கோயில் கடவுளர் சிலை, தூணை ஒடுக்கப்பட்ட வகுப்புச் சிறுவன் தொட்டுவிட்டதால் தீட்டாயிடுத்தாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 23, 2022

கோயில் கடவுளர் சிலை, தூணை ஒடுக்கப்பட்ட வகுப்புச் சிறுவன் தொட்டுவிட்டதால் தீட்டாயிடுத்தாம்

கருநாடகாவில் தலைவிரித்தாடும் ஜாதி ஆணவம்

பெங்களூரு,செப்.23- ஜாதியின் பெயரால் உயர்வு தாழ்வு கற்பித்து, பிறப்பு முதல் இறந்த பின்னரும் தொடரும் ஜாதி இழிவு  - மனிதர் களிடையே மதத்தின் பெயரால் பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பித்து பாகுபாடுகள் தொடர்ந்து  கொண்டிருக்கின்றன. இதுதான் இல்லாத இந்து மதத்தின் ‘புனிதம்’ என்று கூறிக் கொள்கிறார்கள்.

கருநாடக மாநிலம் உல்லேர் ஹல்லி மாவட்டத்தின் மலூர் தாலுகாவுக்கு உள்பட்டது கோலார் மாவட்டம். இது பெங்களூருவில் இருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ளது. அங்கு வசித்து வருபவரான சோபம்மா என்பவர் மகன்  அங்குள்ள கோயிலில் உள்ள கடவுளர் சிலையை தொட்டுவிட் டதால், அந்த கோயிலில் இழந்த புனிதத்தை மீட்டெடுக்க அவர் ரூ.60,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று அங்கேயுள்ள கிராமப் பஞ்சாயத்து தண்டனை விதித்துள்ள தாம்.

இதுகுறித்து,  சோபம்மா தாழ்த்தப்பட்டோர் நலன் சார்ந்த ஓர் அமைப்பிடம் கூறுகையில், “கடவுளுக்கு எங்களைப் பிடிக்க வில்லை என்றால், நாங்கள் அம் பேத்கரை வணங்கிக் கொள் கிறோம்” என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “கடந்த 8-ஆம் தேதி ஊரில் பூத்தாயம்மா திருவிழா நடை பெற்றது. இந்தத் திருவிழாவின் போது தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக் கப்படுவதில்லை. இந்நிலையில், கோயிலுக்கு வெளியே நின்றிருந்த எனது 15 வயது மகன் சாமி ஊர்வலத்தை வேடிக்கைப் பார்த் துக் கொண்டிருந்தார். அப்போது எனது மகன் சித்திரானா சிலை யுடன் இணைந்திருந்த தூண் ஒன்றை தொட்டுவிட்டார். இதைப் பார்த்து ஊர்க்காரர்கள் உடனே எங்கள் மகனுடன் நாங்கள் ஒட்டுமொத்த குடும்பத் தினரும் ஊர் சபையில் ஆஜராக உத்தரவிட்டனர். அடுத்த நாள் நாங்களும் அங்கு சென்றோம். ஆனால், எங்களுக்கு பேரிடிதான் காத்திருந்தது. அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் நாங்கள் ரூ.60,000 தண்டம் கட்ட வேண்டும்; இல்லாவிட்டால் ஊரை விட்டு வெளியே அனுப்பப்படுவோம் என்றனர்.

எங்கள் கிராமத்தில் 75 முதல் 80 குடும்பங்கள்தான் வசிக்கின் றன. இவற்றில் பெரும்பாலான குடும்பங்கள் ஒக்கலிகா சமூ கத்தைச் சார்ந்தவை. 10 குடும் பங்கள் தாழ்த்தப்பட்ட சமூக குடும்பங்கள். எங்கள் வீடு ஊர்க் கடைசியில் இருக்கிறது. என் மகன் தெக்கால் கிராமத்தில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயில்கிறார். என் கணவர் ரமேஷ் உடல்நலன் சரியில்லாதவர். நான் மட்டும்தான் என் வீட்டில் சம் பாதிக்கும் நபர். தினமும் காலை 5.30 மணிக்கு நான் ரயில் ஏறி பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டுக்கு செல்வேன். அங்கு சில வீடுகளில் வீட்டு வேலை செய் கிறேன். எனது மாத வருமானம் ரூ.13,000. இதில்தான் எனது குடும்பமே வாழ்கிறது. இதில் நான் எப்படி ரூ.60,000 தண்டம் கட்ட முடியும்?

கடவுளுக்கு நாங்கள் தொடுவது பிடிக்காது என்றால், இந்த ஊர் எங்களை ஒதுக்கியே வைக்கத் துடிக்கும் என்றால், நான் அந்தக் கடவுளை வணங்கி என்ன பயன்? மற்ற எல்லோரையும் போல், நானும் கோயிலுக்கு வரி செலுத்தியுள்ளேன்.

 ஆனால் நான் கடவுளைக் கும்பிடக் கூடாது என்றால், இனி எப்போதும் அம்பேத்கரை மட்டுமே கும்பிடு வேன்” என்று அவர் கூறினார்.  

அம்பேத்கர் சேவா சமிதியின் செயற்பாட்டாளர் சந்தேஷ், அந்தக் குடும்பத்திற்கு இப்போது உதவிக் கரம் நீட்டி வருகிறார். இப்போது அந்தக் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். சுதந்திரத் தின் 75ஆவது ஆண்டு 'அமிர்தப் பெருவிழா'வைக் கொண்டாடும் வேளையில்தான் இந்தச் சம்பவ மும் நடந்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.


No comments:

Post a Comment