, இங்கிலாந்து நாடாளுமன்றங்களின் உறுப்பினர்களாக தமிழர்கள் இருந்துள்ளனர். இருந்து வருகின்றனர்.  சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட மோனிகா  இங்கிலாந்தின் எம்ஸ்பரி நகர துணை மேயராக பதவியிலுள்ளார்.

அயர்லாந்தின் தற்போதைய பிரதமர் லியோ வர்த்கார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

இந்தியாவில் பிறந்த அவர் 2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில்  தனது இன்டர்ன்ஷிப்பை  மும்பையில் முடித்தார்.

அவரது தாய் அய்ரிஷ் கத்தோலிக்கராகவும், தந்தை மகாராட்டிர கத்தோலிக்கராகவும் இருப்பதால் இந்தியா அவரைப் பற்றிப் பேசவில்லை.

போர்ச்சுக்கல் நாட்டின் தற்போதைய பிரதமர் அன்டோனியோ கோஸ்டா - கோவாவில் இருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ஆனால் இந்தியா அவரை அங்கீகரிக்கவில்லை. ரிஷி சுனத்திற்கு முன்பே அய்ரோப்பிய நாடுகளை வழிநடத்தியவர்கள் இந்த இரண்டு மனிதர்கள்! ஆனால் அவர்கள் கிறிஸ்தவர்கள், அவர்கள் புறக்கணிக்கப்பட  ஒரே காரணம் அவர்கள் மதம் தான் 

இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாகவும் பிரதமர்களாக பதவியேற்றுள்ளனர்.

இதுமட்டுமல்ல தமிழர்கள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் அரசியல் தலைவர்களாகவும் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாகவும் உள்ளனர். 

 லண்டன் நகர மேயராக மோஹிந்தர் மிதா என்ற அரியானாவைச் சேர்ந்த பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   இவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இன்றும் இந்தியாவில் தீண்டத்தகாதவர்களாக பார்க்கப்படுகின்றனர். 

 இந்தியாவில் பெரும்பான்மையான மக்களில் ஒரு பகுதியினர் உலகம் முழுவதும் சென்று பல்வேறு பதவிகளில் பேரும் புகழும் பெற்றுள்ளனர்.  இவர்கள் எல்லாம் பதவியில் அமரும் போது இந்திய வம்சாவளி என்றோ, இந்தியரான, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், அரியானாவைச் சேர்ந்தவர் என்றோ எந்த  ஊடகங்களும் கொண்டாடுவதில்லை.

ரிஷி சுனக், கமலா ஹாரீஸ் போன்றோர்கள் உயர் பதவிகளில் வந்தால் மட்டும் வாரம் முழுவதும் கதை கதையாக எழுதி - இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர்கள் என்று மக்களிடையே பரப்புகின்றனர்.  

அதிலும் ஹிந்துமதத்தின் பெருமையை நிலைநாட்ட வந்தவர்கள், ஹிந்து கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் விரதமிருப்பவர்கள், கையில் கயிறு கட்டுபவர்கள், கழுத்தில் ருத்ராட்சர கொட்டை அணிபவர்கள் என்று எல்லாம் கதை விடுகிறார்கள்.   ஹிந்துக்கள் கட்டும் கயிற்றை ரிஷி சுனக் கையில் கட்டியிருக்கிறார் என்று எழுதுகின்றனர்.  உண்மையில் அப்படி மத அடையாள நம்பிக்கையோடு கையில் கயிறு கட்டும் அளவிற்கு இங்கிலாந்தின் புதிய பிரதமர் இருக்கிறார் என்றால் அது மிகவும் நகைப்பிற்குரியதே! 

ஒருவர் இந்தியாவில் பிறந்து படித்து வளர்ந்தவர் - மற்றவர் குழந்தைப்பருவத்தில் இந்தியாவிலிருந்து சென்று குடியேறியவர்.  அப்படி இருக்க  நேரடியாக இந்தியாவுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத, - இன்றைய பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த குடும்பம் - பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியேறி, எந்தவிதத்திலும் இந்தியாவில் வேரூன்றாத மூன்றாவது தலைமுறை ரிஷியை கொண்டாடுகிறார்கள்  என்றால் காரணம் - 

தொழிலதிபர் நாராயணமூர்த்தியின் மகளை மணந்தவர். நாராயணமூர்த்தி ஓர் அய்யங்கார் பார்ப்பனர் - இவர்கள் புகழ்வதன் சூட்சமம் இதுதான்!


No comments:

Post a Comment