ஆர்.எஸ்.எஸ் இந்திய நாஜிகளே! (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

ஆர்.எஸ்.எஸ் இந்திய நாஜிகளே! (2)

கல்பனா மாத இதழின் ஆசியராக இருந்த ஜெயகாந்தன் அவர்கள் 1980 ஜனவரியில் அவ்விதழில் 'எனது பார் வையில் ஆர்.எஸ்.எஸ்' என்றத் தலைப் பில் எழுதிய கட்டுரை.

1946-1947 கால கட்டத்தில் நடந்ததை நேரடியாக பார்த்தவர். சுதந்திரப் போராட்ட காலத்தில் தம் இளமை பரு வத்தில் ஆர்.எஸ்.எஸ் என்ன செய்து கொண்டிருந்தது, சுதந்திரம் கிடைத்த நாளில் சுதந்திரத்தை அது கொண்டாடிய விதம், எதற்காக காந்தியை அவர்கள் தம் பரம எதிரியாக கொண்டு கொலை செய்தனர் போன்றவற்றுக்கான பதிலைத் தம் சொந்த அனுபவத்திலிருந்து பகிர்கிறார்.

(சென்ற வாரத் தொடர்ச்சி...)

அப்போது நான் விழுப்புரத்தில் ரயில்வே தொழிலாளிகளின் பிள்ளைக ளோடு இருந்தேன். ரயில்வே காலனி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மாலை நேரங்களில் கூடிக் கவாத்து பழகுவார்கள். அவர்களில் பெரும்பகுதி யினர் ரயில்வே காலனிக்கு வெளியிலி ருந்து வருவார்கள். காக்கிக் கால்சட்டை யும், வெள்ளை மேல்சட்டையும் அணிந்திருப்பர். ஒரு சிலர் தலையில் கறுப்புக் குல்லாயும் தரித்திருந்தனர். விளையாடும் மைதானத்தின் நடுவே தங்களுடைய காவிக் கொடியை நட்டு வைத்து வணங்குவார்கள்.

நானும் சில ரயில்வே தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளும் நாள்தோறும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப் போம். ஆனால் அவர்களோடு சேர்வதில் எனக்கிருந்த கடுமையான ஆட்சேபம் மற்ற நண்பர்களை அவர்கள் பால் செல்லாமல் தடுத்துக் கொண்டி ருந்தது. ஆயினும் நாட்கள் செல்லச் செல்ல அவர்களில் சிலர் சற்றுத் தயக்கத் துடன் ஆர்.எஸ்.எஸ். விளையாட்டில் கலந்துகொள்ளவும் ஆரம்பித்தனர்.

இவர்களிடம் இவர்களுக்குத் தெரியாத அரசியல் பற்றியும் உலக விவகாரங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருப்பதால் பயனொன்றும் ஏற்படாது. அவற்றைப் பேச வேண்டிய இடமும், பேச வேண்டிய நபர்களும் வேறு. நாம் சிறுவர்கள். சிறுவர்களான நமக்கு விளையாட்டும், தேகப் பயிற்சியும், கட்டுப்பாடும் மிக மிக அவசியமே! அதை மற்ற தேசியக் கட்சிகளிடமும் கம்யூனிஸ்டு கட்சியிடமும் பெற முடியாத சிறுவர்கள் ஒரு சில நல்ல நோக்கங் களுடனே இந்த ஆர்.எஸ்.எஸ் விளையாட்டு அரங்கத்தில். புகுந்து விடுகிறார்கள். பிறகு மெள்ள மெள்ள அவர்களுக்கு மிக இணக்கமான முறை யில் எண்ணற்ற விஷக் கருத்துக்கள் புகுத்தப்படுகின்றன. இறுதியில் இவர்கள் கடைந்தெடுத்த ஹிந்து வெறி’யர்களாக உருவாக்கப்படுகிறார்கள். அதாவது அவரவர் தரத்துக்கேற்ப இந்த வெறி பிரயோகிக்கப்படுகிறது. இதுவே இவர் களின் செயல்திட்டம்; இயக்க நடைமுறை!

இதிலிருந்து நமது நண்பர்களைக் காப்பாற்ற வேண்டுமானால் நாமும் விளையாட்டரங்கம் ஒன்று அமைக்க வேண்டும். கவாத்துப் பழக வேண்டும். மல்யுத்தம், சிலம்பம், விளையாட்டுக்கள் ஆகியவற்றில் சற்றும் விருப்பமில்லாத ஒரு `பிரகிருதி‘ நான். எனினும் இதில் விருப்பமுள்ளவர்களை ஒன்றிணைக்க நாமும் முயற்சி எடுத்தல் வேண்டும்!’ என்று தீர்மானித்தேன்.

எனது எண்ணத்தை எனது நண்பர்களிடம் பல நாட்கள் பேசியதன் விளைவாக விழுப்புரம் ரயில்வே காலனி யில்  ஆர்.எஸ்.எஸ்.. விளையாட்டு அரங் கத்துக்குப் பக்கத்திலேயே ரயில்வே காலனி பாலர் சங்கம்’ என்றொரு சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் ஆர்கனைசரான நான் அதில்கேப்டன்!’

எங்கள் பாலர் சங்க முயற்சிகள் நல்ல பலன் அளிக்க ஆரம்பித்தன. ஐம்பதி லிருந்து எழுபது வரை அதன் அங்கத்தினர்கள் பெருகியிருந்தனர். ரயில்வே காலனி மைதானத்தில் ஒரு பக்கம் காவிக் கொடியும், இன்னொரு பக்கம் செங்கொடியும் பறந்தன. தோளில் சாத்திய செங்கொடியுடன் ரயில்வே காலனி குழந்தைகளை அணிவகுத்துக் கொண்டுவந்து – மைதானத்தின் நடுவே செங்கொடியை நட்டுவிட்டு, ஓர் ஓரமாய் ஒதுங்கிக் கன்னத்தில் ஊன்றிய கையுடன் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப் பேன். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தியாவுக்கு சுதந்திரம் வருகிற வரை விளையாடுவதில்லை என்று எனக்கு ஒரு சிறுபிள்ளை வைராக்கியம் உள்ளூர இருந்ததே!

இந்தியா சுதந்திரம் பெற்றது! மிக விபரீதமான ஒரு சூழ்நிலையில் நாம் சுதந்திர துவஜத்தைப் பறக்க விட்டோம். நாடு துண்டாடப்பட்டது! நம்மில் பலருக்கு அதில் சம்மதமில்லை. ஒன்று பட்ட அடிமை இந்தியாவா? துண்டாகிப் பிளவுண்ட சுதந்திர இந்தியாவா? விடுதலை பெற்ற நாடுகளாக இருந்தால் நாம் மறுபடியும் ஒன்றுபட்டு விட முடியாதா என்ற நம்பிக்கை போலும்! பாகிஸ்தானைப்  பிரித்தே ஆக வேண்டும் என்ற மூர்க்கமான நிலைமையில் இந்தியா தனது சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தது.

`நாடு பிரிவது என்றால் என் பிணத்தின் மேல்தான் அந்தப் பிரிவினை நடக்கும்‘ என்று உறுதியாகச் சொல்லி விட்டார் மகாத்மா காந்தி. இந்திய தேசிய அரங்கில் விவாதங்களும் சமாதானங் களும், வேண்டுகோள்களும் ஒரே குழப்படியாயிருந்தன. இவற்றிலிருந்து விலகுவதற்குப் பிரிவினையை ஒத்துக் கொள்ளுவதைத் தவிர அதை விரும்பாதவர்களுக்கு வேறு வழியில் லாது போயிற்று. நாட்டுப் பிரிவினையும் நாட்டுச் சுதந்திரமும் ஒரே போதில் நமக்கு நேர்ந்தது.

எனினும் இந்தியா இருநூறாண்டு அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்றது. இந்தச் சுதந்திர தின மகிழ்ச்சியில் பங்குகொள்ள முடியாமல் மகாத்மா காந்தி மனம் நொந்து கிடந்தார். அதே நேரத்தில் புனாவில் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

திலகரும் கோகலேயும் ஒரு காலத்தில் சுதந்திர முழக்கமிட்ட அந்தப் பழம் பெரும் பாரம்பரியம் மிகுந்த நகரமே சுதந்திரக் கொண்டாட்டத்தில் மூழ்கி யிருந்த நேரத்தில் ஒரு மைதானத்தில் அந்தக் காவிக் கொடி ஸ்வஸ்திகா சின்னத்துடன் பறக்கவிடப்பட்டு, ஐநூறு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியைப் புறக்கணித்து ஒதுக்கிவிட்டு இந்திய நாஜிகளின் கொடியை ஏற்றி வணங்கினர். ஆம்; இந்தக் கொடியும் ஹிட்லரின் மூன்றாவது ரீச்சினுடைய கொடியும் சிறு வித்தியாசத்துடன் ஒரே கோஷத்தைத் தான் பொறித்துக் கொண்டிருந்தன.

ஸ்வஸ்திகா ஆரியர்களின் சின்னமாம்! புனாவில் கூடியிருந்த இந்த இளைஞர்களும் தாங்கள் மகத்தான ஆரியர்களின் வழித் தோன்றல்கள் என்றே நம்பியிருந்தனர். இதில் கலந்து கொண்ட சிலர், தனிமனிதர்களைக் கொல்லும் தவநெறியை மேற்கொண்ட வர்களாகவும் இருந்தனர்.

சிந்து நதியின் தலைப் பகுதியிலிருந்து கிழக்கே பர்மா வரையிலும், திபெத்தி லிருந்து குமரி முனை வரையிலும் விரிந்து பரந்த ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபிப்பதையே தங்களதுஉன்னத லட்சியமாக‘க் கொண்டவர்கள் இவர்கள்.

இந்திய மக்களின் நவீன கால அடிமைத்தனத்துக்கெல்லாம் ஆணி வேரான மத வேற்றுமையைக் களைந்து `ஹிந்து – முஸ்லிம் ஏக்ஹோ!’ என்று சகோதரத்துவத்தையும் சகிப்புத் தன்மையையும் நம்மிடையே கட்டிக் காத்து நின்ற மகாத்மா காந்தியை இவர்கள் தங்கள் முதல் எதிரியாகக் கருதினர். அவர்கள் கருத்துப்படி காந்திஜியும் அவரது இயக்கமும்தான் ஹிந்து ராஷ்டிரத்தின் ஆகப் பெரிய முதல் எதிரி! தாக்கி அழிக்க வேண்டிய இலக்கு!

காந்திஜியின் அகிம்சை எனும் ஆத்ம வீரத்தை, ஆண்மையற்ற கோழைத்தனம் என்று இவர்கள் அறுதியிட்டுக் கணித்தனர். ஹிந்துக்களின் பலத்தையும் வீரத்தையும் காந்திஜியின் அகிம்சை தத்துவம் மாசுபடுத்திவிட்டது என்று இவர்கள் குற்றம் சாட்டினர்!

ஆம்! இந்தியாவில் நம்மோடு இரண்டறக் கலந்துவிட்ட எல்லா மதத்தினரும் சகோதரர்களே! இவர்கள் மத்தியில் சமத்துவமும் சகோதரத்துவமும் ஏற்படுவதே இந்தியாவின் லட்சியம் என்று மகாத்மா நமக்குக் கற்பித்து நிலை நாட்டிய கொள்கைக்கு இவர்கள் கனவு கண்ட, காண்கிற, அந்த ஹிந்து ராஷ்ட்டிரத்தில் இடம் கிடையாதேஞ்!

ஆரியர்களின் வாரிசுகளும், அகண்ட ஹிந்துஸ்தானத்தின் அதிபர்களுமான இவர்கள் இந்திய உபகண்டத்துக்கே தாங்கள்தான் உரிமையானவர்கள் என்று ஜெர்மன் நாஜிகள் போன்றே நம்பினார்கள்! இந்தியாவைத் தாக்கி அடிமை கொண்ட முகலாயர்களின் தற்கால வாரிசுகளாகவே கருதி இந்தியாவிலுள்ள நமது முஸ்லிம் சகோதரர்களை இவர்கள் நெஞ்சின் அடியாழத்திலிருந்து வெறுத்தார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக அந்த அகண்ட ஹிந்து ராஷ்டிரத்தைத் துண்டாடுவதற்கு இறுதியில் காந்தியும் ஒப்புக் கொண்டார் என்று விஷந்தோய்ந்த குற்றச்சாட்டை அவர்கள் கூர்மை ஆக்கினர். இறுதிவரை பிரிவினையை ஏற்காத தேசத் தந்தையை இவர்கள் அபாண்டமாகச் சந்தேகித்துப் பழித்துக் கூறி, அதை மன்னிக்க முடியாத மாபெரும் துரோகமாகக் கருதினார்கள்.

இந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் ஒருவனாகவே 1947 ஆகஸ்ட் 15-ம் நாள் நின்றிருந்தான் நாதுராம் விநாயக கோட்ஸே!

(தொடரும்...)


No comments:

Post a Comment