'நீட்' எனும் பெயரால் விளம்பர, வணிகக் கொள்ளை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 16, 2022

'நீட்' எனும் பெயரால் விளம்பர, வணிகக் கொள்ளை!

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு (நீட்) முடிவுகள் 7.09.2022 அன்று வெளியானது, தேர்வு முடிவுகள் வெளியான மறுநாள் இந்தியாவின் அனைத்து நாளிதழ் களிலும் சில முன்னணி நீட் பயிற்சி நிறு வனங்களின் விளம்பரங்கள் வெளியாகி உள்ளது.

அதாவது இந்திய அளவில் முதல் 29 இடங்களைப் பிடித்தவர்கள் அனைவருமே பிரபல நீட் பயிற்சி மய்யங்களில் பயின்றவர்கள் தான் என்று வெளிப்படையாகவே விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.  இந்த நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த தன்ஷிகா என்பவர் 720க்கு 715 மதிப்பெண் பெற்று (99.99%)  முதலிடத்தைப் பிடித்தார்.   அனைத்து நாளிதழ்களும் 'நீட்' தேர்வில் முதலிடம் பிடித்த பெண் என்று எழுதி இருந்தன.  இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பல முன்னணி 'நீட்' பயிற்சி நிறுவனங்களின்  விளம்பரங்களில் தங்கள் - தங்கள்  பயிற்சி மய்யத்தில் படித்தவர்தான் முதலிடம் பெற்ற தன்சிகா   என்று விளம்பரம் செய்துள்ளன.   கொல்கத்தா நகரிலிருந்து வெளிவரும் நாளிதழிலும் -  பாட்னாவிலிருந்து வெளிவரும் நாளிதழிலும் - மற்றும் மும்பையிலிருந்து வெளிவரும் நாளிதழிலும் வேறு வேறு பயிற்சி நிறுவனங்களின் விளம்பரங்களில் எங்களிடம் படித்த மாணவிதான் முதலிடம் பிடித்த தன்சிகா  என்று வந்துள்ளது,  

 ஒரு பெண் பல்வேறு நகரங்களில் வேறு வேறு பயிற்சி வகுப்புகளில்  ஒரே சமயத்தில் எப்படி படித்திருப்பார்?   'நீட்' என்றாலே மோசடி என்று ஆகி இப்போது பல்வேறு வடிவங்களில் இந்த மோசடிகளை அரங்கேற்றி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

'நீட்' என்பது மிகப் பெரிய வணிகத்துக்கான மய்யப் புள்ளி என்பது இப்பொழுது விளங்க வில்லையா?

இது போன்ற பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படிக்க எத்தனை இலட்சம் ரூபாய்களைக் கொட்டி அழ வேண்டும்? எல்லோருக்கும் இது சாத்தியமா?

பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைகளுக்கு 10 விழுக்காடு என்று ஒரு பக்கத்தில் பம்மாத்துப் பேசும் ஒன்றிய அரசு 'நீட்'டைத் திணித்ததன் மூலம் யார் வயிற்றில் அறுத்துக் கட்டுகிறது?

பெரும் பணம் இருந்தால்தான் பயிற்சி மய்யங்களில் சேர்ந்து அதிக மதிப்பெண் பெற முடியும் என்பதுதான் யதார்த்தமான நிலை என்பது புரியவில்லையா?

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்ட மக்களுக்குத்தான் இடஒதுக்கீடு  என்ற அரசமைப்புச் சட்டத்தின் சரத்தை ஓர் அரசாங்கமே குழி தோண்டிப் புதைக்கலாமா? பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையினர் - அவர்கள் வாளா இருக்கலாமா? வீதிக்கு வாரீர்! நீதிக்குப் போராடுவீர்!!

No comments:

Post a Comment