தந்தை பெரியார் மண் - சமூகநீதி மண்! சமூகநீதிக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. இங்கு வெல்ல முடியாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 3, 2022

தந்தை பெரியார் மண் - சமூகநீதி மண்! சமூகநீதிக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. இங்கு வெல்ல முடியாது!

பண பலம், அதிகார பலம், பத்திரிகை பலத்தினால் தி.மு.க. ஆட்சியை வீழ்த்த முடியாது!

காரணம் மக்கள் பலம் தி.மு.க.விடம் இருக்கிறது - ‘திராவிட மாடல்' ஆட்சி மக்களைக் கவர்ந்துள்ளது!

‘மாலைமுரசு செய்தி'த் தொலைக்காட்சி- தமிழர் தலைவர் ஆசிரியரிடம் நேர்காணல்

சென்னை அக்.3   தமிழ்நாடு தந்தை பெரியார் மண் - சமூகநீதி மண். சமூகநீதிக்கு எதிரான சக்திகள் இங்கே காலூன்ற முடியாது. மக்கள் பலம் கொண்டது தி.மு.க.வை அதிகார பலம், பண பலம், பத்திரிகை பலங்களால் வீழ்த்த முடியாது, முடியாது, முடியாது என்றார் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

‘மாலை முரசு செய்தி'த் தொலைக்காட்சி- முரசு மன்றத்திற்கு தமிழர் தலைவர் பேட்டி

‘மாலை முரசு செய்தி'த் தொலைக்காட்சியில் - ‘முரசு மன்றம்'  நிகழ்விற்காக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் நேர் காணல் செய்யப்பட்டது. 

அவரது நேர்காணல் விவரம் வருமாறு:

நெறியாளர்: தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய அரசி யலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: தமிழ்நாட்டு அரசியல் என்பது ஒரு 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னால், உண்மை யான ‘திராவிட மாடல்' ஆட்சியாக, இந்தியா போற்றத் தக்கதாக, உலகம் வியக்கத்தக்கதாக நடந்துகொண் டிருக்கின்றது.

ஒப்பற்ற முதலமைச்சர் என்று, ஒன்றரை ஆண்டிற் குள்ளாகவே சிறப்பான சாதனைகளை செய்து ஒரு நல்ல பெயரை ஏற்படுத்தியிருக்கிறார்.

சாமானிய மக்கள் மத்தியில் ஒரு நல்ல நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக மகளிர் மத்தியில் ஒரு சிறந்த ஒரு புதிய அணுகுமுறை இருக்கிறது. இவர் களுடைய ஆட்சி என்பது நமக்குப் பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக திராவிடர் இயக்கம் என்பதை தோற்றுவித்ததே சமூகநீதிக்காகத்தான். தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் சேர்ந்ததும் சமூக நீதிக்காக - வெளியேறியதும் சமூகநீதிக்காக.

பிறகு அவர் யாரை ஆதரித்தாலும், காமராஜர் உள்பட - சமூகநீதிக்காகத்தான்.

அந்த சமூகநீதியை இன்றைக்குச் சரியாக நடை முறைப்படுத்தக் கூடிய அளவிற்குப் பல்வேறு துறை களில் அது செயல்பட்டு வருகிறது - ‘‘எல்லோருக்கும் எல்லாமும்'' - ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்ற வகையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பல நேரங்களில், இக்கட்டான சூழ்நிலைகளை அவர்கள் சந்திக்கும்பொழுதுகூட, மிக லாவகமாக அதைச் சமாளிக்கிறார்கள். முதலமைச்சர் மக்களின் முதலமைச்சராக இருக்கிறார்.

தமிழ்நாட்டில், ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்துவதில் என்ன அச்சம் தமிழ்நாட்டு மக்களுக்கு?

நெறியாளர்: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஒரு பேரணி நடத்தப் போகிறோம் என்று சொல்கிறார்கள்; அதற்காக நீதிமன்றத்திற்குச் சென்று தடை வாங்கக் கூடிய அளவில் ஒரு சூழல் இருக்கிறதா? இங்கே. ஏன்  ஆர்.எஸ்.எஸ். பேரணியை நம்மால் அனுமதிக்க முடிய வில்லை? சித்தாந்த ரீதியாக திராவிடர் கழகங்களும், பெரியாருடைய சிந்தனைகளும், தத்துவங்களும் மேலோங்கி இருக்கக்கூடிய தமிழ்நாட்டில், 

ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்துவதில் என்ன அச்சம் தமிழ்நாட்டு மக்களுக்கு?

தமிழர் தலைவர்: கலவரம் செய்கிறவர்களைத் தடுப்பது என்பது சட்ட ரீதியாகவே செய்யப்படவேண்டிய ஒன்றாகும்.

ஒரே ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.

மூன்று முறை இந்தியாவிலே தடை செய்யப்பட்ட அமைப்பு எது?

ஆர்.எஸ்.எஸ்.

ஏன் அது தடை செய்யப்பட்டது?

பிறகு எப்படி அந்தத் தடை விலக்கிக் கொள்ளப் பட்டது?

ஆர்.எஸ்.எஸினுடைய கொள்கையை, சித்தாந் தத்தை நாடு முழுவதும் உள்ள மக்கள் ஏற்றுக்கொண் டார்கள் என்பதற்காக அந்தத் தடை நீக்கப்படவில்லை.

நாங்கள் இனிமேல் எங்களை சரிப்படுத்திக் கொள் வோம் என்கிற உத்தரவாதமும், உறுதிமொழியும் கொடுத்து, ஒரு சட்ட திட்ட விதிகள்கூட அமைப்புக்குக் கிடையாது என்று பட்டேல் போன்றவர்கள், எஸ்.வி.ஆர்.அய்யங்கார் போன்றவர்கள், உள்துறை செயலாளர் சுட்டிக்காட்டிய பிறகு, கோல்வால்கர் போன்றவர்கள் எழுதி கொடுத்துதான் அந்தத் தடை விலக்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

ஆகவேதான், மூன்று முறை தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம் - அது ரகசிய இயக்கம்.

மற்ற இயக்கங்களைப் போன்று சித்தாந்த ரீதியாக வெளிப்படையாக இருக்கக்கூடிய அமைப்பு அல்ல அது.

ஹிடன் அஜெண்டா - ஓப்பன் அஜெண்டா!

வெளிப்படையாகத் தெரியக்கூடிய திட்டம் - மறை முகத் திட்டம் என்று இருக்கிற காரணத்தினால், நாட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், இந்தியா முழுவதும் கலவரம் நடைபெற்றது - ரத்தக் காடாக மாறிற்று.

திராவிட பூமி என்று சொல்லக்கூடிய பெரியார் மண் ணில் கலவரங்கள் நடைபெறவில்லை. காரணம், திரா விட இயக்கம் என்பதை அன்றைய காலகட்டத்திலேயே செய்தியாளர்கள், அரசியல் நோக்கர்கள் எழுதினார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில், மதக்கலவரங்களுக்கு வித்திடுகிறார்கள். வேண்டுமென்றே தவறான செய்தி களைப் பரப்புகிறார்கள்; தவறான செய்திகளைப் பரப்பு வதற்கே ஒரு தொழிற்சாலையை வைத்திருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கிற காரணத் தினால்தான், சமூக விரோதத் தன்மையோ, அமைதிப் பூங்காவாக இருக்கக்கூடிய இந்தத் தமிழ்நாட்டில், அவர்களையும், மற்றவர்களையும் சமப்படுத்திப் பார்க்கக் கூடாது.

அவர்கள் இப்பொழுதும்கூட பார்த்தீர்களேயானால், காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவை வணங்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அதேநேரத்தில், காந்தி பிறந்த நாளை நாங்கள்தான் கொண்டாடுவோம் என்று வித்தை காட்டுகிறார்கள்.

எனவேதான், இதுபோன்ற இரட்டை வேடம், இரட்டை நாக்கு, இரட்டைப் போக்கு இவற்றை வைத்துக் கொண்டு, அமைதிக்கு அவர்கள் பங்கம் விளைவித்தால், யாராக இருந்தாலும், அதை ஒரு நல்ல அரசு ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவேதான், அவர்களுடைய சித்தாந்தத்தைக் கண்டு யாரும் பயப்படவில்லை. ஆனால், அந்த சித்தாந்தத்தை அவர்கள் நேரிடையாக சொல்வதில்லை.

உதாரணமாக, சமூகநீதிக்கு அவர்கள் எதிரி என்று வெளிப்படையாக சொல்லட்டும்.

ஆனால், அதற்கு மாறாக என்ன சொல்லுகிறார்கள்? யாருக்காக சமூகநீதி உருவாக்கப்பட்டதோ, பாதிக்கப் பட்டவர்களுக்கான சமூகநீதியை - பாதிக்கப்படாத வர்களுக்கு சமூகநீதி என்று, இட ஒதுக்கீடு என்று சொல்லி, எல்லாவற்றையும் மாற்றி மாற்றி சொல்லு கிறார்கள்.

அம்பேத்கருடைய அடிப்படைக் கொள்கைகளுக்கு விரோதமாக நடந்துகொண்டிருக்கக் கூடியவர்கள்; ஜாதியை வற்புறுத்தக் கூடியவர்கள்; சனாதன தர்மத்தை, வருணாசிரம தர்மத்தை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அவர்கள்.

அதேநேரத்தில், அம்பேத்கர் அவர்கள் எங்களுக்கு பெரிய அளவிற்கு வழிகாட்டியாக இருக்கிறார்; அவரை நாங்கள் போற்றுகிறோம் என்று வித்தை காட்டுகிறார்கள்.

எனவேதான், அவர்களுடைய ‘ஹிடன் அஜெண்டா வேறு; ஓப்பன் அஜெண்டா வேறு' என்ற காரணத் தினால்தான், சமூக விரோத சக்திகளுக்கு, கலவரம் செய்யக்கூடியவர்களுக்கு, கலவரத்தைத் தூண்டக் கூடியவர்களுக்கு இங்கே இடம் இல்லை என்று காட்டவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

ஆகவேதான், சித்தாந்த ரீதியாக அவர்கள் எந்த மேடையிலும் விவாதம் செய்யத் தயார் என்றால், நாங்கள் விவாதம் செய்கிறோம்.

ஒரு சிறிய உதாரணத்தை உங்களுக்குச் சொல்கிறேன்-

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்டு, ஒரே மதம், ஒரே ஆட்சி என்று சொல்லக்கூடிய ஒற்றை ஆட்சி என்று சொல்லக் கூடியவர்களைப் பார்த்து, திராவிடர் கழகம் நீண்ட காலமாக ஒரு கேள்வியை வைத்திருக்கிறது. அந்தக் கேள்விக்கு இதுவரை அவர்களிடமிருந்து பதில் கிடையாது.

எல்லாவற்றிற்கும் ‘‘ஒரே, ஒரே'' என்று சொல்லு கிறீர்களே, ஒரே ஜாதி என்று ஏன் நீங்கள் சொல்லக் கூடாது? மண்ணுக்கு ஒருமைப்பாட்டைப் பேசுகிறீர்களே, மக்களுக்கு ஏன் ஒருமைப்பாடு பேசக்கூடாது? என்று கேட்கிறோம், இதுவரை பதில் இல்லை.

ஆகவேதான், அவர்களுடைய புறத்தோற்றம் என்பது வேறு - அதேநேரத்தில், அவர்களுடைய உள்நோக்கம் என்பது வேறு. அந்த உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்ற களமாக தமிழ் பூமி ஆகிவிடக்கூடாது - ஆக விடமாட்டோம் என்பதற் காகத்தான் ஆர்.எஸ்.எஸ். பேரணியைத் தடுக்கவேண் டும் என்று சொல்கிறோமே தவிர, அவர்கள் சித்தாந்த ரீதியாக, வெளிப்படையாக விவாதம் செய்யத் தயார் என்றால், எந்த மேடையிலும், எல்லா இடங்களுக்கும் வருகிறோம்.

நோய்க் கிருமிகள் வரும்பொழுது அதைத் தடுக்க வேண்டும்; நல்ல காற்று வரும்பொழுது, அதை வர வேற்கவேண்டும்.

எனவே, நோய்க் கிருமிகளும், நல்ல காற்றும் ஒன்றல்ல.

எனவே, சித்தாந்தங்கள் - வெளிப்படையாக அவர் கள் வந்து பேசினால், எங்கள் இயக்கத்தில் ரகசியம் இல்லை என்று சொன்னால், தெளிவாக இருக்கும்.

ஷாகா என்ற பெயரில் அவர்கள் நடத்தும் முகாம் களில்கூட, அவர்கள் வெளிப்படையாக சொல்வது வேறு; அதேநேரத்தில், இளம்பிள்ளைகள் மனதில், மத வெறுப்புணர்ச்சியை உண்டாக்கி, வெறுப்பு அரசியலை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவேதான், கலவர பூமியாக, அமைதிப் பூங்காவை ஆக்கக்கூடாது என்பதற்காகத்தான் எல்லாக் கட்சியினரும் அந்தப் பேரணிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று சொல்கிறார்களே தவிர, மற்றபடி அவர்களைக் கண்டு யாரும் பயப்படவில்லை.

அதேநேரத்தில், மக்கள் பாதிக்கப்படக் கூடாது. அமைதியாக இருக்கின்ற மாநிலத்தில், ரத்த ஆறு ஓடக்கூடாது.

எப்படி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், இந்தியா முழுவதும் கலவரம் நடந்தாலும், தமிழ்நாட்டில் கலவரம் நடைபெறவில்லை என்று சொன்னேனோ, அதே எண்ணத்தில் திராவிட பூமி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

ஆர்.எஸ்.எஸினுடைய சித்தாந்தங்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தமிழ்நாட்டில் வளர்ந்துகொண்டு இருக்கிறதா?

நெறியாளர்: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புகூட ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு இரண்டு இடங் களில் அனுமதி கேட்டிருந்தார்கள்; ஆனால், இந்த ஆண்டு 49 இடங்களில் அனுமதி கேட்கிறார்கள் என்பது, ஆர்.எஸ்.எஸினுடைய சித்தாந்தங்களுடைய வளர்ச்சி யாக இதைப் பார்க்க முடியாதா? பெரியார் மண்ணில் மிகத் தீவிரமான சனாதன எதிர்ப்புக் கொள்கைகள் இருக்கிறபொழுது, ஆர்.எஸ்.எஸ். 49 இடங்களை நோக்கிப் பயணிப்பது, அவர்களுடைய பேரணியை நடத்துவதற்கு அனுமதி வாங்குவது என்பது, மறை முகமாக ஆர்.எஸ்.எஸினுடைய சித்தாந்தங்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டு இருக்கின்றன என்றுதானே அர்த்தம்?

தமிழர் தலைவர்: நோய்க் கிருமிகள்கூட வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கோவிட் தொற்றுக்கூட மிக வேகமாக வளர்ந்தது, அதற்கான சிகிச்சை என்பது குறைவாகத்தான் இருந்தது.

எனவே, ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு என்பது சிகிச்சை போல. அதேநேரத்தில், அவர்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு இருக்கின்ற பண பலம் - ஒன்றியத்தில் உள்ள ஆட்சி தங்கள் கைகளில் இருக்கிறது என்கிற காரணத்தை வைத்துக்கொண்டு, இன்னொரு பக்கம் கார்ப்பரேட் கனவான்கள் தங்கள் கைகளில் இருக் கிறார்கள், பத்திரிகைகள் சில நேரங்களில்  மிரட்டப்படு கின்றன; அல்லது முதலாளிகள்மூலம் நடைபெறுகின்றன; தொலைக்காட்சிகள், ஊடகங்களை தங்கள் கைகளில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இன்றைக்குத் தேடப்படும் கிரிமினல்கள், குற்றவாளிகளுக்கெல்லாம் புகலிடம் எது என்றால், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள்தான்.

கிருமிகளாக இருக்கின்ற காரணத்தினால், கிருமிகள் நுழையக் கூடாது என்று நினைக்கின்றோமே தவிர, மற்றபடி எந்தக் கட்சி வேண்டுமானாலும் வரட்டும். கருத்தை கருத்தால் சந்திப்போம்.

வேறு எந்தக் கட்சியிலாவது தேடப்படும் குற்ற வாளிகள், கிரிமினல்கள் இருக்கிறார்களா?

17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கின்றோம் என்று சொல்கிறார்களே - மக்களால் ஓட்டுப் போட்டு ஆட்சிக்கு வந்தவர்களா அவர்கள்? யாரோ வெற்றி பெற்றதை - சில வித்தைகளை காட்டி ஆட்சிக்கு வந்தால், அது திருடப்பட்ட பொருளே தவிர, அது சம்பாதிக்கப்பட்ட பொருள் அல்ல. அவர்களுடைய வித்தைகளில் ஒன்று.

இருந்தாலும், அதற்கு இடமில்லை என்று காட்ட வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்பதற்காகத்தான் எதிர்க்கிறோம்.

வலுவான மருந்து பெரியார்; 

மற்ற மருந்துகள் எல்லாம் பயன்படாது

நெறியாளர்: ஆர்.எஸ்.எஸ். என்கிற அந்தக் கிருமியை அழிப்பதற்கு நம்மிடம் வலுவான மருந்து இருக்கிறதா?

தமிழர் தலைவர்: வலுவான மருந்து பெரியார்; மற்ற மருந்துகள் எல்லாம் பயன்படாது. வலுவான மருந்து மட்டுமல்ல - பெரியார் என்பது பேராயுதம் - அது போராயுதமாக இருந்தாலும், அறிவாயுதம். அது வெறும் ரத்தத்தை நம்பிக் கொண்டிருக்கவில்லை. அது வெறும் கொலைகளை நம்பிக் கொண்டிருக்கவில்லை. 

ஆர்.எஸ்.எஸ். என்பது ரகசிய இயக்கம்.

ஆனால், திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் தத்துவங்களைப் பொறுத்தவரையில், திராவிடர் இயக்கங்களைப் பொறுத்தவரையில், எதுவுமே ரகசியம் கிடையாது.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினால்தான், அந்தக் கிருமிகளுக்கு வலுவான மருந்து பெரியார்தான்.

ஏனென்றால், மற்றவர்கள் எல்லோரையும் ஜீரணித்து விட்டார்கள்; எதிர்த்து அழிக்க முடியாததை, அணைத்து அழித்துவிடலாம் என்ற முறையை புத்தர் காலத்திலிருந்து அவர்கள் கையாளும் முறையாகும். ஆகவே, அதனை அவர்கள் செய்கிறார்கள்; இங்கே அது நடக்காது.

தமிழ்நாட்டில் ஆட்சி செய்யக்கூடிய தி.மு.க.வையும் பா.ஜ.க. அணைத்துக் கொண்டதா?

நெறியாளர்: பா.ஜ.க., தமிழ்நாட்டில் ஆட்சி செய்யக் கூடிய தி.மு.க.வையும் இப்படி அணைத்துக் கொண்டதா?

தமிழர் தலைவர்: அணைக்க முடியாது. ஏனென்றால், நீரும், நெருப்பும் கூட்டுச் சேர முடியாது.

வாஜ்பேயி காலத்தில் கூட்டுச் சேரலாமா? என்று பார்த்தார்கள்; தானாக அணைந்து போய்விட்டது. எங்களுக்குத் தெரியும், அது நிலைக்காது என்று.

இதே பெரியார் திடலில்தான் கலைஞர் பேசினார், ‘‘ஒட்டகத் தினுடைய கழுத்தை மாற்றலாம் என்று நினைத்தேன்; வீரமணி கொக்கை மாற்றலாம் என்று நினைத்தார்; இரண்டு பேருக்குமே அது முடியவில்லை'' என்று.

தமிழ்நாட்டில், தி.மு.க.வினுடைய ஆட்சி கலைக்கப்பட்டால், என்ன செய்வீர்கள்?

நெறியாளர்: ஒன்றியத்தில் ஆட்சி செய்யக்கூடிய பா.ஜ.க. தன்னுடைய அதிகாரம், பண பலம், கார்ப்பரேட் சக்தி ஆகியவற்றை வைத்து தமிழ்நாட்டில் ஆட்சிக் கலைப்பு என்கிற முயற்சியை கையிலெடுத்தார்கள் என்றால், அதற்கு தி.மு.க.வால் ஈடு கொடுக்க முடியுமா? ஏனென்றால், கடந்த காலங்களில் இரண்டு முறை ஒன்றிய ஆட்சியினுடைய அதிகாரத்தால், ஆட்சியை இழந்த கட்சி தி.மு.க. 

மீண்டும் பா.ஜ.க.வால் தமிழ்நாட்டில், தி.மு.க.வினு டைய ஆட்சி கலைக்கப்பட்டால், என்ன செய்வீர்கள்? அதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

தமிழர் தலைவர்: இன்றைக்கு இருக்கின்ற அமைப்பு, அதிகாரத்தால் அவர்களால் முடியும்.

356-அய் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். 

ஆளுநர் போன்றவர்கள் அதுபோன்ற வித்தைகளை தொடங்கியிருக்கிறார்கள். 

ஆட்சியாளர்களைச் சீண்டுவது, ஆத்திரப்பட வைப் பது, கலவரங்களை உண்டாக்குவது போன்று செயல் படுவது, சட்டம் -ஒழுங்கு பிரச்சினை என்று சொல் வார்கள்; கலைப்பது என்பது அவர்களுக்கு சுலபம்; கலைப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது.

ஆனால், எவ்வளவு நாள்களுக்கு அந்த அதிகாரத்தை நம்பிக் கொண்டிருக்க முடியும்?

இத்தனை அதிகாரத்தைப் பெற்றவர்கள் எல்லாம், இன்றைக்கு அதிகாரத்தில் எங்கே இருக்கிறார்கள்? எதேச்சதிகாரம் கொண்டவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

அதேநேரத்தில், ஜனநாயகம் - 13 ஆண்டுகள் ஆட்சி யில் இல்லாமல், அதற்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது.

10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆண்டபொழுது, இனி மேல் தி.மு.க. எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும் என்றும், முதலமைச்சராவது ஸ்டாலினுக்கு ராசியே இல்லை என்று பல ஜோதிடர்கள் சொன்னார்கள்.

ராசி பலன் பார்த்தார்கள் ஆலமரத்து அரசியல் ஜோதிடர்கள் - இப்பொழுது எங்கே போனார்கள்?

ஆகவேதான், ஆட்சியைக் கலைக்கலாம் - அதனால் நட்டம் யாருக்கு என்றால், தி.மு.க.வுக்கு அல்ல. இப் பொழுது தப்பித் தவறி நான்கு பேர் சட்டமன்றத்திற்குள் சென்றிருக்கிறார்களே, அந்த நான்கும் இருக்காது.

எனவே, திராவிட மண் என்பது அப்பொழுதுதான் சிலிர்த்து எழும்.

தூங்கும் புலியை பறைகொண்டு எழுப்பினோம்

தூங்கும் தமிழரை தமிழ்கொண்டு எழுப்புவோம் என்று புரட்சிக்கவிஞர் சொன்னதுபோன்று - அதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதை அன்றைக்குப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் அரசியல் கட்டமைப்பை உடைத்துவிட்டார்களா?

நெறியாளர்: அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா,  -  இவர்கள் கட்டமைத்த அரசியல் கட்டமைப்பை கடந்த 10 ஆண்டுகளில் நடந்த அ.தி.மு.க.வினுடைய ஆட்சியினர் - உடைத்துவிட்டார்களா? இந்தக் கட்ட மைப்பு உடைந்ததைத்தான், பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸி னுடைய சித்தாந்தமாகப் பார்க்க முடியமா?

தமிழர் தலைவர்: முயற்சி செய்தார்களே தவிர, அவர்களால் அது முடியவில்லை.  ஹிந்தியை வெளிப் படையாக நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை.

நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்றுதான் சொன் னார்களே தவிர, ஆதரிக்கிறோம் என்று சொல்லவில்லை.

காரணம், இந்த மண்.

என்னதான் அவர்கள் கர்ணம் போட்டாலும், தங்க ளுடைய கட்சியை டில்லிக்கு அடமானம் வைத்தாலும், அடமானப் பொருள், அடமானப் பொருளாகத்தான் இருக்குமே தவிர, அது அவர்கள் பொருளாக ஆக முடியாது என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந் திருக்கிறார்கள்.

ஆகவேதான், அந்த வித்தைக்கு இங்கே இடமில்லை. அவர்கள் அவ்வளவு செய்த பிறகுகூட, அதை சரி செய்து கொண்டிருக்கிறார்கள், இன்றைய ஆட்சி யாளர்கள்.

கடந்த ஆட்சியாளர்கள், சில நேரங்களில் இரட்டை வேடம் போட்டார்கள்; பாம்புக்குத் தலை - மீனுக்கு வால் என்பதுபோல - விலாங்கு அரசியல் நடத்தினார்கள்.

அதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை. பாதிப்பு யாருக்கு என்றால், அவர்களுடைய கட்சி காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. அவர்கள் கட்சியை நான்கு துண்டுகளாக்கி, பொம்மலாட்டத்தை நடத்திக் கொண் டிருக்கிறார்கள்.

இது தி.மு.க.விற்கு இன்னும் பலத்தை உண்டாக்கியிருக்கிறார்களே தவிர, பலகீனத்தை அல்ல.

அ.தி.மு.க.வினுடைய வீழ்ச்சி, 

அந்த இடத்தில் பா.ஜ.க. என்ற ஒரு கட்சியை உருவாக்கி விடுமா?

நெறியாளர்: அ.தி.மு.க.வினுடைய சிதைவு - ஒரு வகையில் தி.மு.க.விற்குப் பலத்தைக் கொடுத்தாலும், அது பா.ஜ.க.விற்கு பலத்தை சேர்த்துத்தானே கொடுக் கும். ஏனென்றால், அ.தி.மு.க. - தி.மு.க. என்ற இந்த எதிர் துருவ அரசியலில், அ.தி.மு.க.வினுடைய வீழ்ச்சி, அந்த இடத்தில் பா.ஜ.க. என்ற ஒரு கட்சியை உருவாக்கி, தி.மு.க. - பா.ஜ.க. என்ற ஒரு நிலையை நோக்கி நகர்ந்தால், அதுவும் ஒரு பேராபத்தாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது?

தமிழர் தலைவர்: அ.தி.மு.க. உருவம். பா.ஜ.க. நிழல். நிழல் ஒருபோதும் உருவ இடத்திற்கு நிகராகாது.

வேண்டுமானால், எதிர்க்கட்சியாக அ.தி.மு.க., தி.மு.க. வரலாம். ஏனென்றால், அடிப்படைக் கொள்கையில் மாறுதல் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சமூகநீதியா? பெரியார் கொள்கைதான். இன்னும் பெரியார் கொள்கைதான் என்று சொல்லிக் கொண்டிருக் கிறார்கள் அல்லவா - அது எந்த அளவிற்கு இருக்கிறது என்பது விவாதத்திற்குரியதுதான். அதற்குள் போக வேண்டிய அவசியமில்லை.

அ.தி.மு.க.வை உடைத்துவிட்டோம்; அந்த இடத் திற்கு நாங்கள் வருவோம் என்பது - அ.தி.மு.க. நின்ற தினால் ஏற்பட்ட நிழல் - உருவம் கொஞ்சம் நகர்ந்தால், நிழல் போய்விடும்.

எனவே, அவர்கள் ஆசைப்படலாம். அவர்களுடைய ஆசை கானல் நீர் போன்றதுதான். உண்மையான நீர் ஆக முடியாது.

ஏனென்றால், அந்த இடத்திற்கு அவர்கள் வரக்கூடிய நிலைக்கு தமிழ் மண் ஒருபோதும் இடந்தராது.

பெரிய அளவிற்கு அவர்களுக்கு ஆதரவு இருப்பதுபோன்று ஒரு வித்தையைக் காட்டுகிறார்கள்; உண்மை நிலை என்ன என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்.

ஆகவேதான், கொள்கை ரீதியாக, சித்தாந்த ரீதியாக அது வளர்க்கப்படவில்லை.

ஆகவேதான், அ.தி.மு.க.விற்கு ஈடாக பா.ஜ.க. இருக்க முடியாது என்பதற்கு அடையாளம்தான் - கடந்த தேர்தல் முடிவுகள்.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் வருமா?

நெறியாளர்: 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் வரும் என்று சொல்கிறார்கள்; திட்டமிட்டுத்தான் பா.ஜ.க. காய்களை நகர்த்துகிறதா? இந்தக் காய்களுக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலினால் என்ன செக் வைக்க முடியும்?

தமிழர் தலைவர்: மக்கள் ஆதரவு இருக்கின்ற வரையில், எதுவும் செய்யவேண்டிய அவசியமில்லை. அவர் கொஞ்சம்கூட பதறவில்லை.

ஏனென்றால், அவருக்குத் தெரியும் - நம்மிடமிருந்து ஆட்சியை யாராலும் பறிக்க முடியாது என்பது.

நாளுக்கு நாள் அவருடைய ஆட்சிக்கு மெருகேறிக் கொண்டிருக்கிறது.

அமைதியாக, அடக்கமாக என்ன செய்ய வேண்டுமோ, அதைப் பொறுமையாக செய்கிறார்.

உயர்நீதிமன்றத்திற்குச் சென்றோம், பேரணிக்கு அனுமதி வாங்கி விட்டோம் என்று அவர்கள் சொன்னார்கள்.

ஆனால், தமிழ்நாடு அரசு, சட்டம் ஒழுங்கிற்குப் பாதிப்பு ஏற்படும் என்பதினால், அவர்களுடைய ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்க முடியாது என்று தெளிவாகச் சொன்னார்கள்.

இது மக்கள் இயக்கம் - கார்ப்பரேட் கனவான்கள் தயவில் நடக்கும் கட்சியல்ல தி.மு.க. - சாமனியர்களுடைய இயக்கம் தி.மு.க.

இன்னுங்கேட்டால், தொண்டர்கள் அதிகமாக இருந்து, பல பேர் தங்கள் லட்சியத்திற்காக உயிரைக் கொடுக்கக்கூடிய தொண்டர்கள் இருக்கக்கூடிய இயக்கம் திராவிடர் இயக்கம்.

அதைவிட மிக முக்கியம். திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் - தோழமைக் கட்சிகளோடு கூட்டணி அமைத்திருக்கிறது தி.மு.க.

மற்ற மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு எதிரான கூட்டணி வெற்றி பெறவில்லை என்றால், அது அரசியல் கூட்டணி.

தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டு இருக்கின்ற கூட்டணி என்பது - மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி என்பது வெறும் அரசியல் கூட்டணி அல்ல. இது கொள்கைக் கூட்டணி.

தேர்தலுக்காக உருவான கூட்டணியல்ல; இது 10 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட கூட்டணி.

அதுமட்டுமல்ல, திராவிடர் கழகம் போன்ற ஒரு பொது அமைப்பு - ஒருங்கிணைக்கக் கூடிய நிலையில் இருக்கிறது.

அவர்கள் எவ்வளவு துள்ளினாலும், துள்ளுகிற மாடு பொதி சுமக்கும்.

சில நேரங்களில், நடக்க வாய்ப்பில்லாத ஒருவர், நான் கீழே இறங்கி வந்தால், என்னாகும் தெரியுமா? என்னாகும் தெரியுமா? என்று சொல்வார்.

இறங்கி வா என்று சொல்வதற்கு ரொம்ப நேரம் ஆகாது. அவர் இறங்கி வர முடியாது என்று தெரிந்ததினால்தான், அவர் உச்சக்கட்டத்திற்குப் போகட்டும்; பிறகு அவரை கீழே இறங்கி வாருங்கள் என்று கூப்பிடலாம்.

தி.மு.க. ஆட்சியை ஒழித்துவிட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாகத்தானே இருப்பார்கள்?

நெறியாளர்: முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ‘திராவிட மாடல்' என்று சொல்கிறார். பெரியாரு டைய பகுத்தறிவு கொள்கைகளை இந்தியா முழுவதும் பரப்புவோம்; சமூகநீதி கருத்துகளை இந்தியாவினுடைய பல மாநிலங்களுக்குக் கொண்டு செல்வோம் என்று பேசுகிறார். அதற்கேற்றாற்போல்கூட பெரியாருடைய பகுத்தறிவுக் கொள்கைகள், சமூகநீதிக் கொள்கைகள் மீள்வாசிப்புக்கு இந்தியாவினுடைய பல மாநிலங் களுக்குப் போகிறது என்னும்போது, இப்படிப்பட்ட ஒரு சிந்தனை இந்தியா முழுவதும் பரவிவிடக் கூடாது என்பதில், ஆர்.எஸ்.எசும், பா.ஜ.க.வும் முன்னெச்சரிக்கை யாக இருப்பார்கள் அல்லவா - அதற்கு பிராயச்சித்தமாக, இந்த ஆட்சி முறையை ஒழித்துவிட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாகத்தானே இருப்பார்கள்?

தமிழர் தலைவர்:  தாராளமாக. கொள்கை ரீதியாக எதிர் எதிரான அமைப்புகள்.

இருட்டை சிலர் விரும்புவார்கள்; வெளிச்சத்தை அவர்கள் விரும்பமாட்டார்கள்.

எனவே, இருட்டை விரும்புபவர்களுக்கும், வெளிச் சத்தை விரும்புபவர்களுக்கும் எப்பொழுதும் போராட் டம் இருக்கத்தான் செய்யும்.

இன்னுங்கேட்டால், இருட்டில் தங்களுடைய செயல்பாடுகளை நடத்துபவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் மிகவும் எச்சரிக்கையாகவும், தந்திரமாகவும், கவனமாகவும், அறிவியல் ரீதியாக எப்படி செயல்படலாம் என்றுதான் நினைப்பார்கள்.

உதாரணமாக, ஓரிடத்தில் காமிரா வைத்திருக்கிறார்கள் என்றால், அந்தக் காமிரா செயல்படாமல் இருப்பதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்று தெரிந்துகொண்டு இருப்பவர்கள்.

ஆனால், ஒன்று, அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் - அதைப்பற்றி கவலைப்படவேண்டிய அவசியமில்லை.

தமிழ் மண்ணைப் பொறுத்தவரையில், விஞ்ஞானத் திற்கும், சனாதனத்திற்கும் நடைபெறக்கூடிய போட்டி.

சனாதனம் என்பது பழைமை.

சனாதனத்தை நம்புபவர்களே, இன்றைக்கு விஞ்ஞானத்தைத்தான் நம்புகிறார்கள்.

என்னதான் இராமனுக்குக் கோவில் கட்டினாலும், வேல், அம்பு, ஈட்டியை இன்றைய காலகட்டத்திற்கு நாட்டைப் பாதுகாப்பதற்கு வாங்கவில்லை. இன்றைக்கு ரபேல் விமானத்தைத்தான் இந்திய ராணுவத்திற்கு வாங்குகிறார்கள்.

அம்பையோ, ஈட்டியையோ அவர்கள் நம்பவில்லை. அறிவியலை நம்புகிறார்கள்.

அதேபோன்றுதான், இது அறிவியல் - பெரியாருடைய சிந்தனைகள் என்பது அறிவியல்.

திராவிட மாடல், திராவிடத் தத்துவம் என்பது அறிவியல்.

அறிவியலை சனாதன தத்துவம் வீழ்த்த முடியாது.

இதுவரை, மூடநம்பிக்கைகள், மதம் மண்டியிட்டு இருக்கிறதே தவிர, அறிவியல் ஒருபோதும் மதத்திற்கு முன்னால் மண்டியிடவில்லை.

கலிலியோ காலத்திலிருந்து இன்றுவரையில் அதுதான் உண்மை.

சனாதனத்தினுடைய வளர்ச்சியை 

நம்மால் தடுக்க முடியுமா?

நெறியாளர்: அண்மைக்காலத்தில் சனாதனத்தி னுடைய வளர்ச்சியை நம்மால் தடுக்க முடியுமா? சனாதனத்தினுடைய வளர்ச்சியைத் தடுப்பதற்கான ஒற்றை ஆயுதமாக யார் இருக்கிறார்கள்?

தமிழர் தலைவர்: ஏற்கெனவே சொன்ன பதில்தான். பெரியார்தான்!

இன்றைக்கு இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் ஏன் பெரியார், பெரியார் என்று சொல்கிறார்கள்.

பெரியார், கடவுள் மறுப்பாளர் என்று தெரியும், பெரியார் இந்தி எதிர்ப்பாளர் என்று தெரியும்.

இருந்தாலும், கடவுள் நம்பிக்கையாளர்களே, பெரியாரைத்தான் விரும்புகிறார்கள்.

என்னதான் மோடியும், மற்றவர்களும் சனாதனம் பேசினாலும், அவர்களும் விஞ்ஞானத்தைத்தானே நம்புகிறார்கள். நான் ஏற்கெனவே சொன்ன பதிலில் இருக்கிறது பாருங்கள்.

ஆகவே, சனாதனத்தைத் தடுக்க முடியுமா? என்ற பிரச்சினையல்ல. தானாகவே அது ஒரு குறிப்பிட்ட அள விற்கு வந்தாலே, அதனுடைய முடிவை எட்டி விடும்.

ஏனென்று கேட்டால், சர்வதிகாரம், எதேச்சதிகாரம், ரகசிய தத்துவமாக இருக்கிறவர்கள் வென்றதாக வரலாறு கிடையாது.

அவர்களுடைய உச்சக்கட்டம் என்பது - அவர்கள் எவ்வளவு வேகமாக நடந்துகொள்கிறார்களோ, அதி லேயே அவர்களுடைய அழிவு என்பது இருக்கிறது.

வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்கிறார்களே, வெறி என்பது வளர்ச்சி அல்ல; வீக்கம் என்பதும் வளர்ச்சி அல்ல - இதை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

மும்முனை நெருக்கடியை, ஸ்டாலின் தலைமையிலான அரசு எதிர்கொண்டிருக்கிறதா?

நெறியாளர்:  ஒரு பக்கம் ஆளுநர் ஆர்.என்.ரவி மூலமாக தமிழ்நாடு அரசிற்கு நெருக்கடி; இன்னொரு பக்கம் ஒன்றிய அரசின்மூலம் நெருக்கடி; தமிழ்நாடு பா.ஜ.க.மூலமாக நெருக்கடி - இப்படி மும்முனை நெருக்கடியை, ஸ்டாலின் தலைமையிலான அரசு எதிர்கொண்டிருக்கிறதா?

தமிழர் தலைவர்: மக்கள் கவசத்தை அவர் அணிந்திருக்கிறார். மூன்று அல்ல - முப்பது அல்ல - முன்னூறு முறை நெருக்கடி வந்தாலும், மக்கள் கவசம் இருக்கிறது; பெரியார் என்ற பேராயுதம் இருக்கிறது. அண்ணா - கலைஞர் - அதற்கு முன்பு இருந்த நீதிக்கட்சி என்ற திராவிட மாடல் கருவிகள் இருக்கின்றன.

எனவே, அவர் நிராயுதபாணி அல்ல. அவர் மாபெரும் போர்ப் படைத் தளபதி அரசியல் களத்தில்.

எனவேதான், வெல்லுவது உறுதி! 

இன்றைக்கு நான் சொல்லவில்லை, தேர்தலுக்கு முன்பே இந்த முழக்கத்தை சொன்னோம் -

திராவிடம் வெல்லும் - அதை

நாளைய வரலாறு சொல்லும்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘மாலைமுரசு செய்தி’ தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறினார்.

No comments:

Post a Comment