‘தீக்கதிர்’ ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் கருத்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 1, 2022

‘தீக்கதிர்’ ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் கருத்துரை

 கருப்புச் சட்டை அணிந்து, சட்டத்திற்கு விளக்கம் சொல்பவராக அல்ல

இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் சட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறார் ஆசிரியர் கி.வீரமணி

சென்னை, செப்.1 சட்டங்களுக்கு விளக்கம் சொல்பவராக இல்லாமல் இடஒதுக்கீட்டைக் காப்பாற்றும் சட்டங்களை உருவாக்கும் இடத்தில் ‘விடுதலை' ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு இருப்பவர் தமிழர் தலைவர் வீரமணி  என்றார் ‘தீக்கதிர்' நாளிதழின் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம்.

88 ஆண்டு விடுதலையின் 60 ஆண்டுகால ஆசிரியருக்குப் பாராட்டு விழா!

கடந்த 27.8.2022 மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடை பெற்ற ‘‘பத்திரிகையாளர்கள் - எழுத்தாளர்கள் பார்வை யில் 60 ஆண்டுகால ஆசிரியர் மானமிகு கி.வீரமணி; 88 ஆண்டு ‘விடுதலை'யின் 60 ஆண்டு ஆசிரியருக்குப் பாராட்டு விழா’’வில் ‘தீக்கதிர்’ நாளிதழின் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய 60 ஆண்டுகள் ஊடகப் பணியைப் பாராட்டி நடைபெறுகிற இந்த விழாவினுடைய தலைவர் மரியாதைக்குரிய அய்யா கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

விழாவின் மய்யப் புள்ளியாக இருக்கிற மரியாதைக்குரிய ஆசிரியர்!

இந்த விழாவின் மய்யப் புள்ளியாக இருக்கிற மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களே,

அவருடைய தொண்டறத்தைப் போற்றுவதற்காக வருகை தந்து மேடையில் அமர்ந்திருக்கின்ற ஆளுமை களே, தோழர்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக் கும் என்னுடைய பணிவான மாலை நேரத்து வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு கட்சிப் பத்திரிகையை நடத்துவது 

மிகக் கடினம்

‘குமுதம்' இதழில், அரசு கேள்வி - பதில் பகுதியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டு இருந்தது - எது கடினம்? கட்சி நடத்துவதா? பத்திரிகை நடத்துவதா? என்று. அந்தக் கேள்விக்கு அரசு பதில் சொல்லியிருந்தார், கட்சிப் பத்திரிகை நடத்துவது கடினம் என்று.

கட்சியைத் தனியாக நடத்திவிடலாம்; பத்திரிகையைத் தனியாக நடத்திவிடலாம். ஒரு கட்சிப் பத்திரிகையை நடத்துவது மிகக் கடினம்.

பெரிய விளம்பரப் பின்னணிகள் 

வர வாய்ப்பில்லை

ஒரு கட்சிப் பத்திரிகையை நடத்துவதே கடினம் என்றால், அதிகாரத்திற்கு ஒருபோதும் வரமாட்டோம் என்று ‘சபதம்' செய்துவிட்டு இருக்கிற ஓர் இயக்கத்தி னுடைய ஏட்டிற்கு ஆசிரியராக இருப்பதும்,

ஜோதிடங்களையும், ஆபாசப் படங்களையும் வெளியிடமாட்டோம் என்று ‘சபதம்' செய்திருக்கின்ற ஓர் ஏட்டின் ஆசிரியராகவும், 

பெரிய விளம்பரப் பின்னணிகள் வர வாய்ப்பில்லை என்ற ஓர் ஏட்டின் ஆசிரியராகவும் 60 ஆண்டுகள் அய்யா அவர்கள் இருந்திருக்கின்றார் என்று சொன்னால், அது ஒன்றும் சாதாரணமான விஷயமல்ல.

அவருடைய பத்திரிகை அனுபவமும், 

என்னுடைய வயதும் ஒன்று!

உண்மையில், பத்திரிகை ஆசிரியர் பணியில், அவருடைய பத்திரிகை அனுபவமும், என்னுடைய வயதும் ஒன்று.

ஆனால், என்னுடைய குறுகிய கால அனுபவத்தில் நான் சொல்வேன், ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராக இருப்பது என்பது, எண்ணெய்ச் செக்கிலே கொண்டு போய் தலையை விடுவது போன்றது.

அதிகமாக வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்கள் பத்திரிகையினுடைய ஆசிரியர்கள்தான்!

ஏனென்றால், பத்திரிகையிலே யார் தவறு செய்தாலும்,  அது ஆசிரியர் தலையிலேதான் விழும்.

இன்னும் சொல்லப்போனால், ‘‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, என்னிடத்தில் வாருங்கள்'' என்று விவிலியத்தில் ஒரு வார்த்தை உண்டு.

ஆனால், இந்த உலகத்திலேயே அதிகமாக வருத்தப் பட்டு பாரம் சுமக்கிறவர்கள் பத்திரிகையினுடைய ஆசிரியர்கள்தான்.

ஏனென்றால், ஒரு தவறான செய்தியை யார் எழுதியிருந்தாலும்கூட, அடுத்த நாள், ‘‘இப்படி தவறுதலாக வந்துவிட்டது; தவறுக்கு வருந்துகிறோம்'' என்று திருத்தம் போடுவார்கள்.

பத்திரிகை உலகத்தில் வேடிக்கையாக சொல்வதுண்டு - ஏனென்றால், பத்திரிகைகள் இன்றைய காலகட்டத்தில் வேக வேகமாக செய்தி தருவதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றன.

அந்த ஆர்வத்தில் ஒருவர், இறந்துபோகாத ஒரு மனிதரை இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டு விட்டார்கள்.

அவர் இறக்கவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்!

அடுத்த நாள் அந்த மனிதர், தொலைப்பேசியில் தொடர்புகொண்டு கோபப்பட்டு பேசியிருக்கிறார்.

அடுத்த நாள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள், எப்படி என்றால், ‘‘இன்னார் இறந்துவிட்டார் என்று செய்தி வெளியிட்டு இருந்தோம்; அவர் இறக்கவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றெல்லாம் வருத்தம் தெரிவிக்கின்ற மரபு பத்திரி கைகளில் உண்டு.

இங்கே உண்மையிலேயே பெரியார் என்கிற பேரு ருவம் இன்னமும் எதிரிகளை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறார்.

திருவரங்கத்திலே பள்ளிகொண்ட பெருமாள் படுத் திருக்கிறார். அதிலே கூட சொல்லுகிறார்கள், புராணி கர்கள், அவர் புரண்டுபடுத்தால், உலகமே அழிந்துவிடு மாம். எனக்கு இருக்கிற கவலை, அவர் தூக்கக் கலக்கத் திலே புரண்டு படுத்துவிடக்கூடாதே என்பதுதான்.

அவ்வளவு பெரிய ராஜகோபுரம் அவர்களுடைய கண்களுக்குத் தெரியவில்லை. திருச்சி மாநகரில் எங் கிருந்து பார்த்தாலும், திருவரங்கத்தினுடைய இராஜ கோபுரம் தெரியும். அதன் எதிரே மிகவும் அடக்கமாக அய்யா பெரியார் அமர்ந்திருக்கிறார்.

அவர் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்; திருவரங்கத்தில் அமர்ந்திருப்பவர், ரியல் ஸ்டண்ட் மாஸ்டர்!

ஆனால், எதிரிகளுக்கு இராஜகோபுரம் கண்களுக்குத் தெரியவேயில்லை. எதுவுமே செய்யாமல் அடக்கமாகப் படுத்திருப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பவரை இவர் களால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை என்றால், அதிலும் ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் அளவுக்கதிகமாகப் பொங்கி இருக்கிறார். அதிலும் அவர் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்; எதிரில் அமர்ந்திருப்பவர், ரியல் ஸ்டண்ட் மாஸ்டர்.

அவர் சந்திக்காத போர்க்களங்களா? அவர் நடத்தாத படை வரிசையா?

டிஷ்யூம் என்று சொல்லமாட்டார் அவர். சனாதனத் திற்கு எதிராக வாழ்க்கை முழுவதும் சமர் புரிந்த ஒரு பேருருவம் அங்கே அமர்ந்திருக்கிறது; எதிரிகளை அச் சுறுத்திக் கொண்டே இருக்கிறார்.

அதேபோல, இங்கே நம்முடைய கவிஞர் அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து முடித்துவிட்டு, வழக்குரை ஞர் தொழிலை கடலூரில் தொடங்குகிறார். அய்யாவிட மிருந்து அப்பொழுது அழைப்பு வருகிறது.

அதிலும் ‘விடுதலை'யை நடத்தலாமா? வேண்டாமா? என்று அய்யா கேட்டுவிட்டு, ‘‘நீங்கள் பொறுப்பேற்பதாக இருந்தால் நடத்துகிறேன்'' என்று சொல்லுகிறார்.

புராணத்தில் சொல்வார்கள், ‘‘சகலம் கிருஷ்ணார்ப் பணம்'' என்று - எல்லாம் கிருஷ்ணனுக்கே. அப்படி சொல்பவர்கள், புளியோதரை போட்டால், கீழே போய் வரிசையில் நிற்பார்கள் என்பது வேறு விஷயம்.

ஆனால், உண்மையில், ‘சகலம் பெரியார் அர்ப்பணம்' என்று தொண்டறத்திற்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட அய்யாவிற்கு ஒரு ‘தர்மசங்கடம்' வருகிறது. வழக்குரைஞராக இருப்பதா? ‘விடுதலை'யினுடைய ஆசிரியராகப் பொறுப்பேற்றபதா?

ஒரு பகுதி நேர பணி செய்கிறேன் என்பதை தந்தை பெரியார் அவர்கள் ஏற்கவில்லை, அதை கவிஞர் அவர்கள் சொன்னார்கள்.

பெரியார் புராணம்தான் 

‘‘அய்யாவின் அடிச்சுவட்டில்!’’ 

நான் ஏதோ சில பக்கங்களைப் படித்துவிட்டு இந்த வரலாற்றை சொல்லவில்லை. ‘‘அய்யாவின் அடிச்சுவட் டில்'' என்ற தலைப்பில் ஆசிரியர் அவர்கள் எழுதியிருக் கின்ற ஏழு தொகுப்புகளையும் படித்துவிட்டு, பெரிய புராணம் போன்றே சொல்லலாம். உண்மையிலேயே இதுவும் ஒரு பெரிய புராணம்தான். ஏனென்றால், பெரிய புராணமே தொண்டர்களுடைய பெருமையைச் சொல் வதற்காகத்தான் சொல்லப்பட்டது என்கிறார்கள். இது பெரியார் புராணம். 

பெரியார் புராணத்தில் பார்த்தீர்களேயானால், கடைசியாக ‘விடுதலை' ஆசிரியர் பொறுப்பை ஏற்கிறார்.

நினைத்துப் பார்க்கிறேன், அன்றைக்கு நம்முடைய மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்கள், கருப்பு அங்கியை அணிந்துகொண்டு நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தால், இருக்கிற சட்டங்களை வைத்து, அதற்கு விளக்கங்களைக் கொடுத்து ஒரு சமூகநீதியினுடைய வழக்குரைஞராக இருந்திருப்பார்.

இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பது உள்ளிட்ட சட்டங்களை உருவாக்குகிற இடத்தில்...

ஆனால், கருப்புச் சட்டையை அணிந்துகொண்டு, பெரியாருடைய ஏட்டிற்கு ஆசிரியராகப் பொறுப் பேற்றார், சட்டத்திற்கு விளக்கம் சொல்பவராக அல்ல; இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பது உள்ளிட்ட சட்டங்களை உருவாக்குகிற இடத்தில், ஒரு கருப்புச் சட்டைப் போர் வீரராக தன்னுடைய வாழ்க்கையை தகவமைத்துக் கொண்டதுதான் மிகப்பெரிய சிறப்பு.

எத்தனை தலையங்கங்கள், எத்தனை அறிக்கைகள் - எங்களைப் போன்ற பத்திரிகைகாரர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து ஏதாவது சந்தேகம் வருமேயானால், நாங்கள் கூகுளில் போய் தேடமாட்டோம்; நிச்சயமாக ‘விடுதலை' பத்திரிகையில்தான் தேடுவோம். நிச்சயமாக விரிவானதொரு அறிக்கை வந்திருக்கும்; அவ்வளவு துல்லியமாக அய்யா அவர்கள் விவரங்களை எடுத்து வைத்திருப்பார்கள்.

இன்னுங்கேட்டால், அதுவும் பெரியார் போன்ற ஒரு தலைவரிடம், தொண்டராக இருப்பது - ஆசிரியர் சொல் கிறார், சில சமயங்களில் தலையங்கம் வருகிறபொழுது, பெரியார் அடுத்த நாள், ‘‘இந்தக் கருத்துக்கும், எனக்கும் சம்பந்தமில்லை'' என்று மறுத்துவிடுவார். ஆசிரியர் அய்யா பொறுப்பேற்பதற்கு முன்பு நடந்திருக்கிறது.

ஆனால், ஒருமுறைகூட இவர் எழுதிய தலையங் கத்தை என்னுடைய கருத்து இல்லை என்று பெரியார் ஒருபோதும் மறுத்ததில்லை என்பதுதான், இந்த ஆசிரிய ருக்கு இருக்கிற மிகப்பெரிய பெருமை.

பெரியார் என்ன நினைக்கின்றாரோ, 

அதைத்தான் ஆசிரியரும் நினைப்பார்!

ஏனென்றால், அவர் என்ன நினைக்கிறாரோ, அதைத் தான் இவரும் நினைப்பார்.

இன்றைக்கு இருக்கிற தொழில்நுட்ப வசதிகள் அன்றைக்கு இல்லை. 

நம்முடைய ஆசிரியர் சொல்கிறார், ஒரு போஸ்ட் கார்டு எழுதி போடுவார் பெரியார் அவர்கள். நாளைக்கு இதைப்பற்றி தலையங்கம் எழுதுங்கள் என்று.

“நான் என்ன நினைத்திருந்தேனோ அதைத்தான் பெரியாருடைய அந்த அஞ்சலும் தெரிவிக்கும்“ என்கிறார்.

ஒரே மாதிரி சிந்திக்கும்பொழுதுதான் இதெல்லாம் சாத்தியமாகும்.

இன்னும்சொல்லப்போனால், ஒரு வழக்குரைஞராக நம்முடைய ஆசிரியர் சென்றிருந்தால், சிறந்த வழக்கு ரைஞராக வந்திருப்பார். ஆனால், பெரிய அளவிற்கு சம்பாதித்திருக்க முடியுமா? என்று எனக்குத் தெரிய வில்லை.

பொய் வழக்கையெல்லாம் என்னால் 

நடத்த முடியாது என்றார்

ஏனென்றால், ‘விடுதலை' பிறந்த நாள் மலரில், மரியா தைக்குரிய சாமிதுரை அய்யா ஒரு கட்டுரை எழுதியிருக் கிறார். இருவரும் கடலூரில் வழக்குரைஞர்களாக இருக் கிறார்கள். அவர் ஒரு வழக்கு நடத்தி வெற்றி பெறுகிறார். அந்த வழக்கு கடலூர் செசன்ஸ் கோர்ட்டிற்கு மேல்முறை யீட்டிற்காக வருகிறது.

அந்த வழக்கில் நீங்கள் ஆஜராக வேண்டும் என்று அய்யா வீரமணி அவர்களைக் கேட்டுக்கொள்கிறார்.

அவரும் வழக்கு விவரங்களைக் கேட்கிறார், வாதியை சந்திக்கிறார்.  அந்த வழக்கு ஒரு பங்காளிக்குள் மாடு பிடிக்கின்ற சண்டை.

மாட்டை கவர்ந்துகொண்டு போய்விட்டார் என்பது தான் வழக்கு.

இளம் வழக்குரைஞரான அய்யா கேட்டிருக்கிறார், ‘‘உண்மையிலேயே அந்த மாடு உன்னுடையதுதானா?'' என்று.

அவன் உண்மையைச் சொல்லிவிட்டான்; ‘‘என்னு டைய மாடு இல்லீங்க அய்யா; அவர் சாமர்த்தியமாக வாதாடி, அது என்னுடைய மாடுதான் என்றாக்கி விட்டார். நீங்களும் அதேபோன்று வாதாடுங்கள்'' என்றான்.

இவர் கேஸ் கட்டைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

அவனே அந்த மாடு அவனுடையது இல்லை என்று சொல்லிவிட்டான். இதுபோன்ற பொய் வழக்கை யெல்லாம் என்னால் நடத்த முடியாது என்று சொல்லி விட்டார்.

முதன்முதலாக இணையத்தில் அச்சேற்றப்பட்ட பத்திரிகை ‘விடுதலை!’

‘விடுதலை'யினுடைய அச்சகத்திலே, ஒரு நாள் விக்டோரியா என்கிற புதிய இயந்திரம் வருகிறது.

‘விடுதலை'யினுடைய சிறப்பு என்ன தெரியுமா?

அறிவியலோடு இணைந்து நடப்பதுதான். எத்த னையோ பத்திரிகைகள் நாட்டில் இருக்கின்றன. முதன் முதலாக இணையத்தில் அச்சேற்றப்பட்ட பத்திரிகை என்பதுதான் ‘விடுதலை’க்கு இருக்கிற மிகப்பெரிய சிறப்பு.

அப்படி அச்சகம் மாறிக்கொண்டே வருகிறபொழுது, விக்டோரியா என்கிற இயந்திரம் நிறுவப்படுகிறது.

அதைத் தொடர்ந்து ஒரு தேநீர் விருந்து; தடபுடலான தேநீர் விருந்து.

‘‘எப்படி வீரமணி இவ்வளவு செலவு செய்து நடத்துகிறாரு?’’ 

பெரியாருக்கே சந்தேகம், எவ்வளவு செலவாகியிருக் கும் என்று தெரியவில்லையே; அன்னை மணியம்மையா ரிடம் கேட்டிருக்கிறார், ‘‘எப்படி வீரமணி இவ்வளவு செலவு செய்து நடத்துகிறாரு?'' என்று.

அப்பொழுதுதான் அன்னையார் ரகசியத்தை சொல்லியிருக்கிறார்.

‘‘நேற்று ஒரு பிறந்த நாள் விருந்து நடைபெற்றது. அதில் மிஞ்சிய இனிப்பையும், காரத்தையும் கொண்டு தான் இன்றைய நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது'' என்று சொல்லியிருக்கிறார்.

பத்திரிகையில் வருகிற செய்திகள் - பொதுவாக ஒரு பத்திரிகையை நடத்துகிறபொழுது நிறைய செய்திகள் கிடைக்கும். ஆனால், ஒரு பகுத்தறிவு கண்ணோட்டத்தை வைத்து ஒரு பத்திரிகையை நடத்துகிற பொழுது செய்திகள் குறைவாகத்தான் இருக்கும்.

தமிழ் வாசகர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கின்ற ஒரு மிகப்பெரிய வாகனம் ‘விடுதலை’

பெண்களை இழிவுபடுத்தாமல், மூடநம்பிக்கையை வளர்க்காமல், ‘விடுதலை’க்கு இருக்கிற சிறப்பு என்ன வென்றால், உலகத்திலே மூடநம்பிக்கைக்கு எதிராக, அறிவியலுக்கு ஆதரவாக ஒரு செய்தி வந்துவிடுமே யானால், உடனடியாக அதைத் தமிழ் வாசகர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கின்ற ஒரு மிகப்பெரிய வாகனமாக ‘விடுதலை’ திகழ்ந்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

உண்மையில், 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாது காப்பதற்காக,  அதேபோல, இங்கே மரியாதைக்குரிய தோழர் ஓவியா சொன்னார்களே, சேலம் சிறைத் தியாகி கள் (கம்யூனிஸ்டுகள்) சுட்டுக் கொல்லப்பட்டபொழுது, பெரியார் நமக்கென்ன என்று இருந்துவிடவில்லை.

மிகக் கடுமையாக அந்தச் சிறைப் படுகொலையைக் கண்டித்து பெரியார் தலையங்கம் எழுதியிருக்கிறார்.

பெரியாருடைய மொழி நடை என்பது 

ஆயிரம் பிஎச்.டி.க்களுக்கு உரியது!

வழக்கமாக சொல்வார்கள் அல்லவா, வாயார வாழ்த் துகிறேன், மனதார வாழ்த்துகிறேன் என்று. பெரியாரு டைய மொழி நடை என்பது ஆயிரம் பிஎச்.டி.க்களுக்கு உரியது. அந்தத் தலையங்கத்தில் பெரியார் எழுதுகிறார், ஓர் இலட்சியத்திற்காக இறந்தவர்களை வாயாரவும், மனதாரவும், மூக்காரகவும் நான் பாராட்டுகிறேன் என்று சொல்கிறார்.

எனக்குத் தெரிந்து மூக்காரகவும் பாராட்டுகிறேன் என்று சொல்லமாட்டார்கள்.

அந்த மொழி நடை என்பது இருக்கிறதே, அது பெரியாருக்கே உரிய மொழி நடையாகும்.

ஆசிரியருடைய மொழி நடை என்பது 

சற்று வித்தியாசமானது

அதேபோல ஆசிரியருடைய மொழி நடை என்பது சற்று வித்தியாசமானது.

சிறிது நேரத்திற்கு முன்பு, அய்யா குமரிஅனந்தன் அவர்களை கவுரவிப்பதற்காக கீழே இறங்கிச் செல்லுகிற பொழுது, எப்படி அவர் தலையங்கத்தின் நடையிலும் தளர்வு இருந்ததில்லையோ, நடையிலும் அதே கம்பீரத்தோடு நடந்து சென்றார்.

ஒரு வழக்குரைஞர் வழக்காடு மன்றத்தில் எடுத்து வைக்கின்ற வாதங்களைப்போல, மிகச் சிறப்பாக தன்னுடைய எழுத்தையும் அமைத்துக் கொண்டவர்.

இங்கே சொன்னதைப்போல, கரோனா காலகட்டத் தில், அவர் முன்வைத்த வாழ்வியல் சிந்தனைகள்.

‘‘ஒரே நாளில் அம்பானி ஆவது எப்படி?’’

அந்த வாழ்வியல் சிந்தனைகளில், ‘‘ஒரே நாளில் அம்பானி ஆவது எப்படி?'' தன்னம்பிக்கை என்ற பெயரிலே போட்டு படுத்துகிறார்கள்.

இப்படித்தான் அம்பானி ஒரு நாள் பெட்ரோல் பங்க்கிலே பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்தார். உடனே அவர் கனவு கண்டார்; அடுத்த நாளே அம்பானி ஆகிவிட்டார்.

‘‘நாட்டை ஆள்வது மோடியா? அல்லது 

அம்பானி அதானி கும்பலா?’’

அம்பானி எப்படி அம்பானி ஆனார் என்று தெரிந்து கொள்வதற்கு ‘விடுதலை’ தலையங்கத்தைப் படியுங்கள்.

‘‘நாட்டை ஆள்வது மோடியா? அல்லது அம்பானி அதானி கும்பலா?'' என்று இன்றைக்கு வரை ‘விடுதலை’ சூடு குறையாமல் கேட்டிருக்கிறது.

இந்த உண்மை தெரியாமல், பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் பையன், கனவு கண்டுகொண்டே பெட்ரோலை கீழே விட்டுவிடுகிறான், இருக்கின்ற வேலையும் போய்விட்டது.

அதுவல்ல தன்னம்பிக்கை. 

‘வெள்ளத்தனைய மலர்நீட்டம்' என்று வள்ளுவன் பேசிய தன்னம்பிக்கையை விடவா, இவர்கள் தன்னம் பிக்கையை ஊட்டிவிடப் போகிறார்கள்.

தி.மு.க.மீது விழவேண்டிய அடிகளையும் சேர்த்து திராவிடர் கழகம் வாங்கியிருக்கிறது!

உண்மையிலேயே, எவ்வளவு வழக்குகள், நெருக்கடி காலத்திலே, மிசா காலத்திலே ஆசிரியர் அவர்கள் மத்திய சிறைச்சாலையில் இருக்கிறார்கள். இன்றைய முதலமைச்சர் மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் அவர் கள் சிறைக்கு வரும்பொழுது, கடுமையாகத் தாக்கப்படு கிறார். அவர்மீது விழுந்த பல அடிகளை நம்முடைய ஆசிரியர் அவர்கள் வாங்கியிருக்கிறார்.

உண்மையில் சொல்லப்போனால், அன்றைக்குத் தளபதிமீது விழுந்த அடிகளை மட்டுமல்ல, பல சமயங் களில், தி.மு.க.மீது விழவேண்டிய அடிகளையும் சேர்த்து திராவிடர் கழகம் வாங்கியிருக்கிறது.

ஏனென்றால், அதனுடைய தாய்க்கழகம் என்கிற முறையில், வழிகாட்டுகிற இயக்கம் என்கின்ற முறையில்.

‘தீக்கதிரு'க்கும், ‘விடுதலை’க்கும்கூட உரசல்கள் இருந்ததுண்டு. செய்கூலி இருந்ததே தவிர, சேதாரம் ஒருபோதும் இருந்ததில்லை.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால்,  இதே ‘விடுதலை’ அலுவலகத்தில், சென்னைக்கு வந்த புதிதில் கொஞ்சகாலம், ‘தீக்கதிரை' அச்சிட்டு வந்தோம்.

ஆசிரியருக்கு இருக்கின்ற நாகரிகம் என்னவென்றால், சில சமயங்களில் அரசியல் மாறுபாடுகள் காரணமாக, திராவிடர் கழகத்தைக்கூட விமர்சிக்கவேண்டி இருக்கும்.

ஆனால், நாங்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம், ‘தீக்கதிரை' அச்சிட்டுக் கொடுக்கவேண்டும் என்று.

எங்களுக்குக்கூட சங்கடமாக இருக்கும். பல சமயங்களில் அரசியல் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பானது.

ஆனால், ஒருபோதும் அப்படிக் காட்டிக் கொண்டதே இல்லை. நான் நிறைவாகச் சொல்கிறேன், 

பெரியாருடைய பேரொளியாக, சுயமரியாதையை விதைக்கிற விதையாக...

ஒரு உயர்ந்த பண்பாட்டை, நாகரிகத்தை கைக் கொண்டு ஒரு 88 ஆண்டுகாலம் ‘விடுதலை’ ஏடு வெளிவந்திருக்கிறது என்று சொன்னால், பெரியாருடைய பேரொளியாக, சுயமரியாதையை விதைக்கிற விதையாக, ஒரு 60 ஆண்டுகாலம் ஆசிரியர் பணியில் இருந்திருக் கின்றார் என்று சொன்னால், அது ஒன்றும் சாதாரண விஷயமல்ல தோழர்களே!

அதுவும் தொழில்நுட்ப வசதிகள் எல்லாம் இல்லாத காலகட்டத்தில். இன்றைக்குக்கூட 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெறுகிறது. நான் திராவிடர் கழகக் கூட்டங்களில் கவனித்து இருக்கிறேன் பெரியார் அய்யா பேசினாலும் சரி, ஆசிரியர் அவர்கள் பேசினா லும் சரி, புத்தகங்களை விற்றுக் கொண்டிருப்பார்கள் தோழர்கள்.

பெரியார் எழுதுகிறார்

பெரியார் ஒருமுறை எழுதுகிறார், சந்தா சேர்ப்பு இயக்கம் குறித்து, ‘‘தோழர்களே, சந்தா சேர்க்க நீங்கள் தயங்கவேண்டாம்; வெட்கப்படவேண்டாம்; நம்முடைய மக்களின் மான உணர்ச்சியையும், அறிவு உணர்ச்சியை யும் பரீட்சித்துப் பார்க்க நீங்கள் ஒருபோதும் தயங்க வேண்டாம்'' என்கிறார்.

இது மிகவும் நுட்பமான வார்த்தை. ‘விடுதலை’ சந்தாக் கொடுத்தால் அவனுக்கு மான உணர்ச்சி இருக் கிறது என்று அர்த்தம். சந்தா கொடுக்கவில்லை என்றால், மான உணர்ச்சி இல்லை என்று அர்த்தம்.

அதுவும் ‘விடுதலை’ போன்ற பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பது - இதுபோன்ற இயக்கத்திற்கு நிதி கேட்பது என்பது சாதாரணமானதல்ல.

நாங்கள் எல்லாம் உண்டியலைத் தூக்கிக் கொண்டு போனபோது, மதுக்கூர் சந்தையில் உண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சி.

‘‘நாங்கள் படைக்க விரும்பும் உலகத்தை நீங்கள்தான் உண்மையில் படைத்திருக்கிறீர்கள்!’’

ஒரு கடையில் முதலாளி உட்கார்ந்திருக்கிறார். நாங்கள் உண்டியலை எடுத்துக்கொண்டு வசூலுக்குச் செல்லும்பொழுது, ‘‘முதலாளி இல்லையே'' என்று எழுந்து கும்பிட்டார்.

அய்ந்து முறை சென்று, ஆறாம் முறை நானே அவரின் கையைப் பிடித்துக்கொண்டு, ‘‘நாங்கள் படைக்க விரும்பும் உலகத்தை நீங்கள்தான் உண்மையில் படைத்திருக்கிறீர்கள்'' என்றேன்.

எப்படி என்று கேட்டார்.

“நாங்கள்தான் முதலாளிகள் இல்லாத உலகத்தைப் படைக்க விரும்புகிறோம். ஆனால், நீங்கள் முதலாளியாக இருந்துகொண்டே, முதலாளி இல்லை, முதலாளி இல்லை என்று சொல்றீங்க பாருங்கள்,  உங்களுக்கு இருக்கின்ற பக்குவம், எல்லோருக்கும் வந்துவிட்டால், எங்களுக்கு வேலை இருக்காது” என்று சொன்னேன்.

ஒரு நேர்மறையாக ஓடுகிற ஆற்றிலே நீந்துவது என்பது வேறு; ஆனால், ‘விடுதலை’யினுடைய 88 ஆண்டுகாலமும், அதில் ஆசிரியருடைய 60 ஆண்டு கால எழுத்துப் பணியும், பேருழைப்பும் ஒரு எதிர்நீச்சல் போட்ட வரலாறு என்பதுதான். 

வீசப்பட்ட அழுக்குகளையும், அவதூறுகளையும் அடிஉரமாக்கி எழுந்து நிற்கிறது!

இன்னும் சொல்லப்போனால், இதற்குச் சூட்டப்பட்ட புகழ்மாலைகளைவிட, வீசப்பட்ட அழுக்குகளையும், அவதூறுகளையும் அடிஉரமாக்கி எழுந்து நிற்கிறது என்று சொன்னால், அந்த உணர்வோடுதான் பெரியார் திடலுக்கு வருகிறபொழுது, வேறொரு இயக்கத்தின் திடலுக்கு வருவதாக நாங்கள் கருதவில்லை. சொந்த வீட்டிற்கு வருவதுபோன்ற ஒரு உணர்வோடுதான் நாங்களும் வருகிறோம்.

ஏனென்றால், ஆசிரியர்களில் இருவகை உண்டு. நேரிடையாக வகுப்பறையில் பாடம் நடத்துகிற ஆசிரியர், தொலைதூரக் கல்வி ஆசிரியர் என்று உண்டு.

‘விடுதலை’யின் வழியாக, எங்களுக்கான அஞ்சல் வழி ஆசிரியராக எப்பொழுதுமே ஆசிரியர் அவர்கள் இருந்திருக்கிறார்.

இந்தத் துரோணாச்சாரியார் ஒருபோதும் 

கட்டை விரலைக் கேட்டதில்லை

வேண்டுமானால், புராணப்படி துரோணாச்சாரியார் என்று சொல்லலாம். ஆனால், நான் அப்படி சொல்ல விரும்பவில்லை.

ஏனென்றால், இந்தத் துரோணாச்சாரியார் ஒரு போதும் கட்டை விரலைக் கேட்டதில்லை. படித்தவனுக் கெல்லாம் ஆறாவது  விரலை முளைக்க வைக்கின்ற ஆசிரியராக இருக்கிறார்.

நீங்களும், ‘விடுதலை’யும் நிலைத்திருக்கவேண்டும்!

எனக்கு இருக்கின்ற ஆசையெல்லாம், 60 ஆண்டு ஆசிரியர் பணியை முன்னிட்டு, 60 ஆயிரம் சந்தாக்கள் கொடுப்பதுபோல, திராவிடர் கழகத் தோழர்கள் எல்லாம் இணைந்து உங்கள் கைகளில் ஒரு லட்சம் சந்தாக்களைக் கொடுக்கும் அளவிற்கு, நீங்களும், ‘விடுதலை’யும் நிலைத்திருக்கவேண்டும்.

அய்யா பெரியாரின் வயதைத் தாண்டியும் நீங்கள் இந்த சமூகத்தில் வாழ்ந்து, வழிகாட்டவேண்டும் என்று கேட்டு, என்னுடைய சார்பிலும், ‘தீக்கதிர்' சார்பிலும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், அய்யா அவர்களுடைய தொண்டறத்திற்கு வாழ்த்துச் சொல்லி, வணங்கி, என் வார்த்தைகளை நிறைவு செய்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு ‘தீக்கதிர்’ நாளிதழின் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள் வாழ்த்துரையாற்றினார் 


No comments:

Post a Comment