சட்டவிரோதமாக குழந்தைத் திருமணம் செய்யும் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 6, 2022

சட்டவிரோதமாக குழந்தைத் திருமணம் செய்யும் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள்

அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை

சிதம்பரம், அக்.6- சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சட்டவிரோதமாக குழந்தை திருமணம் செய்யும் தகவல் வெளியான வண்ணம் உள்ளது. சுமார் 10-க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங் களை தீட்சிதர்கள் செய்திருப்பது காவல்துறை யினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிதம்பரம் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் சோமசேகர் தீட்சிதர். இவர் நடராஜர் கோவில் தீட்சிதர்களில் ஒருவர். இவரது 14 வயது மகள் தற்போது 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது நடராஜர் கோவில் தீட்சிதர், அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து, கடலூர் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு குழுவினர் மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் திருமணமான சிறுமி, மற்றும் அவரது தந்தையை கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு காவல்துறையினர் கடலூருக்கு அழைத்துச் சென்று சமூக நலத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுமி தனக்கு திருமணம் நடந்ததை ஒத்துக் கொண்டார். இதையடுத்து இது குறித்து சமூக நலத்துறையின் மகளிர் ஊர் நல அலுவலர் தவமணி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகாரளித்தார்.

அதன் அடிப்படையில் சிறுமியின் தந்தை சோமசேகர் தீட்சிதர் (வயது 41), சிறுமியை திரு மணம் செய்த பசுபதி தீட்சிதர் (வயது 24), மற்றும் அவரது தந்தை கணபதி தீட்சிதர்(வயது 42) ஆகியோரை கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், தீட்சிதர்கள் மேலும் ஒரு குழந்தைத் திருமணத்தை நடத்தி வைத்தது அம் பலமாகியுள்ளது. 

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13 வயது குழந்தைக்கு 19 வயது தீட்சிதரை திருமணம் செய்து கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சமூக நலத்துறை அலுவலர் சித்ரா, கடலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் பத்ரீசன் எனும் தீட்சிதர், அவரது தந்தை ரத்தினம், மணமகனின் சகோதரர் சூர்யா, சிறுமியின் தந்தை ராஜகணேஷ் தீட்சிதர், தாய் தங்கம்மாள் ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சூர்யா மற்றும் தங்கம்மாளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவான மற்ற நான்கு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். 


No comments:

Post a Comment