ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்குத் தடை விதித்தது சரியான நடவடிக்கையே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்குத் தடை விதித்தது சரியான நடவடிக்கையே!

சட்ட ஒழுங்குக் கண்ணோட்டத்தில் நீதிமன்றத்திற்கும் பொறுப்பு இருக்கிறது!

காந்தியார் பிறந்த நாள், காமராசர் நினைவு நாளில் (அக்.2) ஆர்.எஸ்.எஸ். நடத்தவிருந்த ஊர்வலத்தை தடை செய்தது சரியான நடவடிக் கையே! நாட்டின் சட்ட ஒழுங்குக் கண்ணோட்டத்தில் நீதிமன்றத்திற்கும் பொறுப்பு இருக்கிறது என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காந்தியார் பிறந்த நாள், கர்ம வீரர் காமராசர் நினைவு நாளைத் திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்து, அன்றைய தினம் தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டது.

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்பற்றி முதலாவதாக அறிக்கை வெளியிட்டோம்!

சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று அதற்கு அனுமதி பெற்றது என்ற செய்தி வந்த அந்தத் தருணத்திலேயே அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டை அமளிக்காடாக்க துணை போகவேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டோம் (‘விடுதலை', 23.9.2022).

அண்ணல் காந்தியார்- அண்ணல் அம்பேத்கர் - கர்மவீரர் காமராசர் நாட்களைத் தேர்ந்தெடுப்பானேன்?

பாபர் மசூதியை இடிக்க அம்பேத்கர் நினைவு நாளைத் தேர்ந்தெடுத்தனர். இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்திட காந்தியார் பிறந்த நாளை தேர்ந்தெடுத்தது ஏன்?

காந்தியாரைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற சித்பவன் பார்ப்பான் ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவன்.

அக்டோபர் 2 ஆம் தேதி பச்சைத் தமிழர் காமராசர் நினைவு நாளாகும்.

பசுவதைத் தடுப்பு என்ற பெயரில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராசர் அவர்களை ஒரு பட்டப் பகலில் (7.11.1966) இந்தியாவின் தலைநகரமான டில்லியில் உயிரோடு வைத்துக் கொளுத்த முயன்ற வன்முறை யாளர்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் போன்ற சங் பரிவார்கள் இருந்ததையும் நினைவு கூர்ந்தால், அக்டோபர் 2 என்ற நாளை ஒரு வன்மத்தோடு ஊர்வலம் நடத்திட ஆர்.எஸ்.எஸ். ஏன் தேர்ந்தெடுத்தது என்பதை ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்பற்றி அறிந்தவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

ஆர்.எஸ்.எஸ். நடத்திய ஊர்வலங்கள் எல்லாம் கலவரத்தில் முடியவில்லையா?

ஆர்.எஸ்.எஸ். நடத்திய ஊர்வலங்களில் எல்லாம் ரத யாத்திரை உள்பட வன்முறைதானே தலைவிரித்து ஆடியிருக்கிறது.

சென்னையில் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை அனுமதித்த பாதை களைப் புறந்தள்ளி, இஸ்லாமியர் வாழும் பகுதிகளுக்குச் சென்று ரகளையில் ஈடுபடுவதும் வாடிக்கைதானே!

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்குத் தடை சரியானதே - வரவேற்கத்தக்கதே!

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு சட்ட ஒழுங்குக்கு ஊறு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்திலும், அமைதிப் பூங்காவான தமிழ்நாடு கலவரப் பூமியாகிவிடக் கூடாது என்ற நோக்கத்திலும் தமிழ்நாடு அரசு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்குத் தடை விதித்து, நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கதும், சரியான முடிவு மாகும்.

நாட்டில் அமைதி தவழும் நிலையை உறுதி செய்வதில் நீதிமன்றத்திற்கும் முக்கிய பொறுப்பு இருக்கிறது என்பதையும் நாடு எதிர்பார்க்கிறது.

எச்.இராஜாமீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

சட்ட ஒழுங்குப் பிரச்சினையின் அடிப்படையில் காவல்துறை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துள்ள நிலையில், பி.ஜே.பி.யின் மேனாள் தேசிய செயலாளர் திரு.எச்.ராஜா என்பவர், ‘‘தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் (டி.ஜி.பி.) அரசிடமிருந்து சம்பளம் வாங்குகிறாரா? அல்லது தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பிடமிருந்து சம்பளம் வாங்குகிறாரா?'' என்று ஊடகவியலாளரிடம் கூறி இருக்கிறார்.

இதற்குமுன் 2018 இல் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது சென்னை உயர்நீதிமன்றத்தையே கேவலப்படுத்திப் பேசியதுண்டு.

நடவடிக்கை ஏதுமில்லை.

‘பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள்' என்றால், சட்டமும், நீதியும் கண்டுகொள்ளாதா?

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

30.9.2022


No comments:

Post a Comment